Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஒன்றுபட்ட சகோதரத்துவம் ஆட்டம்காணவில்லை

ஒன்றுபட்ட சகோதரத்துவம் ஆட்டம்காணவில்லை

ஒன்றுபட்ட சகோதரத்துவம் ஆட்டம்காணவில்லை

எல் சால்வடாரிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

2001, ஜனவரி 13-⁠ம் தேதி காலை 11:34 மணியளவில் ரிக்டர் அளவில் 7.6 என பதிவாகிய பூமியதிர்ச்சி எல் சால்வடார் நாடு முழுவதையும் ஓர் உலுக்கு உலுக்கியது. அதன் அதிர்ச்சியை மெக்ஸிகோ முதல் பனாமா வரை உணர முடிந்தது. அது தாக்கிய அந்த நிமிடத்தில் தாங்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை பெரும்பாலானோர் மறக்கவே மாட்டார்கள்.

“படுபயங்கரமான உலுக்கல் மெல்ல மெல்ல அடங்கியதும் நாங்கள் மேலே பார்த்தோம். மலையின் உச்சிப் பகுதி பிளந்து சில நொடிகளுக்கு அது அப்படியே ஆடாமல் அசையாமல் இருப்பது போல் தோன்றியது” மிர்யாம் கேசாதாவுக்கு நினைவிருக்கிறது. “‘அம்மா! ஓடுங்க! ஓடுங்க!’ என என் மகள் அலறினாள்.” அப்போது பிளவுற்ற மலையின் முன்பாகம் அவர்களை நோக்கி உருண்டோடி வந்தது. லாஸ் கோலீனாஸிலிருந்த நவேவா சான் சால்வடார் அல்லது சான்டா டேக்லா குடியிருப்பை சேர்ந்த சுமார் 500 பேர் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயினர்; சுமார் 300 வீடுகள் உருத்தெரியாமல் சிதைந்தன.

“அப்போதுதான் வீட்டிலிருந்து வந்து பஸ் ஸ்டாப்பில் நிற்கையில் பூமியதிர்ச்சி தாக்கியது” என சொல்கிறாள் ரோக்சானா சான்சேஸ். “உலுக்கல் நின்றதும் தன் பைகளை எடுத்துக்கொள்ள ஒரு பெண்மணிக்கு உதவிய பின்பு, ‘வீட்டுக்குப் போகிறதுதான் நல்லது, இல்லேன்னா வீட்டில் எல்லாரும் என்னைப் பத்தி கவலைப்படுவார்கள்’ என நினைத்தேன்.” வீடிருக்கும் தெருவில் திரும்பியதும் மலைபோல் குவிந்திருந்த மண்ணில் அந்தத் தெருவே சமாதியாகியிருந்ததை ரோக்சானா பார்த்தாள். அவள் வீடு தரைமட்டமாகியிருந்தது!

உடனடி உதவி

எல் சால்வடாரிலுள்ள சாட்சிகளின் மொத்த எண்ணிக்கை 28,000-⁠க்கும் அதிகம். பேரழிவு தாக்கும் சால்வடார் கடற்கரையோரப் பகுதி நெடுகிலும் ஆயிரக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் வாழ்கிறார்கள். தாங்களே இன்னும் பேரழிவின் அதிர்ச்சியிலிருந்து மீளாதிருந்திருக்கையில் அநேகர் மற்றவர்களின் தேவைக்கு உடனடி கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். யெகோவாவின் சாட்சிகளின் பயணக் கண்காணியாக சான்டா டேக்லாவில் சேவிக்கும் மார்யோ ஸ்வாரேஸ் இவ்வாறு சொல்கிறார்: “பூமியதிர்ச்சி ஏற்பட்டு சுமார் ஒரு மணிநேரத்திற்குப் பின்பு உதவி கேட்டு அழைப்பு வந்தது. சில கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் தங்கள் வீடுகளுக்குள் சிக்கியிருப்பதாக சொல்லப்பட்டது. தொண்டர் தொகுதி ஒன்று உடனடியாக ஒழுங்குபடுத்தப்பட்டது.

