Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வியன்னாவின் மனங்கவரும் ராட்சச ராட்டினம்

வியன்னாவின் மனங்கவரும் ராட்சச ராட்டினம்

வியன்னாவின் மனங்கவரும் ராட்சச ராட்டினம்

ஆஸ்திரியாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

கண் முன்னே காட்சி தருவது கண்கவர் வியன்னா நகரம்; கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் வியன்னாவின் மலைக்காட்டுப் பகுதிகள். இந்த அரிய காட்சி, ஸ்ட்ரௌஸ் வால்ட்ஸஸின் இனிய கீதங்கள் வானில் மிதந்து காதுகளில் தேனாய் பாய்வதற்கு பொருத்தமான சூழலாகவே அமைந்துள்ளது. இந்த இயற்கை அமைப்பின் வனப்பை மனதில்கொண்டே ஓர் இளைஞன் இதை தெரிவுசெய்திருக்கிறான்; ஆனால் அருமை காதலியிடம் தன் மனதின் விருப்பத்தை தெரிவிக்கையில் அவன் நெஞ்சம் படபடக்கிறது, அதை அமைதிப்படுத்த வழியின்றி தவிக்கிறான். அவர்கள் தரையிலிருந்து 60 மீட்டர் உயரத்தில் இருக்கின்றனர். அது எப்படி? அவன், அப்படிப்பட்ட விசேஷ சந்தர்ப்பத்தில் வியன்னாவின் மனங்கவரும் ரீஸன்ராட் எனப்படும் ராட்சச ராட்டினத்தில் உலா வரும் முதல் நபரும் அல்ல கடைசி நபரும் அல்ல.

வியன்னாவில் பிராட்டர் என அழைக்கப்படும் பெரிய பூங்காவில் அமைந்துள்ள இந்த ராட்சச ராட்டினம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக அந்நகரை அலங்கரிக்கும் அடையாள சின்னமாய் அனைவராலும் போற்றப்பட்டுள்ளது. ‘ராட்சச ராட்டினத்தில் உலா வந்து பார்த்தால்தான் வியன்னாவைப் பற்றி உங்களுக்குத் தெரியவரும்’ என்கிறது அவ்விடத்து நுழைவாயிலில் உள்ள வரவேற்பு வாசகம். அதன் வாழ்நாள் உலகிலுள்ள மற்ற ராட்சச ராட்டினங்களைவிட நீண்டது; ஆனால் அந்நாட்களில் பலவித துன்பங்கள் அதை ஆட்டிப்படைத்தன. இந்தப் பிரமாண்டமான இரும்பு ரதம் எப்படி வந்தது? துன்ப காலங்களிலிருந்து அது எப்படி தப்பியது?

முதல் ராட்சச ராட்டினம்

ராட்சச ராட்டினம் பிறந்த கதையை ஆய்வுசெய்ய, 19-வது நூற்றாண்டிற்கும் தொழில் புரட்சி ஏற்பட்ட சமயத்திற்கும் நாம் செல்ல வேண்டும். அந்தச் சமயத்தில் தொழில் ரீதியில் கட்டுமான பொருளாக இரும்பே விரும்பி தெரிந்துகொள்ளப்பட்டது. உலகின் பல முக்கிய நகரங்களில்​—⁠லண்டனில், இரும்பும் கண்ணாடியும் கலந்து கட்டப்பட்ட க்றிஸ்டல் பாலஸ், வியன்னாவில் பாம் ஹவுஸ், பாரிஸில் ஈஃபில் டவர்​—⁠அசத்தலான உருவத்தில் இரும்புச் சட்ட அமைப்புகள் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டன. என்றாலும், இதுபோன்ற கட்டடக்கலைக்கு பிரசித்தி பெற்றது சிகாகோ நகரமே; அங்குதான் 1893-⁠ல் உலக கண்காட்சியின்போது, அமெரிக்க எஞ்சினியர் ஜார்ஜ் ஃபெரஸ் முதல் ராட்சச ராட்டினத்தை வடிவமைத்து உருவாக்கினார்.

