Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிழக்கும் மேற்கும் சங்கமிக்கும் ஆப்பிரிக்க நகரம்

கிழக்கும் மேற்கும் சங்கமிக்கும் ஆப்பிரிக்க நகரம்

கிழக்கும் மேற்கும் சங்கமிக்கும் ஆப்பிரிக்க நகரம்

தென் ஆப்பிரிக்காவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

டர்பன் தெருவில் நடந்து செல்கையில், ஆ, எத்தனை வண்ண வண்ண காட்சிகள்! அங்குள்ள அநேகர்​—⁠முக்கியமாக இளசுகள்⁠—⁠மேலைநாட்டு பாணியில் உடுத்தியிருப்பதை நீங்கள் காண்பீர்கள். ஆனால் இளமைக்கு விடைகொடுத்துவிட்ட ஜூலு பெண்களோ அடக்கமான நீண்ட அங்கியில், தலையில் வானவில் வந்து அமர்ந்ததுபோல் ‘கலர்ஃபுல் ஸ்கார்ஃப்’ கட்டிக்கொண்டு செல்லும் காட்சியையும் கண்கள் படம்பிடிக்காமல் இருக்காது. சேலையில் அல்லது சல்வார் கமீஸில் உலவும் இந்திய பெண்களையும் காணலாம். தென்றல் வீசும் கடற்கரை பகுதிக்கு வருகையில், ஜூலு ஆண்கள் சிலர் நுட்ப வேலைப்பாடுமிக்க உடைகளில் ரிக்‍ஷா வண்டிகளை இழுத்துக்கொண்டு செல்வதையும் நீங்கள் ஒருவேளை பார்க்கலாம். உண்மையிலேயே டர்பன் தனித்தன்மைமிக்க ஆப்பிரிக்க நகரம், இங்கே கிழக்கும் மேற்கும் சங்கமிக்கிறது. இந்தக் கண்கவர் நகரத்தின் சரித்திரம் என்ன?

தென் ஆப்பிரிக்க நகரமாகிய டர்பனில் இரண்டு நூற்றாண்டுகளுக்குள்தான் மக்கள் குடிபுக ஆரம்பித்திருக்கின்றனர். ஐரோப்பிய வழிவந்த சுமார் 40 குடியேற்ற நாட்டவர்கள் 1824-⁠ல் இங்கு குடித்தனம் நடத்த வந்தார்கள். அந்த சமயத்தில், மாபெரும் வீரனாகிய ஷாக்கா என்ற அரசனின் கீழ் வடக்கு டர்பனை மையமாக கொண்டு ஜூலுக்களின் வலிமைமிக்க ராஜ்யம் ஆட்சிபுரிந்து வந்தது. இருபது ஆண்டுகளுக்குப் பின்னர், டர்பனையும் அதைச் சுற்றியிருந்த நிலப்பகுதியையும் பிரிட்டன் வளைத்துப் போட்டிருந்தது. 19-⁠ம் நூற்றாண்டில் புதிய குடியேறிகளும் ஜூலுக்களும் பலமுறை மோதிக்கொண்டார்கள்.

இதற்கிடையே, இந்தக் கடற்கரை பகுதியில் கரும்பு சாகுபடி சக்கைபோடு போடுவது ஆங்கிலேய குடியேறிகள் கண்ணில் பட்டது. கரும்பு சாகுபடி செய்வதற்கு, அப்போதைய மற்றொரு பிரிட்டிஷ் குடியேற்றமாகிய இந்தியாவிலிருந்து தொழிலாளிகள் இங்கே இறக்குமதி செய்யப்பட்டார்கள். 1860-⁠க்கும் 1911-⁠க்கும் இடையே 1,50,000-⁠க்கும் அதிகமான இந்தியர்கள் டர்பனில் வந்திறங்கினார்கள். அதன் விளைவாக, தலைநகரமாகிய டர்பனில் இன்று வாழும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட குடிமக்கள் பூமியின் மூன்று வித்தியாசமான பகுதிகளிலிருந்து வந்து சங்கமம் ஆனவர்கள்​—⁠ஜூலு பழங்குடியினர், இந்தியாவிலிருந்து வந்த ஆசியர்கள், பிரிட்டிஷ் மற்றும் மேற்கு ஐரோப்பிய வழிவந்தவர்கள்.