“ஏதோ சில சுவர்கள் இடிந்து விழுந்திருக்கும், இடிபாடுகளை கொஞ்சம் அப்புறப்படுத்தி வழி உண்டாக்கினால் அவற்றில் சிக்கியிருப்பவர்கள் வெளியே வந்துவிடுவார்கள் என நாங்கள் நினைத்தோம். ஆனால் எங்களில் யாரும் சேதத்தின் அளவை கற்பனை செய்துகூட பார்த்திருக்க முடியாது. சொல்லப்போனால், பாதிக்கப்பட்ட இடத்தை நாங்கள் அடைந்ததும் வீடுகள் எங்கே என கேட்டோம். அவற்றின் மீதுதான் நாங்கள் நிற்பதாக எங்களிடம் சொல்லப்பட்டபோது உறைந்துபோனோம்! மூன்றடி உயர மண்ணில் இரண்டு அடுக்குகள் வரை வீடுகள் எல்லாம் புதையுண்டிருந்தன. அது பெரும் வேதனையளித்தது!”

மதிய வேளை கடந்ததும், அக்கம்பக்கத்திலிருந்த சபைகளிலிருந்து சுமார் 250 சாட்சிகள் உதவுவதற்கு வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். குத்துக்கோடரி, மண்வாரி, பிளாஸ்டிக் சட்டி, ஏன் வெறும் கைகளை மட்டும் உபயோகித்துகூட உயிரோடு புதையுண்டு கிடப்பவர்களை மீட்கும் கடும் பணியில் தொண்டர்கள் ஈடுபட்டனர். எனினும் சொற்ப பேரே சான்டா டேக்லாவில் உயிரோடு காப்பாற்றப்பட்டனர். மூச்சு திணறியோ இடிபாடுகளில் நசுங்கியோ இறந்துபோன நூற்றுக்கணக்கானவர்களில் ஐந்து யெகோவாவின் சாட்சிகளும் இருந்தனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட இடருதவி பணிகள்

நாடு முழுவதும் இருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகள் இந்த இடருதவி பணியில் ஈடுபட்டன. கோமாசாக்வா, ஓசாட்த்லான், சான்டா ஏலேனா, சான்டியாகோ டி மாரீயா, ஊசூலூடான் ஆகிய இடங்களிலிருந்த சாட்சிகளில் அநேகர் வீடுவாசல்களை இழந்தனர். ராஜ்ய மன்றங்களும் தனியார் வீடுகளும் இடருதவி பொருட்கள் வந்து குவியும் மையங்களாக உருமாறின. “மிகப் பெரியளவில் உதவி கிடைத்தது. உணவு, உடை, படுக்கைகள், மருந்துகள், சவ அடக்கத்துக்கான பணத்தையும்கூட சகோதரர்கள் எடுத்து வந்தார்கள்” என்கிறார் பயணக் கண்காணியாகிய எட்வன் எர்னான்டெஸ்.

யெகோவாவின் சாட்சிகளின் அந்நாட்டு கிளை அலுவலகம் ஏற்படுத்தியிருந்த இடருதவி கமிட்டி, சிறிதளவு பாதிக்கப்பட்ட சபை தொகுதிகளை, பெருமளவு பாதிக்கப்பட்டவர்களின் உடனடி தேவைகளைக் கவனித்து உதவுவதற்கு ஏற்பாடு செய்தது. பணியில் ஈடுபட 10 முதல் 20 சாட்சிகள் அடங்கிய தொகுதிகள் ஏற்படுத்தப்பட்டன; அவை தேவைப்பட்ட பழுதுபார்க்கும் பணியைக் கவனித்துக்கொண்டன.

அதோடுகூட, பொதுவாக ராஜ்ய மன்ற கட்டுமானப் பணியில் ஈடுபடும் யெகோவாவின் சாட்சிகளின் ரீஜனல் பில்டிங் கமிட்டிகள், வீடு இழந்து நிற்போருக்கு தற்காலிக தங்குமிடங்களைக் கட்டித் தர குழுக்களை ஒழுங்கமைத்தன. எல் சால்வடாரில் நெளிவு இரும்புத் தகட்டின் விலை மளமளவென உயர்ந்தது, எனவே யெகோவாவின் சாட்சிகளுடைய குவாதமாலா கிளை அலுவலகம் அதைப் பெருமளவு நன்கொடையாக கொடுத்து தாராளமாக உதவியது. கூரைகளிலுள்ள சட்டங்களில் பொருத்துவதற்கு தேவைப்பட்ட மரப் பலகைகளை ஐக்கிய மாகாணங்கள், ஹாண்டுராஸ் ஆகிய கிளை அலுவலகங்கள் தந்து உதவின.

