Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

மருத்துவ ரிக்கார்டுகள்—⁠டிவி பழக்கத்தையும் கேட்கின்றன

பிள்ளையின் மருத்துவ ரிக்கார்டுகளில் டிவி பார்க்கும் பழக்கமும் குறிப்பிடப்பட வேண்டும் என ஸ்பெய்னிலுள்ள குழந்தை மருத்துவக் குழு ஒன்று சிபாரிசு செய்கிறது. ஸ்பானிய செய்தித்தாளான டீயார்யோ மெடீகோ சொல்வதன்படி, நோயாளியான ஒரு குழந்தை ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் டிவி பார்க்கிறது, எப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை பார்க்கிறது, யாரோடு சேர்ந்து பார்க்கிறது ஆகிய விவரமெல்லாம் தங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று டாக்டர்கள் உணருகிறார்களாம். ஏன்? ஏனெனில் டிவி பார்ப்பது, வாழ்க்கையில் ஓடியாடித் திரிய விடாமல் செய்துவிடுகிறது, வலிய வம்பிழுக்கும் இயல்பை அதிகரிக்கிறது, பொருட்களை வாங்கும் ஆசையை உண்டாக்குகிறது, பள்ளியில் சரிவர படிக்கவிடாமல் செய்கிறது, டிவி-⁠க்கு அடிமையாகும் சாத்தியத்தையும் ஏற்படுத்துகிறது என குழந்தை மருத்துவர்களால் நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வு வெளிக்காட்டியது. “பிள்ளைகள் படுக்கும் அறையிலோ, புரோகிராம்களை [பிள்ளைகள்] கட்டுப்படுத்த வசதியாய் இருக்கும் இடத்திலோ டிவியை வைக்காதிருக்கும்படி இந்தக் குழந்தை மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர்” என்று கூறும் அந்த அறிக்கை, “சாப்பாட்டு நேரங்களில் டிவி பார்ப்பதை தவிர்க்க வேண்டும், ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரத்திற்கும் குறைவாகவே டிவி பார்க்க பெற்றோர் அனுமதிக்க வேண்டும்; அதைவிட ஒரு மணிநேரத்திற்கும் குறைவாக பார்ப்பது இன்னும் நல்லதே” என்றும் கூறுகிறது.(g01 11/8)

சீனாவின் மக்கள் தொகை அதிகரிப்பு

“சீனாவின் மக்கள் தொகை 126 கோடியாக அதிகரித்துள்ளது; சீன மக்கள் நெடுங்காலம் வாழ்கின்றனர்; இன்னும் நன்கு படித்தவர்களாய் உள்ளனர்; இன்னும் நாகரிகம் படைத்தவர்களாய் இருக்கின்றனர்” என ஏபிசிநியூஸ்.காம் தெரிவிக்கிறது. 1990 முதல், மக்கள் தொகையில் 13.22 கோடி அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய புள்ளிவிவரத் தொகுப்பு செயலகத்தின் இயக்குநரான ஜூ ஜிஷீன் கூறுகிறார். மக்கள் தொகையில் வருடத்திற்கு 1.07 சதவீதம் என்ற குறைவான அதிகரிப்பு வீதத்திற்குக் காரணம், 1970-களின் பிற்பகுதியில் சீனாவில் புகுத்தப்பட்ட, குடும்பத்திற்கு ஒரு பிள்ளை என்ற குடும்ப கட்டுப்பாட்டு கொள்கையாகும். என்றாலும், 1999-⁠ல் எடுக்கப்பட்ட சுற்றாய்வின்படி, ஒருவேளை கருவில் இருப்பது பெண் குழந்தை என தெரியவருகையில் கருச்சிதைவு செய்துவிடுவதால், 117 ஆண் பிள்ளைகளுக்கு 100 பெண் பிள்ளைகள் என்ற கணக்கிலேயே பிறக்கின்றன என அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். “இந்த சமச்சீரற்ற பிறப்பு விகிதத்தால், மணப்பெண்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம், விபசாரம் இன்னும் மோசமடையலாம், திருமணத்திற்கென பெண்களை கடத்தி விற்பனை செய்வது ஆரம்பமாகலாம் என எண்ணி சமூகவியலாளர்கள் கவலைப்படுகின்றனர்” என அந்த அறிக்கை சொல்கிறது. (g01 11/8)

