உலகை கவனித்தல்
உலகை கவனித்தல்
மதக் கொள்ளை
“சட்டம் எவ்வளவுதான் கெடுபிடியாய் இருந்தாலும், ஐரோப்பாவில் மத சம்பந்தப்பட்ட பொருட்களை திருடுவதும் விற்பனை செய்வதும் குறையவே இல்லை” என பிரெஞ்சு கத்தோலிக்க செய்தித்தாள் லா க்ரவா குறிப்பிடுகிறது. அவ்வாறு திருடப்படும் பொருட்களில் சிலுவைகள், பர்னிச்சர், தங்க, வெள்ளி சாமான்கள், சிற்பங்கள், ஓவியங்கள் ஆகியவற்றோடு பீடங்களும் உள்ளன. இன்டர்நேஷனல் கவுன்சில் ஆஃப் மியூஸியம்ஸ் கூறுவதன்படி, சமீப ஆண்டுகளில் செக் குடியரசில் 30,000 முதல் 40,000 வரையான பொருட்களும் இத்தாலியில் 88,000-க்கும் அதிகமான பொருட்களும் திருடப்பட்டுள்ளன. 87 கத்தீட்ரல்களைக் கொண்ட பிரான்ஸும் திருடர்களின் முக்கிய குறியாக உள்ளது. 1907-க்கும் 1996-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் “வரலாற்றுச் சின்னங்க”ளாக கருதப்பட்ட கிட்டத்தட்ட 2,000 பொருட்கள் பிரான்ஸிலுள்ள மத அமைப்புகளிலிருந்து திருடப்பட்டன; அவற்றில் 10 சதவீதத்திற்கும் குறைவானவையே மீட்கப்பட்டன. இப்படிப்பட்ட கொள்ளையைக் கட்டுப்படுத்த முடியவில்லை; ஏனெனில் சர்ச்சுகள் எளிதில் நுழையும் இடங்களாக இருக்கின்றன, பெரும்பாலும் தகுந்த பாதுகாப்பும் இருப்பதில்லை.(g01 12/08)
ஆபாசப் பட வியாபாரம்
“கால்பந்து, கூடைப்பந்து, பேஸ்பால் ஆகிய மூன்று விளையாட்டுகளிலும் வசூலாவதைவிட ஆபாச வியாபாரத்தில் அமோக வசூல் ஆகிறது. அமெரிக்காவில் திரைப்பட டிக்கெட்டுகளுக்கும் கலை நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் வசூலாகும் பணத்தைவிட, ஆபாசப் படத்திற்கு எக்கச்சக்கமாக வசூலாகிறது” என த நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை குறிப்பிடுகிறது. “ஐக்கிய மாகாணங்களில், ஆபாச ஒலி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளிலும், ஒரு படத்துக்கு இவ்வளவு பணம் என தனியாக விலை நிர்ணயிக்கப்பட்டு கேபிள் டிவியிலும் சாட்டலைட் டிவியிலும் காட்டப்படும் ஆபாச திரைப்படங்கள், இன்டர்நெட் வெப் சைட்டுகள், ஓட்டல் ரூம்களில் காட்டப்படும் திரைப்படங்கள், போனில் செக்ஸ் உரையாடல்கள், பாலுணர்வு கிளர்ச்சியளிக்கும் பொருட்கள் ஆகியவற்றுடன் . . . ஆபாச பத்திரிகைகள் என அனைத்தையும் சேர்த்துப் பார்த்தால், ஆபாச வியாபாரத்தில் மொத்தம் 1,000 கோடி டாலர் முதல் 1,400 கோடி டாலர் வரை வசூலாவதாக கணக்கிடப்படுகிறது.” அந்தக் கட்டுரை மேலும் கூறுவதாவது: “60 கோடி டாலர் பணம் வசூலாகும் பிராட்வே திரை உலகுடன் ஒப்பிடுகையில், 1,000 கோடி டாலர் பணத்தை அள்ளித் தரும் இந்த ஆபாசம், இனியும் சில்லறை வியாபாரமாய் இருக்கப் போவதில்லை; மாறாக, இதற்கே மவுசு அதிகம்.” உதாரணமாக, கடந்த ஆண்டு 400 ஹாலிவுட் படங்கள் திரைக்கு வந்தன; அதே சமயத்தில் “வயது வந்தவர்களுக்கு மட்டும்” என குறிக்கப்பட்ட 11,000 ஆபாசப் பட வீடியோக்கள் வந்து குவிந்தன. இருந்தாலும், அமெரிக்கர்களில் சிலர் மட்டுமே தாங்கள் அவற்றைக் கண்டதை ஒப்புக்கொள்வார்கள். “ஆபாசப் பட வியாபாரத்தைப் போல பணம் கொழிக்கும் வியாபாரம் வேறு எதுவுமில்லை” என டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது. “ஒருவருமே காண்பதில்லை என சொல்லப்படும் ஆபாசப் படம்; அதே சமயத்தில் ஒரு நாளும் முடங்கிவிடாததும் அதுவே என்பதுதான் ஆச்சரியம்.”(g01 12/08)
லண்டனை அச்சுறுத்தும் நீர்மட்டம்
லண்டனில், “[மாநகரை] மூழ்கடித்து விடப்போவதாக அச்சுறுத்தும் நிலத்தடி நீரை பம்ப் செய்து அகற்றுவதற்காக நிலத்தில் துளைகள் இடப்படுகின்றன” என தி எக்கனாமிஸ்ட் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. ட்ரஃப்பால்கர் ஸ்கொயரில் நிலத்தடி நீரின் மட்டம் இப்போது 40 மீட்டராக உயர்ந்துள்ளது. கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், தொழிற்சாலைகள் கோடிக்கணக்கான லிட்டர் கொள்ளளவுள்ள நீரை பயன்படுத்தியபோது, அந்த ஸ்கொயரில் நிலத்தடி நீரின் மட்டம் 93 மீட்டர் ஆழத்திலிருந்ததாக கணக்கிடப்பட்டது; ஆண்டுக்கு சுமார் 3 மீட்டர் என்ற கணக்கில் அது உயர்ந்து வருகிறது; எனவே லண்டனின் சுரங்க ரயில் பாதை, சுரங்கப் பாதையில் பல கிலோமீட்டர் தூரத்துக்குப் போடப்பட்டுள்ள ஒயரிங்குகள், அநேக கட்டட அஸ்திவாரங்கள் ஆகியவற்றுக்கு ஆபத்தாகிவிடலாம். சுமார் 50 இடங்களில் துளையிடப்பட வேண்டும் என்பதாக கணக்கிடப்படுகிறது. “தற்போது லண்டனுக்கு அடியிலிருந்து ஒரு நாளில் மொத்தம் சுமார் 5 கோடி லிட்டர் நிலத்தடி நீர் பம்ப் செய்து அகற்றப்படுவதாக சுற்றுச்சூழல் ஏஜென்ஸி கணக்கிடுகிறது” என அந்தச் செய்தித்தாள் சொல்கிறது; ஆனால் நிலைமை சீராக இருக்க, பத்தாண்டுகளுக்குள் இதைப் போல் இரண்டு மடங்கு நீரை பம்ப் செய்து அகற்ற வேண்டியிருக்கும். (g01 12/08)
ஆந்தையின் அலறல்கள் ஆரோக்கிய அறிவிப்பொலிகள்
பழுப்புமஞ்சள் ஆந்தைகள் அலறுகையில், அவற்றின் உடல்நிலையை அறிவிக்கின்றன என்பதாக தி எக்கனாமிஸ்ட் பத்திரிகை கூறுகிறது. “பிரிட்டன்ஸ் சென்டர் ஃபார் எக்காலஜி அண்டு ஹைட்ராலஜியைச் சேர்ந்த ஸ்டீவன் ரெட்பாத் மற்றும் அவரோடு சேர்ந்து பணியாற்றுபவர்கள் இங்கிலாந்தின் வட பகுதியிலுள்ள கீல்டர் காட்டில் வசிக்கும் 22 பழுப்புமஞ்சள் ஆந்தைகளை ஆராய்ச்சி செய்தனர்.” ஆராய்ச்சியாளர்கள் “முன்பின் அறிமுகமில்லாத ஆண் ஆந்தை ஒன்றின் பதிவுசெய்யப்பட்ட அலறலை ஆராய்ச்சிக்கு உட்பட்டிருந்த ஆந்தைகளுக்குப் போட்டுக் காட்டி, அவை அந்த அலறல்களுக்குப் பிரதிபலிக்க எடுக்கும் நேரத்தை குறித்து வைத்துக்கொண்டனர்.” தங்கள் இரத்த ஓட்டத்தில் அதிக ஒட்டுண்ணிகளைக் கொண்டிருந்த ஆந்தைகள் அலறுவதற்கு அதிக நேரம் எடுத்தன; அதாவது, ஒட்டுண்ணி இல்லாத ஆந்தைகள் பிரதிபலித்ததைக் காட்டிலும் இரு மடங்கு நேரத்தை அதிக ஒட்டுண்ணிகள் இருந்த ஆந்தைகள் எடுத்துக்கொண்டன. அத்துடன், அதிக ஒட்டுண்ணிகளைக் கொண்டிருந்த பழுப்புமஞ்சள் ஆந்தைகள் அலறினபோது, நல்ல சுகத்துடன் இருந்த பறவைகளின் ஒலியைவிட குறைவான ஒலியையே அவை எழுப்பின. “சந்தேகமின்றி, ஆந்தைகளும் அறியாத தற்செயலான கண்டுபிடிப்பு இது” என்று தி எக்கனாமிஸ்ட் கூறுகிறது.(g01 12/22)
பிள்ளையிடம் வாசிப்பதன் பலன்கள்
“தாய் தந்தை பிரியத்துடன் வாசிப்பதை [பிள்ளைகள்] பார்க்கும்போது, அவர்களைப் போலவே தாங்களும் வாசிக்க முயலுகின்றனர்” என போலிஷ் வாராந்தர பத்திரிகை சீயாசூக்கா கூறுகிறது. பிள்ளைகள் டிவி பார்க்கும் பழக்கம் அதிகரித்து வரும் இந்தக் காலத்தில் இரண்டு வயதே நிரம்பிய சிறு பிள்ளைகளுக்கும்கூட படங்களைக் காட்டி அவர்கள் கவனத்தை
ஈர்த்து அவற்றை விளக்கிச் சொல்லி அவர்களுக்கு வாசித்துக் காட்டுவது பலன் தருகிறது என்பதாக அந்தக் கட்டுரை கூறுகிறது. தாங்கள் வாசித்துக் காட்டிய பகுதியை பிள்ளை விளங்கிக்கொண்டதா என்பதை கண்டறிவதற்காக, வாசித்து முடித்த பிறகு பிள்ளையிடம் பெற்றோர் கேள்வி கேட்கலாம். “பிள்ளைக்கு திடீரென சலிப்புத் தட்டிவிட்டால் . . . , சுவாரஸ்யமாக சைகை செய்து காட்டியும் குரலை ஏற்றி இறக்கியும் வாசிப்புக்கு உயிர் கொடுக்கலாம்.” தங்கள் பிள்ளைக்கு ஆர்வமூட்டுபவை எவையென தெரிந்துகொண்டு அவற்றைப் பற்றி அதனிடம் பேசும்படி பெற்றோருக்கு அறிவுறுத்தப்படுகிறது. “நீங்கள் சிறுபிள்ளையாய் இருந்தபோது விரும்பி வாசித்த புத்தகங்களைப் பற்றி சொல்லுங்கள்; அவற்றில் ஆர்வமூட்டும் சில தலைப்புகளை குறிப்பிடுங்கள். . . . பிள்ளைகள் தாங்களாகவே வாசிக்க ஆரம்பித்தாலும் அவர்களுக்கு வாசித்துக் காட்டுவதை நிறுத்திவிடாதீர்கள்” என சீயாசூக்கா கூறுகிறது. “சில சமயங்களில் உற்சாகமூட்டுவதற்காக ஆரம்ப பக்கங்களில் சிலவற்றை வாசித்துக் காட்டினால்போதும், பிள்ளை ஆர்வத்துடன் தொடர்ந்து வாசிக்கும்.” (g01 12/22)உலகின் பால் உற்பத்தியில் முன்னணி
உலகிலேயே பால் உற்பத்தியில் முன்னணியில் நிற்கும் நாடு இந்தியா என்பதாக த ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தித்தாள் குறிப்பிடுகிறது. “[வாஷிங்டன், டி.சி., ஐ.மா.-வில் உள்ள] சுற்றுச்சூழலில் அக்கறை காட்டும் உவர்ல்ட்வாட்ச் இன்ஸ்ட்டிட்யூட் இந்தியாவின் பால் புரட்சியை புகழ்ந்துள்ளது” என அந்த அறிக்கை கூறுகிறது. “1994 முதல் பால் இந்தியாவின் முதன்மை பண்ணைப் பொருளானது; 1997-ல், அமெரிக்காவையும் விஞ்சி, இந்நாடு பால் உற்பத்தியில் உலகில் முதலிடம் பிடித்தது.” உவர்ல்ட்வாட்ச் இன்ஸ்ட்டிட்யூட்டின் சேர்மன், லெஸ்டர் ப்ரௌன் பின்வருமாறு சொன்னதாக கூறப்படுகிறது: “குறிப்பிடத்தக்க வகையில், தானியத்திற்குப் பதில் பண்ணையின் உப பொருட்களையும் அறுவடைக்குப் பின் மீந்துள்ள பயிரையும் கால்நடைகளின் உணவுக்குப் பயன்படுத்தியே அது அந்நிலைக்கு உயர்ந்தது. மனிதர் உண்ணும் தானியத்தை கால்நடைகளுக்குக் கொடுக்காமல் இந்தியாவால் புரோட்டீன் அளவை அதிகரிக்க முடிந்தது.” (g01 12/22)
அழுக்குப் பணம்
“காகிதப் பணத்தில் பாக்டீரியா மயம்” என கனடாவின் த குளோப் அண்ட் மெய்ல் செய்தித்தாள் கூறுகிறது. அநேகமாக புழக்கத்திலுள்ள அனைத்து நோட்டுகளிலும் ஸ்ட்ரெப்டோ காக்கஸ், என்ட்ரோ பாக்டர், சூடோமோனாஸ் போன்ற கிருமிகளும், இன்னும் பிற கிருமிகளும் தொற்றியுள்ளன என்பதாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வு காட்டியது. இக்கிருமிகள், “பலவீனமான முதியவர்கள், எச்ஐவி-எய்ட்ஸ் தொற்றியவர்கள் போன்ற நோய் எதிர்ப்பு சக்தி குறைவாயுள்ள நோயாளிகளுக்கு ஆபத்தாயிருக்கலாம்” என த குளோப் செய்தித்தாள் கூறுகிறது. சில நோட்டுகளில் இன்னும் ஆபத்தான பாக்டீரியாக்கள் தொற்றியுள்ளன. நிஜமாகவே “பண சலவை” செய்ய வேண்டிய காலமாக இது இருக்கலாமென ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஜப்பானில், “பண நோட்டுகளிலுள்ள அநேக பாக்டீரியாக்களை கொல்லுவதற்குத் தேவையான, அதே சமயத்தில் பணத்தை எரித்துவிடாத வெப்பநிலையான 200 டிகிரி சென்டிகிரேட்டுக்கு (392 டிகிரி ஃபாரன்ஹீட்) வெப்பமூட்டப்பட்ட யென் நோட்டுக்களை விநியோகிக்கும்” “சுத்தமான ATMகளில்” இருந்து நுகர்வோர் ஏற்கெனவே பணம் பெற முடிகிறது. பணத்தை கையில் தொட்ட பிறகு, “கையைக் கழுவுங்கள்!” என்று த குளோப் சிபாரிசு செய்கிறது. (g01 12/22)
குழாய் தண்ணீரும் பாட்டில் தண்ணீரும்
“பாட்டில் தண்ணீர் அவ்வளவு பிரபலம் அடைந்திருப்பதால் உலக முழுவதிலும் 700-க்கும் அதிகமான பிராண்டுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன” என த நியூ யார்க் டைம்ஸ் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. ஆனாலும், “அநேக சந்தர்ப்பங்களில், அதிக விலை கொடுத்து வாங்கும் பாட்டில் தண்ணீருக்கும் குழாய் தண்ணீருக்கும் இடையே உள்ள ஒரே வித்தியாசம், அந்த பாட்டில் தான்.” உலக இயற்கை வள பாதுகாப்பு அமைப்பு (WWF) குறிப்பிட்டபடி, “அநேக நாடுகளில் 1,000 மடங்கு அதிக விலைக்கு விற்கப்பட்டாலும், குழாய் தண்ணீரைவிட பாட்டில் தண்ணீர் பாதுகாப்பானதாயும் ஆரோக்கியமானதாயும் இருப்பதில்லை.” குழாய் தண்ணீரை பயன்படுத்துவது பணத்தை மிச்சப்படுத்துவதோடு, சுற்றுச்சூழலுக்கும் உறுதுணையாய் இருக்கும்; ஏனெனில் ஒவ்வொரு வருடமும் தண்ணீர் பாட்டில்களுக்கென்று 15 லட்சம் டன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது; “பாட்டில்களை உற்பத்தி செய்கையிலும் சிதைவுறச் செய்கையிலும் வெளியாகும் நச்சுத்தன்மையுள்ள ரசாயனப் பொருட்கள், காலநிலையையே மாற்றிவிடும் இயல்புள்ள வாயுக்களை வெளிவிடலாம்.” WWF இன்டர்நேஷனல்ஸ் ஃபிரஷ் வாட்டர் புரோகிராமின் தலைவரான டாக்டர் பிக்ஷம் கூஜா கூறுவதன்படி, “ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பாட்டில் தண்ணீர் தொழிற்சாலைகள் பின்பற்றும் விதிமுறைகளைக் காட்டிலும் குழாய் தண்ணீரை ஒழுங்குபடுத்துவதற்கு பின்பற்றப்படும் விதிமுறைகள் அதிகம்.” (g01 12/08)
காளான்களாய் முளைக்கும் அமெரிக்க மசூதிகள்
பெருகி வரும் இஸ்லாமிய மக்கள் தொகையைக் குறிப்பிட்டுக் காட்டும் வகையில், “ஐக்கிய மாகாணங்களில் மசூதிகளின் எண்ணிக்கை ஆறு வருடங்களில் 25 சதவீதம் அதிகமாகி [இருக்கிறது], 1,200-க்கும் அதிகமாகி இருக்கிறது” என த நியூ யார்க் டைம்ஸ் செய்தித்தாள் கூறுகிறது. தற்போதைய இஸ்லாமிய மக்கள் தொகை “சுமார் 40 முதல் 60 லட்சம்” என ஜார்ஜ்டவுன் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த முஸ்லிம்-கிறிஸ்தவ இணக்க மையத்தில் இயக்குநராக பணிபுரியும் ஜான் எஸ்போஸீட்டோ கருத்து தெரிவிக்கிறார். நான்கு அமெரிக்க இஸ்லாமிய நிறுவனங்களால் ஆதரிக்கப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வின்படி, அந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம். என்னவாக இருந்தாலும், “தொடர்ந்து குடியேறுவதும், ஒப்பிடுகையில் அநேக இஸ்லாமிய குடும்பங்களின் அளவு பெரிதாக இருப்பதும்” அதிகரிப்பு தொடருவதற்கு காரணமாகும் என்பதாக எஸ்போஸீட்டோ குறிப்பிட்டார். “சில பத்தாண்டுகளுக்குள்ளேயே இஸ்லாம் மதம் அமெரிக்காவில் இரண்டாவது மிகப் பெரிய மதமாக இருக்கும்.” “எக்கச்சக்கமான ஆண்களே” மசூதிகளுக்கு செல்வதாக கண்டுபிடிக்கப்பட்டது என டைம்ஸ் செய்தித்தாள் கூறுகிறது. “வழிபடுபவர்கள் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தனர்: மூன்றில் ஒரு பங்கினர் தென் ஆசியர்கள், 30 சதவீதத்தினர் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், 25 சதவீதத்தினர் அரேபியர்கள்” என்றும் அந்த ஆய்வு காட்டியது. (g01 12/22)