Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கோட்டை கடத்தல்

கோட்டை கடத்தல்

கோட்டை கடத்தல்

காலத்தை கடந்து மறுபடியும் கடந்த காலத்திற்குள் செல்ல அல்லது எதிர்காலத்திற்குள் நுழைந்து பார்க்க மனிதன் நீண்டகாலமாகவே கனவு கண்டிருக்கிறான். ஆகவே, ஒவ்வொரு நாளும் சிலர் ஒரு கருத்தில் காலத்தை கடக்கின்றனர் என சொன்னால் அது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்குமல்லவா? டோக்கியோவாசியான வியாபாரி ஒரு கூட்டத்திற்காக நியூ யார்க் செல்வதை கற்பனை செய்து பாருங்கள். அவருடைய விமானம் மதியம் கிளம்பி, எங்கும் தரையிறங்காமல் ஏறக்குறைய உலகின் பாதி பாகத்தை சுற்றி, அவர் வீட்டிலிருந்து கிளம்பிய நேரத்திற்கும் முன்பாகவே, அதே நாள் காலையில் நியூ யார்க் போய் சேருகிறது!

நீண்ட தூரம் பிரயாணம் செய்த பிறகும் நீங்கள் கிளம்பிய நேரத்திற்கு முன்பாகவே ஓர் இடத்திற்கு போய் சேர முடியுமா? முடியவே முடியாது. ஆனால் தொலைதூரத்தில் அமைந்த நகரங்கள் வித்தியாசப்பட்ட கால மண்டலங்களில் அமைந்துள்ளன. உண்மை என்னவென்றால், பூமியின் மேலுள்ள கண்ணுக்கு புலப்படாத சர்வதேச தேதிக் கோட்டை கடக்கையில், நாட்களை பிரிக்கும் ஒப்புக்கொள்ளப்பட்ட எல்லையை கடக்கிறீர்கள். அது உண்மையிலேயே குழப்பமடைய செய்யும் அனுபவம்தான்! எந்தத் திசையில் பயணம் செய்கிறீர்கள் என்பதை பொறுத்து ஒரே நொடியில் ஒரு நாளை அதிகமாக பெறுவது அல்லது இழப்பது போல இருக்கும்.

டோக்கியோ திரும்ப வேண்டிய அந்த வியாபாரி நியூ யார்க்கிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு கிளம்புவதாக வைத்துக்கொள்வோம். சுமார் 14 மணிநேரம் கழித்து அவர் விமானத்தைவிட்டு இறங்குகையில் ஜப்பானில் ஏற்கெனவே வியாழக்கிழமை ஆகியிருக்கும். ஒரு முழு நாள் தொலைந்து போனது எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது! அனுபவம் வாய்ந்த பயணி ஒருவர், சர்வதேச தேதிக் கோட்டை முதன்முறையாக கடந்த தன் அனுபவத்தை நினைவுபடுத்தி இவ்வாறு ஒப்புக்கொண்டார்: “தொலைந்து போன அந்த நாள் எங்கே போனது என்றே எனக்கு புரியவில்லை. மிகவும் குழம்பிப் போனேன்.”

தேதிக் கோடு பயணிகளை இந்தளவுக்கு குழப்பமடைய செய்வதால் அப்படிப்பட்ட ஒரு எல்லைக் கோடு ஏன் கண்டுபிடிக்கப்பட்டது என சிலர் யோசிக்கலாம்.

மாலுமிகளின் கண்டுபிடிப்பு

நாம் 1522-⁠ம் ஆண்டுக்கு சென்றால் தேதிக் கோட்டின் அவசியம் தெளிவாக புரியும். அப்போதுதான், ஃபர்டினான்டு மெகல்லனுடைய மாலுமிகள் குழு பூமியை முதன்முறையாக சுற்றி வந்தது. மூன்று வருடம் கடலில் சுற்றிய பிறகு அவர்கள் செப்டம்பர் 7, ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்பெயின் வந்து சேர்ந்தனர். அவர்களுடைய கப்பலின் குறிப்பு புத்தகமோ அன்று செப்டம்பர் 6, சனிக்கிழமை என்று காட்டியது. ஏன் இந்த வேறுபாடு? சூரியன் பயணிக்கும் திசையிலேயே அவர்களும் பூமியை சுற்றி வந்ததால், ஸ்பெயினில் இருந்தவர்களோடு ஒப்பிட அவர்கள் ஒரு சூரிய உதயத்தை குறைவாக கண்டனர்.

