Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“இந்த முறை திருந்திவிடுவார்”

“இந்த முறை திருந்திவிடுவார்”

“இந்த முறை திருந்திவிடுவார்”

ரோக்ஸானா a அழகும் துடிப்பும் மிக்கவர், நான்கு பிள்ளைகளுக்கு தாய். இவரது கணவர் தென் அமெரிக்காவில் மதிப்பும் மரியாதையும் பெற்ற ஒரு மருத்துவர். “என் கணவர் பெண்களோடு ரொம்ப இனிமையாக பழகுவார், ஆண்களுக்கும் அவரை ரொம்ப பிடிக்கும்” என்கிறார் ரோக்ஸானா. ஆனால் இவரது கணவருக்கு கொடுமையான மறுபக்கமும் உண்டு; இது அவரது நெருங்கிய நண்பர்களுக்குக்கூட தெரியாது. “வீட்டில் அவர் சரியான அரக்கர். பயங்கர பொறாமை பிடித்தவர்” என்கிறார் ரோக்ஸானா.

முகத்தில் கவலை ரேகை படர்ந்திருக்க, ரோக்ஸானா தன் கதையை தொடர்கிறார்: “கல்யாணமாகி சில வாரங்களிலேயே பிரச்சினை தலைதூக்கிவிட்டது. என் தம்பிகளும் அம்மாவும் எங்களைப் பார்க்க வந்திருந்தார்கள். அவர்களோடு சிரித்துப் பேசி ரொம்ப ஜாலியாக பொழுதைக் கழித்தேன். ஆனால் அவர்கள் வாசலைத் தாண்டினார்களோ இல்லையோ, என் கணவர் பயங்கர ஆத்திரத்தோடு, வெறிபிடித்தவர் போல் என்னை சோபாவில் ஒரே தள்ளு தள்ளினார். நடப்பது நிஜம்தானா என புரியாமல் அப்படியே அரண்டுபோனேன்.”

ரோக்ஸானாவின் கண்ணீர் கதை அப்போதுதான் ஆரம்பித்திருந்தது வேதனையான உண்மை; அதன் பிறகு வருடக்கணக்காக அவர் வாங்கிய அடிகளுக்கும் உதைகளுக்கும் கணக்கே இல்லை. அடுத்து என்ன செய்வார் என முன்கூட்டியே சொல்லுமளவுக்கு ஒரேவிதமாக நடந்துகொண்டார் ரோக்ஸானாவின் கணவர். முதலில் அவரை அடிப்பார், பிறகு மிகவும் வருந்தி மன்னிப்பு கேட்பார், மறுபடியும் அப்படி நடந்துகொள்ளவே மாட்டேன் என சத்தியம் வேறு செய்வார். கொஞ்ச காலத்திற்கு நல்ல விதமாக நடந்துகொள்வார். பிறகு பழையபடி அட்டகாசம் ஆரம்பித்துவிடும். “இந்த முறை அவர் திருந்திவிடுவார் என்றுதான் ஒவ்வொரு தடவையும் யோசிப்பேன். அவரை விட்டு ஓடிப்போனால்கூட மனசு கேட்காமல் மீண்டும் மீண்டும் அவரிடமே வருகிறேன்” என்கிறார் ரோக்ஸானா.

என்றாவது தனது கணவரின் மிருகத்தனம் இன்னும் பயங்கரமாகிவிடுமோ என ரோக்ஸானா பயப்படுகிறார். “என்னையும் பிள்ளைகளையும் கொன்றுவிட்டு தானும் சாகப்போவதாகக்கூட அவர் மிரட்டியிருக்கிறார். ஒருமுறை கத்தரிக்கோலால் தொண்டையை கிழிக்க வந்துவிட்டார். இன்னொரு முறை துப்பாக்கியை காட்டி மிரட்டி, என் காதுக்கு நேராக நீட்டி, சுட்டேவிட்டார்! நல்ல வேளையாக அதில் குண்டு இல்லை, ஆனாலும் பயத்திலேயே எனக்கு உயிர் போய்விட்டதுபோல் இருந்தது” என்கிறார்.

மெளனிகளான மாதர்

ரோக்ஸானாவைப் போல் உலகெங்கும் லட்சக்கணக்கான பெண்கள் மூர்க்கமான ஆண்களின் கைகளில் சிக்கித் தவிக்கிறார்கள். b அவர்களில் அநேகர், தாங்கள் படும் பாட்டை வாய்விட்டு சொல்வது கிடையாது. புகார் சொல்லிப் பிரயோஜனம் இல்லை என்று நினைக்கிறார்கள். ஒருவிதத்தில் அதுவும் சரிதான்; கொடுமை செய்யும் கணவன்மார் பலர் புகாரை ஒரேயடியாக மறுத்து, “என் மனைவி ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு இப்படித்தான் ஏதாவது சொல்லுவாள்” அல்லது “அவள் எப்போதும் ஒன்றுக்குப் பத்தாக சொல்வதுதான் வழக்கம்” என கதையையே திசைதிருப்பி விட்டு, நழுவப் பார்த்திருக்கிறார்களே!

