Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பழிக்குப் பழி வாங்குவதில் என்ன தவறு?

பழிக்குப் பழி வாங்குவதில் என்ன தவறு?

இளைஞர் கேட்கின்றனர் . . .

பழிக்குப் பழி வாங்குவதில் என்ன தவறு?

“அவன் என்னை கேவலப்படுத்தினான்.”​—⁠கொலை குற்றத்திற்காக சிறையில் இருக்கும் 15 வயது கானீல்.

பள்ளி நடன நிகழ்ச்சியின் போது தன் ஆசிரியையை கொன்றுவிட்ட 14 வயது ஆன்ட்ரூ, ஆசிரியர்களையும், தன் பெற்றோரையும் வெறுப்பதாகவும், அவனை புறக்கணிப்பதால் பெண்கள்மீது கோபமாக இருப்பதாகவும் சொன்னான்.

“பயங்கரமாக பரவிவரும் சம்பவம்” என டைம் பத்திரிகை இதை அழைக்கிறது. கோபத்தில் கொதித்தெழும் இளைஞன் உயிரைக் குடிக்கும் துப்பாக்கியை தன் பள்ளிக்குத் திருட்டுத்தனமாக எடுத்து வருகிறான், தன் சகமாணவர்களையும் ஆசிரியர்களையும் சுட்டுத்தள்ளுகிறான். ஐக்கிய மாகாணங்களில் இப்படிப்பட்ட துயர்மிக்க சம்பவங்கள் அன்றாட நிகழ்ச்சிகள் போல் தோன்ற ஆரம்பித்திருப்பதால் டிவி செய்தி நெட்வொர்க் ஒன்று இந்தத் தற்போதைய நிலையை “வன்முறை பெருக்கம்” என விவரித்தது.

நல்ல வேளையாக பள்ளிகளில் நடக்கும் துப்பாக்கி சூடு இன்னும் அபூர்வ சம்பவமாகவே உள்ளது. அவ்வாறு இருந்தாலும், கட்டுக்கடங்காத கோபத்தால் விளைந்த சமீபத்திய குற்றச்செயல்கள், சில இளைஞர்கள் உண்மையில் எந்தளவுக்கு கோபத்தில் கொதித்தெழுகிறார்கள் என்பதையே காட்டுகின்றன. இப்படி எரிமலை போல் பொங்கி எழ எது தூண்டுவதாக தெரிகிறது? அதிகாரத்தில் உள்ளவர்கள் ஒருசமயம் அநியாயமாக நடத்தியதால் அல்லது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதால் இந்த இளைஞர்களில் சிலர் சீற்றமடைந்திருக்க வேண்டும். மற்றவர்கள் தங்கள் சகாக்கள் சதா கேலிகிண்டல் செய்வதைத் தாங்க முடியாமல் கோபப்பட்டிருக்க வேண்டும். குண்டாக இருப்பதாக கேலி செய்யப்பட்ட 12 வயது பையன், தன் சகமாணவனை சுட்டுக் கொன்றுவிட்டு, தன்னையும் சுட்டுக்கொண்டான்.

இப்படிப்பட்ட மிதமீறிய வன்முறையில் நிஜமாகவே ஈடுபடுவதைப் பற்றி ஒருவேளை பெரும்பாலான இளைஞர்கள் நினைப்பதில்லை என்பது உண்மைதான். எனினும், இனவெறி, அடாவடித்தனம், அல்லது கொடூரமான பரிகாசம் போன்றவற்றிற்கு நீங்கள் பலியாகியிருந்தால் அந்த மனவேதனையையும் மன வலியையும் தரும் உணர்ச்சிகளை எதிர்த்துப் போராடுவது உங்களுக்கு அவ்வளவு சுலபமல்ல. தன் பள்ளி நாட்களை நினைத்துப் பார்க்கும் பென் சொல்வதாவது: “என் வயசிலிருந்த மற்றவர்கள் எல்லாரையும்விட நான் குள்ளமாக இருந்தேன். என் தலை மொட்டையாக இருந்ததால் எப்போது பார்த்தாலும் மற்றவர்கள் என்னை கேலி செய்தனர், என் தலையில் அடித்துவிட்டு சென்றனர். இதனால் எனக்கு ஒரே கடுப்பு. இதைவிட கொடுமை என்னவென்றால், பொறுப்பான அதிகாரிகளின் உதவியைப் பெற போனபோது அவர்கள் என்னை சட்டையே செய்யவில்லை. அது இன்னும் எனக்கு கடுப்பேற்றியது!” “என் கையில் மாத்திரம் துப்பாக்கி இல்லாமல் போச்சு, இருந்திருந்தால் அவர்கள் எல்லாரையும் சுட்டுப் பொசுக்கியிருப்பேன்” என்றும் சொல்கிறான் பென்.