சர்க்கரை பிளாஸ்டிக்காக மாறுதல்

சர்க்கரையை பிளாஸ்டிக்காக மாற்றும் ஒரு புது இன பாக்டீரியாவை பிரேஸிலில் உள்ள தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட பாக்டீரியாக்கள், சர்க்கரையை சிறு சிறு மூலக்கூறுகளாக சிதைத்த பின்னரே அவற்றை செரித்து மாற்றின; ஆனால், “சர்க்கரையை நேரடியாக எரிப்பதே [புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பாக்டீரியாவாகிய] இதன் சிறப்புத் தன்மை” என்பதாக எஞ்சினியர் கார்லஸ் ஹாஸு கூறுகிறார். இந்த பாக்டீரியாக்களுக்கு அதிகமாய் உணவு கொடுக்கப்படுகையில் எஞ்சியுள்ள சர்க்கரையைப் பயன்படுத்தி, உயிரிய சிதைவுக்கு உட்படக்கூடிய பிளாஸ்டிக்கின் நுண்ணிய துகள்களை தயாரிக்கின்றன. கரைப்பானைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் இவற்றை பிரித்தெடுக்கின்றனர். ஆராய்ச்சியாளர்களின்படி, “இவ்வாறு மூன்று கிலோ சர்க்கரையிலிருந்து ஒரு கிலோ பிளாஸ்டிக்கை பெறலாம்” என ஓ எஸ்டாடோ டா சாவோ பாலோ செய்தித்தாள் கூறுகிறது.(g01 11/8)

கொழுப்பு மனதை மந்தமாக்குகிறது

“கொழுப்புமிக்க உணவு உங்கள் மூளையிலும் இதய தமனிகளிலும் அடைப்பை ஏற்படுத்தலாம்” என நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை கூறுகிறது. கொழுப்புமிக்க உணவு மூளையில் ஏற்படுத்தும் பாதிப்புகளை புரிந்துகொள்வதற்காக, கனடாவிலுள்ள ஆராய்ச்சியாளர்கள், “ஒரு மாத எலிக்குஞ்சுகளில் சிலவற்றுக்கு விலங்கு கொழுப்பு அல்லது தாவர கொழுப்புமிக்க உணவை, அவை நான்கு மாதத்தை எட்டும்வரை கொடுத்தனர்.” மற்றொரு தொகுதியிலுள்ள எலிகளுக்கு குறைந்த கொழுப்புள்ள உணவை கொடுத்தனர். இரண்டு தொகுதியிலுள்ள எலிகளின் கற்றுக்கொள்ளும் திறனுக்கு சோதனைகள் நடத்தப்பட்டன. அதில் கிடைத்த முடிவுகள்? இரண்டுவித கொழுப்புமிக்க உணவை உட்கொண்ட எலிகள், “மெலிந்த எலிகளைக் காட்டிலும் குறைந்த மதிப்பெண் பெற்றன.” ஆராய்ச்சியாளர் கார்டன் வின்னக்கர் கூறினதாவது: “கொழுப்புமிக்க உணவுகள் கிட்டத்தட்ட எல்லா அம்சங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவ்விலங்குகள் எவ்வளவாய் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.” அந்த அறிக்கையின்படி, “இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும் இன்சுலின் செய்யும் வேலையை சரியாக செய்யவிடாமல் இந்தக் கொழுப்பு ஒருவேளை குறுக்கிடுவது, மூளை குளுக்கோஸை உறிஞ்சிக்கொள்ளாதபடி அதை தடுக்கிறது” என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.(g01 11/8)

வீணாக்கப்படும் உணவு

“திருமண வரவேற்புகளிலும் படாடோபமான பிற பார்ட்டிகளிலும் நம்ப முடியாதளவில் உணவு வீணாக்கப்படுகிறது” என ஜப்பானின் மைனீச்சீ டெய்லி நியூஸ் செய்தித்தாள் கூறுகிறது. அரசாங்கத்தால் நடத்தப்பட்ட வீணாக்கப்படும் உணவு பற்றிய ஒரு சுற்றாய்வு காட்டியதாவது: சராசரியாக வீடுகளில் 7.7 சதவீத உணவுப்பொருட்கள் வீணாக்கப்பட்டன; உணவுப்பொருட்களை சில்லறைக்கு விற்பவர்களால் 1.1 சதவீதம் கழிக்கப்பட்டன; ரெஸ்டாரென்ட்டுகளில் தயாரிக்கப்படாத உணவுப்பொருட்கள் 5.1 சதவீதம் வீணாக்கப்பட்டன. என்றாலும், “பஃபே வசதியுடன் ஊதாரித்தனமாக நடத்தப்படும் பார்ட்டிகள் 15.7 சதவீத உணவுப்பொருட்களை தூக்கியெறிந்தன”; திருமண விருந்துக்கென தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்களில் கிட்டத்தட்ட 24 சதவீதம், “மீதமாயின, அல்லது வீணாக்கப்பட்டன” என அந்த செய்தித்தாள் குறிப்பு தெரிவிக்கிறது. உணவு உற்பத்தியாளர்கள் மட்டுமே “உணவை பெரும்பாலும் வீணாக்கவில்லை” என்பதாக அறிக்கை செய்தனர்.(g01 11/8)