இப்படி பரபரப்புடன் காரியங்கள் நடக்கையில் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டன. அப்பகுதியிலிருந்த அனைவருமே, தெருக்களில் பிளாஸ்டிக் தார்பாலீனையும் பழைய படுக்கை விரிப்புகளையும் கூரையாக்கி அவற்றினடியில் உறங்கினார்கள். வேதனையும் தவிப்பும் அடங்கவில்லை. பிப்ரவரி 12-⁠ம் தேதிக்குள், இந்த அதிர்ச்சியை பின்தொடர்ந்து மொத்தம் 3,486 சிறு நில அதிர்வுகள் பதிவாகியிருந்தன.

இரண்டாவது பெரிய பூமியதிர்ச்சி

முதல் பூமியதிர்ச்சி ஏற்பட்டு ஒரு மாதத்திற்குப் பின்பு, 2001, பிப்ரவரி 13-⁠ம் தேதி காலை 8:22 மணிக்கு மத்திய எல் சால்வடாரை இரண்டாவது பூமியதிர்ச்சி தாக்கியது; அதன் கடுமை ரிக்டர் அளவில் 6.6 என பதிவாகியது. மீண்டும் யெகோவாவின் சாட்சிகள் மீட்கும் பணியிலும் இடருதவி பணியிலும் தீவிரமாக ஈடுபட்டனர். “தன் குழுவில் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனரா என்பதை சபை புத்தகப் படிப்பு நடத்துனர்கள் ஒவ்வொருவரும் போய் பார்த்து கண்டறிந்து கொண்டனர்” என நோயி இரேயிடா என்ற மூப்பர் விளக்கினார்.

சான் விசன்டே, கோஹுடிபிகி ஆகிய மாநகரங்களும் அவற்றின் புறநகர் பகுதிகளும் படுமோசமாக பாதிப்புக்குள்ளாயின. சான் பேட்ரோ நோனூஆல்கோ, சான் மிகல் டேப்பசான்டிஸ், சான் ஹுவான் டேப்பசான்டிஸ் ஆகிய நகரங்கள் சிதைந்து போயின. கிட்டத்தட்ட முழு அளவில் அழிவு ஏற்பட்டிருந்த கான்டிலார்யா, கூஸ்கட்லான் ஆகிய இடங்களில் சர்ச்சு மேற்பார்வையிலுள்ள பள்ளி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து 20-⁠க்கும் அதிகமான பிள்ளைகளை பலிகொண்டது. “சுமார் ஒரு மணிநேரம் கழித்து, தெருவில் யாரோ ‘பிரதர் ட்ரீகோ!’ என அழைப்பது கேட்டது. எங்கும் ஒரே புழுதி மயமாக இருந்ததால் முதலில் எதுவுமே கண்ணுக்குத் தெரியவில்லை. பின்னர் திடீரென கோஹுடிபிகியைச் சேர்ந்த சாட்சிகள் கண்ணில் பட்டனர். நாங்கள் எப்படி இருக்கிறோம் என்பதை கண்டறிய அவர்கள் வந்திருந்தனர்!” என சால்வடார் ட்ரீகோ என்ற உள்ளூர் சாட்சி ஒருவர் நினைவுபடுத்தி சொல்கிறார்.

