மலைக்க வைக்கும் மஸல் வெளிப்படுத்தும் இரகசியங்கள்
மலைக்க வைக்கும் மஸல் வெளிப்படுத்தும் இரகசியங்கள்
எது, நீர் புகா சூப்பர்க்ளூவை உற்பத்தி செய்கிறது, வாக்யூம் க்ளீனர் போல் செயல்படுகிறது, மரபணுவை சீரமைக்க விஞ்ஞானிகளுக்கும் கற்பிக்கிறது? மஸல் என்றழைக்கப்படும் சாதாரண சின்னஞ்சிறு சிப்பி இனம்தான்!
மஸல்கள் உலகெங்கும் காணப்படுகின்றன. சில, கடலில் வாழ்கின்றன. சில, நன்னீர் ஆறுகளிலும் ஏரிகளிலும் குடியிருக்கின்றன. இரட்டை வால்வு ஓட்டுக்குள் அவற்றின் மென்மையான உடல் உள்ளது; இவ்வுடலை மூடகம் (mantle) என்ற தோல் போன்ற உறை மூடியிருக்கிறது. எல்லா மெல்லுடலிகளின் மூடகத்தைப் போலவே இதன் மூடகமும், கால்சியம் மற்றும் கார்பன்-டை-ஆக்சைடு கலவையால் ஓட்டினை உருவாக்குகிறது. இக்கலவை அந்த உயிரியின் உணவிலிருந்தும் சுற்றியுள்ள தண்ணீரிலிருந்தும் பெறப்படுகிறது. அந்த மெல்லுடலியின் திறமைக்கு மனிதர்களாகிய நாம் ஈடுகொடுக்க வேண்டுமானால், பாறை துண்டுகளை சாப்பிட்டு, வயிற்றினுள் அவற்றை மாற்றங்களுக்கு உட்படுத்தி, சுவர்களாகவும் கூரைகளாகவும் முன்னிணைக்கப்பட்ட கட்டுமானப் பொருட்களாக அவற்றை வெளிக்கொணர வேண்டும்! ஆனால், ஆராய்ச்சியாளர்களை அதிகம் வியக்க வைப்பது அதன் ஓடு அல்ல; அந்த கடல்வாழ் மஸல்லின் காலாக செயல்படும் இயங்கு உறுப்பே.
மஸல் சூப்பர்க்ளூ
பாறையிலிருந்து ஒரு மஸலை வலுக்கட்டாயமாக எடுக்கப் பாருங்கள், அது அந்தப் பாறையை எவ்வளவு இறுகப் பற்றியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வீர்கள். பசியோடு பறக்கும் கடற்பறவையின் கூர்மையான அலகுகளில் சிக்காமல் அல்லது மேலெழுந்து மோதும் அலைகள் அடித்து செல்லாமல் இருக்க இந்தளவுக்கு பிடிப்பு அதற்குத் தேவைதான். அந்தளவுக்கு கெட்டியாக அதனால் எப்படி ஒட்டிக்கொள்ள முடிகிறது? அது குடியிருக்க இடத்தைத் தேர்ந்தெடுக்கையில், தன் நாக்கு வடிவ காலை ஓட்டுக்கு வெளியே நீட்டி உறுதியான ஒரு மேற்பரப்போடு சேர்த்து அழுத்துகிறது. காலில் நீண்டவாக்கிலுள்ள ஒரு வரிப்பள்ளத்தை நிரப்புவதற்கு புரதங்களின் கலவையான ஒரு திரவத்தை விசேஷித்த சுரப்பிகள் சுரக்கின்றன. இந்தத் திரவம் சீக்கிரமாக கெட்டியாகி, சுமார் 2 சென்டிமீட்டர் நீளமுள்ள மெல்லிய, மீள்திறனுள்ள இழையாக மாறுகிறது. பிறகு, இந்த இழையின் நுனியில் மெத்தென்று இருக்கும் சிறிய அமைப்பு துளியளவு இயற்கை பசையை பீச்சியடிக்கிறது; மஸல் தன் காலைத் தூக்குகிறது, பிடிப்புக்கு உதவும் முதல் நங்கூர வரி உருவாகிவிட்டது. இப்படி கவனமாக உருவாகும் மெல்லிய இழைகள் அனைத்தும் சேர்ந்து பைஸஸ் என்றழைக்கப்படும் ஒரு கட்டை உண்டுபண்ணுகின்றன; கூடாரத்தை சமநிலையாக இழுத்து நிறுத்தும் கயிறுகளைப் போல், மஸல் தன் புதிய வீட்டில் கெட்டியாக ஒட்டிக்கொண்டிருப்பதற்கு இந்த இழை தொகுதி உதவுகிறது. இவை அனைத்தும் நடந்தேற மூன்று அல்லது நான்கு நிமிடங்களே ஆகின்றன.—படத்தைக் காண்க.
