Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பெண்களை ஆண்கள் அடிப்பது ஏன்?

பெண்களை ஆண்கள் அடிப்பது ஏன்?

பெண்களை ஆண்கள் அடிப்பது ஏன்?

பெண்கள், மற்ற எல்லா கயவர்களையும்விட தங்கள் துணைவர்களாலேயே பெரும்பாலும் கொல்லப்படுகிறார்கள் என்பது சில நிபுணர்களின் கருத்து. மனைவிகளை கொடுமைப்படுத்தும் போக்கை ஒழிப்பதற்கான முயற்சியில் அநேக ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டிருக்கின்றன. எப்படிப்பட்ட ஆண்கள் மனைவியை அடிக்கிறார்கள்? அவர்களது பிள்ளைப்பிராயம் எப்படி இருந்தது? காதலிக்கையில் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டார்களா? மருத்துவ உதவி அளிக்கப்படுகையில் எப்படி பிரதிபலிக்கிறார்கள்?

அடித்துக் கொடுமைப்படுத்தும் கணவன்மார் அனைவரும் ஒரேமாதிரி இருப்பதில்லை என்பது நிபுணர்கள் கண்டறிந்திருக்கும் ஒரு உண்மை. எப்போதாவது மூர்க்கமடையும் கணவன் ஒரு ரகம். இவர் ஆயுதத்தை பயன்படுத்துவதில்லை, சதா மனைவியை கொடுமைப்படுத்துவதும் இல்லை. மூர்க்கமடைவது சாதாரணமாக இவரது குணமல்ல, சந்தர்ப்ப சூழ்நிலைகளாலேயே சிலசமயம் கட்டுப்பாட்டை இழந்துவிடுகிறார். ஆனால் எதற்கெடுத்தாலும் கை ஓங்கும் பழக்கத்தில் ஊறிப்போயிருக்கும் கணவனோ மறு ரகம். இவருக்கு மனைவியை கொடுமைப்படுத்துவதே தொழில். அதற்காக துளியும் வருத்தப்படுவது கிடையாது.

அடிக்கும் கணவன்மார் பல ரகம் என்பதற்காக, சில வகையான சரீர தாக்குதல்கள் அவ்வளவு மோசமானவை அல்ல என சொல்ல முடியாது. எந்த விதமான சரீர தாக்குதலும் காயத்தை​—⁠சிலசமயம் மரணத்தைக்கூட​—⁠ஏற்படுத்தலாம். ஆகவே, ஒருவர் மற்றவர்கள்போல் அவ்வளவு அடிக்கடி மூர்க்கமாவதில்லை அல்லது அந்தளவுக்கு மூர்க்கமாவதில்லை என்பதற்காக அவர் நடத்தையை நியாயப்படுத்த முடியாது. “ஏற்றுக்கொள்ளத்தக்க” தாக்குதல் என்று எதுவுமே கிடையாது. ஆனால் ஓர் ஆண் எந்தப் பெண்ணை வாழ்நாளெல்லாம் நேசிப்பதாக உறுதிமொழி அளித்தாரோ அந்தப் பெண்ணை உடல் ரீதியில் கொடுமைப்படுத்துவதற்கு காரணங்கள் என்ன?

