Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏன் உயிரை துறந்துவிடுகின்றனர்

ஏன் உயிரை துறந்துவிடுகின்றனர்

ஏன் உயிரை துறந்துவிடுகின்றனர்

“மிகவும் தனிப்பட்ட விஷயம், புரிந்துகொள்ளவே முடியாதது, பயங்கர கலக்கம் என தற்கொலை செய்துகொள்கிற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கிறது.” கே ரெட்ஃபீல்டு ஜேமிசன், உளவியல் மருத்துவர்.

“வா ழ்க்கை கடும் வேதனையளிக்கிறது.” தற்கொலை செய்துகொள்வதற்கு சற்று முன்பு இப்படித்தான் எழுதி வைத்திருந்தார் ரியுனோசூகே ஆக்குடாகாவா​—⁠20-⁠ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஜப்பானில் வாழ்ந்த பிரபல எழுத்தாளர். ஆனால் இந்த வார்த்தைகளுக்கு முன்பு அவர் இவ்வாறு எழுதினார்: “உண்மையில் நான் சாக விரும்பவில்லை, ஆனால் . . . ”

ஆக்குடாகாவாவை போல தங்களுடைய உயிரை மாய்த்துக்கொள்ளும் அநேகர் உண்மையில் சாக விரும்புவதில்லை, ஆனால் “நடக்கிற எந்த விஷயத்திற்கும் ஒரு முடிவு கட்டவே” விரும்புகிறார்கள் என உளவியல் பேராசிரியர் ஒருவர் குறிப்பிட்டார். தற்கொலைக்கு முன்பு எழுதி வைக்கப்படும் கடிதங்களில் மிகவும் பொதுவாக காணப்படும் வார்த்தைகள் இதைத்தான் மறைமுகமாக தெரிவிக்கின்றன. ‘இனிமேல் என்னால் இதை தாங்கிக்கொள்ள முடியாது’ அல்லது ‘நான் எதுக்காக இனியும் வாழணும்?’ போன்ற வார்த்தைகள், வாழ்க்கையின் வேதனைமிக்க நிஜங்களை விட்டு ஓடவே அவர்கள் மிகவும் ஆசைப்படுகிறார்கள் என்பதை காட்டுகின்றன. ஆனால் தற்கொலை செய்துகொள்வது, “ஜலதோஷத்திற்கு அணுகுண்டை மருந்தாக பயன்படுத்துவதைப் போல” இருக்கிறது என வல்லுநர் ஒருவர் விவரிக்கிறார்.

மக்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பதற்கு காரணங்கள் பல இருந்தாலும், வாழ்க்கையில் ஏற்படும் சில சம்பவங்கள் பொதுவாக தற்கொலையைத் தூண்டுகின்றன.

தூண்டும் காரணிகள்

மற்றவர்களுக்கு மிகவும் அற்பமாக தோன்றுகிற விஷயங்களுக்குங்கூட நம்பிக்கை இழந்து தற்கொலை செய்கிற இளைஞர் கூட்டம் இன்று ரொம்ப சர்வசாதாரணம். யாராவது புண்படுத்தி அதற்காக எதுவும் செய்ய முடியாமல் இருக்கும்போது, தங்களை புண்படுத்தியவர்களுக்கு பதிலடி கொடுக்க தங்களுடைய சாவை ஓர் அஸ்திரமாக இளைஞர் கருதலாம். ஜப்பானில் தற்கொலை தூண்டுதல்களுக்கு ஆளாகிறவர்களுக்கு உதவி செய்வதில் ஸ்பெஷலிஸ்டாக இருக்கும் ஹிரோஷி ஈனாமூர இவ்வாறு எழுதினார்: “தங்களை துன்பப்படுத்தியவர்களுக்கு தங்களுடைய சாவின் மூலம் தண்டனை கொடுப்பதற்கான உள் தூண்டுதலில் பிள்ளைகள் ஆனந்தம் அடைகிறார்கள்.”

