Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கோழி பிரபலம், ஏராளம்

கோழி பிரபலம், ஏராளம்

கோழி—பிரபலம், ஏராளம்

கென்யாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

கோழி​—⁠இதுதான் உலகிலேயே மிக ஏராளமாக காணப்படும் பறவையாக இருக்கலாம். கணக்கீடுகளின்படி, 1,300 கோடிக்கும் அதிகமான கோழிகள் இருக்கின்றன! அதன் இறைச்சி அவ்வளவு பிரபலமாக இருப்பதால் ஆண்டுக்கு ஆண்டு 3,314 கோடி கிலோவுக்கும் அதிகம் உணவாக உண்ணப்படுகிறது. உலகெங்கிலும் ஓர் ஆண்டுக்கு சுமார் 60,000 கோடி முட்டைகளையும் போடுகின்றன.

மேற்கத்திய நாடுகளில் கோழிகள் ஏராளம், விலையும் மலிவு. ஆனால் பல பத்தாண்டுகளுக்கு முன்பு அப்படி இல்லை. தன்னை தேர்ந்தெடுத்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மலிவான விலையில் கோழி இறைச்சி கிடைக்கச் செய்வதாக ஐ.மா. வாக்காளர்களுக்கு வேட்பாளர் ஒருவர் வாக்குறுதி அளித்தார். இருந்தாலும், இன்று இந்தக் கோழி இறைச்சி ஒருகாலத்தில் இருந்ததைப் போன்று விசேஷித்த உணவாகவோ சில வகுப்பாருக்கு மாத்திரமே மட்டுப்பட்டதாகவோ இல்லை. இந்த விசேஷித்த பறவை எப்படி சர்வ சாதாரணமாக எங்கும் கிடைக்க ஆரம்பித்தது? ஏழை நாடுகளைக் குறித்து என்ன சொல்லலாம்? அங்கும் இவை ஏராளமாக கிடைப்பதற்கு வாய்ப்புள்ளதா?

இப்பறவையின் சரித்திரம்

ஆசியாவின் சிகப்பு காட்டுக் கோழியின் வழிவந்தவையே கோழி. இதை வீட்டில் வளர்ப்பது எளிது என்பதை மனிதன் விரைவில் கண்டுணர்ந்தான். சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு, கோழி தன் செட்டைகளின் கீழே தன் குஞ்சுகளை கூட்டிச் சேர்க்கும் விதத்தைப் பற்றி இயேசு கிறிஸ்துவும் குறிப்பிட்டாரே! (மத்தேயு 23:37; 26:34) இப்படிப்பட்ட ஓர் உதாரணத்தை அவர் பயன்படுத்தியிருப்பது இந்தப் பறவையை பற்றி பொதுவாக எல்லாரும் அறிந்திருந்தார்கள் என்பதையே காட்டுகிறது. ஆனால் கோழிகளையும் முட்டைகளையும் அதிகமாக உற்பத்தி செய்வது 19-⁠ம் நூற்றாண்டில்தான் ஒரு வியாபார நடவடிக்கையானது.

இன்று கோழி இறைச்சியைப் போன்று அவ்வளவு பிரபலமான வளர்ப்பு பறவை இறைச்சி ஒன்று இல்லை என்றே சொல்லலாம். நகரங்களில் வசிப்பவர்கள் உட்பட, கோடாகோடி குடும்பத்தார் வீட்டு உபயோகத்திற்காகவும் வியாபாரத்திற்காகவும் கோழிகளை வளர்க்கிறார்கள். கோழிகளை போன்று, பூமியில் வித்தியாசப்பட்ட எந்த இடங்களிலும் வளர்க்க முடிகிற பண்ணை விலங்குகள் வேறு இல்லை என்றே சொல்லலாம். அநேக நாடுகள் அவற்றின் சீதோஷணத்திற்கும் தேவைகளுக்கும் ஏற்ற கோழி இனங்களை உற்பத்தி செய்திருக்கின்றன. இவற்றில் சில: ஆஸ்திரேலியாவிலுள்ள ஆஸ்ட்ரலார்ப்; யாவரும் அறிந்த லெக்கான், அதன் பூர்வீகம் மத்தியதரை பிரதேசமாக இருந்தாலும் ஐக்கிய மாகாணங்களிலும் பிரபலமாக காணப்படுகிறது; நியூ ஹாம்ப்ஷயர், ப்ளிமத் ராக், ரோட் ஐலன்ட் ரெட், வையன்டாட் ஆகியவை ஐக்கிய மாகாணங்களில் வளர்க்கப்படுகின்றன; இங்கிலாந்தைச் சேர்ந்த கார்நிஷ், ஆர்பிங்டன், சஸிக்ஸ் ஆகியவை.