இதற்கு எதிர்மாறான நிகழ்ச்சியை, எண்பது நாட்களில் உலகை சுற்றி என்ற ஆங்கில நாவலில் நாவலாசிரியர் ஜூல்ஸ் வர்ன் கதையின் திருப்பமாக உபயோகித்தார். அந்த நாவலின் முக்கிய கதாபாத்திரம் மாபெரும் தொகையை பரிசாக பெற 80 நாட்களுக்குள் உலகை முழுமையாக சுற்றிவர வேண்டும். தன் பயணத்தை முடித்து வீடு திரும்புகையில் அவன் ஏமாற்றமடைகிறான், ஏனெனில் பரிசு தொகையை பெற ஒரு நாள் தாமதமாகிவிடுகிறது. சொல்லப்போனால் அவனுக்குத்தான் அவ்வாறு தோன்றியது. உண்மையில், குறிக்கப்பட்ட நாளிலேயே திரும்பிவிட்டதை அறிகையில் ஆச்சரியமடைகிறான். அந்த புத்தகம் விளக்குகிறபடி: “பைலீயஸ் ஃபாக் தனது பயணத்தின்போது தன்னை அறியாமலேயே ஒரு நாளை அதிகம் பெற்றான். அவன் கிழக்கு நோக்கியே சென்றதால்தான் இவ்வாறு நிகழ்ந்தது.”

திரு. வர்னின் கதை சுபமாக முடிய சர்வதேச தேதிக் கோடே காரணமாக தோன்றினாலும், அந்த புகழ்பெற்ற நாவல் 1873-⁠ல் வெளியிடப்பட்டபோது அந்த கோடு இன்னும் ஸ்தாபிக்கப்படவில்லை. அக்கால கப்பல் தலைவர்கள் பசிபிக் கடலை கடக்கையில் தங்கள் நாட்காட்டியில் ஒரு நாள் மாற்றத்தை செய்துகொண்டனர், ஆனால் தற்போதைய தேதிக் கோடு அவர்களுடைய வரைபடங்களில் காணப்படவில்லை. ஏனெனில் இது, கால மண்டலங்கள் பற்றிய உலகளாவிய ஓர் ஏற்பாடு ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முந்தைய காலமாகும். இவ்வாறு அலாஸ்கா, ரஷ்யாவுக்கு சொந்தமாக இருக்கையில் அங்கிருந்த மக்கள் மாஸ்கோவாசிகளின் தேதியையே பின்பற்றினர். ஆனால், 1867-⁠ல் ஐக்கிய மாகாணங்கள் அலாஸ்காவை விலை கொடுத்து வாங்கிய பிறகு அங்கிருப்பவர்கள் ஐக்கிய மாகாணங்களின் தேதியை ஏற்றுக்கொண்டனர்.

சரித்திரப்பூர்வ முன்னேற்றங்கள்

நேரம் காப்பதில் நிலவிய குழப்பத்திற்கு மத்தியில் 1884-⁠ல் 25 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள், சர்வதேச பிரதான தீர்க்கரேகை மாநாட்டிற்காக வாஷிங்டன், டி.சி.-யில் கூடினர். அவர்கள் 24 காலநிலை மண்டலங்கள் கொண்ட உலகளாவிய ஏற்பாட்டை ஸ்தாபித்து, இங்கிலாந்திலுள்ள கிரீன்விச்சை கடக்கும் தீர்க்கரேகையே பிரதான தீர்க்கரேகை என ஒப்புக்கொண்டனர். a பூமியின் கிழக்கிலும் மேற்கிலும் உள்ள இடங்களை அளப்பதற்கு அதுவே ஆரம்ப புள்ளியானது.

கிரீன்விச்சிலிருந்து பூமியை பாதி தூரம்​—⁠கிழக்கிலோ மேற்கிலோ 12 காலநிலை மண்டலங்கள் தூரம்​—⁠சுற்றினால் வரும் இடமே சர்வதேச தேதிக் கோட்டிற்கு தகுந்த இடம் என தோன்றியது. 1884-⁠ம் வருட மாநாடு அதை அதிகாரப்பூர்வமாக ஏற்கவில்லை என்றாலும், 180 டிகிரி தீர்க்கரேகையே மிகவும் பொருத்தமான இடமாக அங்கீகரிக்கப்பட்டது. ஏனெனில், அந்த இடத்தில்தான் தேதிக் கோடு எந்தவொரு கண்டத்தையும் கடக்காமல் சென்றது. நீங்கள் வசிக்கும் தேசத்தின் ஒரு பகுதியில் ஞாயிற்றுக்கிழமையாகவும் மறுபகுதியில் திங்கட்கிழமையாகவும் இருந்தால் எவ்வளவு குழப்பம் ஏற்படும் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?

