மூட்டு அழற்சியால் அவதிப்படுவோருக்கு நம்பிக்கை
மூட்டு அழற்சியால் அவதிப்படுவோருக்கு நம்பிக்கை
“மக்கள் இருதய நோயால் அல்லது புற்றுநோயால் இறக்கும் அளவுக்கு மூட்டு அழற்சியால் இறப்பதில்லை, ஆனால் வாழ்க்கை தரத்தை அது பெரிதும் பாதிக்கிறது” என டாக்டர் ஃபாட்டிமா மீலீ கூறுகிறார். ஒருவருடைய வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் மூட்டு அழற்சி பாதிக்கலாம். மூட்டு அழற்சியால் அவதியுறுபவர்கள் எதிர்ப்படும் பிரச்சினைகளில் சில யாவை? இவற்றை சமாளிக்க முடியுமா?
இத்தாலியிலிருந்து 28 வயது காட்யா a சொல்வதாவது: “20 வயதிலேயே மூட்டு அழற்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் என் வாழ்க்கையே அடியோடு மாறிவிட்டது. வலி காரணமாக என் வேலையை விட வேண்டியதாயிற்று; முழுநேர ஊழியத்தையும் விட வேண்டியதாயிற்று.” விதிவிலக்கின்றி, மூட்டு அழற்சியால் அவதிப்படுவோர் அனைவருக்குமே வலி ஏற்படுகிறது. இங்கிலாந்திலிருந்து 63 வயது ஆலன் சொல்கிறார்: “தாங்கும் அளவிலேயே வலி இருந்தாலும் உங்கள் உடலில் எங்காவது வலித்துக்கொண்டே தான் இருக்கும்.” களைப்பு சமாளிக்க வேண்டிய இன்னொரு சவால். “வலியையும் வீக்கத்தையும் சமாளிக்க முடிந்தாலும், சோர்வு தாங்க முடியாதது” என 21 வயது சாரா கூறுகிறார்.
மன வலி
ஜப்பானைச் சேர்ந்த 61 வயது சிட்ஸுகோ சொல்வதன்படி, ஒவ்வொரு நாளும் கடுமையான வலியுடன் போராடுவதும் “உணர்ச்சி ரீதியிலும் மன ரீதியிலும் உங்களை சோர்வுறச் செய்யும்.” ஒரு பென்ஸிலையோ டெலிபோன் ரிஸிவரையோ பிடிப்பதுகூட சவாலாக இருக்கலாம்! 47 வயது காஸுமி புலம்புகிறார்: “ஒரு சிறு பிள்ளை செய்யும் சாதாரண வேலையைக்கூட என்னால் செய்ய முடியாமல் போய்விட்டது.” தன் பாதங்களை அதிகளவு பயன்படுத்த முடியாத நிலையிலுள்ள அறுபது வயது ஜேனஸ் சொல்கிறார்: “நான் செய்து வந்ததை செய்ய முடியாமல் போனது மிகவும் சோர்வடையச் செய்திருக்கிறது.”
இப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் ஒருவருக்கு விரக்தியையும் தன்னைப் பற்றியே எதிர்மறை உணர்வுகளையும் ஏற்படுத்தலாம். யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரான 27 வயது காகூ சொல்கிறார்: “ஊழியத்தில் முழுமையாய் பங்கு கொள்ள முடியாததும், சபை நியமிப்புகளை கையாள முடியாமல் இருப்பதும் என்னை ஓர் உதவாக்கரையாக உணரச் செய்கிறது.” இரண்டு வயதிலிருந்தே மூட்டு அழற்சியுடன் போராடி வந்துள்ள ஃப்ரான்சேஸ்கா, “மனக்கசப்பு எனும் ஆழமான சுழலுக்குள் மீண்டும் மீண்டும் இழுக்கப்படும் நிலை” பற்றி கூறுகிறார். அப்படிப்பட்ட மனக்கசப்பால் ஆன்மீக ரீதியில் பெரும் பாதிப்புகள் நேரிடலாம். தென் ஆப்பிரிக்காவில் சாட்சியாக இருக்கும் ஜாய்ஸ், கிறிஸ்தவ கூட்டங்களுக்குப் போவதை நிறுத்திவிட்டதை ஒப்புக்கொள்கிறார். “எவர் முகத்தையும் பார்க்கவே எனக்குப் பிடிக்கவில்லை” என்று அவர் தெரிவிக்கிறார்.