குடும்பத்தின் செல்வாக்கு

உடல் ரீதியில் கொடுமை இழைக்கும் ஆண்களில் பலர் அதே போன்ற குடும்ப சூழலில் வளர்க்கப்பட்டதைக் குறித்து ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. “அடிக்கும் கணவன்மார்களில் பெரும்பாலானவர்கள் ‘யுத்த களங்கள்’ போன்ற வீடுகளில் வளர்ந்தவர்கள்” என எழுதுகிறார் மைக்கேல் க்ரோச்; இவர் மனைவிகளுக்கு இழைக்கும் கொடுமை சம்பந்தமாக 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆராய்ச்சி செய்திருக்கிறார். “குழந்தைகளாகவும் சிறுபிள்ளைகளாகவும், அடி உதை சித்திரவதைகளை தினசரி தரிசித்து வளர்ந்தவர்கள் இவர்கள்” என்கிறார். மற்றொரு நிபுணரின்படி, அப்படிப்பட்ட மூர்க்க வெறிபிடித்த சூழலில் வளரும் மகன், “அப்பா பெண்கள்மீது காட்டும் வெறுப்பை பார்த்துப் பார்த்து சின்ன வயதிலிருந்தே அதே வெறுப்பை வளர்த்துக்கொள்கிறான். பெண்களை எப்போதும் அதிகாரத்துடன் அடக்கி ஆளுவதுதான் ஆணுக்கு அழகு என அவன் கற்றுக்கொள்கிறான். இவ்வாறு அடக்கி வைத்திருக்க அவர்களை பயமுறுத்த வேண்டும், அடித்து உதைக்க வேண்டும், இழிவுபடுத்த வேண்டும் என்றெல்லாம்கூட கற்றுக்கொள்கிறான். அதேசமயம், அப்பாவின் பிரியத்தைப் பெற அவரைப் போலவே நடந்துகொள்வதுதான் சிறந்த வழி என்றும் கற்றுக்கொள்கிறான்.”

பெற்றோரின் நடத்தை பிள்ளையை நல்ல விதத்திலோ கெட்ட விதத்திலோ பெரிதும் பாதிக்கலாம் என பைபிள் தெளிவாக குறிப்பிடுகிறது. (நீதிமொழிகள் 22:6; கொலோசெயர் 3:21) குடும்பச் சூழலை சாக்குக் காட்டி அடிப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை என்றாலும் மூர்க்க குணத்தின் விதை எங்கே விதைக்கப்பட்டது என புரிந்துகொள்ள அது உதவுகிறது.

கலாச்சாரத்தின் செல்வாக்கு

சில நாடுகளில் பெண்களை அடிப்பது சரியானதாக, இயல்பானதாகக்கூட கருதப்படுகிறது. “மனைவியை அடிப்பதற்கு அல்லது அடித்து அடிபணிய வைப்பதற்கு கணவனுக்கு சகல உரிமையும் இருப்பதாக அநேக சமுதாயங்கள் உறுதியாக நம்புகின்றன” என ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.

இப்படிப்பட்ட கொடுமைக்கு எதிராக குரல் எழுப்பும் நாடுகளில்கூட அநேக ஆண்கள் மூர்க்கத்தனமாக நடந்துகொள்கின்றனர். இந்த விஷயத்தில் சில ஆண்களின் நியாயமற்ற சிந்தனை அதிர்ச்சியளிக்கிறது. தங்கள் மனைவிகளை மோசமாக நடத்துவதில்லை என சொன்ன பெரும்பாலான ஆண்கள், பெண்களை அடிப்பதில் தவறில்லை என்பதாகவும் இதற்கு கொடுமை என்று முத்திரை குத்த முடியாது என்பதாகவும் கருதுவதாக கேப் தீபகற்பத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சி காட்டியது; இதை, தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வீக்லி மெயில் அண்ட் கார்டியன் செய்தித்தாள் குறிப்பிட்டது.

இப்படிப்பட்ட கோணலான கண்ணோட்டம் பிள்ளைப் பருவத்திலேயே பெரும்பாலும் துளிர்க்கிறது என்பதில் சந்தேகமில்லை. உதாரணத்திற்கு பிரிட்டனில் 11, 12 வயதுகளை எட்டியிருந்த 75 சதவீத சிறுவர்கள், ஓர் ஆண் தன் கோபம் கிளறப்படும்போது பெண்ணை அடிப்பதில் தவறில்லை என நினைக்கின்றனர்.

அடிப்பதற்கு சாக்குப்போக்கே கிடையாது

மேற்கண்ட விஷயங்கள், கணவன்மார் மனைவிகளை கொடுமைப்படுத்துவது ஏன் என்பதை புரிந்துகொள்ள உதவலாம், ஆனால் அதை நியாயப்படுத்த முடியாது. நேரடியாக சொன்னால், துணைவியை அடிப்பது கடவுள் பார்வையில் பொல்லாத பாவமாகும். அவருடைய வார்த்தையாகிய பைபிளில் இப்படி வாசிக்கிறோம்: “புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூர வேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான். தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; கர்த்தர் சபையைப் போஷித்துக் காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்.”​—எபேசியர் 5:28, 29.