இந்த இரண்டாவது பேரழிவுக்கு ஆளானவர்களின் தேவைகளைக் கவனித்துக்கொள்வதில் தோள்கொடுக்க அக்கம்பக்கத்திலிருந்த சபைகள் மீண்டும் ஒழுங்கமைக்கப்பட்டன. தாங்களே தேவையில் இருந்த போதிலும் மற்றவர்களுக்கு கொடுப்பதில் சந்தோஷம் காண வாய்ப்பளிக்கும்படி கெஞ்சிக் கேட்டுக்கொண்ட முதல் நூற்றாண்டு மக்கெதோனிய கிறிஸ்தவர்களின் முன்மாதிரியை அவர்கள் பின்பற்றினர். உதாரணமாக, முதல் பூமியதிர்ச்சியின் போது பெரும் இழப்பை சந்தித்த சான்டியாகோ டெக்சாக்வாங்கோஸ் மாநகரத்திலுள்ள சபைகளில் இருந்தவர்கள், அருகே சான் மிகல் டேப்பசான்டிஸ்ஸிலுள்ள தங்கள் சகோதரர்களுக்கு சுடச்சுட உணவு தயாரித்து எடுத்து சென்றனர்.

மொத்தத்தில், எல் சால்வடாரில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியில் 1,200-⁠க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது; இன்னும் எட்டு பேர் அடுத்திருக்கும் குவாதமாலாவில் உயிரிழந்ததாகவும் அறிக்கை செய்யப்பட்டது.

முயற்சிகளுக்குப் பாராட்டு

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியளிப்பதில் சாட்சிகளின் ஒழுங்கமைக்கப்பட்ட முயற்சிகளை மற்ற இடருதவி குழுக்களும் பாராட்டின. புகலிடமாக உபயோகிக்கப்பட்ட ராஜ்ய மன்றத்தில் அவசர உதவி பொருட்களை இறக்குவதற்கு நேஷனல் எமர்ஜென்ஸி கமிட்டியின் வாகனம் வந்தது. “நாங்கள் விஜயம் செய்த எல்லா புகலிடங்களிலும் ஒழுங்கைக் கடைப்பிடித்த முதல் இடம் இதுதான். உங்களுக்கு என் பாராட்டுக்கள்!” என பிரதிநிதி ஒருவர் வியந்து கூறினார். மற்ற புகலிடங்களைப் போல் அங்கு யாரும் வாகனத்தை சூழ்ந்துகொள்ளவில்லை, இடித்துத் தள்ளவில்லை, அல்லது முண்டியடிக்கவில்லை. உண்மையில், நன்கொடையாக வந்த பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் முதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

இடருதவி அளிப்பதில் சாட்சிகள் தங்கள் சகவிசுவாசிகளுக்கு மட்டுமே உதவிக்கரம் நீட்டவில்லை. உதாரணமாக, சான் விசன்டேயிலுள்ள சாட்சிகளாக இல்லாத டஜன்கணக்கான அயலகத்தார் அடைக்கலம் தேடி ராஜ்ய மன்றத்திற்கு வந்தார்கள். “இங்கே, யெகோவாவின் சாட்சிகளின் ராஜ்ய மன்றத்தில் இருந்தவர்களுக்கு தங்கமான மனசு. கதவுகளைத் திறந்து ‘உள்ளே வாங்க!’ என கூப்பிட்டதால் இப்போ இங்கே இருக்கிறோம். இரவில் தூங்குகையில் எங்களைப் பார்த்துக்க மாறி மாறி யாராவது ஒருவர் காவலுக்கிருந்தாங்க” என்றாள் ரேகினா ட்யூரான் டி கான்யாஸ்.

வீட்டு வசதி ஏற்பாடு

சேதங்களை மதிப்பிட்ட பிறகு, தேவைப்படும் வீட்டு வசதிகளை செய்து கொடுக்க கிளை அலுவலகத்திடம் பரிந்துரைக்கப்பட்டது. வீடுகளை இழந்தவர்களுக்கு தற்காலிக தங்குமிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டன. மேலும், கொஞ்சம் சேதமடைந்திருந்த வீடுகள் பழுதுபார்த்துக் கொடுக்கப்பட்டன. கடினமாக உழைக்கும், திறம்பட்ட கட்டுமான குழுக்கள் பெரும்பாலோரின் கவனத்தை ஈர்த்தன; அவை பணி செய்யும் அழகைக் காண அக்கம்பக்கத்தார் வந்தனர்.