நோயாளிக்கு எதிர்காலத்தைப் பற்றியும்—செயல்பட முடியாமல் போய், பிறரைச் சார்ந்திருக்க நேரிடுமோ, கவனிப்பாரற்று விடப்படுவோமோ, கீழே விழுந்து எலும்புகள் முறிந்துவிடுமோ, குடும்பத்தைக் கவனிக்க முடியாமல் போய்விடுவோமோ என்ற பயங்களாலும்—அதிக கவலை ஏற்படலாம். 52 வயது யோகோ ஒத்துக்கொள்கிறார்: “என் மூட்டுகள் உருச்சிதைந்து வருவதைக் காண்கையில் இன்னும் மோசமடைந்து விடுமோ என்று பயப்படுவேன்.”
தங்களுக்குப் பிரியமானவர் படும் வேதனையை நாள்தோறும் காண சகிக்காத குடும்ப அங்கத்தினர்களும் உணர்ச்சி ரீதியில் வேதனையை அனுபவிக்கலாம். சில தம்பதியினரின் மண வாழ்க்கையிலும் கடும் பிரச்சினை ஏற்படலாம். இங்கிலாந்தில், டனீஸ் என்ற பெண் சொல்கிறார்: “15 வருட மண வாழ்க்கைக்குப் பிறகு, என் கணவர் ‘இனியும் உன் நோயோடு என்னால் போராட முடியாது!’ என கூறிவிட்டார், என்னையும் எங்கள் 5 வயது மகளையும் தனியே தவிக்க விட்டு விட்டார்.”
நோயாளிகள், அவர்கள் குடும்பத்தார் ஆகிய இரு சாராருக்குமே மூட்டு அழற்சி பெரும் சவால்களை முன்வைக்கிறது. இருந்தபோதிலும், அநேகர் வெற்றிகரமாக சமாளித்து வருகின்றனர்! சிலர் எவ்வாறு சமாளிக்கின்றனர் என்று பார்ப்போம்.
உங்கள் வரையறைகளை மனதில் கொள்ளுதல்
நீங்கள் மூட்டு அழற்சியால் அவதிப்படுபவராய் இருந்தால் போதிய ஓய்வு எடுப்பது அவசியம்; அது களைப்பை குறைக்கலாம். அதற்கென்று எதிலும் கலந்துகொள்ளாமல் சமுதாயத்தை விட்டே ஒதுங்கி விடுவதை இது அர்த்தப்படுத்துவதில்லை. தீமோத்தி இவ்வாறு விளக்குகிறார்: “மூட்டு அழற்சி உங்கள் மனதை சிறைப்படுத்தி விடாதவாறு நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்; இல்லாவிடில், வலி வலி என்று புலம்பிக் கொண்டிருப்பதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாது.” “மிக அதிகம் செய்வதற்கும் மிக கொஞ்சம் செய்வதற்கும் இடையே நுணுக்கமான வித்தியாசம் உண்டு. வேலைகளை மெதுவாக செய்யவும் நோயை மனதில் வைத்து செயல்படவும் சில சமயங்களில் மக்களுக்கு நினைப்பூட்ட வேண்டியுள்ளது” என மாயோ கிளினிக்கைச் சேர்ந்த முடக்குவியல் நிபுணர் வில்லியம் கின்ஸ்பர்க் கூறுகிறார்.
