Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கென்டே—ராஜ வஸ்திரம்

கென்டே—ராஜ வஸ்திரம்

கென்டே—ராஜ வஸ்திரம்

கானாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

பரபரப்பாக மின்னல் வேகத்தில் நெசவு தொழிலாளியின் கைகள் முன்னுக்கும் பின்னுக்குமாக துணிமீது நகர்ந்து கொண்டிருக்கின்றன. கீச்சொலி எழுப்பும் உருளைகள், க்ரீச் க்ரீச் என சப்தமிடும் நெம்புகோல், பாவுநூலை மாற்றுவதற்கான அமைவு ஆகியவற்றின் சந்தத்திற்கேற்ப கைகள் செல்ல, தனக்கு முன்னாலிருக்கும் பலவர்ண துணியை அவன் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறான். கயிறுகளை கால்விரல் இடுக்கில் பிடித்திருக்கிறான். இந்தக் கயிறுகள்தான் தறியில் ஊடிழை நுழைந்துசெல்லும் புழையுடைய கம்பியை இயக்குகின்றன, தறியில் பாவு நூலை மாற்றுவதற்கான அமைவு மேலும் கீழும் சென்று தறியின் முன்னால் ஆறு மீட்டர் அளவுக்கு விரிந்து கிடக்கும் செங்குத்தான பாவு நூலிழையைப் பிரித்துக்கொண்டு செல்கிறது. a தறியில் உள்ள தனித்தனி பாவு நூலிழைக்குள் வர்ணமிக்க பட்டு நூலிழையை அவனுடைய விரல்கள் வேகமாக நுழைத்து அழகான ஒரு வரைவை படைக்கிறது, இது நெருக்கமாக பின்னப்பட்டு ஒரு துணியாகிறது.

பத்தே சென்டிமீட்டர் அகல துணி வெளியே வருகிறது. ஆனால் அதில்தான் எத்தனை பளபளப்பான நிறங்களும் அழகான வரைவுகளும்! அந்த அசல் கென்டே துணியை, தன்னுடைய கைவண்ணத்தால் உருவான படைப்பை பார்க்கும்போது அந்தக் கைவினைஞன் மனநிறைவோடு புன்முறுவல் செய்கிறான்.

பழங்கால கைத்தொழில்

திறமைமிக்க தொழிலாளிகள் இந்தப் பழங்கால கைத்தொழிலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செய்துவந்திருக்கிறார்கள். சணல், பருத்தி, பட்டு ஆகியவற்றிலிருந்து நூற்ற நூலிழைகளைக் கொண்டு நெசவு செய்து வந்திருக்கிறார்கள். வேர்கள், தாவர இலைகள் போன்றவற்றிலிருந்து பிழிந்தெடுக்கப்பட்ட முக்கியமான வண்ணங்கள் தங்களது நெசவில் எளிமையான டிசைன்களையும் வரைவுகளையும் படைப்பதற்கான திறனை நெசவாளர்களுக்கு அளிக்கின்றன.

ஆப்பிரிக்காவில் வாழ்ந்த நாடோடி மக்கள் மத்தியில் இருந்த நெசவு தொழிலாளிகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எளிதில் தூக்கிச் செல்ல முடிகிற சிறிய தறிகளை உருவாக்கினார்கள். இந்த பட்டைத் தறிகளில் 7.5-லிருந்து 11.5 சென்டிமீட்டர் வரையான அகலமுள்ள பட்டைத் துணிகளை நெசவு செய்தார்கள். பிறகு இந்த நீளமான குறுகிய துணிகளை ஒன்றாக இணைத்து பெரிய துணியாக மாற்றி அதை ஓர் ஆடையாக உடலைச் சுற்றி அணிந்தார்கள். கையில் எளிதில் தூக்கிச் செல்லக்கூடிய தறிகளை, சுமை தூக்கும் விலங்குகளின்மேல் ஏற்றி பாலைவனங்களையும் ஆறுகளையும் மலைகளையும் கடந்து சென்றார்கள். பண்டைய வாணிக மார்க்கம் வழியாக எடுத்துச் செல்லப்பட்ட இந்தத் தறி இதை பயன்படுத்தியவர்கள்மீது பலத்த செல்வாக்கு செலுத்தியது.