நச்சுத்தன்மையற்ற, மூலைமுடுக்கெங்கும் பரவ முடிந்தளவுக்கு துவளும் தன்மைமிக்க, எந்த மேற்பரப்பின்மீதும் ஏன், தண்ணீருக்கடியிலும் ஒட்டிக்கொள்ளும் திறன் படைத்த, படு உறுதியான பசை ஒன்று இருப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். அப்படியொன்று இருந்தால், கப்பல் கட்டுபவர்கள் அதை சந்தோஷமாக வரவேற்பார்கள். ஏனென்றால் செயற்கை துறைமுகத்திற்கு கொண்டு செல்லாமலேயே அதை வைத்து கப்பல்களை பழுதுபார்த்துவிடலாம். உண்மையிலேயே துருப்பிடிக்காமல் பாதுகாக்கும் நீர் புகா வர்ணம் இருந்தால் வாகன தொழிலாளர்கள் அதையே விரும்புவார்கள். முறிந்த எலும்புகளை சேர்க்கவும் காயங்களை மூடவும் அறுவை மருத்துவர்கள் அப்படியொரு பாதுகாப்பான பசைக்கு ஏகபோக வரவேற்பளிப்பார்கள். பல் மருத்துவர்கள் பற்சொத்தையை அடைப்பதற்கும், உடைந்த பல்லை சரிசெய்வதற்கும் அதைப் பயன்படுத்த முடியும். இப்படி எத்தனை எத்தனை காரியங்களுக்கோ பயன்படுத்தலாம் என சொல்லிக் கொண்டே போனால் பட்டியல் முடிவில்லாமல் தொடரும்.
எனினும், இந்த மஸல்களை வைத்து இப்படிப்பட்ட சூப்பர்க்ளூவை தயாரிக்கும் எண்ணம் விஞ்ஞானிகளுக்கு இல்லை. அப்படி நினைத்தால், வெறும் ஒரு கிராம் பசையைத் தயாரிக்க சுமார் 10,000 சிப்பி உயிரிகள் தேவைப்படும். சூப்பர்க்ளூவுக்கான உலகளாவிய தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானளவு மஸல்களைச் சேர்த்தால், அந்த மஸல் இனமே பூண்டோடு அழிந்துவிடும், ஏற்கெனவே அதன் இனங்களில் பல முற்றிலுமாக அழிந்துபோகும் ஆபத்தில் இருக்கின்றன. அதற்கு மாறாக, அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் மஸல்களின் பசைத்தன்மையுள்ள ஐந்து புரதங்களைப் பெறுவதற்குரிய மரபணுக்களை பிரித்தெடுத்து, க்ளோன் செய்திருக்கின்றனர்; தொழிற்சாலைகள் அவற்றை பரிசோதித்துப் பார்க்கும்படிக்கு சோதனைக்கூடத்தில் பெருமளவு உற்பத்தி செய்யப் போகும் தறுவாயில் இருக்கின்றனர். பசைத்தன்மையுள்ள இந்தப் புரதங்களில்
ஒன்றை பிரிட்டிஷ் விஞ்ஞானிகளும் ஆய்வு செய்து வருகின்றனர். எனினும், அவர்களால் எட்டிப் பிடிக்க முடியாதபடி மஸல் ஒருபடி மேலேயே இருக்கிறது. எந்தெந்த விதமான மேற்பரப்புக்கு சரியாக எந்தெந்த புரதங்களின் கலவை வேண்டுமென்பது இயல்புணர்ச்சியால் மஸலுக்கு மட்டுமே தெரியும். “அதை நீங்கள் எப்படித்தான் காப்பி அடிக்கப் போகிறீர்களோ?” என அணுக்கூறு உயிரியல் அறிஞர் ஃபிராங்க் ரோபர்டோ வியப்புடன் கேட்டார்.வாக்யூம் க்ளீனர்