உங்கள் வரையறைகளை நீங்கள் மதிப்பிடும் விதத்தில் மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். தென் ஆப்பிரிக்காவிலிருந்து டஃப்னீ சொல்கிறார்: “நான் எதார்த்தமாக இருக்க பழகிக்கொண்டிருக்கிறேன்; குறிப்பிட்ட சில வேலைகளை செய்யும் என் திறமையை நான் இழக்கவில்லை; அவற்றை மெதுவாக மட்டுமே செய்ய வேண்டியிருக்கிறது. கவலைப்படுவதற்கும் விரக்தியடைவதற்கும் மாறாக கொஞ்சம் கொஞ்சமாக செய்து வருகிறேன்.”
உதவியாக இருக்கும் வெவ்வேறு உபகரணங்களைப் பற்றி தெரிந்து வைத்திருப்பதும் நல்லது; ஒருவேளை இவற்றை உங்கள் டாக்டரிடமோ உடற்பயிற்சி மருத்துவரிடமோ கேட்டு தெரிந்துகொள்ளலாம். கேகோ இவ்வாறு விவரிக்கிறார்: “நாங்கள் படிக்கட்டில் உபயோகிக்க லிஃப்ட் ஒன்றை பொருத்தியிருக்கிறோம். குமிழ்களை திருகித் திருகி என் மணிக்கட்டில் வலி ஏற்பட்டதால் அவற்றை மாற்றிவிட்டோம். இப்போதெல்லாம் எல்லா கதவுகளையும் என் தலையால் தள்ளி என்னால் திறக்க முடியும். வீட்டிலுள்ள தண்ணீர்க் குழாய் அனைத்திலும் நெம்புகோல் மாதிரியான கைப்பிடிகளை பொருத்தியுள்ளோம்; இதனால் கொஞ்சமாவது வீட்டு வேலைகளை என்னால் செய்ய முடிகிறது.” மூட்டு அழற்சியால் அவதிப்படும் கேல் என்ற மற்றொரு நோயாளி கூறுகிறார்: “என் கார் சாவியும் வீட்டுச் சாவியும் நீண்ட கைப்பிடியுடன் இணைக்கப்பட்டுள்ளதால் அவற்றைத் திருப்புவதற்கு வசதியாக உள்ளது. என் சீப்பும் பிரஷ்ஷும் நீண்ட கைப்பிடிகளில் பொருத்தப்பட்டுள்ளன; தலை சீவும்போதும் பல் தேய்க்கும்போதும் அவற்றை வெவ்வேறு கோணங்களில் திருப்பிக் கொள்ள முடியும்.”
குடும்பத்தின் ஆதரவு—“பலத்த கோட்டை”
பிரேஸிலில் இருந்து கார்லா கூறுகிறார்: “என் கணவர் காட்டியிருக்கும் ஆதரவு மதிப்பிட முடியாதது. டாக்டரை பார்க்க என்னோடு வந்ததே எனக்கு தெம்பை அளித்தது. இந்நோய் என் உடலை எப்படி பாதிக்கிறது, இதன் அறிகுறிகள் என்னென்ன, எப்படிப்பட்ட சிகிச்சை தேவைப்படும் என்பதை இருவருமாக சேர்ந்து கண்டறிந்தோம். நான் பட்ட கஷ்டங்களையெல்லாம் அவர் புரிந்துகொண்டதே எனக்கு நிம்மதி அளித்தது.” ஆம், கணவர்களோ மனைவிகளோ, தங்கள் துணைகளின் வரையறைகளை மதித்து, அவர்களின் நிலையை புரிந்துகொள்ள முன்வருவது அபார தெம்பையும் ஆதரவையும் தரலாம்.