வாய்பிளந்து நிற்கச் செய்யும் ஃபெரஸ் ராட்டினம் 76 மீட்டர் விட்டம் உடையது; 36 பெட்டிகள் இணைக்கப்பட்டது; ஒவ்வொரு பெட்டியிலும் 40 பயணிகள் உலா வர முடியும்; அவர்கள் உயரே சென்று, 20 நிமிடங்கள் சிகாகோவையும் அதன் சுற்றுப்புறத்தையும் கண்டுகளிக்கலாம். கண்காட்சிக்கு செல்லும் பார்வையாளர்களில் பெரும்பாலானோருக்கு அதுவே நெஞ்சைவிட்டு நீங்காத பொழுதுபோக்கு அம்சமாகும். ஆனால் சிகாகோவின் ஃபெரஸ் ராட்டினத்தின் புதுமை காலப்போக்கில் மறைந்தது; வெவ்வேறு இடங்களில் இருமுறை மாற்றி அமைக்கப்பட்ட பிறகு, 1906-⁠ல் தகர்க்கப்பட்டு கழிக்கப்பட்டது. இருந்தபோதிலும், ராட்சச ராட்டினத்திற்கான ஆசைக்கனல் வேறு இடங்களில் வீசத் தொடங்கியது.

வியன்னாவில் உருவான ராட்சச ராட்டினம்

எஞ்சினியரும் ஓய்வுபெற்ற பிரிட்டிஷ் கடற்படை அதிகாரியுமான வால்டர் பஸ்ஸட்டின் மனதில் சிகாகோவின் ராட்சச ராட்டினம் பற்றிய ஆர்வம் தீவிரித்தது. 1894-⁠ல் ஏர்ல்ஸ் கோர்ட் பகுதியில் ஒரு பிரமாண்டமான ராட்டினத்தை நிறுத்த முனைந்து அதை வடிவமைக்க ஆரம்பித்தார்; அதன் பின்னர் இங்கிலாந்தில் பிளாக்பூல் பகுதியிலும் பாரிஸிலும் ராட்டினங்களை உருவாக்கினார். அதே சமயத்தில், வியன்னாவில் புதுப்புது பொழுதுபோக்கு மையங்களை ஏற்படுத்துவது பற்றி வியன்னா நாட்டு பொழுதுபோக்கு தொழில் முனைவரான காபோர் ஷ்டைனர் சிந்தித்து வந்தார். ஒரு நாள், வால்டர் பஸ்ஸட்டின் பிரதிநிதி ஒருவர், வியன்னாவில் ஒரு ராட்சச ராட்டினத்தை நிறுத்தும் ஐடியாவை ஷ்டைனருக்கு கொடுத்தார்; பஸ்ஸட்டும் பார்ட்னராகிக் கொள்ள விருப்பம் தெரிவித்தார். இருவரும் ஒப்பந்தம் செய்துகொண்டனர்; இங்கிலாந்திலிருந்து தொற்றிக்கொண்ட கிளர்ச்சியூட்டும் இப்புதிய அம்சத்திற்குப் பொருத்தமான இடத்தை கண்டுபிடித்தனர். ஆனால், கட்டுமான பெர்மிட்டை எப்படி பெறுவது?

ஷ்டைனர் தன் கட்டுமான திட்டங்களை நகராட்சி அலுவலகத்தில் சமர்ப்பித்தபோது, ஓர் அதிகாரி அந்த திட்டங்களை கண்களால் அளந்துவிட்டு, ஷ்டைனரை பார்த்தார்; பின்பு மறுபடியும் திட்டங்களைப் பார்த்தார். இது நடக்கின்ற காரியமா என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு கேட்டார்: “திருவாளர் டைரக்டர் அவர்களே, இவ்வளவு பூதாகரமான ஒன்றைக் கட்ட யாராவது பெர்மிட் தந்து, பொறுப்பையும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நிஜமாகவே நினைக்கிறீர்களா?” ஷ்டைனர் கெஞ்சினார்: “இதுபோன்ற ராட்டினங்கள் லண்டனிலும் பிளாக்பூலிலும் சுற்றுகின்றனவே, அவற்றால் எந்தப் பிரச்சினையும் இல்லையே!” அந்த அதிகாரி லேசில் மசியவில்லை. “ஆங்கிலேயர்கள் தாங்கள் நினைத்ததை சாதித்துவிடுவார்கள்; நான் ரிஸ்க் எடுக்கப்போவதில்லை” என்று கை கழுவிவிட்டார். முயற்சியை சிறிதும் கைவிடாமல் ஷ்டைனர் தொடர்ந்து அலைந்தார்; கடைசியில் கட்டுவதற்கு அனுமதி பெற்றார்.