பிள்ளைகள் கடும் சித்திரவதைக்கு ஆளாகும்போது தற்கொலை முயற்சி செய்யும் வாய்ப்பு கிட்டத்தட்ட ஏழு மடங்கு அதிகம் என பிரிட்டனில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆராய்ச்சி சுட்டிக்காட்டியது. இந்தப் பிள்ளைகள் அனுபவிக்கும் உணர்ச்சி ரீதியிலான வேதனை நிஜமானது. தூக்குப்போட்டு செத்த 13 வயது சிறுவன், தன்னை சித்திரவதை செய்து தன்னிடமிருந்து பணத்தையும் பிடுங்கிய ஐந்து பேருடைய பெயர்களை குறிப்பிட்டு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தான். அதில், “தயவுசெய்து மற்ற பிள்ளைகளைக் காப்பாற்றுங்கள்” என எழுதியிருந்தான்.

இன்னும் சிலர் பள்ளியில் ஏதாவது வம்பிலோ அல்லது சட்டத்தின் பிடியிலோ மாட்டிக்கொள்ளும்போது, காதலில் தோல்வியடையும்போது, அல்லது நல்ல மார்க் வாங்காதபோது, பள்ளி பரீட்சையை எண்ணி மனவேதனைப்படும்போது, அல்லது எதிர்காலத்தைப் பற்றிய கவலையால் மனமுடைந்து போகும்போது தங்களுடைய உயிரை போக்கிக்கொள்ள முயற்சி செய்யலாம். எப்போதுமே நூற்றுக்கு நூறு வாங்க துடிக்கிற பருவ வயதினருக்கு வாழ்க்கையில் ஏதாவது பின்னடைவோ தோல்வியோ ஏற்படும்போது​—⁠அது நிஜமானதாகவோ கற்பனையானதாகவோ இருந்தாலும்​—⁠தற்கொலை முயற்சியில் இறங்கலாம்.

பெரியவர்களை பொறுத்ததில் பண அல்லது வேலை சம்பந்தமான பிரச்சினைகளே பொதுவாக தற்கொலையை தூண்டும் காரணிகளாகும். ஜப்பானில் பல வருட பொருளாதார வீழ்ச்சிக்குப்பின் சமீபத்தில் தற்கொலை எண்ணிக்கை ஆண்டுக்கு 30,000-ஐயும் தாண்டிவிட்டது. மைனிச்சி டெய்லி நியூஸ் கூறுகிறபடி, நடுத்தர வயதுடையவர்களில் சுமார் முக்கால்வாசி பேர் தற்கொலை செய்துகொண்டார்கள். காரணம்? “கடன் தொல்லைகள், வியாபாரத்தில் தோல்விகள், வறுமை, வேலைவாய்ப்பின்மை.” குடும்ப பிரச்சினைகளும் தற்கொலைக்கு வழிநடத்தலாம். “சமீபத்தில் விவாகரத்து செய்துகொண்ட நடுத்தர வயது ஆண்கள்” மிகவும் ஆபத்தில் இருக்கும் தொகுதியினர் என பின்லாந்து நாட்டு செய்தித்தாள் ஒன்று அறிக்கை செய்தது. தற்கொலை செய்துகொள்வதைப் பற்றி யோசிக்கும் பெரும்பாலான பெண் பிள்ளைகள் பிளவுபட்ட குடும்பங்களில் வளர்க்கப்பட்டவர்கள் என ஹங்கேரியில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சி கண்டுபிடித்தது.

வேலையிலிருந்து ஓய்வுபெறுவதும் வியாதியும்கூட, முக்கியமாக வயதானவர்கள் மத்தியில், தற்கொலையை தூண்டுகிற முக்கிய காரணிகளாகும். ஒரு நோயாளி தன்னுடைய வியாதியை சகிக்க முடியாததாக எண்ணும்போது, அது தீரா வியாதியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, அதிலிருந்து தப்பிக்க தற்கொலையை ஒரு பரிகாரமாக நாடுகிறார்.

