Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் பிள்ளைகளிடம் ஏன் சத்தமாக வாசிக்க வேண்டும்?

உங்கள் பிள்ளைகளிடம் ஏன் சத்தமாக வாசிக்க வேண்டும்?

உங்கள் பிள்ளைகளிடம் ஏன் சத்தமாக வாசிக்க வேண்டும்?

“ஓரங்கள் மடங்கி, . . . இங்குமங்கும் பீநட் பட்டர் அப்பியிருந்த ஒரு புத்தகத்தை தன் பின்னால் இழுத்துக்கொண்டே தவழ்ந்து வந்து என் மடிமேல் உட்கார்ந்து, ‘அப்பா, எனக்கு இதை வாசித்து காட்டுங்க, இதை வாசித்து காட்டுங்க’ என்று சொல்லாமல் சொன்னாள்.”

டாக்டர் க்ளிஃபர்ட் ஷிம்மல்ஸ், கல்வி பேராசிரியர்.

பிள்ளைகள் மிக விரைவில் கற்றுக்கொள்கிறார்கள். மூன்று வயதுக்கு குறைவான பிள்ளைகளில், மூளை வளர்ச்சி விரைவாக ஏற்படுவதாக ஆராய்ச்சி காண்பிக்கிறது. வாசித்தல், பாடுதல், பாசமாக இருத்தல் போன்ற பெற்றோரின் அன்றாட செயல்கள் ஒரு பிள்ளையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்க முடியும். என்றாலும், இரண்டு வயதிலிருந்து எட்டு வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் பெற்றோரில் சுமார் பாதிப்பேர் மட்டுமே தங்கள் பிள்ளைகளிடம் தினசரி வாசிக்கிறார்கள். ‘என் பிள்ளைக்கு வாசித்து காட்டுவது அவ்வளவு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துமா?’ என்று நீங்கள் யோசிக்கலாம்.

வாசிப்பில் பிரியத்தை ஏற்படுத்துதல்

ஆம் என்றே நிபுணர்கள் பதிலளிக்கிறார்கள். “வாசிக்கும் விஷயத்தில் முடிவான வெற்றியை பெறத்தக்க அறிவை பிள்ளைகளில் வளர்ப்பதற்கு மிக முக்கியமான ஒரே செயல் அவர்களுக்கு சத்தமாக வாசித்து காட்டுவதாகும். இதை விசேஷமாக பள்ளிக்கு செல்வதற்கு முன் செய்ய வேண்டும்” என்பதாக வாசிக்கும் சமுதாயமாவதற்கான படிகள் (ஆங்கிலம்) என்ற புத்தக அறிக்கை சொல்கிறது.

ஒரு புத்தகத்திலிருந்து வாசிக்கப்படும் கதைகளை கேட்கும்போது, நாம் பேசும் சொற்கள் அனைத்தும் புத்தகத்தில் எழுத்துக்களாக கொடுக்கப்பட்டிருப்பதை பிள்ளைகள் இள வயதிலேயே கற்றுக்கொள்கிறார்கள். புத்தகங்களிலுள்ள மொழி நடையிலும் பழக்கப்படுகிறார்கள். “ஒவ்வொரு முறை பிள்ளையிடம் வாசிக்கும்போதும், பிள்ளையின் மூளையில் ஒரு ‘இன்ப’ உணர்வை பதிய வைக்கிறோம். இதை ஒரு விளம்பர செய்தி என்றுகூட சொல்லலாம்; புத்தகங்களையும் அச்சிடப்பட்ட விஷயங்களையும் இன்பத்துடன் தொடர்புபடுத்த இது பிள்ளையை பக்குவப்படுத்துகிறது” என்பதாக சத்தமாக வாசிப்பது பற்றிய ஒரு கையேடு குறிப்பிடுகிறது. இப்படி புத்தகங்களுக்கான பிரியத்தை பிள்ளைகளில் ஊட்டும் பெற்றோர், வாழ்நாள் முழுவதும் ஆசையுடன் வாசிக்கும் பழக்கத்தை அவர்களில் உருவாக்கிவிடுவார்கள்.

தங்களை சுற்றியுள்ள உலகை புரிந்துகொள்ள உதவுதல்

தங்கள் பிள்ளைகளிடம் சத்தமாக வாசிக்கும் பெற்றோரால், மக்கள், இடங்கள், பொருட்கள் பற்றிய அறிவு என்னும் மதிப்புமிக்க பரிசை அவர்களுக்கு அளிக்க முடிகிறது. ஓரளவுக்கு குறைந்த செலவில், புத்தக பக்கங்களின் வாயிலாக உலகையே “சுற்றிவரலாம்.” இரண்டு வயது அந்த்தனியின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். பிறந்தது முதல் அவனுடைய அம்மா அவனுக்கு வாசித்து காட்டியிருக்கிறார்கள். அவர்கள் சொல்வதாவது: “அவன் முதல்முறை விலங்கு காட்சிசாலைக்கு போனது மறுகண்டுபிடிப்புக்கான ஒரு பயணமாகவே இருந்தது.” மறுகண்டுபிடிப்பா? ஆம், வரிக்குதிரைகளையும், சிங்கங்களையும், ஒட்டகச்சிவிங்கிகளையும் மற்ற மிருகங்களையும் அந்த்தனி நேரில் பார்த்தது அதுவே முதல் முறையாக இருந்தாலும், இந்த எல்லா பிராணிகளிடமும் அவன் ஏற்கெனவே அறிமுகமானவன்.

