Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அம்மாவும் பத்து மகள்களும்

அம்மாவும் பத்து மகள்களும்

அம்மாவும் பத்து மகள்களும்

எஸ்தர் லோசானோ சொன்னபடி

அம்மா, அப்பா இருவருமே துருக்கியிலுள்ள பிட்லீஸ் நகரில் பிறந்தவர்கள்; அவர்களுடைய பெற்றோர் ஆர்மீனியர்கள். கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆர்மீனியர்களின் படுகொலை பரவலாக இருந்த சமயத்தில் அப்பா துருக்கியைவிட்டு ஐக்கிய மாகாணங்களுக்கு வந்தார். அப்போது அவருக்கு சுமார் 25 வயது. சில வருடம் கழித்து, 12 வயதாயிருந்த எங்கள் அம்மா சாஃபியாவும் இங்கு வந்தார்.

ஐக்கிய மாகாணங்களில் இருந்த அப்பா ஆராம் வார்ட்டான்யனை மணப்பதற்காக அம்மாவையும் அங்கு அனுப்ப இரு வீட்டாருமே ஒப்புக்கொண்டிருந்ததாக தெரிகிறது. கலிபோர்னியாவிலுள்ள ஃபிரெஸ்னோவிற்கு சென்றபோது அம்மா திருமண வயதை அடையாமலிருந்ததால் சட்டப்பூர்வ வயதை அடையும்வரை தன் எதிர்கால மாமியாரோடு வாழ்ந்தார்.

எங்கள் பெற்றோருக்கு முதலில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது; அவனுக்கு ஆண்ட்ரானீக் என்று பெயரிட்டார்கள், அவனோ பின்னர் தன் பெயரை பார்னீ என மாற்றிக்கொண்டான். அவன் 1914, ஆகஸ்ட் 6-⁠ம் தேதி பிறந்தான். அவனுக்கு பிறகு பிறந்த பத்து பிள்ளைகளுமே பெண்கள். 1924-⁠ல் ஷீல்ட் டூட்ஜீயன் என்பவர் ஃபிரெஸ்னோவிற்கு வந்து அங்குள்ள ஆர்மீனிய சமூகத்தினருக்கு ஒரு பேச்சு கொடுத்தபோது அப்பா பைபிள் மாணாக்கரில் ஒருவரானார்; அப்போது யெகோவாவின் சாட்சிகள் அவ்வாறுதான் அழைக்கப்பட்டனர். பிறகு நாங்கள் முழு குடும்பமாக கிறிஸ்தவ கூட்டங்களுக்கு சென்றோம்.

நாங்கள் 1931-⁠ல் கலிபோர்னியாவிலுள்ள ஓக்லண்டிற்கு இடம்மாறி அங்குள்ள சபையோடு கூட்டுறவு கொண்டோம். பார்னீ, 1941-⁠ல் இறக்கும்வரை கலிபோர்னியாவிலுள்ள நாப்பாவில் யெகோவாவை உண்மையோடு சேவித்தார். பார்னீக்கு பிறகு பிறந்த பெண்களில் நான் மூன்றாவது; யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருந்ததன் அடையாளமாக 1935-⁠ல் முழுக்காட்டப்பட்டேன். சுமார் 75 வருடங்களாக கூட்டங்களுக்கு வந்துகொண்டிருந்த என் அக்கா ஆக்னஸ் சமீபத்தில் முழுக்காட்டப்பட்டார்! அப்போது எல்லா சகோதரிகளுமே அங்கிருந்தோம், பத்து பெண்களில் கடைசி பெண்ணும்கூட முழுக்காட்டுதல் எடுத்துவிட்டதால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தோம்.