கால்நடை பராமரிப்பின் நவீன விஞ்ஞான முறைகள் கோழி வளர்ப்பை மேம்பட்ட பண்ணை தொழில்களில் ஒன்றாக ஆக்கியுள்ளன. ஐக்கிய மாகாணங்களிலுள்ள பண்ணையாட்கள் விஞ்ஞான ரீதியில் நோய்களை கட்டுப்படுத்துவதோடு தீவனம் கொடுப்பதிலும் கூண்டு அமைப்பதிலும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட முறைகளை கையாளுகிறார்கள். பெருமளவு உற்பத்திக்கான இந்த உத்திகள் ஈவிரக்கமற்றவை என அநேகர் கண்டனம் தெரிவிக்கின்றனர். ஆனாலும் இப்பறவைகளை விருத்தி செய்வதற்கு பண்ணையாட்கள் இன்னும் அதிக திறம்பட்ட வழிகளை உருவாக்குவதை அது தடுத்து நிறுத்தவில்லை. இப்போது ஒரு நபரை வைத்தே 25,000 முதல் 50,000 கோழிகளை பராமரிப்பதை நவீன தொழில் நுட்பம் சாத்தியமாக்குகிறது. இக்கோழிகளை நல்ல விலைக்கு விற்பதற்கேற்ற எடையை அவை மூன்று மாதங்களிலேயே பெற்றுவிடுகின்றன. a

இறைச்சிக்காக

எந்தவொரு ஓட்டலுக்கோ, ரெஸ்டாரன்டுக்கோ அல்லது கிராமத்திலுள்ள உணவகத்திற்கோ சென்று பாருங்கள், உணவுப்பட்டியலில் கோழி இறைச்சியைக் காண தவறமாட்டீர்கள். சொல்லப்போனால், உலகம் முழுவதிலும் உள்ள அநேக “ஃபாஸ்ட் ஃபூட்” ரெஸ்டாரன்டுகளும் கோழி இறைச்சியை தயாரித்து அளிப்பதில் சிறப்புற்று விளங்குகின்றன. சில சமுதாயங்களில் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு கோழி இறைச்சி ஸ்பெஷல் ஐட்டமாக இன்னும் இருக்கத்தான் செய்கிறது. இந்தியா போன்ற சில நாடுகளில் இந்த இறைச்சியை ருசிகரமாக பல விதங்களில் சமைக்கிறார்கள். மிளகாய் வற்றலில் வறுத்த கோழிக்கறி, லால் முர்கி; சிறுசிறு துண்டுகளாக்கப்பட்ட கறி, கர்கி முர்கி; இஞ்சியில் சமைக்கப்பட்ட கறி, அத்ரக் முர்கி போன்ற அனைத்தும் ருசிமிக்கவை!