உலக அட்லஸை அல்லது கோள உருண்டையை நீங்கள் பார்த்தால், 180 டிகிரி தீர்க்கரேகை ஹவாய்க்கு மேற்கில் செல்வதை காண்பீர்கள். ஆனால், சர்வதேச தேதிக் கோடு அந்த தீர்க்கரேகையோடு சேர்ந்தே செல்வதில்லை என்பதை உடனே கவனிப்பீர்கள். பசிபிக் பெருங்கடலை கடக்கையில் நிலப்பகுதியை முற்றிலும் தவிர்ப்பதற்காக அது வளைந்து நெளிந்து செல்வதை காண்பீர்கள். அந்த தேதிக் கோடு, சர்வதேச ஒப்பந்தத்தின் மூலமாக இல்லாமல் பொதுவான ஒப்புதலின் அடிப்படையிலேயே ஸ்தாபிக்கப்பட்டதால் எந்தவொரு தேசத்தின் விருப்பத்திற்கும் ஏற்றவாறு அது மாறக்கூடும். உதாரணமாக, சர்வதேச தேதிக் கோடு கிரிபடி தீவுக்கூட்டங்கள் ஊடாக சென்றதால் இனி அத்தேசத்தின் கிழக்கு எல்லையிலுள்ள தீவையும் தாண்டியே அது செல்லும் என 1995-⁠ல் கிரிபடி அறிவித்தது. ஆகவே, கிரிபடி தீவுகள் அனைத்தும் அந்த கோட்டின் ஒரே பக்கம் இருப்பதாக இன்றைய வரைபடங்கள் காட்டுகின்றன. இவ்வாறு அவை அனைத்தும் ஒரே நாட்காட்டி நாளையே பின்பற்றுகின்றன.

அது செயல்படும் விதம்

தேதிக் கோட்டை கடக்கையில் எப்படி ஒரு நாளை இழக்கிறோம் அல்லது பெறுகிறோம் என்பதை புரிந்துகொள்ள நீங்கள் கப்பலில் பூமியை சுற்றி வருவதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். அதுவும் கிழக்கு நோக்கி செல்வதாக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அறியவில்லை என்றாலும், ஒவ்வொரு காலநிலை மண்டலத்தை கடந்து செல்கையிலும் ஒரு மணிநேரத்தை அதிகம் பெறுவதாக கருதப்படும். உலகை சுற்றிவிட்டு நீங்கள் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேருகையில் மொத்தம் 24 காலநிலை மண்டலங்களை கடந்து வந்திருப்பீர்கள். சர்வதேச தேதிக் கோடு இல்லையென்றால், உள்ளூர் நேரத்தோடு ஒப்பிட ஒரு நாள் முன்பே வந்து சேருவீர்கள். சர்வதேச தேதிக் கோடே இந்த வித்தியாசத்தை சரி செய்கிறது. கொஞ்சம் குழப்பமாக இருக்கிறதல்லவா? ஆகவே, பூமியை சுற்றி வந்த தேதியை கணிப்பதில் மெகல்லனின் மாலுமிகள் குழுவும் பைலீயஸ் ஃபாகும் தவறு செய்ததில் எந்த ஆச்சரியமும் இல்லையே!

திடீரென ஒரு நாளை இழந்த அல்லது அதிகமாக பெற்ற வினோதமான உணர்வை அந்த கோட்டை கடந்தவர்கள் அறிவார்கள். ஆனால், சர்வதேச தேதிக் கோடு இல்லையென்றால் பயணம் செய்வது இன்னும் அதிக குழப்பத்தை ஏற்படுத்தும். (g01 12/22)

[அடிக்குறிப்பு]

a காலநிலை மண்டலங்கள், தீர்க்கரேகைகள் பற்றிய கூடுதலான தகவலுக்கு, 1995, மார்ச் 8 தேதியிட்ட விழித்தெழு!-வில் “பயனுள்ள அந்தக் கற்பனைக் கோடுகள்” என்ற கட்டுரையை காண்க.

[பக்கம் 21-ன் படம்/தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

மார்ச் | மார்ச்

2 | 1

[பக்கம் 22-ன் படங்கள்]

மேலே: கிரீன்விச் ராயல் ஆய்வுக்கூடம்

வலது: இந்த உருளைக்கல் கோடுதான் பிரதான தீர்க்கரேகையை குறிக்கிறது