ஆர்வத்தைத் தூண்டும் வேறுசில அம்சங்களையும் இந்நகரம் சூடியிருக்கிறது. இந்த போட்டோவில் காண்பிக்கப்பட்டுள்ளபடி, இங்கே இயற்கை துறைமுகம் இருக்கிறது, நீண்ட விரல்போன்று காணப்படும் ப்ளஃப் என்ற நிலப்பகுதியை இந்தியப் பெருங்கடல் சூழ்ந்துள்ளது. இந்தக் கண்கவர் இடம் 300 அடிக்கும் அதிகமான உயரத்தில், பச்சைக் கம்பளம் பாவினாற்போல் பசுமையாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பெரிய பெரிய கப்பல்கள் இந்த இயற்கை துறைமுகத்தை எட்டிப்பார்த்துவிட்டு செல்கின்றன. “ஆப்பிரிக்காவிலேயே மிகப் பெரிய, மிகவும் சுறுசுறுப்பான துறைமுகமாகவும் உலகிலேயே ஒன்பதாவது இடத்தை வகிக்கும் ஒன்றாகவும்” டர்பன் விளங்குகிறது என டிஸ்கவரி கைய்டு டூ சதர்ன் ஆஃப்ரிக்கா என்ற புத்தகம் சொல்கிறது. உல்லாசப் பயணிகள் டர்பனின் அழகிய கடற்கரைகள் பக்கமாக சுண்டி இழுக்கப்படுகிறார்கள், அதன் வெதுவெதுப்பான தண்ணீரில் விளையாடி மகிழ்கிறார்கள். ‘சர்ஃபிங்’ செல்ல சிறந்த இடங்கள் இங்கே இருக்கின்றன, நன்கு பராமரிக்கப்பட்டு வரும் சுறா வலைகளின் பாதுகாப்பில் ‘ஹாயாக’ நீந்தி மகிழலாம்.

பைபிளை நேசிப்பவர்கள் இந்நகரத்தின் மீது ஆர்வம் கொள்வதற்கு இன்னும் கூடுதலான காரணம் இருக்கிறது. பைபிள் மாணாக்கர்கள் என்று முன்பு அறியப்பட்ட யெகோவாவின் சாட்சிகள் 1910-⁠ல் கிளை அலுவலகத்தை இங்கு ஸ்தாபித்தார்கள். பிற்பாடு, ஏப்ரல் 1914-⁠ல், ஆப்பிரிக்காவில் பைபிள் மாணாக்கர்களின் முதல் மாநாடு டர்பனில் நடத்தப்பட்டது. சுமார் 50 பேர் ஆஜரானார்கள், தென் ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டில் புதியவர்கள் 16 பேர் முழுக்காட்டப்பட்டார்கள். இந்த மாநாட்டில் ஆஜராயிருந்தவர்களில் பெரும்பாலானோர் மரணம் வரை உண்மையோடு நிலைத்திருந்த அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள்; இவர்களில் வில்லியம் டபிள்யு. ஜான்ஸ்டன் என்பவரும் ஒருவர், இவர் ஆப்பிரிக்காவில் கிளை அலுவலகத்தை நடத்துவதற்கு முதலாவது நியமிக்கப்பட்டவர்.