என்றாலும், எல்லாருமே இப்படிப்பட்ட காரணிகளால் தூண்டப்பட்டு தற்கொலை செய்துகொள்வதில்லை. வேதனைமிக்க சூழ்நிலைகளை எதிர்ப்படும்போது பெரும்பான்மையோர் தங்களுடைய உயிரை போக்கிக்கொள்வதில்லை. அப்படியானால், பெரும்பாலானோர் அப்படி நினைக்காதபோது ஏன் சிலர் மட்டும் தற்கொலையை பரிகாரமாக நினைக்கிறார்கள்?

அடித்தளத்திலுள்ள முக்கிய காரணிகள்

“காரியங்களை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதில்தான் மரிப்பதற்கு எடுக்கும் தீர்மானமே அடங்கியிருக்கிறது” என சொல்கிறார் கே ரெட்ஃபீல்டு ஜேமிசன், இவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர். அவர் மேலும் சொல்கிறார்: “பெரும்பாலானோருடைய மனம், ஆரோக்கியமாக இருக்கும்போது, எந்தவொரு காரியத்தையும் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மோசமானதாக எடுத்துக்கொள்வதில்லை.” அநேக காரணிகள்​—⁠அவற்றில் சில அடித்தளத்திலுள்ள முக்கிய காரணிகள்​—⁠தற்கொலை தூண்டுதலுக்கு வழிநடத்த ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என ஐ.மா. தேசிய மனநல நிறுவனத்தைச் சேர்ந்த ஈவ் கே. மாஷ்சிட்ஸ்கி குறிப்பிடுகிறார். அடித்தளத்திலுள்ள இப்படிப்பட்ட முக்கிய காரணிகளில் மனநிலை கோளாறுகள் (mental disorders), கெட்ட பழக்கங்களுக்கு அடிமைப்படும் கோளாறுகள் (addictive disorders), மரபுவழி பண்புகள் (genetic makeup), மூளை இரசாயனம் (brain chemistry) ஆகியவை உட்பட்டுள்ளன. இவற்றில் சிலவற்றை இப்பொழுது கவனிக்கலாம்.

மனச்சோர்வு (depression), பித்துவெறி கோளாறுகள் (bipolar mood disorders), உளச்சிதைவு (schizophrenia) போன்ற மனநல கோளாறுகளும் மதுபானத்திற்கு அல்லது போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் கோளாறுகளும் இந்தக் காரணிகளில் மிகவும் முக்கியமானவை. தற்கொலை செய்துகொண்ட 90 சதவீதத்தினருக்கும் அதிகமானோருக்கு இப்படிப்பட்ட கோளாறுகள் இருந்ததாக ஐரோப்பாவிலும் ஐக்கிய மாகாணங்களிலும் நடத்தப்பட்ட ஆராய்ச்சி காட்டுகிறது. சொல்லப்போனால், இப்படிப்பட்ட எந்தக் கோளாறுகளும் இல்லாத ஆண்களில் தற்கொலை வீதம் 1,00,000-⁠க்கு 8.3, ஆனால் மனச்சோர்வடைந்தவர்களில் தற்கொலை வீதமோ 1,00,000-⁠க்கு 650-⁠ஆக உயர்ந்துவிட்டதை ஸ்வீடன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள்! தற்கொலைக்கு வழிநடத்தும் காரணிகள் கிழக்கத்திய நாடுகளிலும் ஒரே விதமாக இருப்பதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். இருந்தபோதிலும், மனச்சோர்வும் தற்கொலையைத் தூண்டுகிற மற்ற காரணிகளும் சேர்ந்தாலும்கூட தற்கொலையை தவிர்க்க முடியாததாக ஆக்குவதில்லை.