எங்கே அதிக பாதுகாப்பை உணர வேண்டுமோ அங்கேயே​—⁠சொந்த வீட்டிலேயே​—⁠பெண்கள் பலர் சதா பயந்து பயந்து சாவதைப் பார்த்தால் நெஞ்சம் கனக்கிறது. ஆனால் அனுதாபம், இந்த அப்பாவிகளுக்கு கிடைப்பதற்கு பதிலாக பெரும்பாலும் இவர்களை ஆட்டிவைப்பவர்களுக்கே கிடைக்கிறது. சொல்லப்போனால், இவ்வளவு நல்ல மனுஷரா மனைவியை அடிப்பார் என உண்மையை ஜீரணிக்க முடியவில்லை சிலருக்கு. சமுதாயத்தில் கௌரவமாக நடந்துகொண்ட கணவர் வீட்டிலோ தன்னை சித்திரவதை செய்ததை அனீட்டா என்ற பெண் மனந்திறந்து சொன்னபோது என்ன நடந்தது தெரியுமா? “‘இப்படிப்பட்ட தங்கமான மனுஷன்மேல அபாண்டமா பழிசுமத்த உங்களுக்கு எப்படித்தான் மனசு வந்தது?’ என்று கேட்டார் ஒருவர். நான்தான் அநாவசியமாக அவரது கோபத்தைக் கிளறியிருப்பேன் என்று பரிந்துகொண்டு வந்தார் இன்னொருத்தர்! என் கணவரது சுயரூபம் வெட்ட வெளிச்சமான பிறகும்கூட என் நண்பர்கள் சிலர் என்னை ஓரங்கட்ட ஆரம்பித்தார்கள். ‘ஆம்பளைங்கன்னா அப்படித்தான் இருப்பாங்க’ என்பது அவர்களது கருத்து, ஆகவே நான்தான் அனுசரித்துப் போயிருக்கணும் என்று நினைத்தார்கள்.”

அனீட்டாவின் அனுபவம் காட்டுகிறபடி, கணவன்மார் மனைவிகளை கொடுமைப்படுத்தும் கசப்பான உண்மையை புரிந்துகொள்வதே அநேகருக்கு கஷ்டமாக இருக்கிறது. தான் நேசிப்பதாக சொல்லும் பெண்ணிடமே அந்தளவு கொடூரமாக நடந்துகொள்ள ஆண்களை தூண்டுவது எது? கொடுமைக்கு ஆளாகும் பெண் இனத்திற்கு எப்படி கைகொடுக்கலாம்?(g01 11/8)

[அடிக்குறிப்புகள்]

a இந்தக் கட்டுரைகளில் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

b பல ஆண்களும் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறோம். ஆனால் மிக மோசமாக காயப்படுத்தப்படுவது பெரும்பாலும் பெண்களே என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. ஆகவே, கொடுமைக்கு ஆளாகும் பெண்களைப் பற்றியே இந்த கட்டுரைகள் கலந்தாலோசிக்கின்றன.

[பக்கம் 4-ன் பெட்டி/படம்]

எங்குமுள்ள குடும்பங்களில் கொடுமை

பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையை ஒழிப்பது சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் சபை விடுத்த அறிக்கையின்படி, “பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமை” என்ற பதம் பலவற்றை உட்படுத்துகிறது. அதில், “பெண்களுக்கு சரீர, பாலியல், அல்லது மன ரீதியில் தீங்கையோ துன்பத்தையோ ஏற்படுத்தும் அல்லது ஏற்படுத்த சாத்தியமுள்ள எல்லா விதமான வன்முறைச் செயல்களும் அடங்கும். அவற்றை செய்யப்போவதாக பயமுறுத்துவதும், தனியுரிமையை பலவந்தமாக அல்லது அராஜகத்தால் பறிப்பதும் அதில் அடங்கும். இவை சமுதாய அளவிலும் நடக்கலாம் குடும்ப அளவிலும் நடக்கலாம்.” மேலுமாக இந்தக் கொடுமை, “குடும்பத்திலும் சமுதாயத்திலும் நடக்கும் சரீர, பாலியல், மன ரீதியிலான வன்முறைகளை உட்படுத்துகிறது. அடிப்பது, பெண் பிள்ளைகளை பாலியல் துர்ப்பிரயோகம் செய்வது, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவது, மனைவியை பலவந்தமாக கற்பழிப்பது, பெண் பிறப்புறுப்பை அறுப்பது, பெண்களுக்கு தீங்கிழைக்கும் மற்ற பாரம்பரிய பழக்கங்களை கடைப்பிடிப்பது ஆகியவை இதில் அடங்கும்.”