Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உதவிக்கரம் உங்களுக்கு உண்டு

உதவிக்கரம் உங்களுக்கு உண்டு

உதவிக்கரம் உங்களுக்கு உண்டு

‘ஒரே கப்பில் 49 தூக்க மாத்திரைகள். இதை நான் குடிக்கவா வேண்டாமா?’ சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த 28 வயதுடைய ஒரு மனிதன் தன்னையே கேட்டுக்கொண்டான். அவனுடைய மனைவியும் பிள்ளைகளும் அவனை விட்டுப் பிரிந்துவிட்டிருந்தார்கள். அவனுடைய வாழ்க்கை மனச்சோர்வு எனும் ஆழ்கடலில் மூழ்கிவிட்டிருந்தது. ஆனால் அதைக் குடித்தப் பிறகு, ‘இல்லை, நான் சாக விரும்பவில்லை!’ என சொல்லிக்கொண்டான். எதிர்பாராத விதமாக, இந்தக் கதையை சொல்வதற்கு அவன் உயிர் பிழைத்துக்கொண்டான். தற்கொலை தூண்டுதல்கள் எப்பொழுதும் மரணத்திற்கு வழிநடத்துவதில்லை.

பருவவயது தற்கொலை முயற்சிகளைப் பற்றி ஐ.மா. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களைச் சேர்ந்த அலிக்ஸ் க்ராஸ்பி என்பவர் இவ்வாறு கூறினார்: “அவர்களுடைய தற்கொலை முயற்சியை நீங்கள் சில மணிநேரங்களுக்கு கட்டுப்படுத்த முடிந்தாலே போதும், அதை நீங்கள் நிறுத்திவிடலாம். இப்படி தடங்கல் ஏற்படுத்துவதன் மூலம் அநேகர் தற்கொலை செய்துவிடுவதை நீங்கள் தடுத்துவிடலாம். உங்களால் அவர்களுடைய உயிரை காப்பாற்ற முடியும்.”

ஜப்பான் மருத்துவ கல்லூரியில் உயிர்காக்கும் மற்றும் அவசர சிகிச்சை மையத்தில் பணிபுரிகையில், தற்கொலை தூண்டுதல் ஏற்பட்டவர்களுக்கு வாழ வேண்டும் என்ற ஆசையை மீண்டும் ஊட்டி பேராசிரியர் ஹிஸாஷி கியூரோஸாவா நூற்றுக்கணக்கானோருக்கு உதவி செய்தார். ஆம், ஏதோ ஒருவகையான தடங்கலை ஏற்படுத்தி உயிர்களைக் காப்பாற்ற முடியும். என்ன உதவி தேவைப்படுகிறது?

அடித்தள பிரச்சினைகளை எதிர்ப்படுதல்

முந்தைய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தற்கொலை செய்துகொண்ட 90 சதவீதத்தினருக்கு மனநல கோளாறுகள் அல்லது போதைப்பொருள் பழக்கங்கள் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆகவே, ஐ.மா. தேசிய மனநல நிறுவனத்தைச் சேர்ந்த ஈவ் கே. மாஷ்சிட்ஸ்கி இவ்வாறு கூறுகிறார்: “பலதரப்பு வயதினரிலும் தற்கொலையை தடுப்பதற்கு பெரிதும் கைகொடுப்பது மனநல கோளாறுகளையும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தையும் ஒழிப்பதே.”

வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், இப்படிப்பட்ட பிரச்சினை இருப்பவர்கள் உதவியை நாட முன்வருவதில்லை. ஏன்? “ஏனென்றால் சமுதாயத்தில் பலமான தப்பெண்ணம் நிலவுகிறது” என டோக்கியோ மாநகர உளவியல் நிறுவனத்தைச் சேர்ந்த யாஷிடோமோ டாகாஹாஷி கூறுகிறார். அதனால், தங்களுக்கு பிரச்சினை இருக்கிறது என ஓரளவு உணருகிறவர்களும்கூட உடனடி சிகிச்சையை நாட தயங்குகிறார்கள் என்றும் அவர் கூறுகிறார்.