ஆடைமேல் ஆசை

தாதுப் பொருட்கள் ஏராளமாக காணப்பட்ட கானா தேசத்தை பல நூற்றாண்டுகளாக மேற்கு ஆப்பிரிக்க அரசர்களும் தலைவர்களுமே ஆண்டு வந்தார்கள். ஐரோப்பிய ஆய்வுப்பயணிகள் இதைத் தங்க கடற்கரை (Gold Coast) என்று அழைத்தனர். b இங்கே ஏராளமாக தங்கம் தோண்டியெடுக்கப்பட்டது. ஆகவே அங்கே ஆட்சிசெய்து வந்த அஷான்தி அரசர்களும் அவர்களுடைய குடும்பங்களும் செல்வத்தில் கொழித்தனர். கனமான தங்க ஆபரணங்களை அணிந்து, விசேஷமாக நெய்யப்பட்ட ஆடைகளை உடுத்தி, இந்த அரசர்களும் அவர்களுடைய பிரதான அதிகாரிகளும் தங்கள் குடிமக்களுக்கு முன்பாக அவர்களுடைய செல்வத்தையும் வலிமையையும் அதிகாரத்தையும் காட்டிக்கொண்டனர். இந்த அரசர்கள் மட்டுமே உடுத்திய தன்னிகரில்லாத ஆடை கென்டே என்று அழைக்கப்படலானது. ஒரு கூடையின் பின்னலைப் போல இந்த உடை இருந்ததால் இப்பெயரைப் பெற்றிருக்கலாம். தங்க கடற்கரையில் வாழ்ந்துவந்த மற்ற மலைவாழ் மக்களும்கூட இந்த வகையான நெசவை செய்து வந்தனர். ஆனால் அஷான்தி அரசர்களுக்கோ கென்டே உடை கெளரவத்தையும் அரச அந்தஸ்தையும் குறித்தது.

தங்க கடற்கரையோர பட்டைத்துணி நெசவாளர்கள் உள்ளூரில் நூற்கப்பட்ட பருத்தியைப் பயன்படுத்தி ஆடை நெய்தனர். நீல சாயம் தோய்க்கப்பட்ட நூலிழை மாத்திரமே உபயோகத்தில் இருந்தது. இந்த நீல நிற நூல், பருத்தித் துணியின் மங்கலான வெள்ளை நிறத்தோடு இசைந்து நெய்யப்பட்டது; கோடுகளும் கட்டங்களும் கொண்ட எளிய டிசைனில் உள்ளூர் மக்கள் இதை உடுத்தினர்.

அரசரின் கென்டே உடையை நேர்த்தியாக நெசவு செய்ய வேண்டியிருந்ததால் அதை சிலரே செய்தனர். உயர்தரமான ஆடையை உருவாக்க திறமையுள்ள அரசு நெசவாளர் குழுக்கள் அமர்த்தப்பட்டன. இந்த நெசவு நுட்பங்கள் பரம இரகசியமாக வைத்துப் பாதுகாக்கப்பட்டன. பிரத்தியேகமாக அரசருக்கும் அவருடைய அவையினருக்கும் என்று நெசவு செய்யப்பட்ட டிசைன்களை மற்ற நெசவாளர்கள் நெசவு செய்ய தடை செய்யப்பட்டிருந்தது. ஒப்பற்ற டிசைன்களிலும் மாதிரிகளிலும் செய்யப்பட்டிருந்த இந்த உடைகளை அரசர் நூற்றுக்கணக்கில் சேகரித்து வைத்திருந்தார். பொதுமக்களுக்கு முன்னால் அவர் ஒருமுறை உடுத்திய அதே உடையை மறுபடியும் அணிய மாட்டார் என்பது பாரம்பரியம்.

வண்ணத்தின்மேல் மோகம்

16-வது நூற்றாண்டில் மற்றொரு விதமான துணி தங்க கடற்கரையில் அறிமுகமாக ஆரம்பித்தது. இந்தப் புதிய துணி ஆப்பிரிக்க பட்டைத் தறியில் நெசவு செய்யப்படவில்லை, மாறாக வெளிநாடுகளில் நெய்யப்பட்டது; தந்தத்தையும், தங்கத்தையும், அடிமைகளையும் தேடிக்கொண்டு முதல் முதலாக வந்த ஐரோப்பிய மாலுமிகள் இதை கொண்டுவந்தனர். இப்படி இறக்குமதியான துணிகள் பளபளப்பான கண்கவர் வண்ணங்களில் நூலிழைகளைக் கொண்டிருந்தன. விரைவில், சிவப்பு, மஞ்சள், பச்சை நிற நூல்களைக் கொண்டு வண்ண வண்ணமாக நெய்யப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட துணிகள் மதிப்புள்ள வாணிகப் பொருளானது. ஐரோப்பிய வியாபாரிகளிடமிருந்து இப்படிப்பட்ட விலையுயர்ந்த வண்ண துணிகளை வாங்க சிலரிடமே வசதி இருந்தது. கரையில் காத்துக்கொண்டிருந்த கப்பல்களில் தங்கத்தையும் தந்தத்தையும் அடிமைகளையும் வியாபாரம் செய்துவந்த வசதியுள்ள அஷான்தி அரசர்களால் மட்டுமே இந்த நேர்த்தியான துணிகளை வாங்க முடிந்தது. ஆனால் அந்த அரசர்களும் அதிகாரிகளும் விரும்பியதோ நெய்யப்பட்ட இந்தத் துணிகளை அல்ல.

