உங்கள் உடலில் உள்ள நுண்ணிய “வண்டிகள்”
உங்கள் உடலில் உள்ள நுண்ணிய “வண்டிகள்”
ஐந்து நாட்களுக்கு முன்பு அது ஒரு நியூக்ளியஸைக் கொண்ட ஓர் செல்லாகவே இருந்தது. முதிர்வுற்று பெருகும் மும்முரமான காலப்பகுதிக்குப் பிறகு, படுவேகமாக சுருங்கி, அது அந்த நியூக்ளியஸை வெளியேற்றிவிடுகிறது. இப்போது அது ரெட்டிகுளோசைட் என அழைக்கப்படுகிறது. அது என்ன? அதுதான் உங்கள் இரத்த ஓட்டத்தில் கலக்க தயார்நிலையில் உள்ள முதிர்வுறாத இரத்தச் சிவப்பணு. இப்போதிலிருந்து இரண்டு முதல் நான்கு நாட்களுக்குப் பிறகு முழுமையாய் முதிர்ச்சியடைந்த இரத்தச் சிவப்பணுவாக மாறும்.
இச்சிறிய செல் பெரும்பாலும் ஒரு வண்டியைப் போலவே இருக்கிறது. இதன் “சரக்காகிய” ஆக்ஸிஜனை ஏற்றிச்செல்ல புரோட்டீனாகிய ஹீமோகுளோபினை உபயோகிக்கிறது. இதன் வாழ்நாள் காலம் நான்கு மாதங்கள்; இச்சமயத்திற்குள், இந்த “வண்டி” உங்கள் உடல் முழுவதும் சுமார் 250 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யும். உங்கள் உடலில் சுமார் 1,000 கோடி தந்துகிக் குழாய்கள் (நுண்ணிய இரத்தக் குழாய்கள்) உள்ளன; இவற்றின் மொத்த நீளம், பூமியின் சுற்றளவைப் போல் இரண்டு மடங்காகும். உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல கோடி கோடி எரித்ரோஸைட்டுகள் (இரத்தச் சிவப்பணுக்கள்) தேவை.
பெரும்பாலும் இச்சிறிய “வண்டி” உங்கள் இரத்த ஓட்டத்தில் எப்பொழுதும் பயணம் செய்துகொண்டே இருக்கும். இதன் வேகம் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுகிறது. இருதயத்திலிருந்து செல்லும் இரத்தத்தின் “சூப்பர் ஹைவே” எனப்படும் குழாயான மகாதமனியில் இதன் உச்ச வேகம் வினாடிக்கு சுமார் 120 சென்டிமீட்டர் வரை செல்கிறது. இது உடலின் “சந்துகளில்” நுழைந்து நுனிப்பகுதிகளிலுள்ள தந்துகிக் குழாய்களை அடையும்போது இதன் வேகம் சராசரியாக வினாடிக்கு 0.3 மில்லிமீட்டர் என படிப்படியாக குறைகிறது.
இரத்த அணுக்கள் எங்கிருந்து வருகின்றன
நல்ல உடல்நிலையிலுள்ள வயதுவந்த மனிதரில், பெரும்பாலான இரத்த அணுக்கள் எலும்பு மஜ்ஜையிலிருந்து உற்பத்தியாகின்றன. ஒவ்வொரு நாளும், உடல் எடையில் ஒவ்வொரு கிலோகிராமுக்கும் 250 கோடி சிவப்பு அணுக்கள், 100 கோடி கிரானுலோசைட்டுகள் (வெள்ளை அணுக்கள்), 250 கோடி இரத்த வட்டுகள் ஆகியவற்றை உங்கள் எலும்பு மஜ்ஜை உற்பத்தி செய்கிறது. அன்றாடம் இழக்கப்படும் அணுக்களை இது ஈடு செய்கிறது. நல்ல உடல்நிலையிலுள்ள வயதுவந்த நபரின் உடலில், ஒவ்வொரு வினாடியும் லட்சக்கணக்கான இரத்த சிவப்பணுக்கள் அழிக்கப்பட்டு புதிய சிவப்பணுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
எலும்பு மஜ்ஜையிலிருக்கும் முதிர்வுறாத சிவப்பணு இரத்த ஓட்டத்திற்குள் கலப்பதற்கு, எலும்பு மஜ்ஜையிலிருக்கும் சிறிய குழாய்களின் வெளிச்சுவரை (ஸைனுசாய்டுகள்) அடைகிறது; இடப்பெயர்ச்சி துளை என்று அழைக்கப்படும் ஒரு சிறு துவாரம் வழியாக பிதுங்கி, இரத்தத்தில் கலக்கிறது. இன்னும் சுமார் மூன்று நாட்களுக்கு அது தொடர்ந்து ஹீமோகுளோபினை உற்பத்தி செய்யும். அதற்குப் பிறகு எரித்ரோஸைட் எனப்படும் முதிர்வுற்ற இரத்த சிவப்பணுவாகி அந்தப் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறது.