ஆனாலும் சிலர் வெளிப்படையாக சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை. ஹிரோஷி ஓகாவா என்பவர் தனக்கு மனச்சோர்வு இருப்பதையும் தற்கொலை செய்துகொள்ளப்போகும் நிலையில் இருந்ததையும்கூட வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். இவர் பிரபல தொலைக்காட்சி அறிவிப்பாளர், ஜப்பானில் 17 வருடங்களாக அவரே சொந்தமாக நிகழ்ச்சிகளை நடத்தியிருப்பவர். “மனச்சோர்வு என்பது மனதை பாதிக்கும் சாதாரண ஜலதோஷத்திற்கு ஒப்பிடப்படுகிறது” என ஓகாவா கூறினார். இது யாருக்கும் வரலாம், ஆனால் குணமாவது சாத்தியமே என அவர் குறிப்பிட்டார்.

யாரிடமாவது பேசுங்கள்

“பிரச்சினையோடு யாராவது தனியாக இருக்கும்போது அதை அவர் பூதாகரமாக, தீர்க்க முடியாத ஒன்றாக நினைக்கிறார்” என முன்பு மேற்கோள் காட்டப்பட்ட ஹங்கேரி சுகாதார அதிகாரியாகிய பேலா புடா கூறுகிறார். இது பைபிளிலுள்ள பூர்வ நீதிமொழியின் ஞானத்தை வலியுறுத்திக் காட்டுகிறது: “தன்னை தனிமைப்படுத்திக் கொள்கிறவன் தன் சுய இச்சையை தேடுகிறான்; நடைமுறையான ஞானம் அனைத்தையும் புறக்கணிக்கிறான்.”​—நீதிமொழிகள் 18:1, NW.

இந்த ஞானமான வார்த்தைகளுக்கு செவிகொடுங்கள். சொந்த பிரச்சினைகள் உங்கள்மீது வெள்ளம்போல் பாய்ந்து உங்களை மூழ்கடிப்பதற்கு அனுமதித்துவிடாதீர்கள். நம்பகமான ஒருவருடைய உதவியை நாடி, அவரிடம் உங்களுடைய மனதில் உள்ளதை கொட்டுங்கள். ‘ஆனால் என்னுடைய மனசுல இருப்பதை கொட்டுவதற்கு எனக்கு யாரும் இல்லையே’ என நீங்கள் ஒருவேளை சொல்லலாம். அநேகர் இப்படி உணருவதாக மனநல மருத்துவர் டாக்டர் நாயோக்கி சாட்டோ கூறினார். தங்களுடைய பலவீனங்களை வெளிப்படுத்த விரும்பாததால் அந்த நோயாளிகள் மற்றவர்களிடம் சொந்த விஷயங்களைச் சொல்வதை தவிர்க்கலாம் என சாட்டோ குறிப்பிட்டார்.

செவிகொடுத்துக் கேட்பவரை எங்கே காணலாம்? பெரும்பாலான இடங்களில் தற்கொலை தடுப்பு மையத்தின் உதவியை நாடலாம் அல்லது அவசர உதவி மையங்களில் அல்லது உணர்ச்சி ரீதியிலான பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பெயர்பெற்ற மருத்துவர் ஒருவரை நாடலாம். ஆனால் உதவிக்கு மற்றொரு ஊற்றுமூலம் இருப்பதை பற்றியும்கூட வல்லுநர்கள் சிலர் உணர்கிறார்கள். அந்த ஊற்றுமூலம்தான் மதம். அது எப்படி உதவி செய்ய முடியும்?