மஸல்கள் வடிகட்டி உண்ணும் வகையை சேர்ந்தவை. பெரும்பாலான இனங்களில் ஒவ்வொரு மஸலும் தினந்தோறும் அநேக லிட்டர் தண்ணீரை தன் உடலுக்குள் எடுத்துக்கொண்டு உணவு, ஆக்ஸிஜன் ஆகியவற்றுடன் தூய்மைக்கேட்டுக்கு காரணமான தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளையும் நச்சு இரசாயனங்களையும் வடிகட்டிவிடுகின்றன. இந்தத் திறமை மஸல்களை மிகச் சிறந்த தண்ணீர் சுத்திகரிப்பாளர்களாக ஆக்குகிறது. இது, தண்ணீர் மாசுபட்டிருப்பதை குறித்து முன்கூட்டியே தெரிவிக்கும், பயன்படுத்துவதற்கு வசதியான எச்சரிப்பாளர்களாகவும் அவற்றை செயல்பட வைக்கிறது. உதாரணமாக, நார்வே கடற்கரைக்கு அருகில், இகோஃபிஸ்க் எண்ணெய் வயலைச் சுற்றியுள்ள கடல்பகுதியில் நூற்றுக்கணக்கான மஸல்கள் விடப்பட்டிருக்கின்றன. கடல்வாழ் உயிரிகளுக்கு ஆபத்து ஏற்படும் அளவுக்கு இரசாயனங்கள் கடலில் கலந்துள்ளனவா என்பதைக் கண்டறிய, சில மாதங்களுக்கு ஒருமுறை விஞ்ஞானிகள் பாறைகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் மஸல்களை எடுத்து அவற்றின் ஓட்டுக்குள் எந்தளவுக்கு மாசு படிந்துள்ளது என அளவிடுகிறார்கள். வட அமெரிக்காவைச் சுற்றியுள்ள கடற்கரையோரங்களிலும் உள்நாட்டு நீர்நிலைகளிலும் 1986 முதற்கொண்டு மஸல் கண்காணிப்பு திட்டத்தின்கீழ் மஸல்களும் சிப்பிகளும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வருடா வருடம் மெல்லுடலியினுள் சேர்ந்துவரும் இரசாயன அளவை பரிசோதிப்பதன் மூலம் இந்த ஆராய்ச்சியாளர்களால் தண்ணீரின் தரத்தில் ஏற்படும் எந்த மாற்றங்களையும் கண்டறிய முடிகிறது. அவை எந்தளவுக்கு உதவிக்கரம் நீட்டுகின்றன!
ஒரு வகை நன்னீர் இனமான வரிக்குதிரை மஸல் (zebra mussel) எனப்படும் வரியுள்ள இனம் பெரும்பாலும் நாசகரமானதாக கருதப்படுகிறது. கிழக்கத்திய ஐரோப்பாவிற்கே உரிய இந்த மஸல் பெருவிரல் நக அளவுள்ளது; 1980-களின் மத்திபத்தில் அட்லான்டிக் பெருங்கடலைக் கடந்து வந்த ஒரு கப்பல் அதன் எடைப்பாரமாக
இருந்த தண்ணீரை வெளியேற்றியபோது இந்த மஸல் தற்செயலாக வட அமெரிக்காவிற்கு அறிமுகமாகி இருக்கலாம். தன் இயற்கை வாழிடத்திலுள்ள பகைவர்களைவிட்டு தூரமாக இருப்பதால் இந்த வரிக்குதிரை மஸல், க்ரேட் லேக்ஸ் ஏரிகளிலும் அருகிலுள்ள நீர்வழிகளிலும் கிடுகிடுவென பெருகியிருக்கிறது; தண்ணீர் குழாய்களுக்குள் ஒட்டிக்கொண்டு தண்ணீர் செல்வதைத் தடுப்பதன் மூலமும், படகுகளிலும் அலை தாங்கிகளிலும் பாலங்களிலும் படிந்திருப்பதன் மூலமும் பல கோடி டாலர் மதிப்புள்ள சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சில உள்ளூர் மஸல் இனங்களையும் அது அழித்துவிட்டிருக்கிறது.எனினும் பயன்தரத்தக்க மறுபக்கமும் அதற்கு உண்டு. வரிக்குதிரை மஸல்கள் வடிகட்டி உண்பதில் பெரும் கில்லாடிகள்; மிதக்கும் கடற்பாசிகளை கபளீகரம் செய்து, கருப்பான ஏரித் தண்ணீரை அவை வெகு சீக்கிரத்தில் சுத்தம் செய்துவிடுகின்றன. இதனால் நீரடியில் வாழும் பச்சை தாவரங்கள் மீண்டும் செழித்து, மற்ற ஏரிவாழ் உயிரிகளின் குடியிருப்பாக திகழ முடிகிறது. மஸல்களின் வடிகட்டும் அசாதாரண திறமையைப் பயன்படுத்தி, பொது நீர்நிலைகளிலிருந்து தீங்கிழைக்கும் நுண்ணுயிரிகளையும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து கழிவையும் நீக்குவதைப் பற்றி தற்போது விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