தங்களைப் புண்படுத்தியவர்களை புண்படுத்த துடிக்கும் இளைஞர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்களே அவ்வாறு மோசமாக நடத்தப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? பதில் காண, இதைக் குறித்து கடவுளுடைய வார்த்தை என்ன சொல்கிறது என்பதைக் கவனியுங்கள்.

சுயகட்டுப்பாடு​—⁠பலத்தின் அடையாளம்!

மோசமாக நடத்தப்படுவதும் அநீதியை சந்திப்பதும் புதிய விஷயங்களே அல்ல. “வெஞ்சினம் கொள்ளாதே; வெகுண்டெழுவதை விட்டுவிடு; எரிச்சலடையாதே; அதனால் தீமைதான் விளையும்” என்ற இந்த புத்திமதியை ஒரு பைபிள் எழுத்தாளர் கூறினார். (திருப்பாடல்கள் [சங்கீதம்] 37:8, பொது மொழிபெயர்ப்பு) பெரும்பாலும் வெகுண்டெழுவது சுயகட்டுப்பாட்டை இழப்பதையும், விளைவுகளை துளியும் சிந்திக்காமல் நடந்துகொள்வதையும் உட்படுத்துகிறது. ‘எரிச்சலுக்கு’ இடங்கொடுப்பது உடனடியாக கோபத்தில் வெகுண்டெழ வைக்கிறது! அப்போது என்ன நடக்கலாம்?

காயீன், ஆபேல் பற்றிய பைபிள் உதாரணத்தை கவனியுங்கள். தன் சகோதரனாகிய ஆபேல்மீது “காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டா”னது. அதன் விளைவாக, “அவர்கள் வயல்வெளியில் இருக்கும் சமயத்தில், காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலை செய்தான்.” (ஆதியாகமம் 4:5, 8) கட்டுக்கடங்காத கோபத்திற்கு மற்றொரு உதாரணம் சவுல் ராஜாவுடையது. இளம் தாவீதின் போர்க்கள வீரதீர செயல்களைக் கண்டு பொறாமைப்பட்டு, தாவீதின்மீது மட்டுமல்ல, தன் மகன் யோனத்தான்மீதும் ஈட்டிகளை அவன் வீசியெறிந்தான்!​—⁠1 சாமுவேல் 18:11; 1 சாமுவேல் 19:10; 1 சாமுவேல் 20:30-34.