நம்பர்-1 கொலையாளி

“ஆண்டுக்கு 55,000 இளைஞரை மதுபானம் கொல்கிறது” என பிரெஞ்சு தினசரியான ல ஃபீகாரோ அறிக்கை செய்கிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவிப்பதற்கிசைய, மதுபானம் ஐரோப்பிய ஆண்களில் 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களைக் கொல்லும் நம்பர்-1 கொலையாளியாகும். ஏற்படும் மொத்த மரணங்களில் 25 சதவீதத்திற்கு அதுவே காரணமாகும். இது “குடித்து வெறித்தல், சாலை விபத்துகள், தற்கொலைகள், சகமனிதரால் கொலை செய்யப்படுதல்” போன்ற காரணங்களால் ஏற்படும் மரணங்களையும் உள்ளடக்குகிறது என்பதாக அந்த தினசரி சொல்கிறது. “மிதமிஞ்சி மது அருந்துவதன் விளைவாக மூன்றில் ஒரு பங்கு இளைஞர்கள் திடீரென இறக்க நேரிடும்” சில கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், சூழ்நிலை வெகு மோசமாக இருக்கிறது. மதுபான உற்பத்தியாளர்கள் புதுப்புது உத்திகளை கையாண்டு விற்பனையை பெருக்குவதால், வர வர இளைஞர்கள் “மதுவைக் குறித்து ஒரு சமநிலையான, தீங்கற்ற மனோபாவத்தை வளர்க்க” முடியாமல் போகிறது என்பதாக ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோமில் நடந்த ஒரு மாநாட்டில், WHO-வின் டைரக்டர் ஜெனரலான டாக்டர் குரோ ஹார்லம் பிரண்ட்லான் குற்றஞ்சாட்டினார்.(g01 11/22)

யானையின் நினைவாற்றலா?

யானைக் கூட்டம் தப்புவதற்கான முக்கிய காரணம், முதிர்வயதான பெண் யானையின் நினைவாற்றலே என கென்யாவிலுள்ள அம்போசெல்லி தேசிய பூங்காவில் பணியாற்றிவரும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். “பெண் யானைகளில் . . . 35 வயது யானைகளைக் காட்டிலும் குறைந்தபட்சம் 55 வயதான மூத்த பெண் யானைகளே, அவற்றின் நண்பர்கள் யார் பகைவர்கள் யார் என்று பகுத்தறிவதில் கில்லாடிகளாய் இருக்கின்றன” என்று சயன்ஸ் நியூஸ் பத்திரிகை அறிக்கை செய்கிறது. செய்திப் பரிமாற்ற முறைகள், அல்லது தாழ்வான தொனியிலான உறுமல்கள் என அழைக்கப்படும் பரிபாஷைகளை நினைவில் வைப்பதன் மூலம், மூத்த பெண் யானைகள், தங்களுக்குப் பழக்கமில்லாத சப்தங்களை அடையாளம் கண்டுகொள்கின்றன; உடனே யானைகளை பாதுகாப்பாக சுற்றி நின்றுகொள்ளச் செய்கின்றன. “சுமார் 100 யானைகளின் பிளிறல்களையும் ஒரு பெண் யானை அடையாளம் கண்டுகொள்ளும்” என அந்த அறிக்கை கூறுகிறது. இவ்வாறு, கயவர்கள் முதிர்வயதான பெண் யானை ஒன்றை கொன்றுவிட்டால், அந்த யானைக்கூட்டம் முழுவதும், பெரியதோர் தகவல் களஞ்சியத்தையே இழந்துவிட்டதாக அர்த்தம்.(g01 11/22)