பணியில் ஈடுபட்டிருந்தவர்களை, வெகு காலமாகவே உதவி அளிப்பதாக சொல்லி வந்த நகராட்சியைச் சேர்ந்தவர்கள் என நினைத்த ஒரு பெண்மணி, தன் வீட்டு இடிபாடுகளை அப்புறப்படுத்துவதில் இதுவரை தனக்கு உதவ யாரும் வராததைப் புகார் செய்தார். “அவங்க நகராட்சியை சேர்ந்தவங்க இல்லைங்கம்மா. அவங்க அந்த ராஜ்யத்தை சேர்ந்தவங்க!” என அருகிலிருந்த பிள்ளைகள் அவரிடம் சொன்னார்கள். “தேவையிலிருப்பவர்களுக்கு உதவுவதில் யெகோவாவின் சாட்சிகள் செயல்படுவதைப் பார்ப்பது அருமையான அனுபவம். இது நல்ல ஐக்கியமுள்ள அமைப்பு, ஏதோ கடவுள் புண்ணியத்தில் எங்களைப் போன்ற ஏழைபாழைகளுக்கு உதவும் நல்லெண்ணம் அவர்களுக்கு இருக்கிறது. அவர்களோடு சேர்ந்து வேலை செய்திருக்கிறேன், அதை தொடர்ந்து செய்யவும் விரும்புகிறேன்” என சாட்சியாக இல்லாத மாய்ஸஸ் ஆன்டோன்யோ டீயாஸ் என்பவர் சொன்னார்.

ஒரு கிறிஸ்தவ சகோதரிக்கு தற்காலிக தங்குமிடம் கட்டிக்கொடுக்கப்பட்டபோது, “நன்றியைத் தெரிவிக்க எனக்கும் என் கணவருக்கும் வார்த்தைகளே இல்லை. அந்த நன்றியை முதலாவது யெகோவாவுக்குத் தெரிவிக்கிறோம், முன்பின் தெரியாத போதிலும் எங்களுக்கு உதவ ஓடோடி வந்ததற்கு அந்தச் சகோதரர்களுக்கும் நன்றியைத் தெரிவிக்கிறோம்” என அழுதுகொண்டே சொன்னார் அவர்.

ஏப்ரல் மாத மத்திபத்தில், பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 567 தற்காலிக தங்குமிடங்களை சாட்சிகள் கட்டிக்கொடுத்தார்கள். தங்கள் பழுதுபட்ட வீடுகளை பராமரிக்க தேவையான பொருட்களை இன்னும் சுமார் 100 குடும்பங்கள் பெற்றுக்கொண்டன. பூட்டி வைத்துக்கொள்ள கதவையும் பாதுகாத்துக்கொள்ள கூரையையும் தேவையிலிருந்த குடும்பங்களுக்கு தயார் செய்துகொடுத்த பின்னர், பழுதுபார்ப்பது அல்லது மீண்டும் கட்டப்படுவது அவசியமாக இருந்த 92 ராஜ்ய மன்றங்களிடம் சாட்சிகள் தங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்தினர்.

வாழ்க்கையை மீண்டும் கட்டியமைத்தல்

கட்டடங்களையும் வீடுகளையும் மீண்டும் கட்டிக்கொடுத்ததற்காக நன்றி தெரிவித்ததோடு, முக்கியமாய் அநேகர் தங்களை ஆவிக்குரிய விதத்தில் பலப்படுத்தியதற்கும் உணர்ச்சி சம்பந்தமாக தங்கள் அக்கறைகளுக்கு கவனம் செலுத்தியதற்கும் நன்றி தெரிவித்தனர்.

“இப்படிப்பட்ட சூழ்நிலைகளில், நில அதிர்வுகள் தொடர்ந்து ஏற்பட்டபோது நான் நடுநடுங்கிப் போனேன். ஆனால் சகோதரர்கள் எனக்கு மன ஆறுதலையும் உற்சாகத்தையும் தொடர்ந்து அளித்து வந்தார்கள். சகோதரர்கள் மட்டும் இல்லாதிருந்தால் நம் கதி என்னவாகியிருக்கும்?” என்றார் முன்னர் குறிப்பிட்ட மிர்யாம்.