கோழிக்கறி இந்தளவுக்கு பிரசித்தமாயிருப்பது ஏன்? இதற்கு ஒரு காரணம், எத்தனை விதமாக சமைத்தாலும் சுவைதருவதில் கோழிக்கறிக்கு ஈடாக வேறு எந்த உணவுப்பொருளும் இல்லை எனலாம். நீங்கள் அதை எப்படி சமைக்க விரும்புகிறீர்கள்? ஃப்ரை செய்யவா, ரோஸ்ட் செய்யவா, வாட்டவா, சுடவா அல்லது குழம்பாக்கவா? எந்த சமையல் புத்தகத்தை வேண்டுமானாலும் திறந்து பாருங்கள், கோழியின் ஒவ்வொரு பாகத்தையும் சிறந்த விதத்தில் சமைப்பதற்கு ஏராளமான குறிப்புகளை அங்கு காணலாம்.

அநேக நாடுகளில் கோழி சுலபமாக கிடைப்பதால் இதன் விலையும் மலிவாகவே இருக்கிறது. இதில் ஒருவருடைய உடலுக்குத் தேவையான புரதங்களும், வைட்டமின்களும், கனிமங்களும் உள்ளதால் இது உணவியல் நிபுணர்களின் தோழனாகவும் விளங்குகிறது. அதுமட்டுமல்லாமல், கோழி இறைச்சியில் கலோரிகளும், நிறைவுறு கொழுப்பு அமிலங்களும் மற்ற கொழுப்புகளும் அதிகம் இல்லை.

வளரும் நாடுகளில் உணவளித்தல்

உண்மையில், எல்லா நாடுகளிலும் கோழி இறைச்சியும் முட்டைகளும் ஏராளமாகக் கிடைப்பதில்லை. வேளாண்மை விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலின் சிறப்பு பணி குழு அளித்த அறிக்கையை கருத்தில் கொள்கையில் இது தனி கவனிப்புக்குரியது. அது இவ்வாறு சொன்னது: “2020-⁠ம் ஆண்டிற்குள்ளாக உலக ஜனத்தொகை 770 கோடியாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது . . . இருந்தாலும், ஜனத்தொகை அதிகரிப்பு வளரும் நாடுகளில்தான் அதிகமாக (95%) இருக்கும் என கணிக்கப்படுகிறது.” சுமார் 80 கோடி ஜனங்கள் ஏற்கனவே போதுமான உணவின்றி அவதியுறுவதை நினைக்கையில் இந்தக் குறிப்பு அதிக கவனிப்புக்குரியது.

இருந்தாலும், பசியால் அவதியுறுவோருக்கு உணவளிப்பதிலும் பண்ணையாட்களுக்கு போதிய வருவாயை ஈட்டித் தருவதிலும் இந்தக் கோழி முக்கிய பங்கு வகிக்க முடியும் என அநேக வல்லுநர்கள் நினைக்கிறார்கள். ஆனால் பிரச்சினை என்னவெனில், மிகப் பெரிய அளவில் கோழி வளர்ப்பது ஏழை பண்ணையாட்களுக்கு பெரிய சவாலாக இருக்கலாம். ஒரு காரணம், ஏழை நாடுகளில் சிறிய கிராமப்புற பண்ணைகளிலோ அல்லது வீட்டுக் கொல்லைகளிலோதான் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. ஆகவே அப்படிப்பட்ட நாடுகளில், கோழிகளுக்கு பாதுகாப்பான கூடுகள் அரிதாகவே அமைத்துக் கொடுக்கப்படுகின்றன. பகல் பொழுதில் வெளியே அலைந்து திரிந்து உணவை தின்பதற்காக கோழிகளை விட்டுவிடுகிறார்கள்; இரவில் வீடு திரும்பும் அவை சில சமயம் மரங்களில் அல்லது உலோகக் கூண்டுகளில் தங்குகின்றன.