தேவையான உதவியை கண்டடைந்தார்கள்

பல்கேரியாவில் வசிக்கும் மாரின் என்ற ஒரு நோயாளி எப்படியாவது தன் உயிரை போக்கிவிட வேண்டும் என்று தீவிரமாக எண்ணிக் கொண்டிருந்தார். யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்படும் காவற்கோபுரம் என்ற மத பத்திரிகையை ஒருநாள் தற்செயலாக பார்த்தார். யெகோவாவின் சாட்சிகள் நேரில் சந்திப்பதற்கு அந்தப் பத்திரிகையில் விடுக்கப்பட்ட அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டார். என்ன நடந்தது என்பதை மாரின் விளக்குகிறார்: “உயிர் நம்முடைய பரலோக பிதா தந்த ஒரு பரிசு, நமக்கு நாமே தீங்கிழைக்கவோ வேண்டுமென்றே நம்முடைய உயிரை முடித்துக்கொள்ளவோ நமக்கு உரிமையில்லை என்பதை நான் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன். ஆகவே, தற்கொலை செய்துகொள்ள வேண்டுமென்ற என்னுடைய முன்னாள் ஆசையை விட்டுவிட்டு உயிரை நேசிக்க ஆரம்பித்தேன்!” கிறிஸ்தவ சபையிலிருந்து அன்பான ஆதரவையும் மாரின் பெற்றார். இப்போதும் ஒரு நோயாளியாகவே இருந்தாலும், அவர் இவ்வாறு கூறுகிறார்: “இப்பொழுது என்னுடைய வாழ்வில் வசந்தமும் அமைதியும் தவழ்கிறது. செய்வதற்கு இனிமையான காரியங்களும் இருக்கின்றன​—⁠எனக்கு இருக்கும் நேரம் போதாத அளவுக்கு அவ்வளவு அதிகமாக இருக்கின்றன! இவை அனைத்திற்கும் நான் யெகோவாவிற்கும் அவருடைய சாட்சிகளுக்கும் கடமைப்பட்டிருக்கிறேன்.”

ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த இளம் மனிதனும் யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து உதவியைப் பெற்றான். தங்களுடைய வீட்டிற்குக் கூட்டிச்சென்ற “ஒரு கிறிஸ்தவ குடும்பத்தின் அன்பை” பற்றி இன்று அவன் குறிப்பிடுகிறான். அவன் மேலும் கூறுகிறான்: “பிற்பாடு, [யெகோவாவின் சாட்சிகளுடைய] சபை அங்கத்தினர்கள் மாறிமாறி ஒவ்வொரு நாளும் சாப்பாட்டிற்காக என்னை அவர்களுடைய வீட்டிற்கு அழைத்தார்கள். உபசரிப்பை பெற்றது மட்டுமல்லாமல், யாரிடமாவது மனம்விட்டு பேச முடிந்ததும் எனக்கு உதவியது.”

பைபிளிலிருந்து தான் கற்றுக்கொண்டது, முக்கியமாக மனிதகுலத்தின் மீது உண்மை கடவுளாகிய யெகோவா தேவன் காண்பிக்கும் அன்பைப் பற்றி கற்றுக்கொண்டது இந்த இளம் மனிதனை மிகவும் உற்சாகப்படுத்தியது. (யோவான் 3:16) யெகோவா தேவனின் சமுகத்தில் “உங்கள் இருதயத்தை ஊற்றிவிடு”கையில், அவர் உண்மையிலேயே செவிகொடுத்துக் கேட்கிறார். (சங்கீதம் 62:8) ‘அவருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது,’ மக்களுடைய தவறை பார்ப்பதற்கு அல்ல, ஆனால் “தம்மைப் பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணு”வதற்காக உலாவிக்கொண்டிருக்கிறது. (2 நாளாகமம் 16:9) யெகோவா நமக்கு இவ்வாறு உறுதியளிக்கிறார்: “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.”​—ஏசாயா 41:10.