சபை ஏற்பாட்டின் மூலம் யெகோவா தம் அன்பான அக்கறையை வெளிப்படுத்தியது பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களின் மனதை ஆச்சரியப்படத்தக்க விதங்களில் தொட்டுவிட்டது. முதன்முறை ஏற்பட்ட பூமியதிர்ச்சியின் போது கோமாசாக்வாவில் கிட்டத்தட்ட எல்லா சாட்சிகளின் வீடுகளும் சேதமடைந்திருந்தன அல்லது தரைமட்டமாகியிருந்தன. எனினும், ஏப்ரல், மே மாதங்களில் முழுநேர ஊழியத்தில் கலந்துகொள்ள அங்கிருந்த 17 சாட்சிகளில் 12 பேர் முன்வந்தார்கள்; அப்போதிருந்து அவர்களில் இருவர் ஒழுங்கான பயனியராக சேவை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

இரண்டாவது பூமியதிர்ச்சியால் பெருமளவு பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான கூஸ்கட்லான் ஆட்சி வட்டாரத்திலுள்ள சபைகள் மார்ச் மாதத்தில் தங்கள் விசேஷ மாநாட்டு தினத்தை ஏற்பாடு செய்து நடத்தின. அதில், 1,535 பேர் கலந்துகொண்டது பதிவை ஏற்படுத்தியது, 22 பேர் முழுக்காட்டப்பட்டனர். கூடிவந்திருந்தவர்களில் பெரும்பாலோர் தங்கள் வீடுகளை அப்போதுதானே இழந்திருந்த போதிலும், மாநாட்டை ஒழுங்கமைத்தவர்கள் ஆச்சரியப்படும் விதத்தில், மாநாட்டு மன்றத்திற்காக கணிசமான தொகையை நன்கொடையாக அளித்தார்கள்.

அவர்கள் அனைவருடைய நன்றியுணர்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தில் சான் விசன்டேயை சேர்ந்த ஒரு சாட்சி சொன்னதாவது: “பேரழிவின் போது அமைப்பு எப்படி செயல்படுகிறது என்பதை பிரசுரங்களில் படித்திருந்தேன், ஆனால் இப்போது நானே தனிப்பட்ட விதத்தில் அனுபவித்திருக்கிறேன். சகோதரத்துவம் உதவும் விதத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. அன்பு செயல்படும் விதத்தை நாங்கள் நேரில் கண்டிருக்கிறோம். இந்த ஐக்கியப்பட்ட ஜனத்தாரில் ஒருவனாய் இருப்பது எப்பேர்ப்பட்ட சிலாக்கியம்!” (g01 10/22)

[பக்கம் 23-ன் படம்]

பூமியதிர்ச்சியால் ஏற்பட்ட நிலச்சரிவு லாஸ் கோலீனாஸில் 300-⁠க்கு அதிகமான வீடுகளுக்கு சமாதி கட்டியது

[படத்திற்கான நன்றி]

பக்கங்கள் 23-5-⁠ல் கீழே: Courtesy El Diario de Hoy

[பக்கம் 24-ன் படம்]

மீட்கும் பணியில் கிராமத்தார், குத்துக்கோடரி, மண்வாரி, வாளிகள் ஆகியவற்றை பயன்படுத்தினர்

[படத்திற்கான நன்றி]

Courtesy of La Prensa Gráfica (photograph by Milton Flores/Alberto Morales/Félix Amaya)

[பக்கம் 25-ன் படம்]

டேபேகோயோவிலுள்ள ராஜ்ய மன்றத்தின் இடிபாடுகள்

[பக்கம் 26-ன் படம்]

தங்கள் கூட்டங்களை நடத்த டேபேகோயோவிலுள்ள சகோதரர்கள் உடனடியாக புகலிடத்தை ஏற்பாடு செய்தனர்

[பக்கம் 26-ன் படங்கள்]

விரைவில் சாட்சிகள் மீண்டும் ராஜ்ய மன்றங்களையும் 500-⁠க்கும் அதிகமான தற்காலிக தங்குமிடங்களையும் கட்டினர்

[பக்கம் 26-ன் படம்]

பாதிக்கப்பட்ட தங்கள் வீடு மீண்டும் கட்டப்படுவதை நன்றிபொங்க பார்க்கும் தனிமரமான தாயும் அவரது மகளும்