இளவயசில் டேட்டிங்—அதிலென்ன ஆபத்து?
இளைஞர் கேட்கின்றனர் . . .
இளவயசில் டேட்டிங்—அதிலென்ன ஆபத்து?
“கொஞ்ச நாளைக்கு முன்னால பள்ளிக்கூடத்தில் படிக்கிற சில பசங்க என்னை டேட்டிங்க்கு கூப்பிட்டாங்க, கேர்ள் ஃபிரண்டா இருக்க கூப்பிட்டாங்க.”—பீகி, 11 வயது. a
“எங்க ஸ்கூல்ல படிக்கிற முக்கால்வாசி பாய்ஸும் கேர்ள்ஸும் டேட்டிங் போவாங்க. வராண்டாவிலேயே பாய்ஸும் கேர்ள்ஸும் கிஸ் பண்றது ரொம்ப சகஜம்.”—லீயானா, 10-வது படிக்கும் மாணவி.
இளவட்டங்கள் பலர் பிஞ்சிலேயே கைகோர்த்து திரிய ஆரம்பித்துவிடுகிறார்கள். ஏதோ தீங்கற்ற பொழுதுபோக்கு போல இயல்பாகவே எல்லாரும் ஈடுபடுகிற ஒரு பழக்கம் என இந்த டேட்டிங்கை மீடியாக்கள் ஆதரிக்கின்றன. “ஸ்கூல்ல கிட்டத்தட்ட எல்லாருமே பாய் ஃபிரண்டு, கேர்ள் ஃபிரண்டு வைச்சிருக்காங்க” என்கிறாள் 12 வயது ஓநேடா. “மூனாம் வகுப்பு படிக்கிற சிறுசுகளே பாய் ஃபிரண்டு, கேர்ள் ஃபிரண்டுன்னு எப்பவும் சுத்திக்கிட்டிருந்ததை பார்த்த ஞாபகம் எனக்கு இருக்கு. நான் 11 வயசா இருந்தபோது டேட்டிங்க்கு ஃபிரண்ட்ஸுங்க என்னை வற்புறுத்த ஆரம்பிச்சாங்க” என்கிறாள் ஜெனீஃபர் என்ற இளம் மங்கை.
எனவே, நீங்கள் யாருடனும் டேட்டிங் போகவில்லை என்றால் நீங்கள் மட்டும் தனிமையில் ஒதுக்கப்பட்டதைப் போல் உணரலாம். அதனால் கேலி கிண்டலுக்கும் ஏளனத்திற்கும்கூட ஆளாகலாம். பாய் ஃபிரண்டு வைத்துக்கொள்ள வயசு பத்தாது என்று நினைத்த ஜெனீஃபர் டேட்டிங்க்கு அழைப்புவிடுத்த பையன்களை ஒதுக்கித் தள்ளினாள். அவர்கள் என்ன செய்தார்கள்? “அவங்க என்னை கேலி பண்ணாங்க, அதை பெரிசுபடுத்தி பரிகாசம் செய்தாங்க” என சொல்கிறாள் ஜெனீஃபர். கேலி கிண்டல் செய்யப்படுவதை யாரும் விரும்புவதில்லை. ஆனால் மற்றவர்கள் டேட்டிங்கில் ஈடுபடுகிறார்கள் என்பதற்காக நீங்களும் அதில் ஈடுபட வேண்டுமா? டேட்டிங் என்றால் என்ன? அதன் நோக்கமென்ன?
டேட்டிங்—அது என்ன?