புதிய உலகைப் பற்றிய கடவுளுடைய வாக்குறுதி சம்பந்தமாக சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த அந்த இளம் மனிதன் இவ்வாறு சொன்னான்: “என்னுடைய மன பாரத்தை இறக்குவதற்கு இது ரொம்ப உதவி செய்திருக்கிறது.” ‘ஆத்தும நங்கூரம்’ என வருணிக்கப்படும் இந்த நம்பிக்கை பரதீஸான பூமியில் என்றென்றும் வாழும் வாக்குறுதியை உட்படுத்துகிறது.​—எபிரெயர் 6:19; சங்கீதம் 37:10, 11, 29.

உங்கள் உயிர் மற்றவர்களுக்கு முக்கியம்

நீங்கள் யாருடைய உதவியுமின்றி தன்னந்தனிமையில் வாடுவது போன்ற உணர்வை, நீங்கள் செத்தால் யாருக்கு என்ன கவலை போன்ற உணர்வை உண்டாக்கும் சூழ்நிலைமைகள் உங்களுக்கு ஏற்படலாம். ஆனால், தனிமையில் இருப்பதாக உணர்வதற்கும் தனிமையில் இருப்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது என்பதை நினைவில் வையுங்கள். பைபிள் காலங்களில், தீர்க்கதரிசியாகிய எலியா வாழ்க்கையில் மிகவும் சோர்ந்துபோகும் நிலைக்கு வந்துவிட்டார். யெகோவாவிடம் அவர் இவ்வாறு கூறினார்: “உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்று போட்டார்கள், நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன்.” ஆம், எலியா தன்னந்தனிமையில் வாடுவதாக உணர்ந்தார்​—⁠இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. சக தீர்க்கதரிசிகளில் அநேகர் கொலை செய்யப்பட்டார்கள். இவருக்கும் கொலை மிரட்டல் வந்திருந்தது, ஆகவே உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தார். ஆனால் உண்மையிலேயே அவர் தனிமையில் இருந்தாரா? இல்லை. அவரைப் போலவே, அந்த இருண்ட காலங்களில் மெய் தேவனை உண்மையோடு சேவிக்க சுமார் 7,000 பேர் முயன்று கொண்டிருந்ததை யெகோவா அவருக்குத் தெரியப்படுத்தினார். (1 இராஜாக்கள் 19:1-18) ஆனால் உங்களைப் பற்றியென்ன? நீங்கள் நினைப்பது போல தனிமையில் இல்லாமலிருக்கும் சாத்தியமிருக்கிறதா?

உங்கள் மீது அக்கறை காட்டும் ஜனங்கள் இருக்கிறார்கள். உங்களுடைய பெற்றோர், உங்களுடைய திருமண துணை, உங்களுடைய பிள்ளைகள், உங்களுடைய நண்பர்கள் ஆகியோரைப் பற்றி நீங்கள் நினைக்கலாம். ஆனால் இன்னும் அநேகர் இருக்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய சபையில், உங்கள் மீது அக்கறை காட்டும் முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவர்களை நீங்கள் காணலாம்; நீங்கள் சொல்வதை அவர்கள் பொறுமையோடு செவிகொடுத்துக் கேட்பார்கள், உங்களுக்காகவும் உங்களோடும் ஜெபிப்பார்கள். (யாக்கோபு 5:14, 15) அபூரண மனிதர் அனைவரும் உங்களைக் கைவிட்டாலும், உங்களை ஒருபோதும் கைவிடாத ஒருவர் இருக்கிறார். பூர்வ காலத்தில் வாழ்ந்த தாவீது இவ்வாறு கூறினார்: “என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் [“யெகோவா,” NW] என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.” (சங்கீதம் 27:10) ஆம், யெகோவா உங்கள் மீது ‘கரிசனை காட்டுகிறார்.’ (1 பேதுரு 5:7, NW) யெகோவாவின் கண்களில் நீங்கள் அருமையானவர்கள் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.