இவ்வாறு வளர்க்கப்படும் கோழிகள் படிப்படியாக மறைந்து விடுகின்றன​—⁠சில உயிருக்கே ஆபத்தான நியூகாஸில் நோய்க்கும் மற்றவை உயிருக்கு உலைவைக்கும் விலங்குகளுக்கும் மனிதருக்கும் பலியாகிவிடுகின்றன. கோழிகளை வளர்க்கும் பெரும்பாலானோருக்கு, அவைகளுக்கு எப்படி போதுமான அளவுக்கு தீனி கொடுப்பது, சரியான வீடு அமைத்துக் கொடுப்பது, நோய்களிலிருந்து பாதுகாப்பது போன்றவற்றைப் பற்றிய சரியான அறிவும் இல்லை, அதற்கான பணவசதியும் இல்லை. இதன் காரணமாகவே, வளர்ந்துவரும் நாடுகளில் கோழி வளர்ப்போருக்கு பயிற்சியளிப்பதற்கான திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, “கோழி உற்பத்தியை விரிவாக்குவதன் மூலம் ஆப்பிரிக்க கிராமங்களிலுள்ள ஏழை மக்கள் பயனடைவதற்காக” ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு சமீபத்தில் ஓர் ஐந்தாண்டு திட்டத்தை ஆரம்பித்து வைத்தது.

இப்படிப்பட்ட நல்நோக்கு திட்டங்களால் வரும் பலன்களை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆகவே, இவ்வளவு சர்வசாதாரணமாக கிடைக்கும் “சிக்கன் பீஸ்” உலகில் பெரும்பாலானோருக்கு எட்டாக் கனியாக இருப்பதை அறிவது பணக்கார நாட்டவரை சிந்திக்க வைக்கிறது. ‘அனைத்து குடும்பத்தாருக்கும் மலிவான விலையில் கோழி இறைச்சி கிடைக்கும்’ என்ற கருத்து அப்படிப்பட்டவர்களுக்கு கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாததாக தோன்றலாம். (g01 10/8)

[அடிக்குறிப்பு]

a கோழிகள் முட்டைகளுக்காக வளர்க்கப்பட்டாலும், ஐக்கிய மாகாணங்களில் 90 சதவீத கோழிகள் இறைச்சிக்காகவே வளர்க்கப்படுகின்றன.

[பக்கம் 22-ன் பெட்டி/படங்கள்]

பச்சை மாமிசத்தை பாதுகாப்பாக கையாளுதல்

“பச்சை கோழி இறைச்சி தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளான சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்களுக்கு புகலிடம் அளிக்கலாம். ஆகவே அவற்றை தயாரிப்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இறைச்சியை கையில் எடுப்பதற்கு முன்னும் பின்னும் எப்போதும் உங்கள் கைகளையும், வெட்டுப் பலகையையும், கத்தியையும், இறைச்சி வெட்டும் கத்தரியையும் சோப் கலந்த சூடான தண்ணீரில் கழுவுங்கள். அதிக சூடான தண்ணீரில் கழுவக்கூடிய வெட்டுப் பலகையை பயன்படுத்துவது சிறந்தது . . . முடிந்த வரை, கோழி இறைச்சியை வெட்டுவதற்கென்றே தனியாக ஒரு பலகையை வைத்துக்கொள்வது நல்லது. உறைந்த கோழி இறைச்சி சாதாரண வெப்பத்தை அடைந்த பிறகே சமைக்க பயன்படுத்துங்கள்.”​—⁠த குக்ஸ் கிச்சன் பைபிள்.

[பக்கம் 20-ன் படங்கள்]

ஒயிட் லெக்கான், காட்டுக் கோழி, ஆர்பிங்டன், பாலிஷ் மற்றும் ஸ்பெகில்ட் சஸிக்ஸ் போன்றவை கோழியில் சில இனங்கள்

[படத்திற்கான நன்றி]

ஒயிட் லெக்கான் தவிர மற்றவை அனைத்தும்: © Barry Koffler/www.feathersite.com

[பக்கம் 21-ன் படங்கள்]

வளரும் நாடுகளில் கோழி உற்பத்தியை அதிகரிக்க பண்ணையாட்களுக்கு உதவ முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன

[பக்கம் 21-ன் படம்]

ஐக்கிய மாகாணங்களில் 90 சதவீத கோழிகள் இறைச்சிக்காகவே வளர்க்கப்படுகின்றன