சிலசமயங்களில் கோபப்படுவது நியாயமானதுதான். அப்போதும்கூட அந்த நியாயமான கோபம் கட்டுப்பாட்டை மீறினால் அது தீமையில் போய் முடிவடையும். சிமியோனையும் லேவியையும் உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளுங்கள். தங்கள் சகோதரியாகிய தீனாளை சீகேம் கற்பழித்ததைப் பற்றி கேள்விப்பட்டபோது கோபப்பட அவர்களுக்கு நிச்சயமாகவே நியாயமான காரணம் இருந்தது. ஆனால், பொறுமையாக இருப்பதற்கு பதிலாக வெஞ்சினம் அடைந்தது, “எங்கள் சகோதரியை அவர்கள் ஒரு வேசியைப்போல நடத்தலாமோ” என அவர்கள் பின்னர் கேட்ட வார்த்தைகளில் வெளிப்பட்டது. (ஆதியாகமம் 34:31) அவர்களுடைய கோபம் தலைக்கேறியபோது “இவ்விரண்டு பேரும் தன்தன் பட்டயத்தை எடுத்துக் கொண்டு, துணிகரமாய்ப் பட்டணத்தின் மேல் பாய்ந்து,” சீகேமின் கிராமத்திலுள்ள “ஆண்மக்கள் யாவரையும் கொன்றுபோட்டார்கள்.” அவர்களுடைய இந்தக் கோபம் தொற்றும் தன்மையுள்ளதாய் இருந்தது, காரணம் அந்த கொலைவெறி தாக்குதலில் “யாக்கோபின் [மற்ற] குமாரரும்” சேர்ந்துகொண்டார்கள். (ஆதியாகமம் 34:25-27) பல வருடங்களுக்குப் பின்னரும், சிமியோன், லேவியின் தகப்பனாகிய யாக்கோபு, அவர்களுடைய கட்டுக்கடங்காத கோபத்தைக் கண்டித்தார்.​—⁠ஆதியாகமம் 49:5-7.

இதிலிருந்து முக்கியமான ஒரு குறிப்பை நாம் கற்றுக்கொள்கிறோம்: கட்டுக்கடங்காத கோபம் பலத்துக்கு அல்ல பலவீனத்திற்கே அடையாளம். ‘வலிமை உடையவரைவிடப் பொறுமை உடையவரே மேலானவர்; நகரை அடக்குகிறவரைவிடத் தன்னை அடக்குகிறவரே சிறந்தவர்’ என நீதிமொழிகள் 16:32 குறிப்பிடுகிறது.

பழிவாங்குதல்​—⁠மடமையான செயல்

இவ்வாறு, “ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள், . . . நீங்கள் பழிவாங்கா[தீர்கள்]” என்ற இந்தப் புத்திமதியை பைபிள் தருகிறது. (ரோமர் 12:17, 19) வன்முறையால் சரீரத்தை தாக்குவது அல்லது கடும் சொற்களால் மனதைப் புண்படுத்துவது என எப்படிப்பட்ட பழிவாங்குதலும் தேவபக்திக்குரிய செயல் அல்ல. அதே சமயத்தில், அத்தகைய பழிவாங்குதல் நடைமுறையானதோ ஞானமானதோ அல்ல. ஒரு விஷயம் என்னவென்றால், வன்முறை இன்னுமதிக வன்முறையையே தூண்டிவிடும். (மத்தேயு 26:52) அனல் பறக்கும் வார்த்தைகளைக் கொட்டினால் பெரும்பாலும் அதைவிட சூடான வார்த்தைகளையே அள்ள வேண்டியிருக்கும். கோபம் பெரும்பாலும் நியாயமற்றதே என்பதை நினைவில் வையுங்கள். உதாரணமாக, உங்களைப் பிடிக்காததால்தான் ஒருவர் உங்களைப் புண்படுத்தினார் என்பது உங்களுக்கு நிச்சயமாக தெரியுமா? அவர் ஏதோ யோசிக்காமல் அல்லது பண்பற்ற விதத்தில் பேசியிருப்பாரா? அப்படி ஒருவேளை தீய உள்நோக்கத்துடன் அவர் பேசியிருந்தாலும் அதற்குப் பழிவாங்குவதே சரியான செயலா?