‘நாங்க ஒன்னும் டேட்டிங் செய்யல. சும்மா ஃபிரண்ட்ஸ், அவ்வளவுதான்.’ ஓர் ஆணோடோ பெண்ணோடோ மணிக்கணக்காக நேரத்தை செலவழிக்கிற அநேக இளைஞர்கள் இப்படித்தான் சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், டேட்டிங், சேர்ந்து சுற்றுதல், அல்லது வெறுமனே சந்தித்தல் என அதை நீங்கள் எப்படி அழைத்தாலும்சரி, எதார்த்தத்தில், ஒரு பையனும் பெண்ணும் ஒருவருக்கொருவர் தனிப்பட்ட கவனம் செலுத்தி ஒன்றுசேர்ந்து நேரத்தை செலவழிக்க ஆரம்பித்தாலே, அது நட்பைக் காட்டிலும் அதிகத்தை குறிக்கிறது. டேட்டிங் செய்ய நேரில் சந்திக்க வேண்டும் என்றில்லை. அதற்கு, இன்டர்நெட் அரட்டை அரங்கங்கள், தொலைபேசி, கடிதம் அல்லது ஈ-மெயில் ஆகிய மற்றவையும் வழி செய்கின்றன.
ஓர் எதிர்பாலாருடன் தனிப்பட்ட விதத்தில் நேரத்தை செலவழிப்பது எந்தளவுக்கு ஆபத்தானது என்பதே கேள்வி.
டேட்டிங்—ஆபத்துக்கள்
“கன்னிகையை நாடிய மனுஷனுடைய வழி”யைப் பற்றி நீதிமொழிகள் 30:19-ல் பைபிள் சொல்கிறது. ஆண் பெண் உறவுகளுக்கு ஒரு தனி பாணி இருப்பதை இந்தக் குறிப்பு தெரிவிக்கிறது. இருவரும் முதிர்ச்சி வாய்ந்தவர்களாக, கடவுள் கொடுத்துள்ள ஒழுக்கநெறிகளைப் பின்பற்றுபவர்களாக இருக்கையில், டேட்டிங் செய்வது அல்லது சேர்ந்து பழகுவது காதலுக்கும் இறுதியில் கண்ணியமான மணவாழ்க்கைக்கும் வழிநடத்தலாம். ஒருவரையொருவர் வசீகரிக்கும் விதத்தில் கடவுள் ஆணையும் பெண்ணையும் படைத்திருப்பது உண்மைதான். ஆனால், மணவாழ்க்கையின் சவால்களை சமாளிக்கும் வயது உங்களுக்கு இல்லையென்றால் என்ன செய்வது? பிஞ்சிலேயே டேட்டிங் போவது துயரத்தை நீங்களே வலிய விலைகொடுத்து வாங்குவதற்கு சமம்.
ஏன்? ஓர் ஆணுடனோ பெண்ணுடனோ நீங்கள் அதிக நேரம் செலவழிக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு சலனம் ஏற்படுவது இயல்பானதே. உங்களை அறியாமலேயே உங்கள் கண்கள் அந்த நபரை காண ஏங்கும். நீங்கள் இருவரும் சேர்ந்திராத சமயத்தில், உங்கள் மனமும் அவனை அல்லது அவளை சுற்றியே வட்டமிடுவதை உணருவீர்கள். பெரும்பாலும் இப்படிப்பட்ட உணர்ச்சிகள் இருவருக்கும் ஏற்படாமல் ஒருவருக்கு மட்டுமே ஏற்படுவதால் அந்த நபர் விரகதாபத்தில் நொறுங்கிப் போகிறார். இருவருக்குமே இப்படிப்பட்ட உணர்ச்சிகள் இருந்தாலும், அதில் ஒருவர் மணமுடிக்க போதிய முதிர்ச்சிவாய்ந்தவராக அல்லது போதிய வயதுடையவராக இல்லாதிருந்தால் ஏமாற்றங்களே மிஞ்சி, மனம் சுக்குநூறாகலாம். இப்படிப்பட்ட உறவுகள் உண்மையில் எங்கு போய் முடிகின்றன? “தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக் கூடுமோ?” என பைபிள் நீதிமொழி ஒன்று சொல்கிறது.—நீதிமொழிகள் 6:27.
இளம் நீனாவின் உதாரணத்தை கவனியுங்கள். “நான் ஒரு பையனை இன்டர்நெட்டில் ‘சந்தித்தேன்.’ நாள் தவறாமல் சாட் ரூமில் மணிக்கணக்கில் பேசி மகிழ்ந்தோம். அவனுடன் எனக்கு உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பு ஏற்பட்டது, என் வாழ்க்கையில் அவனே எல்லாம் என்று எண்ணினேன். ஆனால் அந்த உறவு நீடிக்கவில்லை. அது அறுந்தபோது இடிந்து போனேன். அதன் பிறகு, உறவு முறிவடைந்ததால் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக என்னிடம் அவன் சொன்னான். இது என்னை இன்னும் அதிக சோகத்தில் ஆழ்த்தியது” என அவள் சொல்கிறாள். கடந்த காலத்தை எண்ணிப் பார்த்து நீனா சொல்வதாவது: “டேட்டிங்கால் ஒரு பிரயோஜனமுமில்லை! அந்த உறவு துண்டிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் ஆன பின்பும் மன உளைச்சல் என்னை வாட்டி வதைக்கிறது.” யாரோடும் உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியாத அளவுக்கு நீனா சிறுமியாக இருந்தாள்.
ஆர்வத்திற்குரிய விஷயம் என்னவென்றால், “கன்னிகையை நாடிய மனுஷனுடைய வழி” என பைபிள் சொல்வது ஒருவேளை பாலுறவைக் குறிக்கலாம். இன்றைய உலகில் டேட்டிங் பெரும்பாலும் பாலுறவுக்கு வாசலைத் திறந்து வைக்கிறது. எந்த விகற்பமுமின்றி எதார்த்தமாக கைகோர்த்துக் கொள்வதில் அது ஆரம்பிக்கலாம். அடுத்து, சட்டென கட்டியணைத்து, கன்னத்தில் முத்தமிடலாம். மணமுடிக்க உறுதிபூண்ட வயது வந்த இளம் தலைமுறையினர் இருவர் தங்கள் காதலை இப்படி வெளிப்படுத்துகையில் விஷயமே வேறு. ஆனால் மண வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவே தெரியாத வயதிலிருக்கும் இருவர் இப்படியெல்லாம் நடந்துகொண்டால் அது தேவையில்லாமல் காமத்தீயை மூட்டிவிடும். ‘நேசத்தை’ தகாத முறையில் அல்லது ஆபாசமான விதத்தில் அதிகமதிகமாக வெளிக்காட்ட வழிவகுக்கலாம். சொல்லப்போனால் அவை ஏதோவொரு வித வேசித்தனத்திற்கே வழி நடத்தலாம். b
வேசித்தனத்தால் துன்பமிக்க கசப்பான விளைவுகள் ஏற்படுகின்றன. இதில் ஈடுபடும் சிலர் பால்வினை நோய்கள் தொற்றி அல்லல்படுகிறார்கள். இன்னும் சிலர் தன்மானம் இழந்து, மனசாட்சி மழுங்கிப் போய் தவிக்கிறார்கள். சில “குழந்தைகளே” குழந்தைகளைப் பெற்றெடுக்கும் 1 கொரிந்தியர் 6:13, 18; 1 தெசலோனிக்கேயர் 4:3) முதிராத பருவத்தில் டேட்டிங்கை தவிர்ப்பது இந்தக் கட்டளைக்கு கீழ்ப்படிய உங்களுக்கு உதவும்.
நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள். “வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்” என பைபிள் கட்டளையிடுவதில் ஆச்சரியமேதுமில்லை! (எப்போது டேட்டிங் செய்வது
அதற்காக நீங்கள் எப்போதுமே டேட்டிங்கில் ஈடுபடக்கூடாது என இது அர்த்தப்படுத்துவதில்லை. ஆனால் நீங்கள் டீனேஜர் என்றால் சந்தேகமின்றி பைபிள் குறிப்பிடும் ‘மலரும் பருவத்தில்’ இருக்கிறீர்கள். (1 கொரிந்தியர் 7:36, NW) நீங்கள் எப்படிப்பட்ட ஆணாக அல்லது பெண்ணாக ஆகப்போகிறீர்களோ அதற்கு அடியெடுத்து வைக்கும் பருவத்தில் இருக்கிறீர்கள். இந்தச் சமயத்தில் நீங்கள் உடல் ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் பால் ரீதியிலும் முதிர்ச்சியடைய ஆரம்பிக்கிறீர்கள். காமம் உட்பட உங்கள் உணர்ச்சிகள், ஒருபோதும் இல்லாத அளவுக்கு அப்போது உச்சக்கட்டத்தை அடையலாம். அவ்வாறு எழும் உணர்ச்சிகளும் வேகமான மாற்றங்களுக்கு உள்ளாகலாம். எனவேதான், டீனேஜ் காதல்கள் நீர்க்குமிழி போல் அற்ப காலமே நீடிக்கின்றன. “நான் டேட்டிங் போன காலத்தில் பொதுவாக ஒரு வாரம் ரொம்ப ஆர்வமாக இருப்பேன், மறுவாரம் சட்டையே செய்ய மாட்டேன்” என பருவ பெண் ஒருத்தி சொல்கிறாள்.
‘மலரும் பருவத்தில்’ டேட்டிங் போவது புத்திசாலித்தனமான காரியமல்ல என்பது தெளிவாக உள்ளது. உங்களையே நீங்கள் புரிந்துகொண்டு, உங்கள் விருப்பு வெறுப்புகளை நிதானித்து, உங்கள் எதிர்கால இலக்குகளை உணரும் வரை பொறுத்திருப்பது ரொம்ப நல்லது. மேலும், மணவாழ்க்கையின் பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றுவதற்கு போதுமான வயதும் உங்களுக்கு வேண்டும். உதாரணமாக, சரீர, பொருளாதார, ஆவிக்குரிய ரீதியில் தன் குடும்பத்தாரைக் கட்டிக் காக்கும்படி கணவனிடம் யெகோவா எதிர்பார்க்கிறார். நீங்கள் டீனேஜ் பையனா? வேலை தேடிக்கொண்டு, மனைவியையும் பிள்ளைகள் பிறந்தால் அவர்களையும் வைத்து காப்பாற்ற உங்களால் முடியுமா? ஆவிக்குரிய தன்மையை அவர்கள் காத்துக்கொள்ள உதவும் நிலையில் நீங்கள் இருக்கிறீர்களா? நீங்கள் சிறு பெண்ணா? மனைவி தன் கணவருக்கு அன்பையும் மரியாதையையும் காட்டுவது அவசியம்; அவர் எடுக்கும் தீர்மானங்களை ஆதரிக்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் அப்படி கட்டுப்பட்டு வாழ நீங்கள் தயாரா? மேலும் உணவு தயாரிப்பது, பிள்ளைகளை கவனிப்பது என அன்றாடம் வீட்டு காரியங்களை சமாளிக்கவும் நீங்கள் தயாரா?—எபேசியர் 5:22-25, 27ஆ-31; 1 தீமோத்தேயு 5:8.
உதாரணமாக, மேற்கத்திய நாடுகளில், குடும்பத்தாரை காரில் உட்கார வைத்து ஓட்டிச் செல்ல இளைஞர்கள் மிகவும் ஆசைப்படுகிறார்கள். ஆனால் அதற்கு அனுமதி பெற ஓர் இளைஞனோ குமரியோ என்ன செய்ய வேண்டும்? பெரும்பாலான நாடுகளில் டிரைவிங் லைசன்ஸ் வாங்க வேண்டுமென்றால் கொஞ்சம் பயிற்சியும் பின்னர் அதற்கான தேர்வில் தேர்ச்சியும் பெற வேண்டும். ஏன்? ஏனெனில் டிரைவிங் பொறுப்புமிக்க பணி. கார் ஸ்டீரிங்கை பிடித்துவிட்டால் உங்கள் உயிரும், மற்றவர்களுடைய உயிரும் உங்கள் கையில்தான். அதைப் போலவே மணவாழ்க்கையும் பெரும் பொறுப்புமிக்கது! டீனேஜராக அந்தப் பொறுப்பை ஏற்க நீங்கள் இன்னும் தயாராகவில்லை. அப்படியென்றால், டேட்டிங் செல்லும் சபலத்திற்கு வேலிபோடுவது நல்லது. ஏனெனில் ஏற்ற துணையைக் கண்டுபிடித்து கரம்பிடிப்பதற்கான வழியே டேட்டிங். சுருங்க சொன்னால்: மணமுடிக்க தயாராக இல்லையா, டேட்டிங் வேண்டாம்!
இதன் சம்பந்தமாக முத்தான முடிவெடுக்க, பைபிள் சொல்லும் “அறிவையும் விவேகத்தையும்” நீங்கள் பெற வேண்டும். (நீதிமொழிகள் 1:4) முதிர்ந்தவரின் அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்தி பயனடைவது ஞானமான செயலாக இருக்கலாம். நீங்கள் மணவாழ்க்கைக்குத் தயாரா என்பதைப் பொதுவாக கிறிஸ்தவ பெற்றோர்களே சரியாக தீர்மானிக்க முடியும். கிறிஸ்தவ சபையிலுள்ள முதிர்ச்சி வாய்ந்தவர்களிடமிருந்தும் நீங்கள் சில ஆலோசனைகளைப் பெற விரும்பலாம். நீங்கள் டேட்டிங் போவது உங்கள் பெற்றோருக்கு விருப்பமில்லை என்றால் அவர்கள் பேச்சை கேட்டு நடப்பது நல்லது. வரும் ‘தீங்கை நீக்கிப்போட’ உங்களுக்கு உதவி செய்யவே அவர்கள் விரும்புகிறார்கள்.—பிரசங்கி 11:10.
டேட்டிங்கில் ஈடுபட உங்களுக்கு வயது போதாதென்று அவர்கள் நினைத்தால் உங்கள் முழு கவனத்தையும் ஒரே நபரிடம் செலுத்தாமல் அநேக நண்பர்களோடு பேசி பழகும்படி அவர்கள் உங்களுக்கு சொல்லலாம். மணமாகாதவர் மணமானவர், பெரியவர் சிறியவர், உங்கள் வயதொத்தவர்கள் என எல்லாருடனும் பழகுவது உங்கள் ஆளுமையை செதுக்கி சீராக்குவதுடன் வாழ்க்கையையும் திருமணத்தையும் பற்றிய எதார்த்தமான எண்ணத்தை பெறுவதிலும் உங்களுக்கு கைகொடுக்கும்.
டேட்டிங்கிற்கு ஏற்ற வயதை எட்டும்வரை காத்திருப்பது எளிதல்ல. ஆனால் காத்திருப்பதில் பலனுண்டு. முதிர்ச்சியும் பொறுப்பும் உடைய ஆணாக, பெண்ணாக வளருவதற்கு ‘மலரும் பருவத்தை’ பயன்படுத்திக் கொள்கையில், எண்ணற்ற பிரச்சினைகளிலிருந்து உங்களைக் காத்துக்கொள்வீர்கள். மணவாழ்க்கைக்கு சவால்விடும் அழுத்தங்களையும் பொறுப்புக்களையும் சமாளிக்கும் பக்குவத்தை அடைவதற்கு தேவையான காலத்தைப் பெறுவீர்கள். ஆவிக்குரிய ஆளாக வளருவதற்கும் போதிய காலத்தைப் பெறுவீர்கள். இப்படி, ஆணோடோ பெண்ணோடோ பழகுவதற்கு ஏற்ற பக்குவத்தை பெறுவீர்கள்; மற்றவர்களும் நெருங்கிப் பழகுவதற்கு உகந்த ஒருவராக உங்களை கருதுவார்கள். (g01 12/22)
[அடிக்குறிப்புகள்]
a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
b வேசித்தனம் என்பதற்குரிய கிரேக்க வார்த்தை போர்னியா. இது, தாம்பத்திய உறவுக்குப் புறம்பே இனப்பெருக்க உறுப்புகளை உபயோகிக்கும் காமச் செயலைக் குறிக்கிறது. இது இனப்பெருக்க உறுப்புகளை கிளர்ச்சியடையச் செய்வதையும் வாய்வழி புணர்ச்சியையும் உட்படுத்துகிறது.
[பக்கம் 14-ன் படம்]
காதல் நெருக்கங்கள் பெரும்பாலும் தொல்லையில் முடிகின்றன