உதாரணமாக, பெட் என்ற பெண், மூட்டு அழற்சி காரணமாக தன் கணவரால் கட்டுமான வேலை செய்ய முடியாதபோது, சுத்தம் செய்யும் வேலைகளுக்கு சேர்ந்தார். காஸுமியின் கணவர் அவரைக் கவனித்துக்கொண்டது மட்டுமின்றி அவரால் செய்ய முடியாமற்போன வீட்டு வேலைகளையும் செய்துவந்தார். மேலும், அவர்களுடைய பிள்ளைகளையும் சில வேலைகளைச் செய்ய பழக்கினார். காஸுமி இவ்வாறு கூறுகிறார்: “என் கணவர் எனக்கு பலத்த கோட்டையாக இருந்திருக்கிறார். அவருடைய உதவி மட்டும் கிடைக்காதிருந்தால் என் நிலைமை படுமோசம் ஆகியிருக்கும்.”
ஆஸ்திரேலியாவில் காரல் என்ற பெண் இவ்வாறு எச்சரிக்கிறார்: “நிறைய வேலைகளை இழுத்துப் போட்டுக்கொள்ளாதீர்கள். குடும்பத்தாரின் வேகத்திற்கு என்னால் ஈடுகொடுக்க முடியாதபோது, நிறைய செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் உடனே என்னை வாட்ட ஆரம்பித்துவிடும்.” குடும்பத்தார் நன்றாக புரிந்துகொண்டு கரிசனையோடு நடத்துகையில், அவர்கள் அளிக்கும் ஆதரவு நோயாளிகளுக்கு பலத்த கோட்டையாக அமையலாம்.
ஆன்மீக உதவி
காட்யா சொல்கிறார்: “இந்த மாதிரி நோயுடன் ஒருத்தி அவதிப்படுகையில், அவளுக்குள் நடக்கும் போராட்டம் எவருக்கும் புரிவதில்லை என அவளுக்கு நன்றாக சங்கீதம் 31:7) அவருடன் நல்லுறவை அனுபவிப்பது அமைதியாக என் நோயை சமாளித்து வாழ மன நிம்மதியைத் தந்திருக்கிறது.” பைபிள் பொருத்தமாகவே யெகோவாவை, ‘எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் எங்களுக்கு ஆறுதல்செய்கிற ஆறுதலின் தேவன்’ என்று அழைக்கிறது.—2 கொரிந்தியர் 1:3, 4.
தெரியும். இதனால் யெகோவா தேவன் உடல் ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் நம் நிலையை நன்றாக புரிந்துகொள்கிறார் என்ற நம்பிக்கையுடன் அவரை அணுகும் அவசியத்தை இது உணர வைக்கிறது. (கடும் வலியால் அவதியுறும் எவருக்காவது ஆறுதல் அளிப்பதில் ஜெபம் சக்திவாய்ந்த அருமருந்தாகலாம். காஸுமி சொல்வதாவது: “வலியால் இரவெல்லாம் தூங்க முடியாமல் தவிக்கையில், கண்ணீரோடு என் உள்ளத்திலுள்ளதை யெகோவாவிடம் கொட்டியிருக்கிறேன்; வலியைத் தாங்க சக்தி தரும்படியும் என் கஷ்டங்களையெல்லாம் சமாளிக்க ஞானத்தை தரும்படியும் கெஞ்சியிருக்கிறேன். யெகோவா நிச்சயமாகவே எனக்கு பதிலளித்திருக்கிறார்.” ஃப்ரான்சேஸ்காவும் அதைப் போலவே யெகோவாவின் அன்பான ஆறுதலை அனுபவித்திருக்கிறார். அவர் கூறுவதாவது: “‘என்னைப் பெலப்படுத்துகிறவராலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு’ என்பதாக பிலிப்பியர் 4:13 (NW)-ல் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகளின் நிஜத்தை நான் கண்டிருக்கிறேன்.”
