வியட்நாமின் அறியப்படாத விலங்குகள்
வியட்நாமின் அறியப்படாத விலங்குகள்
“இந்த நூற்றாண்டிலேயே விலங்கு கண்டுபிடிப்புகளுக்கான மிகவும் கிளர்ச்சியூட்டும் காலம்” என லண்டன் மிருகக்காட்சி சாலையில் பாலூட்டிகளின் பாதுகாவலராக பணிபுரியும் டக்லஸ் ரிச்சர்ட்சன் உற்சாகம் பொங்க கூறினார். கடந்த பத்து ஆண்டுகளில், வியட்நாமிலுள்ள ஒதுக்குப்புறமான காடுகளில் சில பெரிய விலங்குகள் கண்டுபிடிக்கப்பட்டதை பற்றியே அவர் அவ்வாறு கூறினார்.
பயங்கரமான யுத்தத்தின் காரணமாக விஞ்ஞானிகளால் பல ஆண்டுகள் இந்த காடுகளுக்குள் செல்லவே முடியாமல் இருந்தது. இப்பொழுதோ, அங்குள்ள விலங்கு ஆராய்ச்சியாளர்கள் விலங்குகளை படம்பிடிக்க ஆட்டோமேட்டிக் காமிராக்களை உபயோகித்துள்ளனர். அதில் ஒன்று வியட்நாமிய காண்டாமிருகமாகும். ஜாவா காண்டாமிருகத்தின் சிற்றினமான இது உலகின் மிக வேகமாக அழிந்துவரும் இனங்களுள் ஒன்றாகும்.
வியட்நாமின் அறியப்படாத விலங்குகள் என அழைக்கப்படுபவற்றுள் மற்றொன்று வூ க்வாங் எருது என அழைக்கப்படும் மறிமான் போன்ற எருதாகும். 1992-ல் வூ க்வாங் இயற்கை சரணாலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விலங்கு சுமார் 100 கிலோ எடையும், தோள் மட்டத்தில் ஒரு மீட்டர் உயரமும் உள்ளது. இது எருது, மறிமான், அல்லது ஆட்டு இனத்தோடு சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். அதே சரணாலயத்தில் மூன்று மான் வகைகளும் கண்டுபிடிக்கப்பட்டன; 1993-ல் ராட்சத மன்ட்ஜாக், 1997-ல் ட்ரூஅங் சான் மன்ட்ஜாக், 1998-ல் இலை மன்ட்ஜாக்.
வியட்நாமிலுள்ள டைன்வென் பீடபூமியில் டைன்வென் புனுகுப் பூனை என்ற சிறிய, இரவில் நடமாடுகிற மாம்ச பட்சிணியை 1996-ல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். 3 முதல் 7.5 கிலோ எடையுள்ள இது ஈரப்பதமிக்க வெப்பமண்டல காட்டில் வசிக்கிறது.
ஒரு வருடத்தில் ஏறக்குறைய 20 விதமான தவளைகள் என்ற கணக்கில் சிறிய விலங்குகள் கண்டுபிடிக்கப்பட்ட வண்ணம் உள்ளன என்று ரிச்சர்ட்சன் விளக்கினார். ஆனால், இந்த பெரிய விலங்குகள் இருப்பது உண்மையில் எதிர்பாராத ஒன்றுதான் என லண்டனின் தி இன்டிபென்டன்ட் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது.(g01 10/22)
[பக்கம் 31-ன் படங்கள்]
டைன்வென் புனுகுப் பூனை
வூ க்வாங் எருது
ட்ரூஅங் சான் மன்ட்ஜாக்
வியட்நாமிய காண்டாமிருகம்
[படத்திற்கான நன்றி]
காடு: © Wildside Photography
வியட்நாமிய காண்டாமிருகம்: AP Photo/World Wildlife Fund, Mike Baltzer; மற்ற மூன்று மிருகங்கள்: Courtesy EC-SFNC/Acknowledging the European Commission’s support of the photo-trapping program