அவனுடைய அம்மா மேலுமாக விவரிக்கிறார்கள்: “புத்தகங்கள் வாயிலாக, தன் வாழ்வின் முதல் இரு வருடங்களிலேயே, எண்ணற்ற மக்கள், மிருகங்கள், பொருட்கள், கருத்துக்கள் ஆகியவற்றுடன் அந்த்தனிக்கு இனிய பரிச்சயம் ஏற்பட்டிருந்தது.” ஆம், பிஞ்சு வயதிலேயே பிள்ளைகளுக்கு வாசித்து காட்டுவது அவர்கள் வாழும் உலகை நன்கு புரிந்துகொள்ள பேருதவியாக இருக்கும்.

நெருங்கிய உறவை வளர்த்தல்

இளம் பிள்ளைகள், பிற்காலத்தில் தங்கள் செயல்களை பாதிக்கும் மனப்பான்மைகளை வளரும் வயதில் வளர்த்துக்கொள்கிறார்கள். ஆகவே, நம்பிக்கையும் பரஸ்பர மதிப்பும் புரிந்துகொள்ளுதலும் மேலோங்கி நிற்கும் நெருங்கிய உறவுக்காக பெற்றோர் அஸ்திவாரமிட வேண்டும். இதற்கு வாசித்தல் சிறந்த பங்கை வகிக்க முடியும்.

பெற்றோர் பிள்ளைகளை தங்கள் கைகளில் அரவணைத்து அவர்களிடம் வாசிக்கையில், அவர்கள் சொல்லும் தெளிவான செய்தி, “நான் உன்னை நேசிக்கிறேன்” என்பதே. கனடாவைச் சேர்ந்த ஃபீபி என்ற ஒரு தாயார், தற்போது எட்டு வயதாக இருக்கும் தன் மகனுக்கு வாசித்து காட்டியதைப் பற்றி இவ்வாறு சொல்கிறார்கள்: “நேத்தன் எங்களிடம் நெருக்கமாக இருப்பதற்கு இதுவே முக்கிய காரணம் என்று என் கணவரும் நானும் நினைக்கிறோம். அவன் எங்களிடம் வெளிப்படையாக பேசுகிறான். பெரும்பாலும் தான் நினைப்பதை அப்படியே எங்களிடம் சொல்கிறான். இது எங்களுக்குள் ஒரு விசேஷித்த பந்தத்தை உருவாக்கியுள்ளது.”

ஸின்டி, தன் மகளுக்கு சுமார் ஒரு வயதிலிருந்தே, அதாவது அவள் ஒன்றிரண்டு நிமிடத்திற்கு உட்கார்ந்து கவனிக்கும் நிலையில் இருந்தபோதிருந்தே அவளிடம் சத்தமாக வாசித்துக் காட்டுவதை பழக்கமாக்கி இருக்கிறார்கள். அத்தனை நேரமும் முயற்சியும் பயனுள்ளதாக இருந்ததா? ஸின்டி சொல்கிறார்கள்: “பள்ளியில் நடந்த ஒரு விஷயத்தை பற்றியோ ஒரு நண்பருடன் ஏற்பட்ட பிரச்சினையைப் பற்றியோ மனம்விட்டு பேசுவதற்கு, சேர்ந்து வாசிக்கும்போதுள்ள சிநேகபாவமான, நிம்மதியான சூழலே பெரும்பாலும் அபிகேலுக்கு போதுமானது. அப்படிப்பட்ட பிரதிபலிப்பை எந்த பெற்றோராவது வேண்டாமென்று சொல்வார்களா என்ன?” சத்தமாக வாசிப்பது, பெற்றோருக்கும் பிள்ளைக்கும் இடையில் நெருங்கிய உறவுக்கு வழிநடத்தும் என்பது உறுதி.