உயிர்​—⁠கடவுள் தந்த ஒரு பரிசு. ஆனால் சிலசமயத்தில் இது ஒரு பரிசாக தோன்றாமல் பெரும் பாரமாக தோன்றுவது உண்மையே. ஆனால், நீங்கள் யாருக்காவது விலைமதிப்புமிக்க ஒரு பரிசைக் கொடுத்து அதை அவர் உண்மையில் பயன்படுத்துவதற்கு முன்பே தூக்கியெறிந்துவிட்டால் நீங்கள் எப்படி உணருவீர்கள் என்பதை உங்களால் கற்பனை செய்துபார்க்க முடிகிறதா? உயிர் என்ற பரிசை அபூரண மானிடர்களாகிய நாம் இன்னும் சரியாக பயன்படுத்த ஆரம்பிக்கவில்லை. சொல்லப்போனால், இப்பொழுது நாம் வாழும் வாழ்க்கை கடவுளுடைய பார்வையில் “மெய் வாழ்க்கை” அல்ல என பைபிள் சுட்டிக்காட்டுகிறது. (1 தீமோத்தேயு 6:19, NW) ஆம், சமீப எதிர்காலத்தில் நம்முடைய வாழ்க்கை மிகவும் திருப்தியாகவும் அதிக அர்த்தமுள்ளதாகவும் மகிழ்ச்சி ததும்புவதாகவும் இருக்கும். எப்படி?

பைபிள் இவ்வாறு கூறுகிறது: “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.” (வெளிப்படுத்துதல் 21:3, 4) இந்த வார்த்தைகள் நிறைவேறும்போது வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை சற்று கற்பனை செய்துபாருங்கள். அவசரமில்லாமல் நிதானமாக கற்பனை செய்துபாருங்கள். அழகிய, முழுமையான காட்சியை மனதில் உருவாக்கிப் பாருங்கள். அந்தக் காட்சி ஏதோ வீண் கற்பனை அல்ல. கடந்த காலத்தில் யெகோவா தம்முடைய ஜனங்களோடு தொடர்புகொண்ட விதத்தை நீங்கள் சிந்தித்துப் பார்க்கும்போது, அவர் மீது உங்களுடைய நம்பிக்கை பெருகும், அந்தக் காட்சியும் அதிக நிஜமான ஒன்றாக தெரியும்.​—சங்கீதம் 136:1-26.

வாழ்வதற்கு உங்களுடைய ஆசையை மீண்டும் முழுமையாக புதுப்பிப்பதற்கு சிலகாலம் ஆகலாம். ‘சகல உபத்திரவங்களிலேயும் நமக்கு ஆறுதல் செய்கிற தேவனிடத்தில்’ தொடர்ந்து ஜெபியுங்கள். (2 கொரிந்தியர் 1:3, 4; ரோமர் 12:12; 1 தெசலோனிக்கேயர் 5:17) தேவையான பலத்தை யெகோவா உங்களுக்கு கொடுப்பார். வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை அவர் உங்களுக்கு போதிப்பார்.​—ஏசாயா 40:29. (g01 10/22)

[பக்கம் 9-ன் பெட்டி/படம்]

ஒருவர் தற்கொலை செய்ய விரும்புகிறவராக தெரிந்தால் நீங்கள் எப்படி உதவலாம்?

தற்கொலை செய்துகொள்ள விரும்புவதாக ஒருவர் உங்களிடம் சொல்லும்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்? “நன்கு செவிகொடுத்துக் கேட்பவராக இருங்கள்” என ஐ.மா. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (U.S. Centers for Disease Control and Prevention [CDC]) கூறுகிறது. அவருடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்த அனுமதியுங்கள். ஆனால், பலருடைய விஷயத்தில், தற்கொலை செய்ய விரும்புகிறவர் சமுதாயத்தோடு ஒட்டோ உறவோ இல்லாமல் ஒதுங்கியே வாழ்கிறார், எதையும் வாய்விட்டு சொல்வதில்லை. அவருடைய நம்பிக்கையிழந்த உணர்ச்சிகளும் வேதனைகளும் நிஜமானவை என்பதை ஒத்துக்கொள்ளுங்கள். அவருடைய நடத்தையில் நீங்கள் கவனித்த குறிப்பிட்ட மாற்றங்கள் சிலவற்றை சாந்தமாக சொன்னால், அவர் மனம் திறந்து உங்களிடம் பேசுவதற்கு தூண்டப்படலாம்.