பிரமாண்டமான இருப்புச் சட்டங்களை பொருத்தி நிறுத்திய மாத்திரத்திலேயே அது பரபரப்பூட்டியது. அதை வேடிக்கை பார்க்க மக்கள் அன்றாடம் கட்டுமான பணி நடக்கும் இடத்திற்குச் சென்றனர்; அது எப்படியெல்லாம் உருவெடுக்கப் போகிறது என்பது பற்றிய தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். எட்டே மாதங்களுக்குப் பிறகு, அந்தப் பணி முடிவடைந்தது. ஜூன் 21, 1897-⁠ல், சுத்தியல் சத்தம் கடைசியாக கேட்டது; வியன்னா நாட்டு அரசவையைச் சேர்ந்த ஆங்கிலேய தூதுவரின் மனைவியான சீமாட்டி ஹோரஸ் ரம்போல்ட் கடைசி அடி அடித்து கட்டுமானப் பணிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சில நாள் கழித்து, அந்த ராட்சச ராட்டினம் உயிர்பெற்று சுற்றிவர ஆரம்பித்தது. “அனைவரும் மகிழ்ச்சிக்கடலில் திளைத்தனர்; டிக்கெட் அலுவலகத்தில் மக்கள் வெள்ளம் அலைமோதியது” என ஷ்டைனர் பின்பு நினைவுகூர்ந்தார்.

ராட்சச ராட்டினத்தின் ஏற்ற இறக்கங்கள்

ஆஸ்திரியா-ஹங்கேரி நாட்டு அரசபதவிக்கு சட்டப்படி வாரிசாக இருந்த இளவரசர் ஃபிரான்சிஸ் ஃபெர்டினான்ட் ராட்சச ராட்டினத்தில் அமர்ந்து அப்பேரரசின் தலைநகர் அழகை கண்டு ரசித்தார். ஜூன் 1914-⁠ல் முதல் உலகப் போருக்கு வித்திடும் வகையில் நேரிட்ட அவரது படுகொலை, ராட்சச ராட்டினத்திற்கும் ‘பிரேக்’ போட்டுவிட்டது. தன் பிரசித்தி பெற்ற சவாரியை இழந்தது மட்டுமின்றி, அது இராணுவ காவல்தளமாக மாறியபோது, பொது மக்களும் அதில் சவாரி செய்ய முடியாமற்போனது. மே 1915-⁠ல் ராட்சச ராட்டினம் மீண்டும் உயிர்பெற்றது. என்றாலும் அச்சமயத்தில் நாடுமுழுவதும் இரும்புத் தட்டுப்பாடு தாண்டவமாடவே, எல்லாருடைய கண்களையும் இந்த ராட்சச ராட்டினம் உறுத்தியது, அக்குவேறு ஆணிவேறாக எப்பொழுது கழற்றப்படுமோ என்றிருந்தது! ராட்சச ராட்டினம் 1919-⁠ல் ப்ராக் வணிகர் ஒருவரிடம் விற்கப்பட்டது; அவர் மூன்று மாதங்களில் அதை பிரித்துப் போடவிருந்தார். ஆனால் சிக்கல்வாய்ந்த இந்த ராட்டினத்தின் கட்டமைப்பை பிரிப்பதற்கு ஆகும் செலவு, அதிலிருந்து கிடைக்கவிருக்கும் இரும்பின் மதிப்பைவிட அதிகமாகியிருக்கும். ஆகவே வியன்னாவிற்கு புகழ் சேர்த்துவந்த ராட்டினம், ‘மயிரிழையில் உயிர் தப்பியது’; அத்துடன், வியந்து நிற்கும் பொதுமக்களை தொடர்ந்து விளையாட்டு காட்டி மகிழ்வூட்டியது.

உலகப் போரும் ஆஸ்திரியா-ஹங்கேரியின் அரச பரம்பரையின் அழிவும் வியன்னாவை உருக்குலைத்தன. 1930-களில் பொருளாதாரம் சீர்கெட்டது; அரசியலும் ஆட்டம்கண்டது. புகழேணியின் உச்சியில் இருந்த ஷ்டைனரோ, யூதராதலால் தலைதப்பினால் போதும் என்று ஓட்டம் பிடிக்க நேர்ந்தது. என்றாலும், 1939-லும் 1940-லும் ராட்சச ராட்டினத்தில் சவாரி செய்ய மக்கள் வெள்ளம் அலைபுரண்டது. அச்சமயத்தில் இரண்டாம் உலகப் போர் வெடித்திருந்ததால் மக்கள் இன்பத்தை நாடி தறிகெட்டு அலைந்ததுபோல் தோன்றியது. ஆனால் செப்டம்பர் 1944-⁠ல், ராட்சச ராட்டினம் தீக்கிரையான செய்தி அந்நகர் முழுவதையும் உலுக்கியது! அதற்கு அருகில் இருந்த ரோலர் கோஸ்டர் ரயில் தடத்தில் கிட்டச்சுற்று (short circuit) காரணமாக மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்தது; அது அருகிலிருந்த ராட்டினத்திற்கும் பரவியது; அதன் ஆறு பெட்டிகள் தீயில் கருகின. என்றாலும், இதைவிட மோசமான சம்பவம் நிகழவிருந்தது.