பிரசங்கி 7:21, 22-⁠லுள்ள வார்த்தைகளைக் கவனியுங்கள்: “சொல்லப்படும் எல்லா வார்த்தைகளையும் கவனியாதே; கவனித்தால் உன் வேலைக்காரன் உன்னை நிந்திப்பதைக் கேள்விப்பட வேண்டியதாகும். அநேகந்தரம் நீயும் பிறரை நிந்தித்தாயென்று, உன் மனதுக்குத் தெரியுமே.” ஆம், அன்பற்ற விதத்தில் உங்களைப் பற்றி மற்றவர்கள் பேசுவது பிடிக்காத செயல்தான். ஆனால் வாழ்க்கையில் அதெல்லாம் சகஜம் என்பதை பைபிள் ஒப்புக்கொள்கிறது. நீங்களே ஒருவேளை மற்றவர்களைப் பற்றி மோசமாக பேசியிருக்கலாம் அல்லவா? அப்படியிருக்க, உங்களைப் பற்றி அன்பற்ற விதத்தில் யாரோ என்னவோ சொல்லிவிட்டார்கள் என்பதற்காக உங்களுக்கு ஏன் மூக்குக்கு மேல் கோபம் வர வேண்டும்? அநேக சமயங்களில், கேலி கிண்டல்களை சமாளிக்க மிகச் சிறந்த வழி அதைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுவதே.

அதைப் போலவே, நீங்கள் தவறாக நடத்தப்பட்டதாக நினைக்கையில் அதற்காக கோபப்படுவதும் ஞானமற்ற செயலாக உள்ளது. சககிறிஸ்தவர்களுடன் கூடைப்பந்து விளையாடுகையில் என்ன நடந்தது என்பதை இளம் டேவிட் நினைவுபடுத்தி சொல்கிறான். “எதிரணியில் இருந்த யாரோவொருவர் என்னை பந்தால் தாக்கிவிட்டார்” என்கிறான் டேவிட். வேண்டுமென்றே அப்படி தாக்கியிருக்க வேண்டுமென சட்டென முடிவெடுத்து பழிவாங்கும் எண்ணத்தில் டேவிட் அந்த ஆட்டக்காரர்மீது பந்தை தூக்கி வீசினான். “எனக்கு உண்மையிலேயே பயங்கர கோபம் வந்தது” என ஒத்துக்கொள்கிறான் டேவிட். ஆனால் நிலைமை இன்னும் மோசமடைந்துவிடுவதற்கு முன்பாக டேவிட் யெகோவாவிடம் ஜெபித்தான். ‘நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன், என் கிறிஸ்தவ சகோதரனுடனா சண்டைபோட ஆசைப்படுகிறேன்’ என தனக்குத்தானே கேட்டுக்கொண்டான். பின்னர் அவர்கள் இருவருமே மன்னிப்பு கேட்டுக்கொண்டனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியை நினைத்துக்கொள்வது உதவியாக இருக்கும். “பழிக்கப்பட்டபோது பதிலுக்குப் பழிக்கவில்லை; துன்புறுத்தப்பட்டபோது அச்சுறுத்தவில்லை.” (1 பேதுரு 2:23, பொ.மொ.) ஆம், மன அழுத்தத்தில் இருக்கையில், கோபப்படுவதற்குப் பதிலாக சுயகட்டுப்பாட்டை காத்துக்கொள்ள உதவும்படி கேட்டு கடவுளிடம் ஜெபியுங்கள். “தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியை” அவர் தாராளமாக ‘கொடுப்பார்.’ (லூக்கா 11:13) உங்களை யாரேனும் புண்படுத்தும்போது பழிவாங்குவதற்கு பதிலாக அந்த நபரை அணுகி அதைக் குறித்து பேசி சரிசெய்துவிடுவது நல்லது. (மத்தேயு 5:23, 24) அல்லது ஒருவேளை பள்ளியில் அடாவடித்தனம் செய்பவன் தொடர்ந்து கடும் தொல்லை கொடுத்து வந்தால் அதை சரிசெய்ய வன்முறையை நாடாதீர்கள். மாறாக, உங்களைப் பாதுகாத்துக்கொள்ள நடைமுறையான நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். a