செவிகொடுத்துக் கேட்கும்போது அனுதாபம் காட்டுங்கள். “உங்களுக்கும் மற்றவர்களுக்கும் அந்த நபருடைய உயிர் முக்கியமானது என்பதை வலியுறுத்துவது முக்கியம்” என CDC சொல்கிறது. அவருடைய மரணம் உங்களையும் மற்றவர்களையும் உடைந்துபோகப் பண்ணும் என்பதை அவருக்கு தெரியப்படுத்துங்கள். படைப்பாளர் அவர்மீது அக்கறை கொள்கிறார் என்பதை புரிந்துகொள்ள அந்த நபருக்கு உதவுங்கள்.​—⁠1 பேதுரு 5:⁠7.

தற்கொலை செய்துகொள்ள அந்த நபர் பயன்படுத்தும் எதையும்​—⁠முக்கியமாக துப்பாக்கிகளை⁠—⁠அகற்றிவிடுங்கள் என நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். நிலைமை மிகவும் மோசமாக தோன்றினால், மருத்துவ பரிசோதனை செய்வதற்கு அந்த நபரை உற்சாகப்படுத்துங்கள். உங்களால் வேறெதுவும் செய்ய முடியாதபட்சத்தில், அவசர மருத்துவ சேவையை நாடுங்கள்.

[பக்கம் 11-ன் பெட்டி]

‘இப்படி நினைத்ததால் கடவுள் என்னை மன்னிப்பாரா?’

யெகோவாவின் சாட்சிகளோடு கூட்டுறவு கொள்வது, அநேகர் தங்களுடைய தற்கொலை எண்ணங்களை சமாளிக்க உதவியிருக்கிறது. என்றபோதிலும், இன்று யாருமே வாழ்க்கையின் பெரும் கவலைகளிலிருந்தோ மனச்சோர்விலிருந்தோ தப்ப முடியாது. தங்களுடைய உயிரை துறக்க நினைத்த கிறிஸ்தவர்களை பிற்பாடு ஆழ்ந்த குற்றவுணர்ச்சி அலைக்கழிக்கிறது. குற்றவுணர்வு அவர்களுடைய பாரத்தை அதிகரிக்கவே செய்யலாம். ஆகவே, இப்படிப்பட்ட உணர்ச்சிகளை எப்படி சமாளிக்கலாம்?

பைபிள் காலங்களில் உண்மையுள்ள ஆண்கள் பெண்கள் சிலர் வாழ்க்கையைப் பற்றி எதிர்மறையான ஆழ்ந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்தியது கவனிக்கத்தக்கது. முற்பிதாவாகிய ஈசாக்கின் மனைவி ரெபெக்காள் குடும்ப பிரச்சினைகளால் மிகவும் மனமுடைந்து ஒருசமயம் இவ்வாறு கூறினாள்: “என் உயிர் எனக்கு வெறுப்பாயிருக்கிறது.” (ஆதியாகமம் 27:46) தன்னுடைய பிள்ளைகள், ஆரோக்கியம், சொத்து சுகம், சமுக அந்தஸ்து ஆகிய அனைத்தையும் இழந்த யோபு இவ்வாறு சொன்னார்: “என் ஆத்துமா ஜீவனை அரோசிக்கிறது.” (யோபு 10:⁠1) மோசே ஒருமுறை கடவுளிடம் இவ்வாறு வேண்டிக்கொண்டார்: “இப்பொழுதே என்னைக் கொன்றுபோடும்.” (எண்ணாகமம் 11:15) கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய எலியா ஒருசமயம் இவ்வாறு கூறினார்: “போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்.” (1 இராஜாக்கள் 19:⁠4) “நான் உயிரோடிருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும்” என தீர்க்கதரிசியாகிய யோனா சதா புலம்பினார்.​—⁠யோனா 4:⁠8.