வருத்தகரமாக, அம்மா அப்போது இல்லை. அதற்கு முந்தைய வருடம்தான் 100 வயது முடிந்து 2 நாட்கள் கடந்தபோது அவர் இறந்துபோனார். அவருடைய மரணத்தை பற்றி கலிபோர்னியா செய்தித்தாளான ஹேவர்ட் நியூஸ் 1996, மே 14 அன்று அறிக்கை செய்தது. “யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக அவர் தன்னார்வ சமூக சேவை செய்தார். 54 வருடங்களாக அக்கறை காட்டுபவர்களிடம் பைபிளை போதித்து . . . வந்தார்” என அந்த செய்தித்தாள் கூறியது. என் தங்கை எலிசபெத் கூறியதையும் அந்த கட்டுரை மேற்கோள் காண்பித்தது: “அவருடைய வீடு திறந்தே இருந்தது, சாப்பாட்டு மேஜையில் எப்போதுமே இன்னும் ஒருவருக்கு இடமிருந்தது. . . . ‘கௌபாய் காப்பி சாப்பிட வாங்க’ என அவர் அடிக்கடி அழைப்பார். அவருடைய ஸ்பெஷல் தயாரிப்பான பாக்லவா தின்பண்டத்தை செய்திருக்கையில் நீங்கள் வந்தால் உண்மையில் கொடுத்து வைத்தவர்தான்.”

எங்கள் மூத்த சகோதரி கிலாடிஸுக்கு 85 வயது, இளைய சகோதரிக்கு 66 வயது. நாங்கள் அனைவருமே சுறுசுறுப்பான சாட்சிகளாயிருக்கிறோம். எங்களில் மூவர் உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியிலிருந்து பட்டம் பெற்று மிஷனரிகளாக சேவித்தோம். 13-வது வகுப்பில் பட்டம் பெற்ற எலிசபெத் பெருவிலுள்ள கால்லோவில் ஐந்து வருடங்கள் சேவித்து, இப்போது கலிபோர்னியாவிலுள்ள நியூபோர்ட் பீச்சில் வசிக்கிறார். ரூத் 35-வது வகுப்பிற்கு சென்றார். அவரும் அவரது கணவர் ஆல்வன் ஸ்டௌஃபரும் ஆஸ்திரேலியாவில் ஐந்து வருடங்கள் மிஷனரிகளாக சேவித்தனர். கிலியட்டின் நான்காவது வகுப்பிலிருந்த நான் 1947-⁠ல் மெக்ஸிகோ அனுப்பப்பட்டேன்; அங்கே 1955-⁠ல் ரோடால்ஃபோ லோசானோவை மணந்தேன். a அப்போதிலிருந்து இருவருமே மெக்ஸிகோவில் சேவித்து வருகிறோம்.

பத்து சகோதரிகளான எங்கள் அனைவருக்கும் ஓரளவு ஆரோக்கியம் இருப்பதற்காக நன்றியுடன் இருக்கிறோம். இன்றும், யெகோவாவுடைய புதிய உலகில் என்றென்றும் அவருடைய சித்தமாயிருக்கும்வரை முழு மனதோடும், இருதயத்தோடும், பலத்தோடும் தொடர்ந்து அவரை சேவிக்க அது எங்களுக்கு உதவுகிறது.(g01 10/22)

[அடிக்குறிப்புகள்]

a அவருடைய அனுபவத்தை 2001, ஜனவரி 1, காவற்கோபுரத்தில் காணலாம்.

[பக்கம் 18-ன் படம்]

1997-⁠ல் ஆக்னஸ் முழுக்காட்டுதல் எடுத்தபோது

[பக்கம் 19-ன் படம்]

1949-⁠ல் எலிசபெத் கிலியட் பள்ளியில் பட்டம் பெற்றபோது

[பக்கம் 19-ன் படம்]

1950-⁠ல் மெக்ஸிகோ கிளையில் எஸ்தர் (வலப்பக்கம்)

[பக்கம் 19-ன் படம்]

1987-⁠ல் மெக்ஸிகோ கிளையில் சர்வதேச ஊழியர்களாக சேவிக்கும் ரூத், ஆல்வன் ஸ்டௌஃபர்