ஏப்ரல் 1945-⁠ல், இரண்டாம் உலகப் போரின் தீவிரம் தணிந்துவந்த காலத்தில் மறுபடியும் ராட்டினம் தீக்கிரையானது. இச்சமயத்தில் அதன் 30 பெட்டிகளுமே சாம்பலாயின; கட்டுப்பாட்டு வசதிகள் பாழாயின. கரி அப்பிய எலும்புக்கூடுபோல் நின்ற இரும்பு சட்டம் மட்டுமே மிஞ்சியது. என்றாலும் ராட்டினத்தின் உயிர் இத்தோடு முடிந்துவிடவில்லை. போருக்குப் பிறகு அடுக்கடுக்கான வீடுகள் சின்னாபின்னமாகி தடந்தெரியாமல் போன அதே சமயத்தில், இந்த ராட்சச ராட்டினம் இரும்புக்கூடாகவே நின்றாலும் இணையற்று விளங்கியது. இப்போதும், அதை பிரிக்க ஆகும் செலவு அதிகமாகும் என்ற நிலை ஏற்பட்டது. இதற்கு என்ன வழி?

வழி தெரிந்துவிட்டது! ராட்டினம் மீண்டும் உயிர்பெற்றது; பாதுகாப்பை முன்னிட்டு ஒன்றுவிட்டு ஒன்று இருந்த பெட்டிகள் மட்டுமே மறுபடியும் பொருத்தப்பட்டன. மே 1947 முதல் இன்றுவரை, அது நிற்காமல் சுற்றிவருகிறது; அகமகிழும் பயணிகளை மெதுவாக மேலே ஏற்றி கீழே இறக்குகிறது. த தர்ட் மேன் போன்ற படங்களில் இசைக்கப்படும் விசேஷ சித்தார் இசைகளின் வாயிலாக இந்த ராட்சச ராட்டினத்தின் புகழ்மணம் வியன்னாவையும் விஞ்சி வீசுகிறது.

சிகாகோ, லண்டன், பிளாக்பூல், பாரிஸ் ஆகிய நகரங்களில் முதன்முதல் நிறுத்தப்பட்ட ராட்சச ராட்டினங்கள் மடிந்துவிட்டிருக்க, வியன்னாவின் ராட்சச ராட்டினம் இன்னும் உயிருடன் இருக்கிறது. இது போர்க் காலத்திற்கு பிந்தைய சந்ததியின், எதையும் புதுப்பிக்க வேண்டுமென்ற மனவலிமைக்கு அத்தாட்சியாக நிற்பதுடன், வியன்னாவை அலங்கரிக்கும் அடையாள சின்னமாகவும் திகழ்கிறது. நீங்கள் வியன்னாவிற்கு எப்போதாவது வந்தால், இந்த ராட்சச ராட்டினத்திலும் உலா வர விரும்புவீர்கள். அவ்வாறு உலா வருகையில், ஒருவேளை ராட்டினத்தின் உச்சியில் இருந்தபோது, திருமணத்திற்கு பாட்டி சம்மதம் தெரிவித்ததால் படபடத்த தன் நெஞ்சத்தை அமைதிப்படுத்துவதற்குள் தான் பட்ட பாட்டை பற்றி தாத்தா தன் பேரப்பிள்ளைகளுக்கு சொல்வதைக்கூட பார்ப்பீர்கள்.(g01 11/8)

[பக்கம் 13-ன் பெட்டி/படம்]

ரீஸன்ராட் (ராட்சச ராட்டினம்)

கட்டப்பட்டது: 1897

உயரம்: 64.75 மீட்டர்

சக்கரத்தின் விட்டம்: 60.96 மீட்டர்

சக்கரத்தின் எடை: 245 டன்

கட்டுமானத்தின் மொத்த இரும்பு எடை: 430 டன்

வேகம்: மணிக்கு 2.7 கிலோமீட்டர்

[படத்திற்கான நன்றி]

தகவல்: The Vienna Giant Ferris Wheel, by Helmut Jahn and Peter Petritsch, 1989, page 39

[பக்கம் 15-ன் படம்]

ராட்சச ராட்டினத்திலிருந்து தெரியும்வியன்னாவின் வடகிழக்கு தொடுவானக் காட்சி