இப்படி உணர்ந்ததற்காக யெகோவா இவர்களை கண்டனம் செய்தாரா? இல்லை. அவர்களுடைய வார்த்தைகளை பைபிளில் பதிவு செய்தும் வைத்திருக்கிறாரே. ஆனால் அப்படிப்பட்ட உணர்ச்சிகளின் காரணமாக தற்கொலை செய்துகொள்ள அந்த உண்மையுள்ள ஆட்கள் தங்களை அனுமதிக்கவில்லை என்பதை கவனிப்பது முக்கியம். யெகோவா அவர்களை உயர்வாக மதித்தார்; அவர்கள் வாழ வேண்டும் என்றே விரும்பினார். உண்மை என்னவென்றால், துன்மார்க்கருடைய உயிரைப் பற்றியும் கடவுள் அக்கறையுள்ளவராக இருக்கிறார். அவர்கள் தங்களுடைய வழிகளை மாற்றிக்கொண்டு, ‘தொடர்ந்து வாழவே’ அவர்களை உந்துவிக்கிறார். (எசேக்கியேல் 33:11, NW) அப்படியென்றால் அவருடைய தயவைப் பெறுவதில் மிகுந்த கவனம் செலுத்துகிறவர்கள் தொடர்ந்து வாழ வேண்டும் என அவர் எந்தளவு விரும்புவார்!

கடவுள் தம்முடைய குமாரனை கிரயபலியாக கொடுத்திருக்கிறார், கிறிஸ்தவ சபையை தந்திருக்கிறார், பைபிளையும் ஜெபிக்கும் சிலாக்கியத்தையும் அளித்திருக்கிறார். கடவுளிடம் பேச்சுத்தொடர்பு கொள்ள உதவும் இந்த ‘லைன்’​—⁠ஜெபம்⁠—⁠ஒருபோதும் பிஸியாக இருப்பதில்லை. தாழ்மையோடு உண்மையான இருதயத்தோடு அவரிடம் அண்டி வருகிறவர்கள் அனைவருடைய ஜெபங்களையும் கடவுளால் கேட்க முடியும், கேட்பார். “ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் [“தாராளமாக,” NW] கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.”​—⁠எபிரெயர் 4:⁠16.

[பக்கம் 12-ன் பெட்டி]

உங்கள் அன்பானவரை இழந்துவிட்டீர்களா?

யாராவது தற்கொலை செய்துகொள்ளும்போது குடும்ப அங்கத்தினர்களும் நெருங்கிய நண்பர்களும் மனோ ரீதியில் கடுமையாக அலைக்கழிக்கப்படுகிறார்கள். இந்த சோகத்திற்கு அநேகர் தங்களையே குற்றம் சாட்டிக்கொள்கிறார்கள். ‘அன்றைக்கு நான் மட்டும் இன்னும் கொஞ்ச நேரம் அவனோடு இருந்திருந்தால் நல்லா இருந்திருக்குமே,’ ‘நான் மட்டும் கொஞ்சம் வாய் திறக்காம இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காதே,’ ‘நான் மட்டும் அவனுக்கு இன்னும் கொஞ்சம் உதவி செய்திருந்தால் இப்படி ஆகியிருக்காதே’ என இதுபோல அவர்கள் கூறி புலம்பலாம். ‘நான் மட்டும் இப்படி செய்திருந்தால் அல்லது அப்படி செய்திருந்தால் அவன்(ள்) இன்னும் உயிரோடு இருந்திருப்பானே(ளே)’ என்பதைத்தான் அவர்கள் சொல்கின்றனர். ஆனால் மற்றொருவருடைய தற்கொலைக்கு நம்மீது குற்றம் சாட்டிக்கொள்வது நியாயமா?

தற்கொலைக்குரிய அறிகுறிகளை தற்கொலை நடந்த பிறகு புரிந்துகொள்வது ரொம்ப சுலபம் என்பதை மனதிற்கொள்ளுங்கள். ஆனால் அதற்கு முன்பு இப்படிப்பட்ட அறிகுறிகளை கொஞ்சம்கூட நினைத்துப் பார்த்திருக்க முடியாது. பைபிள் கூறுகிறது: “இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்; அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தையாகான்.” (நீதிமொழிகள் 14:10) சிலசமயங்களில் இன்னொருவர் என்ன நினைக்கிறார் அல்லது எப்படி உணருகிறார் என்பதைப் புரிந்துகொள்வது கொஞ்சம்கூட சாத்தியமல்ல. தற்கொலை செய்துகொள்ளும் தூண்டுதலுள்ள அநேகர் தங்களுடைய மனதுக்குள் புதைந்து கிடக்கும் உணர்ச்சிகளை மற்றவர்களிடம், நெருங்கிய குடும்ப அங்கத்தினர்களிடம்கூட நன்கு வெளிப்படுத்த முடியாது.

தற்கொலை செய்துகொள்ளப்போகும் ஒருவருடைய அறிகுறிகளைப் பற்றி சோகத்தை சொல்லுதல் (ஆங்கிலம்) என்ற புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “பொதுவாக, இப்படிப்பட்ட அறிகுறிகளை பகுத்துணருவது சுலபமல்ல என்பதே உண்மை.” சில அறிகுறிகளை நீங்கள் உணர்ந்திருந்தாலும், தற்கொலையை நீங்கள் தடுத்திருக்கலாம் என்பதற்கு அதுதானே எந்த உத்தரவாதமும் அளிப்பதில்லை என்றும் அதே புத்தகம் சொல்கிறது. உங்களையே நீங்கள் நொந்துகொள்வதற்குப் பதிலாக, ஞானியாகிய சாலொமோன் ராஜாவின் இந்த வார்த்தைகளில் ஆறுதல் அடையலாம்: “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்.” (பிரசங்கி 9:⁠5) உங்களுடைய அன்பானவர் எரிநரகத்தில் வதைக்கப்பட்டுக் கொண்டில்லை. அவரை தற்கொலைக்கு வழிநடத்திய மனோ மற்றும் உணர்ச்சி ரீதியிலான வேதனை முடிவுக்கு வந்துவிட்டன. அவர் எந்த வேதனையும் அனுபவித்துக் கொண்டில்லை; அவர் வெறுமனே ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.

இப்பொழுது, உயிரோடிருக்கிறவர்களுடைய, ஏன் உங்களுடைய சுகநலத்தின் மீது கவனத்தை செலுத்துவதே மிகவும் நல்லது. சாலொமோன் தொடர்ந்து கூறினார்: “செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை [உயிரோடிருக்கும்போதே] உன் பெலத்தோடே செய்.” (பிரசங்கி 9:10) தற்கொலை செய்துகொண்டவர்களுடைய எதிர்கால வாழ்க்கை எதிர்பார்ப்புகள் “இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிற” யெகோவாவின் கரங்களில் இருக்கின்றன என்பதில் நீங்கள் நம்பிக்கையோடு இருக்கலாம்.​—⁠2 கொரிந்தியர் 1:3. a

[அடிக்குறிப்பு]

a தற்கொலை செய்துகொண்டவர்களுக்கு இருக்கும் எதிர்கால எதிர்பார்ப்புகளைப் பற்றிய சமநிலையான நோக்குநிலையை அறிந்துகொள்வதற்கு செப்டம்பர் 8, 1990 ஆங்கில விழித்தெழு! இதழில் வெளிவந்த “பைபிளின் கருத்து: “தற்கொலைகள்​—⁠உயிர்த்தெழுதல் உண்டா?” என்ற கட்டுரையைக் காண்க.

[பக்கம் 8-ன் படங்கள்]

யாரிடமாவது பேசுங்கள்

[பக்கம் 10-ன் படம்]

உங்களுடைய உயிர் மற்றவர்களுக்கு முக்கியமே