இந்த உலகின் “கடைசிநாட்களில்” அநேகர் “சுபாவ அன்பில்லாதவர்களாயும்” “கொடுமையுள்ளவர்களாயும்” இருப்பார்கள் என பைபிள் வெகு காலத்திற்கு முன்பே கூறியது. (2 தீமோத்தேயு 3:1-3) மனைவிக்கு கொடுமை இழைப்பது, இந்த தீர்க்கதரிசனத்தில் சொல்லப்படும் அதே காலப்பகுதியில் நாம் வாழ்கிறோம் என்பதற்கு மற்றுமொரு அத்தாட்சியையே அளிக்கிறது. ஆனால் அடித்து துன்புறுத்தப்படும் பெண்களுக்கு எவ்வாறு ஆதரவு அளிக்கலாம்? அடிக்கும் ஆண்கள் தங்கள் நடத்தையை மாற்றிக்கொள்ள முடியும் என்பதற்கு ஏதேனும் நம்பிக்கை இருக்கிறதா?(g01 11/8)

[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]

“முன்பின் தெரியாதவரை அடிப்பது எவ்வளவு பெரிய குற்றமோ அவ்வளவு பெரிய குற்றம் மனைவியை அடிப்பது.”—⁠ஆண்கள் பெண்களை அடிக்கும்போது

[பக்கம் 6-ன் பெட்டி]

ஆணாதிக்கம் ஓர் உலகளாவிய பிரச்சினை

பெண்களை கொடுமைப்படுத்தும், ஆணவமிக்க ஆண்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். பின்வரும் அறிக்கைகள் இதைச் சுட்டிக்காட்டுகின்றன.

எகிப்து: அலெக்ஸாந்திரியாவில் நடத்தப்பட்ட மூன்று மாத கால ஆய்வின்படி பெண்களுக்கு காயம் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் வீட்டில் நடக்கும் வன்முறையே. பெண்கள் பெறும் மருத்துவ சிகிச்சையில் 27.9 சதவீதத்திற்கு காரணம் இதுவே.​—⁠பெண்கள் பேரிலான நான்காவது உலக மாநாட்டின் சுருக்கம் 5.

தாய்லாந்து: பாங்காக்கின் மிகப் பெரிய புறநகர் பகுதியில் வாழும் மணமான பெண்களில் 50 சதவீதத்தினர் எப்போதும் அடி உதை வாங்குகிறார்கள்.​—⁠பசிஃபிக் இன்ஸ்டிட்யூட் ஃபார் உமன்ஸ் ஹெல்த்.

ஹாங்காங்: “துணைவரால் அடிக்கப்படுவதாக சொல்லும் பெண்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தைவிட 40 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்திருக்கிறது.”​—⁠சௌத் சைனா மார்னிங் போஸ்ட், ஜூலை 21, 2000.

ஜப்பான்: புகலிடம் தேடி அலைந்த பெண்களின் எண்ணிக்கை 1995-⁠ல் 4,843 ஆக இருந்தது, ஆனால் 1998-⁠ல் அது 6,340 ஆக உயர்ந்துவிட்டது. “அவர்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர், தங்கள் கணவர்களின் மிருகத்தனமான தாக்குதலிலிருந்து தப்ப புகலிடம் தேடி அலைவதாக சொன்னார்கள்.”​—⁠த ஜப்பான் டைம்ஸ், செப்டம்பர் 10, 2000.

பிரிட்டன்: “பிரிட்டன் எங்கும் ஏதாவது ஒரு வீட்டில் ஒவ்வொரு ஆறு நொடிக்கும் ஒருமுறை கற்பழிப்பு, அடி உதை, அல்லது கத்திக் குத்து சம்பவிக்கிறது.” ஸ்காட்லாண்ட் யார்ட் துப்பறியும் இலாகா அறிக்கையின்படி, “வீட்டில் தாக்கப்படுவோரிடமிருந்து ஒவ்வொரு நாளும் 1,300 போன் அழைப்புகள் போலீஸாருக்கு வருகின்றன; இது, ஆண்டிற்கு 5,70,000-⁠க்கும் அதிகம். இவற்றில் 81 சதவீதம், ஆண்களால் தாக்கப்படும் பெண்களிடமிருந்து வருகின்றன.”​—⁠த டைம்ஸ், அக்டோபர் 25, 2000.