யெகோவாவின் சாட்சிகள் 1914 முதல் அநேக மாநாடுகளை டர்பனில் ஏற்பாடு செய்திருக்கின்றனர். டிசம்பர் 2000-⁠ல், “கடவுளுடைய வார்த்தையின்படி நடப்போர்” என்ற தலைப்பில் இந்நகரத்தில் இரண்டு மாநாடுகள் நடத்தப்பட்டன, இவற்றில் சுமார் 14,848 பேர் ஆஜரானார்கள், 278 பேர் முழுக்காட்டுதல் பெற்றார்கள். ஆஜராயிருந்த அநேக இந்திய குடும்பங்களில் ஒன்றை பற்றி இப்பொழுது சிந்தித்துப் பார்க்கலாம். பத்து வருடங்களுக்கு முன்பு சோமாஸினி தன்னுடைய தகப்பன் ஆலனுக்கு பைபிள் சத்தியத்தை அறிமுகப்படுத்தினாள். ஆலன் குடிப்பழக்கத்திலிருந்து மீண்டு வந்துகொண்டிருந்தார், வாழ்க்கையின் நோக்கத்தை தேடிக்கொண்டிருந்தார். அப்பொழுது மூன்றே வயதுடைய சோமாஸினி பக்கத்து வீட்டுக்காரருடைய புத்தகம் ஒன்றை தன்னுடைய அப்பாவிடம் கொண்டுவந்து கொடுத்தாள். உண்மையான சமாதானமும் பாதுகாப்பும்​—⁠இதை நீங்கள் எவ்வாறு கண்டடையலாம்? என்பதே அதன் தலைப்பு, இந்தப் புத்தகம் உடனடியாக ஆலனுடைய கவனத்தைக் கவர்ந்தது. அந்தப் புத்தகத்தை வாசித்து மகிழ்ந்தார், யெகோவாவின் சாட்சிகளுடன் கூட்டுறவும் கொள்ள ஆரம்பித்தார். பைபிளிலிருந்து தான் கற்றுக்கொண்ட காரியங்களின் காரணமாக, ஆலன் தன்னுடைய திருமணத்தை சட்டப்பூர்வமாக்கினார். விரைவில் அவருடைய மனைவி ராணியும் ஆர்வம் கொண்டு யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கு ஆஜராக ஆரம்பித்தார். அந்தச் சமயத்தில் இந்தத் தம்பதியினர் ராணியின் பெற்றோருடைய வீட்டில் வசித்து வந்தார்கள், இவர்கள் கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளில் ஒன்றை சேர்ந்தவர்கள். இந்த இளம் தம்பதியினர் கண்டுபிடித்த புதிய மதத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். கடைசியில், “யெகோவாவின் சாட்சிகளை விட்டுவிலகுங்கள் அல்லது எங்களுடைய வீட்டை விட்டு வெளியேறுங்கள்!” என சொல்லிவிட்டார்கள்.

தங்குவதற்கு வீடு கிடைப்பது கஷ்டமாக இருந்தாலும் ஆலனும் ராணியும் வீட்டைவிட்டு வெளியேற தீர்மானித்தார்கள். வசிப்பதற்கு தகுந்த ஓர் இடத்தை கண்டுபிடிப்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் மத்தியிலிருந்த நண்பர்கள் உதவி செய்தார்கள். 1992-⁠ல், ஆலனும் ராணியும் யெகோவாவின் சாட்சிகளாக முழுக்காட்டுதல் பெற்றார்கள். அவர்கள் தொடர்ந்து முன்னேற்றம் செய்தார்கள், இன்றைக்கு ஆலன் கிறிஸ்தவ சபையில் ஒரு மூப்பராக சேவை செய்கிறார்.

டர்பன் தலைநகர் பகுதியில் யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகள் இப்பொழுது 50-⁠க்கும் அதிகமாக இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவற்றில் ஜூலுக்களே இருக்கிறார்கள். என்றபோதிலும், சில சபைகளில், முக்கியமாக நகரத்தின் மையப்பகுதிக்கு அருகில் இருக்கும் சபைகளில் ஜூலுக்கள், இந்தியர்கள், ஐரோப்பிய வழிவந்தவர்கள் இருக்கிறார்கள். இந்தக் கூட்டங்களில் ஒன்றிற்கு நீங்கள் விஜயம் செய்தால், கிழக்கும் மேற்கும் சங்கமிப்பதற்கும் மேலானவற்றை காண்பீர்கள். ஒருவேளை நேர்த்தியான உடையணிந்த ஆப்பிரிக்க சாட்சி அல்லது இந்திய சாட்சி அல்லது ஐரோப்பிய வழிவந்த சாட்சி தலைமைதாங்கி நடத்துவதை காண்பீர்கள். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்: கனிவான, நீடித்த நட்பில் எல்லா தேசத்து மக்களையும் ஒன்றுசேர்க்கும் சக்தியாக பைபிள் விளங்குகிறது என்பதற்கு சபையார் மத்தியில் நீங்கள் உயிருள்ள அத்தாட்சியை காண்பீர்கள்.(g01 9/22)

[பக்கம் 26-ன் படம்]

ஆலன், ராணி, அவர்களுடைய பிள்ளைகள்

[பக்கம் 26-ன் படம்]

சபை கூட்டங்கள் எல்லா இனத்தவரையும் ஒன்றுசேர்க்கின்றன

[பக்கம் 26-ன் படம்]

டர்பன் சிட்டி ஹால்

[பக்கம் 25-ன் படத்திற்கான நன்றி]

படங்கள்: Courtesy Gonsul Pillay