ஒருசமயம் தற்கொலைக்கு முயற்சி செய்த பேராசிரியர் ஜேமிசனே இவ்வாறு கூறுகிறார்: “நிலைமைகள் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை இருக்கும்வரை மக்கள் மனச்சோர்வை தாங்கிக்கொள்வதாக அல்லது சகித்துக்கொள்வதாக தெரிகிறது.” ஆனால், தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு நம்பிக்கையின்மை படிப்படியாக அதிகரிக்கும்போது, தற்கொலை தூண்டுதல்களை கட்டுப்படுத்தும் சக்தியை மனம் படிப்படியாக இழந்துவிடுகிறது. தொடர்ச்சியான அழுத்தத்தால் ஒரு காரின் பிரேக்குகள் தேய்ந்து மெல்லியதாவதற்கு இதை அவர் ஒப்பிடுகிறார்.

மனச்சோர்வை குணமாக்க முடியுமாதலால், இப்படிப்பட்ட போக்கை முதலில் கண்டுணர்வது முக்கியம். ஆதரவற்று தவிக்கும் உணர்வை மாற்ற முடியும். அடித்தளத்திலுள்ள முக்கிய காரணிகள் சரிசெய்யப்படுகையில், பெரும்பாலும் தற்கொலையைத் தூண்டும் மனவேதனைகளுக்கும் மன அழுத்தங்களுக்கும் மக்கள் வித்தியாசமாக பிரதிபலிக்கலாம்.

அநேக தற்கொலைகளுக்கு ஒருவருடைய மரபியல் பண்பே அடித்தளத்திலுள்ள முக்கிய காரணியாக இருக்கலாம் என சிலர் நினைக்கின்றனர். ஒருவருடைய மனப்போக்கை தீர்மானிப்பதில் ஜீன்கள் பங்கு வகிக்கலாம், மற்றவர்களைவிட சிலருடைய பரம்பரையில் தற்கொலை சம்பவங்கள் நிறைய நிகழ்ந்திருக்கின்றன என்பதை ஆராய்ச்சிகள் காட்டுவதும் உண்மைதான். என்றாலும், “மரபியல் செல்வாக்கு இருப்பதால் தற்கொலை தவிர்க்க முடியாதது என எந்த விதத்திலும் அர்த்தப்படுத்துகிறதில்லை” என ஜேமிசன் கூறுகிறார்.

மூளை இரசாயனமும் முக்கிய காரணியாக இருக்கலாம். மூளையிலுள்ள கோடிக்கணக்கான நியூரான்கள் மின்-வேதியியல் முறையில் தொடர்பு கொள்கின்றன. நரம்பிழைகளின் கிளைபோன்ற முனைகளில், சினாப்ஸிஸ் என்ற சிறிய இடைவெளிகள் இருக்கின்றன, இவற்றை கடந்து நியூரோ-கடத்திகள் (neurotransmitters) தகவல்களை வேதியியல் முறையில் கொண்டு செல்கின்றன. உயிரியல் ரீதியில் எளிதில் தற்கொலைக்கு பலியாகும் ஒருவருடைய விஷயத்தில், செரோடோனின் என்ற நியூரோ-கடத்தி ஒன்றின் அளவு உட்பட்டிருக்கலாம். மூளைக்கு உள்ளே என்ற ஆங்கில நூல் இவ்வாறு விளக்குகிறது: “செரோடோனின் அளவு குறைவாக இருப்பது . . . வாழ்க்கையில் மகிழ்ச்சியை எடுத்துப்போடலாம், வாழ்வதில் விருப்பத்தை குறைத்துவிடலாம், மனச்சோர்வு மற்றும் தற்கொலையின் ஆபத்தை அதிகரிக்கச் செய்யலாம்.”

இருந்தாலும், யாருமே தற்கொலை செய்துகொள்வதற்கு விதிக்கப்படவில்லை என்பதே உண்மை. லட்சக்கணக்கானோர் கடுந்துயரங்களையும் மன அழுத்தங்களையும் சமாளிக்கிறார்கள். தற்கொலைக்கு வழிநடத்தும் அழுத்தங்களுக்கு சிலருடைய மனதும் இருதயமும் எப்படி பிரதிபலிக்கிறது என்பதே தீர்மானிக்கும் காரணி. உடனடியாக தூண்டுகிற காரணங்கள் அல்ல, ஆனால் அடித்தளத்திலுள்ள முக்கிய காரணிகளையும் சிந்திக்க வேண்டும்.