மகிழ்ச்சிக்கு வழி

“திருப்தியான வாழ்க்கை அமைய வேண்டுமானால், வங்கியில் எக்கச்சக்கமான பணம் மீந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சொல்லப்போனால், பணக்காரராக, செல்வாக்கோடு புகழ் பெற்று விளங்குவதால் திருப்தியைப் பெறுவது கடினமாகவே உள்ளது” என உளவியலாளர்கள் செய்திருக்கும் புதிய ஆராய்ச்சி காட்டுகிறது. அமெரிக்காவிலுள்ள மிஸ்ஸௌரி-கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கெனன் ஷெல்டன் கூறுவதாவது: “மேலை நாட்டு கலாச்சாரங்களில், அழகும் புகழும் பணமும் பெற்று நாம் விளங்க வேண்டும் என அநேக விளம்பரங்கள் வலியுறுத்துகின்றன. அதனால் வியாபாரம் சூடுபிடிப்பது என்னவோ உண்மைதான்; ஆனால் அதில் சிக்கிக்கொண்டவர்களோ மகிழ்ச்சி மிக்கவர்களாக இல்லை.” லண்டனின் தி இன்டிபென்டென்ட் செய்தித்தாள் அறிக்கை செய்வதன்படி, 700-⁠க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களை வைத்து ஓர் ஆய்வு நடத்தப்பட்டது; அதில், ‘சுயமதிப்பும்,’ ‘பிறருடன் நெருக்கமான உறவு வைத்துக்கொள்வதுமே’ தங்களுடைய மகிழ்ச்சிக்கு மிக முக்கிய காரணிகளாய் இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். மகிழ்ச்சிக்கு பணம் காரணம் என்பது வெகு அரிதாகவே தெரிவிக்கப்பட்டது. “‘பணத்தை பெரிதாக மதிக்காதவர்களே மகிழ்ச்சியை பணத்தால் வாங்க முடியாதென நினைப்பார்கள்’ [என்பது] மறைந்துவிட்டது” என அந்த செய்தித்தாள் கூறுகிறது.(g01 11/22)

ஓட்டுவதில் லட்சிய மாதிரி

“பிள்ளைகள் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முன்பும் வாகனம் ஓட்ட கற்றுக்கொண்டிருக்கையிலும், பெற்றோரே அவர்களுக்கு லட்சிய மாதிரியாக திகழக்கூடும் என்பதை பெற்றோர் தெரிந்திருக்க வேண்டும்” என நெடுஞ்சாலை பாதுகாப்புக்கான இழப்பீட்டு நிறுவனத்தைச் சேர்ந்த சூசன் ஃபர்கசன் கூறுகிறார். நியூ சயன்டிஸ்ட் பத்திரிகையில் அறிக்கை செய்யப்பட்டுள்ளபடி, இவரும் இவருடன் சேர்ந்து பணிபுரிபவர்களும் 1,40,000 அமெரிக்க குடும்பங்களில் ஏற்பட்டுள்ள விபத்துக்களை ஆய்வு செய்தனர்; இக்குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர்களையும் 18 முதல் 21 வயதுடைய அவர்களது பிள்ளைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தனர். பெற்றோர்களுக்கு ஐந்து வருடங்களில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கார் விபத்துக்கள் நேரிட்டிருந்தால், அவர்களின் பிள்ளைகள் கார் விபத்தில் சிக்கும் சாத்தியம், விபத்தைச் சந்தித்திராத பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு நேரிடுவதைவிட 22 சதவீதம் அதிகமாக இருந்தது. சாலை விதிகளை மீறுபவர்களின் விஷயத்திலும்​—⁠அதிவேகமாக ஓட்டுபவர்கள், சிவப்பு விளக்கு சிக்னலை பொருட்படுத்தாமல் ஓட்டிச் செல்பவர்கள் போன்றோரின் விஷயத்திலும்​—⁠இதுவே உண்மை. இவ்விஷயங்களில் அப்படிப்பட்ட பிள்ளைகள் பெற்றோரை பின்பற்றுவதற்கு 38 சதவீதம் அதிக சாத்தியம் இருக்கிறது. “பெற்றோர் முன்னுதாரணமாய் திகழ வேண்டும்” என விபத்துக்களை தடுப்பதற்கான பிரிட்டன் அரசு நிறுவனத்தைச் சேர்ந்த ஜேன் ஈசன் தெரிவிக்கிறார். “சாலை பாதுகாப்பு பற்றி பிள்ளைகளுக்கு பிஞ்சிலேயே கற்றுக்கொடுக்க வேண்டும்.”(g01 9/22)