ஆகவே இந்தத் துணிகளை இவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட நெசவாளர்கள் கவர்ச்சியாக இருந்த கலர் நூல்களைப் பிரித்து எடுத்துக்கொண்டு மீதத் துணிகளை அப்புறப்படுத்தினர். இந்த அழகான நூல்களைக் கொண்டு அரசு நெசவாளர்கள் தங்கள் தறியில் மறுபடியும் நெசவு செய்தனர். இந்த வண்ணங்களின் கலவைகள் அதிகரித்தபோது சொந்தமாக சிந்தித்து செயலாற்றும் திறமையும் புதுப்புது எண்ணங்களும் மனதில் தோன்றின; எனவே இந்தக் கலைஞர்கள் முன்னொருபோதும் இல்லாத வகையில் தங்கள் படைப்புத் திறனையும் தொழில்நுட்பத் திறனையும் வெளிப்படுத்தினர். மற்ற இனத்து மக்கள் மத்தியில் இருந்த திறமையான நெசவாளர்களையும் அஷான்தி அரசர்கள் பயன்படுத்திக் கொண்டனர். இதனால் கென்டே ஆடையின் தரத்தோடு எவராலும் போட்டிபோட முடியாமற்போனது.

துணிகளில் நெசவு செய்யப்பட்ட மீன்கள், பறவைகள், பழங்கள், இலைகள், சூரிய அஸ்தமனங்கள், வானவில் வடிவங்கள், இன்னும் பல இயற்கை காட்சிகள் மிகவும் துல்லியமாகவும் அடையாள அர்த்தமுள்ளவையாகவும் இருந்தன. பொன்னிற நூலிழையால் பின்னப்பட்ட துணி செல்வத்தைக் குறித்தது, பச்சை நிறம் பசுமையையும் புதுமையையும் குறித்தது, கருப்பு நிறம் சோகத்தையும் சிவப்பு நிறம் கோபத்தையும் வெள்ளை நிறம் தூய்மையையும் மகிழ்ச்சியையும் குறித்தது.

நெசவாளர்கள் அவசரமில்லாமல் ஒரே ஒரு துணியை வைத்து மாதக்கணக்கில் வேலை செய்தார்கள், ஏனெனில் அவர்களுடைய படைப்பை வைத்தே அவர்களின் திறமையும் படைக்கும் திறனும் மதிப்பிடப்படும் என்பது அவர்களுக்குத் தெரியும். மிகவும் அழகான கலைநயமிக்க ஆடைகளுக்கு தேவை குறைவாக இருந்தது, ஏனென்றால் வெகு சிலரால் மாத்திரமே அரிய, விலையுயர்ந்த இந்தக் கென்டே ஆடையை வாங்க முடிந்தது.

நவீன நாளைய கென்டே

காலம் செல்ல செல்ல அரசர்கள் மற்றும் வலிமையுள்ள அதிகாரிகளின் செல்வாக்கு மறைய ஆரம்பித்தது. ஓர் ஆடையை வைத்து அரசனையும் ஆண்டியையும் வித்தியாசப்படுத்த வேண்டிய அவசியம் இனி இருக்கவில்லை. அரசர்களோடு சம்பந்தப்பட்டவர்களாக இல்லாத மற்றவர்களும் இந்த அழகிய ஆடையை பயன்படுத்த ஆரம்பித்தபோது மவுசு அதிகமானது. ஏறிவிட்ட மவுசை ஈடுகட்ட அவசர அவசரமாக இந்தத் துணி நெசவு செய்யப்பட்டதால் கென்டே துணியின் தரம், கலைநயம், விலை ஆகியவை சரிய ஆரம்பித்தன.

இன்று கென்டே நெசவு செயற்கை நூல் வைத்து நெய்யப்படுகிறது. அது பெரிய அளவில் பைகள், டைகள், பெல்ட்டுகள், தொப்பிகள், துணிமணிகள் என்று உற்பத்தி செய்யப்படுகின்றன. முற்காலங்களில் செய்யப்பட்ட அளவுக்கு, அதிக சிரமப்பட்டு அதிக நேரத்தை செலவு செய்து கென்டே துணியை உற்பத்தி செய்வதில் நெசவாளர்களுக்கு ஆர்வமில்லை. பழங்காலத்தைச் சேர்ந்த முதல் தரமான கென்டேவை பத்திரமாக வைத்து இப்போது குடும்பத்திற்குள் தலைமுறை தலைமுறையாக பயன்படுத்தி வருகின்றனர். மரத்தாலான எளிய தறிகளில் நிகரில்லாத சிறப்போடும் கண்ணைக் கவரும் கலைநயத்தோடும் நெய்யப்பட்ட ராஜ வஸ்திரம் என்ற பெருமையுடன் இருந்த கென்டே ஆடைகளின் காலம் மலையேறிவிட்டது.(g01 9/22)

[அடிக்குறிப்புகள்]

a பாவு என்பது தறியில் நீளவாக்கில் செல்லும் நெசவு நூலிழை, ஊடு இழை என்பது தறியில் குறுக்குவாக்கில் செல்லும் நெசவு நூலிழை.

b தற்போதைய கானா.

[பக்கம் 16-ன் படங்கள்]

பட்டைத் தறிகள் இலேசானவை, எளிதில் எடுத்துச் செல்லக்கூடியவை

[பக்கம் 17-ன் படங்கள்]

ஊடிழை செல்லும் கயிற்றை அல்லது பாவை இழுத்துக்கட்டும் அமைவை நெசவாளி கால்களால் இயக்குகிறான்