பெரு: போலீஸிடம் புகார் செய்யப்படும் மொத்த குற்றச்செயல்களில் 70 சதவீதம், கணவர்களால் அடிக்கப்படும் பெண்கள் சம்பந்தப்பட்டதே. ​—⁠பசிஃபிக் இன்ஸ்ட்டிட்யூட் ஃபார் உமன்ஸ் ஹெல்த்.

ரஷ்யா: “ஒரு வருடத்தில் 14,500 ரஷ்ய பெண்கள் தங்கள் கணவர்களால் கொல்லப்பட்டனர்; இன்னும் 56,400 பெண்கள் வீட்டில் தாக்கப்பட்டதால் ஊனமுற்றனர் அல்லது படுகாயமுற்றனர்.”​—⁠த கார்டியன்.

சீனா: “இது புதிதாக முளைத்திருக்கும் பிரச்சினை. காட்டுத் தீபோல் வேகமாக பரவி வருகிறது, அதுவும் நகர் பகுதிகளில்” என்கிறார் ஜிங்லூன் குடும்ப மையத்தின் இயக்குநரான பேராசிரியர் சென் யீயுன். “அக்கம்பக்கத்திலுள்ளவர்களின் செல்வாக்கு இனியும் வீட்டு வன்முறையை கட்டுப்படுத்துவதாக இல்லை.”​—⁠த கார்டியன்.

நிகாரகுவா: “பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமை நிகாரகுவாவில் பயங்கரமாக அதிகரித்து வருகிறது. கடந்த வருடம் மட்டுமே இங்குள்ள பெண்களில் 52 சதவீதத்தினர் குடும்பத்தில் ஏதாவது ஒரு விதத்தில் ஆண்களால் தாக்கப்பட்டதாக ஓர் ஆய்வு காட்டியது.”​—⁠பிபிஸி நியூஸ்.

[பக்கம் 7-ன் பெட்டி]

ஆபத்திற்கான அறிகுறிகள்

அ.ஐ.மா., ரோட் ஐலண்ட் பல்கலைக்கழகத்தில் ரிச்சர்ட் ஜே. ஜெல்ஸ் நடத்திய ஆராய்ச்சியின்படி, வீடுகளில் உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் கொடுமைப்படுத்தப்படும் ஆபத்திற்கான அறிகுறிகள் இவை:

1.துணைவர் ஏற்கெனவே ஏதாவது ஒரு விதத்தில் வீட்டிலே வன்முறைச் செயலில் ஈடுபட்டிருந்திருப்பவர்.

2.அவர் வேலைவெட்டி இல்லாதவர்.

3.வருடத்திற்கு ஒரு முறையாவது சட்ட விரோதமான போதைப் பொருட்களை பயன்படுத்துபவர்.

4.சிறுவயதில் தன் அம்மாவை அப்பா அடிப்பதை பார்த்திருப்பவர்.

5.இருவரும் திருமணம் ஆகாதவர்கள்; ஆனால் சேர்ந்து வாழ்பவர்கள்.

6.வேலை செய்பவர் என்றால், குறைந்த ஊதியம் பெறுபவர்.

7.உயர்நிலைப் பள்ளிக்கு செல்லாதவர்.

8.அவர் 18-30 வயதுள்ளவர்.

9.அப்பா அல்லது அம்மா அல்லது இருவருமே பிள்ளைகளை அடிக்கும் பழக்கமுள்ளவர்கள்.

10.வறுமைக் கோட்டிற்கு கீழான ஊதியம் பெறுபவர்.

11.ஆணும் பெண்ணும் வெவ்வேறு கலாச்சார பின்னணிகளைச் சேர்ந்தவர்கள்.

[பக்கம் 7-ன் படம்]

மூர்க்கத்தனமான குடும்ப சூழல் பிள்ளைகளின் மனதை மிகவும் பாதிக்கலாம்