அப்படியானால், வாழ்க்கைக்கு ஓரளவு மகிழ்ச்சியை ஊட்டும் நம்பிக்கையான நோக்கை உருவாக்க என்ன செய்யலாம்?(g01 10/22)

[பக்கம் 6-ன் பெட்டி]

பாலினமும் தற்கொலையும்

ஆண்களைவிட பெண்களில் இரண்டு முதல் மூன்று மடங்கானோர் தற்கொலை முயற்சி செய்யும் சாத்தியம் இருந்தாலும், வெற்றிபெறும் சாத்தியமோ ஆண்களில் நான்கு மடங்கு அதிகம் என ஐக்கிய மாகாணங்களில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு குறிப்பிடுகிறது. ஆண்களைவிட பெண்களில் குறைந்தபட்சம் இரண்டு மடங்கானோர் மனச்சோர்வினால் பாதிக்கப்படுகின்றனர், இதுவே அதிகளவான பெண்கள் தற்கொலை முயற்சி செய்வதற்குக் காரணமாக இருக்கலாம். இருந்தாலும், அவர்களுடைய மனச்சோர்வு வியாதி அதிக தீவிரமின்றி இருக்கலாம், ஆகவே அவர்கள் அதிக தீவிரமல்லாத முறைகளை நாடலாம். மறுபட்சத்தில் ஆண்களோ தற்கொலை முயற்சியில் வெற்றிபெறுவதை உறுதிப்படுத்த அதிக தீவிரமான, திட்டமான முறைகளை பின்பற்ற மனமுள்ளவர்களாக இருக்கலாம்.

C இருந்தாலும், சீனாவில் ஆண்களைவிட பெண்களே அதிகம் வெற்றி பெறுகின்றனர். சொல்லப்போனால், உலகிலேயே பெண்களில் சுமார் 56 சதவீத தற்கொலைகள் சீனாவில், முக்கியமாக கிராமப்புற பகுதிகளில், நடைபெறுகின்றன என ஓர் ஆய்வு வெளிப்படுத்துகிறது. பெண்களின் தற்கொலை முயற்சிகள் வெற்றிபெறுவதற்குரிய காரணங்களில் ஒன்று பயங்கரமான பூச்சிக்கொல்லி மருந்துகள் எளிதாக கிடைப்பதாகும்.

[பக்கம் 7-ன் பெட்டி/படம்]

தற்கொலையும் தனிமையும்

மனச்சோர்வுக்கும் தற்கொலைக்கும் மக்களை வழிநடத்தும் காரணிகளில் ஒன்று தனிமை. பின்லாந்தில் தற்கொலைகளைப் பற்றிய ஆராய்ச்சிக்கு தலைவராக இருந்த யோயுகோ லூன்குவிஸ்ட் இவ்வாறு கூறினார்: “[தற்கொலை செய்துகொண்ட] பெரும்பாலானோருடைய அன்றாட வாழ்க்கை தனிமையிலேயே கழிந்தது. அவர்களுக்கு நிறைய ஓய்வுநேரம் கிடைத்தது, ஆனால் சமுக கூட்டுறவுகளோ மிக மிகக் குறைவு.” ஜப்பானில் நடுத்தர வயதுடைய ஆண்கள் தற்கொலை செய்துகொள்வது சமீபத்தில் பெருகி வருவதற்கு காரணம் “தனிமை” என கென்ஷிரோ ஓஹாரா கூறினார், இவர் ஹமாமட்ஸு மருத்துவ பல்கலைக்கழகத்தில் உளவியல் மருத்துவராக இருக்கிறார்.

[பக்கம் 5-ன் படம்]

பெரியவர்களுடைய விஷயத்தில், பண மற்றும் வேலை சம்பந்தமான பிரச்சினைகளே தற்கொலையை தூண்டும் பொது காரணிகள்