சீற்றத்தை விட்டொழித்த இளம் பெண்

இந்த பைபிள் நியமங்களைப் பின்பற்றியிருக்கிற அநேக இளைஞர்களுக்கு நல்ல பலன்கள் கிடைத்திருக்கின்றன. உதாரணமாக, சின்னஞ்சிறு வயதிலேயே கட்ரீனா தத்துப் பிள்ளையாக கொடுக்கப்பட்டாள். “என்னைப் பெற்ற தாய் என்னை ஏன் தத்து கொடுத்தாள் என்பதை புரிந்துகொள்ள முடியாததால் எப்போதும் கோபத்தில் எரிந்துவிழுந்தேன். அந்தக் கோபத்தை எல்லாம் என்னை தத்தெடுத்த தாயிடம் காட்டினேன். நான் அவர்களைப் புண்படுத்தினால் உண்மையில் ஏதோவொரு விதத்தில் என்னைப் பெற்ற தாயை பழிவாங்குவதாக நினைத்து, காரணமே இல்லாமல் சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்பட்டேன். இன்ன விதத்தில் என்று இல்லாமல், சொற்களால் சாடினேன், தரையை உதைத்தேன், கோபாவேசத்துடன் நடந்துகொண்டேன். எனக்கு ரொம்ப பிடித்தது, ‘படால்’ என கதவை சாத்துவது. ‘உங்களை எனக்கு சுத்தமா பிடிக்கல!’ என எப்போதும் சொல்லிக்கொண்டிருந்தேன். இதற்கெல்லாம் காரணம் என் கோபம்தான். பழையதை எல்லாம் எண்ணிப் பார்த்தால் நானா இப்படியெல்லாம் நடந்துகொண்டேன் என என்னால் நம்பவே முடியவில்லை” என்கிறாள் அவள்.

கோபத்தை அடக்க கட்ரீனாவுக்கு எது உதவியது? “பைபிள் படிப்பதுதான்! நாம் எப்படி உணருகிறோம் என்பதை யெகோவா அறிந்திருப்பதால் இது ரொம்ப முக்கியம்” என பதிலளிக்கிறாள். குறிப்பாக அவளுடைய குடும்ப சூழ்நிலையைக் கலந்தாலோசிக்கும் விழித்தெழு! கட்டுரைகளை அவளும் அவளுடைய குடும்பத்தாரும் சேர்ந்து படித்தபோதும் கட்ரீனா ஆறுதலைக் கண்டடைந்தாள். b “நாங்க எல்லாரும் சேர்ந்து உட்கார்ந்து பேசி ஒருவருக்கொருவர் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டோம்” என நினைவுபடுத்தி சொல்கிறாள்.

நீங்களும் கடும் கோபத்தைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொள்ளலாம். கேலி கிண்டல் செய்யப்படும்போது, அடாவடித்தனத்தை எதிர்ப்படும்போது, அல்லது தவறாக நடத்தப்படும்போது, சங்கீதம் 4:4-லுள்ள, ‘நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்’ என்ற பைபிளின் வார்த்தைகளை நினைத்துக்கொள்ளுங்கள். அந்த வார்த்தைகள், அழிவுக்கு வழிநடத்தும் கோபத்திற்கு இடங்கொடுப்பதைத் தவிர்க்க உங்களுக்கு உதவலாம்.(g01 10/22)

[அடிக்குறிப்புகள்]

a நியாயமற்ற விதத்தில் நடந்துகொள்ளும் ஆசிரியர்கள், பள்ளியில் அடாவடித்தனம் செய்பவர்கள், தொல்லை தருபவர்கள் ஆகியவர்களை எப்படி சமாளிப்பது என்பதன் சம்பந்தமாக நடைமுறையான ஆலோசனைக்கு, பிப்ரவரி 8, 1984 (ஆங்கிலம்); ஜூன் 8, 1986; டிசம்பர் 8, 1990 ஆகிய விழித்தெழு! இதழ்களில் வெளிவந்த “இளைஞர் கேட்கின்றனர் . . . ” கட்டுரைகளைக் காண்க.

b மே 8, 1996, விழித்தெழு! இதழில், “தத்தெடுத்தல்​—⁠இன்பங்கள், சவால்கள்” என்ற தலைப்பில் வெளிவந்த தொடர் கட்டுரையைக் காண்க.

[பக்கம் 15-ன் படம்]

பெரும்பாலான சமயங்களில் கேலி கிண்டல்களை சமாளிக்க மிகச் சிறந்த வழி அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதே