Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகளாவிய பிரச்சினை

உலகளாவிய பிரச்சினை

உலகளாவிய பிரச்சினை

“தற்கொலை என்பது சமுதாயத்தின் நலனை கெடுக்கும் மோசமான ஒரு பிரச்சினை.” 1999-⁠ல் ஐ.மா. தலைமை அறுவை மருத்துவர் டேவிட் ஸாச்சர் கூறினார்.

ஐக்கிய மாகாணங்களின் தலைமை அறுவை மருத்துவர் விட்ட இந்த அறிக்கையால் சரித்திரத்திலேயே முதல் தடவையாக தற்கொலை பற்றிய விஷயத்தை உலகம் பேச ஆரம்பித்தது. இப்போது இந்நாட்டில் பிறரால் கொலை செய்யப்படுபவர்களைவிட தங்களைத் தாங்களே கொலை செய்துகொள்பவர்களே அதிகம். ஆகவே, ஐ.மா. சட்டமன்றம் தற்கொலையை தடுப்பதை தேசிய முன்னுரிமையாக அறிவித்ததில் ஆச்சரியமில்லை.

ஆனால், 1997-⁠ல் ஐக்கிய மாகாணங்களில் தற்கொலை வீதம் 1,00,000 பேருக்கு 11.4 என்ற எண்ணிக்கையில் இருந்தது, இது உலக சுகாதார நிறுவனத்தால் 2000-⁠ல் வெளியிடப்பட்ட உலகளாவிய வீதத்திற்கு​—⁠1,00,000 பேருக்கு 16 என்ற வீதத்திற்கு​—⁠குறைவே. கடந்த 45 வருடங்களில், உலகெங்கிலும் தற்கொலை வீதம் 60 சதவீதத்திற்கு அதிகரித்துவிட்டது. இப்பொழுது, ஒரே ஆண்டில், உலகம் முழுவதிலும் சுமார் பத்து லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். 40 வினாடிக்கு ஒருமுறை கிட்டத்தட்ட ஒரு மரணம்!

ஆனால் புள்ளிவிவரங்கள் முழு விவரத்தையும் துல்லியமாக சொல்லிவிட முடியாது. பல சந்தர்ப்பங்களில், குடும்ப அங்கத்தினர்கள் தற்கொலையை மூடிமறைக்கிறார்கள். மேலும், ஒருவருடைய தற்கொலை முயற்சி வெற்றி பெற்றிருக்கிறதென்றால், 10 முதல் 25 பேருடைய விஷயத்தில் தற்கொலை முயற்சி தோல்வியை தழுவியிருக்கிறது என கணக்கிடப்படுகிறது. ஐக்கிய மாகாணங்களில் மேல்நிலை பள்ளி மாணவர்களில் 27 சதவீதத்தினர் தற்கொலை செய்துகொள்வதைப் பற்றி கடந்த ஆண்டில் தீவிரமாக யோசித்ததாக ஒப்புக்கொண்டார்கள்; 8 சதவீதத்தினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்கள் என ஒரு சுற்றாய்வு கண்டுபிடித்தது. வயதுவந்தவர்களில் 5 முதல் 15 சதவீதத்தினருக்கு ஏதோவொரு சமயத்தில் தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டிருப்பதை வேறுசில ஆராய்ச்சிகள் கண்டுபிடித்திருக்கின்றன.

கலாச்சார வேற்றுமைகள்

தற்கொலையைப் பற்றிய மக்களின் கருத்தும் பேரளவில் வித்தியாசப்படுகிறது. சிலர் அதை குற்றச்செயலாக கருதுகிறார்கள், வேறுசிலரோ கோழைகளின் ஆயுதம் என்றும், இன்னும் சிலரோ தவறுக்கு வருத்தம் தெரிவிக்கும் கெளரவமான முறை என்றும் கருதுகிறார்கள். ஒரு கொள்கையை முன்னேற்றுவிப்பதற்கு சிறந்த வழி என்றுகூட சிலர் நினைக்கிறார்கள். ஏன் இத்தனை வித்தியாசப்பட்ட கருத்துக்கள்? கலாச்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. சொல்லப்போனால், கலாச்சாரம் “தற்கொலை செய்துகொள்வதை தூண்டலாம்” என தி ஹார்வர்ட் மென்டல் ஹெல்த் லெட்டர் தெரிவிக்கிறது.

மத்திய ஐரோப்பாவிலுள்ள ஹங்கேரி நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கு தற்கொலை வீதம் உயர்ந்த அளவில் இருப்பதை ஹங்கேரியின் “சோகமான ‘பாரம்பரியம்’” என டாக்டர் ஸோல்டான் ரீமர் குறிப்பிடுகிறார். எந்தவொரு காரணத்திற்காகவும், கொஞ்சங்கூட தயக்கமின்றி ஹங்கேரி நாட்டவர் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என ஹங்கேரியின் தேசிய சுகாதார நிறுவன இயக்குநர் பேலா புடா குறிப்பிட்டார். “அவருக்குப் புற்றுநோய் இருக்கிறது​—⁠அதற்கு எப்படி முடிவு கட்டுவதென்று அவருக்குத் தெரியும்,” இது பொதுவான ஒரு பிரதிபலிப்பு என புடா கூறினார்.

உடன்கட்டை ஏறுதல் என்ற மதப் பழக்கம் ஒரு காலத்தில் இந்தியாவில் இருந்தது. கணவனுடைய சிதையில் விழுந்து தன்னையும் மாய்த்துக்கொள்ளும் இப்பழக்கம் வெகு காலத்திற்கு முன்பே தடை செய்யப்பட்டபோதிலும், அது முற்றிலும் ஒழிந்துவிடவில்லை. இப்படி ஒரு பெண் தற்கொலை செய்துகொண்டபோது, உள்ளூர் மக்கள் பலர் இந்த அவலத்தை புகழ்ந்து பேசியதாக அறிக்கை செய்யப்படுகிறது. இந்தியாவின் அந்தப் பகுதியில் “25 வருஷத்தில் கிட்டத்தட்ட 25 பெண்கள் தங்கள் கணவனுடைய சிதையில் விழுந்து மாய்த்துக்கொண்டார்கள்” என இந்தியா டுடே அறிவிக்கிறது.

ஜப்பானில் வாகன விபத்துக்களில் இறப்பவர்களைவிட மூன்று மடங்கானோர் தற்கொலை செய்து சாகிறார்கள்! “ஜப்பானின் பாரம்பரிய கலாச்சாரம் தற்கொலை செய்துகொள்வதை ஒருபோதும் கண்டனம் செய்ததில்லை. ஆசார முறைப்படி சுயமாகவே வயிற்றை கிழிக்கும் பழக்கத்திற்கு (செப்புக்கூ அல்லது ஹரா-கிரி) அது பேர்போனது” என்று ஜப்பான்​—⁠அன் இல்லஸ்ட்ரேடட் என்ஸைக்ளோப்பீடியா கூறுகிறது.

மரணத்தோடு தொடர்புடைய இந்தக் கலாச்சார கவர்ச்சியைப் பற்றி புஷிடோ​—⁠த ஸோல் ஆஃப் ஜப்பான் என்ற நூலில் ஈனாஸோ நிட்டோபே விளக்கினார்; பிற்பாடு சர்வதேச சங்கத்தின் பொது காரியதரிசிக்குக் கீழ் பணிபுரிந்த அவர் இவ்வாறு எழுதினார்: “இடைநிலைக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த [செப்புக்கூ], படைவீரர்கள் தங்களுடைய குற்றச்செயல்களுக்கு பரிகாரம் செய்வதற்கு, செய்த தவறுகளுக்கு வருத்தம் தெரிவிப்பதற்கு, அவமானத்திலிருந்து தப்பிப்பதற்கு, தங்களுடைய நண்பர்களுக்கு ஏற்படுத்திய துன்பத்தை ஈடுகட்டுவதற்கு, அல்லது தங்களுடைய உண்மைத்தன்மையை நிரூபிப்பதற்கு பயன்படுத்திய ஒரு முறை.” பொதுவாக, இந்தத் தற்கொலை ஆசார முறை கடந்தகால பழக்கமாக இருந்தபோதிலும், சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு இன்னும் சிலர் இதை நாடுகிறார்கள்.