வாழ்க்கைக்கு அவசியமான திறமைகளை புகட்டுதல்

“இன்றைய பிள்ளைகள் தொலைக்காட்சியிலிருந்தும் இன்னும் பிறவற்றிலிருந்தும் எவ்வளவோ பயனற்ற காரியங்களை மனதில் உட்கொள்கிறார்கள்; ஆகவே தங்கள் மதிப்பீடுகளுக்கு இசைய வாழ்ந்து வாழ்க்கையை சரியான நோக்குநிலையிலிருந்து காண அவர்கள் மனதிற்கு கொஞ்சம் ஊட்டச்சத்தும், கொஞ்சம் தெளிவான சிந்தனையும், கொஞ்சம் ஞானமும், கொஞ்சம் மனதை நிலைப்படுத்தும் செல்வாக்கும் எப்போதும் இல்லாத அளவில் அவசியம்” என்பதாக பலமான குடும்பத்துக்கு 3 படிகள் (ஆங்கிலம்) என்ற புத்தகம் சொல்லுகிறது. நல்ல ஆரோக்கியமான செல்வாக்கு செலுத்துவதற்கான சிறந்த நிலையில் இருப்பது பெற்றோரே.

புத்தகங்களிலுள்ள கலவை வாக்கியங்களையும் முறைப்படி அமைக்கப்பட்ட வாக்கியங்களையும் பிள்ளைக்கு அறிமுகப்படுத்துவது, அவன் பேச்சிலும் எழுத்திலும் தன்னை வெளிப்படுத்துவதற்கு கற்பிக்க பயனுள்ள கருவியாக அமையலாம். “ஒருவருடைய சிந்தனையின் தரம் அவருடைய மொழியின் தரத்தை சார்ந்திருக்கும். கற்பதற்கும் அறிவாற்றலுக்கும் உண்மையில் மொழியே மையமாக இருக்கிறது” என்பதாக குழந்தைகளுக்கு புத்தகங்கள் தேவை என்ற ஆங்கில நூலின் ஆசிரியர் டாரதி பட்லர் சொல்லுகிறார். நன்கு தொடர்பு கொள்ள முடிவதே நல்ல உறவுகளுக்கு உயிர்மூச்சாக இருக்கிறது.

தகுந்த புத்தகங்களை வாசிப்பதால், நல்ல நெறிமுறைகளையும் மதிப்பீடுகளையும் பலப்படுத்த முடியும். பிள்ளைகளிடம் வாசித்து காரணம்காட்டி விளக்கும் பெற்றோர் அவர்களில் பிரச்சினை தீர்க்கும் திறமைகளை வளர்க்க உதவலாம். ஸின்டி தன் மகளாகிய அபிகேலுக்கு வாசித்து காட்டியபோது, கதைகளில் கொடுக்கப்பட்ட சூழ்நிலைகளுக்கு அபிகேல் பிரதிபலிக்கும் விதத்தை உன்னிப்பாக கவனித்தார்கள். “பெற்றோராக இருப்பதால், அவளிடம் மறைந்துள்ள நுணுக்கமான குணங்களைப் பற்றி கூடுதலாக அறிந்துகொள்ளவும் மிக ஆரம்ப காலத்திலேயே வேண்டாத சிந்தைகள் வளருவதை தடுக்கவும் முடியும் என்று நம்புகிறோம்.” உண்மையில், பிள்ளைகளிடம் சத்தமாக வாசிப்பது மனதையும் இருதயத்தையும் பயிற்றுவிக்கிறது.

வாசிப்பை இனிதாக்குங்கள்

வாசிப்பை “வற்புறுத்தும் பாணியில் செய்யாதீர்கள்”; சாவகாசமான, ஓய்வான, இனிய சூழலை காத்துக்கொள்ளுங்கள். வாசிப்பதை எப்போது நிறுத்த வேண்டும் என்று பகுத்துணர்வுள்ள பெற்றோருக்கு தெரியும். “இரண்டு வயதுள்ள அண்ட்ரூ சில சமயங்களில் மிக களைப்பாக இருக்கையில் அவனுக்கு அதிக நேரம் அமைதியாக உட்கார முடிவதில்லை. அவனுடைய மனநிலையை அனுசரித்து எங்கள் வாசிப்பு நேரத்தை குறைத்துக்கொள்வோம். அண்ட்ரூவுக்கு வாசிப்பில் வெறுப்பு ஏற்பட்டு விடாதபடி அவனுடைய திறமைக்கு மீறி அவனை வற்புறுத்த மாட்டோம்” என்கிறார் லீனா.

சத்தமாக வாசிப்பதில், அச்சிடப்பட்ட விஷயங்களுக்கு வெறுமனே குரல் கொடுப்பதைவிட அதிகம் உட்பட்டிருக்கிறது. எதிர்பார்ப்பை கிளப்பும் வகையில் ஒரு படப் புத்தகத்தின் பக்கங்களை சரியான நேரத்தில் திருப்புங்கள். விஷயத்துக்கேற்ற வேகத்தில் தடங்கலின்றி சரளமாக வாசியுங்கள். குரலில் ஏற்ற தாழ்வுடனும் கருத்துக்களுக்கு அழுத்தம் கொடுத்தும் வாசிப்பது கதைக்கு உயிரூட்டமளிக்கும். உங்கள் குரலில் உள்ள கனிவு, உங்கள் பிள்ளைக்கு பாதுகாப்பான உணர்வை புகட்டலாம்.