மற்ற திறமைகள்
நன்னீரிலுள்ள சில குறிப்பிட்ட வகை மஸல்கள் நன்முத்துக்களை—சில விலையுயர்ந்த முத்துக்களை—‘பெற்றெடுப்பது’ உங்களுக்குத் தெரியுமா? முத்துக் கிளிஞ்சல் (mother-of-pearl) பதிக்கப்பட்ட அணிகலனை நீங்கள் எப்போதாவது அணிந்திருக்கிறீர்கள் என்றால் அல்லது முத்தாலான பட்டன்களை உபயோகித்திருக்கிறீர்கள் என்றால் இவையும் மஸல்களிலிருந்தே தயாரிக்கப்பட்டவையாக இருக்கலாம். வானவில்லின் வர்ணஜாலம் புரியும் பளபளப்பான முத்துக் கிளிஞ்சல் அல்லது முத்துக்கரு (nacre) ஓடுகளின் உட்புற அடுக்கிலிருந்து பெறப்படுகிறது; செயற்கை முத்துக்களை உருவாக்குவதில் அது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. சின்னஞ்சிறிய முத்துக்கரு குமிழ் மணி, மஸல்லின் ஓட்டிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டு சிப்பியினுள் செருகப்படுகிறது. இப்படியாக தூண்டிவிடப்படுகையில், அந்த சிப்பி அதை உறுத்தும் பொருள்மீது அடுக்கடுக்காக முத்துக்கருவை தோற்றுவித்து இவ்வாறு கடைசியில் அழகிய முத்தை உருவாக்குகிறது.
சில கடல் மஸல்கள் நமக்கு உணவாவதும் உண்மைதான்! நூற்றாண்டுகளாக இந்த மஸல்களின் மென்மையான, ஊட்டச்சத்துமிக்க மாமிசத்தை ஜனங்கள் பல விதங்களில் தயாரித்து ரசித்து ருசித்திருக்கின்றனர். பிரெஞ்சுக்காரர்களின் இல்லங்களில் நீங்கள் ம்யூல் மரீன்யர்-ரை கொஞ்சம் ருசித்துப் பார்க்கலாம். இது, சின்ன வெங்காயத்துடன் மஸல்கள் சேர்த்து வெள்ளை ஒயினில் அவிக்கப்படும் உணவு. ஸ்பானியர்கள் விதவிதமான பொருட்களைச் சேர்த்து தயாரிக்கும் பாயலா என்ற உணவில் மஸல்களை சேர்த்து உண்ண விரும்புகிறார்கள்; பெல்ஜியம் நாட்டவரோ ஃபிரெஞ்ச் ஃபிரையுடன் சேர்த்து இதை பெரும் பாத்திரத்தில் ஆவி பறக்க பரிமாறுகின்றனர். உலகெங்கும் மஸல் வளர்ப்பு, வியாபார ரீதியில் கொள்ளை லாபம் தரும் தொழிலாக நடைபெற்று வருகிறது; ஆனால் சில ஐரோப்பிய நாடுகளில் சிறுதொழிலாக குடும்பமாக சேர்ந்தும் நடத்தப்படுகிறது. ஓர் எச்சரிக்கை: இந்த ருசியான உணவை சுவைத்துப் பார்க்க நினைத்தால், இந்த மெல்லுடலி நம்பகமான இடத்திலிருந்து பெறப்பட்டதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையானவற்றை கடற்கரையில் நீங்களே பிடித்து ஒருபோதும் உண்ணாதீர்கள்; மாசுபடாத தண்ணீர் என்பது நூறு சதம் உறுதியாக தெரிந்தால் மட்டுமே உண்ணுங்கள்.