மண்டல, நுரையீரல் இரத்த ஓட்டங்கள்
இரண்டுவித இரத்த ஓட்டங்கள் இருப்பதாக 17-வது நூற்றாண்டில் டாக்டர்கள் நிரூபித்தனர். மண்டல இரத்த ஓட்டத்தில், உங்கள் உடலில் உள்ள நுண்ணிய ‘வண்டிகளான’ சிவப்பணுக்கள் இருதயத்திலிருந்து ஓட ஆரம்பித்து உடல் திசுக்களில் சென்றடைகின்றன. அங்கு அவை ஆக்ஸிஜனை கொடுத்துவிட்டு கழிவுப் பொருளை கார்பன்-டை-ஆக்ஸைடாக சுமந்துவருகின்றன. இச்செயலுக்கு உட்சுவாசம் என்று பெயர். அதன் பிறகு சிவப்பணுக்கள் இருதயத்திற்குத் திரும்புகின்றன. நுரையீரல் இரத்த ஓட்டத்தில், இந்த “வண்டிகள்” நுரையீரலுக்கு அனுப்பப்படுகின்றன. அங்கு அவை கார்பன்-டை-ஆக்ஸைடை இறக்கிவிட்டு ஆக்ஸிஜனை ஏற்றி வருகின்றன. ஆகவே நுரையீரல் இரத்த ஓட்டம், உங்கள் உடல் ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளிவிட உதவுகிறது.
போதிய அணுக்கள் இல்லாதபோது
சில சமயங்களில் இரத்த சிவப்பணுக்கள் வழக்கத்தைக் காட்டிலும் குறைவாக உள்ளன. இந்நிலையைத்தான் டாக்டர்கள் இரத்தச் சோகை என்று அழைக்கின்றனர். இரத்தச் சோகை ஏற்படுவதற்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கலாம்: அவற்றில், (1) இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அல்லது முதிர்வில் குறைபாடு இருப்பது; (2) அவை அதிகமாக அழிக்கப்படுவது; (3) அதிகளவு இரத்தக் கசிவு ஆகியவையும் அடங்கும். நாட்பட்ட அழற்சி, அல்லது கட்டிகள் ஆகியவற்றாலும் இரத்தச் சோகை ஏற்படலாம்.
இரத்தத்தில் இரும்புச் சத்து மிகவும் கூடுதலாகவோ குறைவாகவோ இருந்தாலும் பிரச்சினைகள் ஏற்படலாம். மிகக் குறைந்தளவு இரும்புச் சத்து இருந்தால், சிவப்பணுக்கள் இயல்பாக முதிர்வுற முடியாது. இதனால், இந்த அணுக்கள் வழக்கத்தைவிட சிறியவையாக, வெளிர்நிறத்துடன் காணப்படும். அநேக சந்தர்ப்பங்களில், இரும்புச் சத்தைக் கொடுத்து சிகிச்சை அளிக்கப்படுகையில் இக்குறைபாடு நீங்கும். சில சமயங்களில் இரத்தத்தில் இரும்புச் சத்தின் அளவு மிகவும் அதிகமாக இருக்கும். சேதமுற்ற சிவப்பணுக்கள் சிதைவுறுகையில் இவ்வாறு நிகழலாம்; அப்போது அவை இரத்தத்தில் அதிகமான இரும்புச் சத்தை வெளியிடுகின்றன. இதன் காரணமாக உடல் உறுப்புகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நச்சுத்தன்மை அடைகின்றன. குறிப்பாக இருதயம் இவ்வாறு நச்சுத்தன்மை அடைகையில் நிலைமை மோசமாகிறது. இந்நிலையால் அவதியுறும் நோயாளிகள் பெரும்பாலும் தீவிர இருதய கோளாறின் காரணமாக மரிக்கவே நேரிடும்.
உங்கள் உடலில் இரத்தச் சிவப்பணுக்கள் செய்யும் வேலைகள் அனைத்தையும் விலாவாரியாக விவரிக்க அநேக புத்தகங்கள் எழுதப்பட வேண்டும்; ஆனால் அவற்றின் அற்புதமான சிக்கல் நிறைந்த இயல்பு ஓரளவு மட்டுமே இங்கு விளக்கப்பட்டுள்ளது; இருந்தாலும் உயிர்களை வடிவமைத்து உருவாக்கினவரின் ஞானத்தை இது புகழ்ந்துரைக்கிறது. புத்திக்கூர்மையில் சிறந்துவிளங்கும் மகா படைப்பாளரைக் குறித்து, அவருடைய பண்டைக்கால வணக்கத்தாரில் ஒருவர் கூறினதாவது: “அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்.”—அப்போஸ்தலர் 17:28.(g01 11/22)