உங்கள் பிள்ளையும் ஈடுபாட்டுடன் கலந்துகொள்ளும்போது மிகச் சிறந்த பலன்கள் கிடைக்கின்றன. அவ்வப்போது நிறுத்தி, ஒரு வார்த்தையைவிட நீளமாக பதில் சொல்லத்தக்க கேள்விகளை கேளுங்கள். சாத்தியமான வேறு பதில்களை எடுத்துக்கூறி உங்கள் பிள்ளையின் பதில்களை மேலும் விரிவாக்குங்கள்.

புத்தகங்களை கவனமாக தெரிந்தெடுங்கள்

நல்ல புத்தகங்களை தெரிந்தெடுப்பதே மிக முக்கியமான அம்சமாக இருக்கலாம். அதற்கு, முன்னதாகவே கொஞ்சம் பார்த்து வைக்க வேண்டியது அவசியம். புத்தகங்களை கவனமாக வடிகட்டி பிரியுங்கள். நன்மை பயக்கும் அல்லது அறிவூட்டும் செய்தியையும் நல்ல படிப்பினை உடைய கதையையும் மட்டுமே வாசியுங்கள். புத்தகத்தின் அட்டை, பட சித்தரிப்புகள், பொதுவான நடை ஆகியவற்றை நெருங்க கவனியுங்கள். பெற்றோர், பிள்ளை இருவருக்குமே சுவாரஸ்யமானதாக இருக்கும் புத்தகங்களை தேர்ந்தெடுங்கள். பெரும்பாலும் பிள்ளைகள் அதே கதையை திரும்ப திரும்ப வாசிக்க சொல்வார்கள்.

என்னுடைய பைபிள் கதை புத்தகம் என்ற புத்தகத்தை உலகெங்கிலும் உள்ள பெற்றோர் விசேஷமாக அனுபவித்து மகிழ்ந்திருக்கின்றனர். a பெற்றோர் தங்கள் சிறு பிள்ளைகளிடம் வாசிப்பதற்காக அது தயாரிக்கப்பட்டது. பிள்ளைகளை சிறந்த வாசகர்களாக்க உதவுவது மட்டுமல்லாமல் பைபிளில் அவர்களுடைய அக்கறையையும் அது தூண்டக்கூடும்.

பிள்ளைகளுக்கு சத்தமாக வாசித்து காட்டும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளில் நல்ல வாசிப்பு பழக்கங்களை வளர்க்க முடியும். இது அவர்கள் வாழ்க்கை முழுவதும் அர்த்தமுள்ள பலன்களைத் தரும். ஜோஅன் தன் மகளைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டார்: “பள்ளிக்கு செல்ல தொடங்கும் முன்பே ஜெனிஃபர் வாசிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டாள்; அதுமட்டுமல்ல, வாசிப்பதற்கான பிரியத்தையும் வளர்த்துக்கொண்டாள்; இவை எல்லாவற்றிற்கும் மேலாக, மகத்தான படைப்பாளராகிய யெகோவாவிடம் அன்பையும் வளர்த்திருக்கிறாள். அவருடைய எழுதப்பட்ட வார்த்தையாகிய பைபிளின் அடிப்படையில் எல்லா தீர்மானங்களையும் எடுக்க ஜெனிஃபர் கற்றிருக்கிறாள்.” உண்மையில், ஒரு பிள்ளை எதைக் கற்றுக்கொள்ள உதவுகிறீர்கள் என்பதைவிட, எதை நேசிக்க உதவுகிறீர்கள் என்பதே முக்கியமானது.(g01 11/22)

[அடிக்குறிப்பு]

a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 18-ன் பெட்டி/படம்]

உங்கள் பிள்ளையிடம் வாசிக்கையில்

•அவன் அல்லது அவள் சிசுவாக இருக்கும்போதே தொடங்குங்கள்.

•உங்கள் பிள்ளை வாசிக்கும் மனநிலைக்கு வர நேரத்தை அனுமதியுங்கள்.

•உங்கள் இருவருக்கும் பிடித்த கதைகளை வாசியுங்கள்.

•முடிந்தளவு அடிக்கடி வாசியுங்கள், உணர்ச்சிகளுடன் வாசியுங்கள்.

•கேள்விகள் கேட்பதன்மூலம் உங்கள் பிள்ளையை அதில் ஈடுபடுத்துங்கள்.

[பக்கம் 17-ன் படத்திற்கான நன்றி]

Photograph taken at the Wildlife Conservation Society’s Bronx Zoo