இன்னும் என்னென்ன இரகசியங்களை இந்த மஸல் வெளிப்படுத்தப் போகிறதோ யாருக்குத் தெரியும்? சொல்லப்போனால், இந்த உயிரிகளில் சில, நூறாண்டுகளுக்கும் அதிகமாக வாழ்வதாக கருதப்படுகிறது! சுத்தமான இரத்தத்தை இறைக்கும் சின்னஞ்சிறு இருதயம் இந்த மஸலுக்கு உள்ளது, ஆனால் அதற்கு மூளை இல்லை. அப்படியானால் மேலே கூறப்பட்ட மலைக்க வைக்கும் காரியங்களை இந்த மஸலால் எப்படி செய்ய முடிகிறது? “பூமியை விசாரித்துக் கேள், அது உனக்கு உபதேசிக்கும்; சமுத்திரத்தின் மச்சங்களைக் கேள், அவைகள் உனக்கு விவரிக்கும். கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] கரம் இதைச் செய்ததென்று இவைகளெல்லாவற்றினாலும் அறியாதவன் யார்?” என பைபிள் பதிலளிக்கிறது.—யோபு 12:8, 9.(g01 9/22)
[பக்கம் 24-ன் பெட்டி/படம்]
மரபணுவை சீரமைப்பவன்
பூமியில் மிக ஒதுக்கமான பகுதிகளில் ஒன்றான மத்திய அட்லான்டிக் ரிட்ஜில் ஆழ்கடல் மஸல் வாழ்கிறது. வெந்நீர் ஊற்றினால் கக்கப்படும் அதிக நச்சு மிக்க இரசாயனங்கள் இந்த உயிரியின் மரபணு அமைப்பை தொடர்ந்து பாதிக்கின்றன. எனினும் விசேஷித்த என்சைம்கள் இந்த மஸல் தன் டிஎன்ஏ-வை சீரமைத்துக்கொள்ள தொடர்ந்து உதவுகின்றன. வியாதியினாலோ வயோதிபத்தினாலோ சீரழிக்கப்படும் மனிதனின் டிஎன்ஏ-வை சீரமைப்பதற்கான வழியைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையில் விஞ்ஞானிகள் இந்த என்சைம்களை ஆராய்கிறார்கள்.
[பக்கம் 23-ன் படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
அநேக மஸல்கள் பயன்படுத்தும் நங்கூர முறை
கால்
தண்டு
பைஸல் இழைகள்
இழை
ப்ளக்
[பக்கம் 22-ன் படம்]
மஸல்கள் மிகச் சிறந்த தண்ணீர் சுத்திகரிப்பாளர்கள்
[படத்திற்கான நன்றி]
Ontario Ministry of Natural Resources/Michigan Sea Grant
[பக்கம் 23-ன் படங்கள்]
ஆசிய பச்சை மஸல்
நீல மஸல்
வரிக்குதிரை மஸல்
கலிபோர்னியா மஸல்
வில்லோசா ஐரிஸ் மஸல்
(மஸல்கள் நிஜ அளவுப்படி அல்ல)
[படத்திற்கான நன்றி]
ஆசிய பச்சை: Courtesy of Mote Marine Laboratory; வரிக்குதிரை: S. van Mechelen/University of Amsterdam/Michigan Sea Grant; வில்லோசா ஐரிஸ் மஸல் மற்றும் கீழே இடது: © M. C. Barnhart
[பக்கம் 23-ன் படம்]
விதவிதமான பொருட்களுடன் பெரும்பாலும் மஸல்கள் சேர்த்து தயாரிக்கப்படும் பாயலா என்ற ஸ்பானிய உணவு வகை