மறுபட்சத்தில், கிறிஸ்தவமண்டலத்தில் தற்கொலை என்பது ஒரு குற்றச்செயலாகவே வெகு காலமாக கருதப்பட்டது. ஆறாம் மற்றும் ஏழாம் நூற்றாண்டுகளில், தற்கொலை செய்தவர்களை கத்தோலிக்க சர்ச் சமுதாயத்திலிருந்து விலக்கி வைத்தது, அவர்களுக்கு அடக்க ஆராதனையும் நடத்த மறுத்தது. சில இடங்களில் மதவெறி தற்கொலை சம்பந்தமாக வினோதமான பழக்கங்களை​—⁠அவர்களுடைய உடலை தூக்கிலிடுதல், இருதயத்தில் கூர்மையான கம்பங்களை குத்துதல் போன்ற பழக்கங்களை​—⁠பிறப்பித்திருக்கிறது.

தற்கொலை செய்ய துணிந்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது முரண்பாடாக இருக்கிறது. குரல்வளையை அறுத்து தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்ததற்காக 19-⁠ம் நூற்றாண்டு ஆங்கிலேயர் ஒருவர் தூக்கிலிடப்பட்டார். இப்படியாக, அந்த மனிதர் சாதிக்கத் தவறியதை இந்த அதிகாரிகள் சாதித்துவிட்டார்கள்! காலங்கள் செல்லச் செல்ல தற்கொலை செய்ய முயன்றவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனைகள் மாறினாலும், தற்கொலையும் தற்கொலை முயற்சியும் இனிமேல் குற்றச்செயலாக கருதப்படாது என 1961-⁠ல்தான் பிரிட்டிஷ் பார்லிமென்ட் அறிவித்தது. அயர்லாந்தில் 1993 வரை இது ஒரு குற்றச்செயலாகவே கருதப்பட்டது.

இன்று, தற்கொலையை ஒரு தெரிவாக நூலாசிரியர்கள் சிலர் உற்சாகப்படுத்துகின்றனர். 1991-⁠ல் வெளியிடப்பட்ட ஒரு புத்தகம், தீராத வியாதியால் துன்பப்படுவோர் சட்டப்பூர்வமாக தற்கொலை செய்துகொள்ள சில வழிமுறைகளைக் கொடுத்து உதவியது. பிற்பாடு, தீராத வியாதி இல்லாத அநேகர் அந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்ட முறைகளைப் பின்பற்ற ஆரம்பித்துவிட்டார்கள்.

ஒருவருடைய பிரச்சினைகளுக்கு உண்மையில் தற்கொலைதான் பரிகாரமா? அல்லது தொடர்ந்து வாழ்வதற்கு நல்ல காரணங்கள் இருக்கின்றனவா? இந்தக் கேள்விகளை சிந்திப்பதற்கு முன்பு, தற்கொலை செய்துகொள்ள எது தூண்டுகிறது என்பதை அலசி ஆராயலாம்.(g01 10/22)

[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]

ஓர் ஆண்டில், உலகெங்கிலும் சுமார் பத்து லட்சம் பேர் தற்கொலை செய்து​கொள் கிறார்கள். 40 வினாடிக்கு ஒருமுறை கிட்டத்தட்ட ஒரு மரணம்!