பெரும்பாலும், கிறிஸ்தவ சபை மூலமாக யெகோவா தேவன் ஆறுதல் அளிக்கிறார். உதாரணமாக, கேல் யெகோவாவின் சாட்சிகளின் சபையிலிருந்த ஆவிக்குரிய சகோதர சகோதரிகளிடமிருந்து பெற்ற உதவியைப் பற்றி சொல்கிறார். “மனச்சோர்வு அடைந்துவிடாதபடி அவர்களுடைய அன்பு என்னைத் தாங்கியது” என்கிறார் அவர். அதைப் போலவே, “உங்கள் வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம் எதையாவது சொல்ல முடியுமா?” என்று கேகோவைக் கேட்டபோது, அவர், “சபையிலுள்ள ஒவ்வொருவரிடமிருந்தும் நான் பெற்றுக்கொள்ளும் அன்பும் இரக்கமுமே!” என்று பதிலளித்தார்.
யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில், அப்படிப்பட்ட ஆறுதலை அளிப்பதில் கண்காணிகள் முன்னணியில் நிற்கின்றனர். சிட்ஸுகோ கூறுவதாவது: “மூப்பர்கள் செவிகொடுக்கையிலும் ஆறுதல் அளிக்கையிலும், நோயோடு போராடும் ஒரு நபருக்கு எவ்வளவு தெம்பாக இருக்கும் என்பதை என்னால் விவரிக்க முடியவில்லை.” என்றாலும், மூட்டு அழற்சி நோயாளியான டான்யல் இதை நமக்கு நினைப்பூட்டுகிறார்: “நாம் அனுமதித்தால்தான் நம் ஆவிக்குரிய சகோதர சகோதரிகள் நமக்கு உதவ முடியும்.” எனவே உடன் கிறிஸ்தவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வது நோயாளிகளுக்கு முக்கியமானது; முடிந்தவரை கிறிஸ்தவ கூட்டங்களைத் தவறவிடக்கூடாது. (எபிரெயர் 10:24, 25) சகித்திருக்க தேவைப்படும் ஆன்மீக உற்சாகத்தை அங்கு பெற முடியும்.
அவதிக்கு முடிவு
இதுவரை செய்யப்பட்டிருக்கும் முன்னேற்றங்களுக்காக மூட்டு அழற்சி நோயாளிகள் மருத்துவத் துறைக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கின்றனர். என்றாலும், அது எவ்வளவுதான் சிறந்த சிகிச்சையாய் இருந்தாலும், நிஜமான நிவாரணத்தை அளிக்க முடியாது. முடிவில், ஒரு புதிய உலகைப் பற்றிய கடவுளின் வாக்குறுதிகளை நோயாளிகள் நம்புவதால் மிகப் பெரிய ஆறுதலைப் பெறலாம். b (ஏசாயா 33:24; வெளிப்படுத்துதல் 21:3, 4) அப்புதிய உலகில், ‘முடவன் மானைப்போல் குதிப்பான்.’ (ஏசாயா 35:6) மனிதரை வாட்டி வதைக்கும் மூட்டு அழற்சியும், மற்ற எல்லா நோய்களும் தடம் தெரியாமல் போய்விடும்! முதுகெலும்பு மூட்டு அழற்சியால் அவதிப்பட்ட பீட்டர் இவ்வாறு சொல்கிறார்: “நான் பயணித்து வருகிற இந்த இருண்ட சுரங்கப் பாதையின் முடிவில் ஒளியை என்னால் காண முடிகிறது.” ஜூலியான்னா என்ற கிறிஸ்தவப் பெண் இவ்வாறு சொல்கிறார்: “முடிவு வருவதற்கு முன் சகித்திருக்க வேண்டிய நாட்களில் ஒரு நாள் குறைந்துவிட்டதாக, ஒவ்வொரு நாளையும் போராடி ஜெயித்த நாளாகவே நினைக்கிறேன்!” மூட்டு அழற்சி மட்டுமின்றி, எல்லா அவதிகளுமே முடிவுறும் நாள் நெருங்கி விட்டது!(g01 12/8)
[அடிக்குறிப்புகள்]
a சில பெயர்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
b யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் உங்களை சந்தித்து பைபிளின் வாக்குறுதிகளை விளக்கிச் சொல்ல நீங்கள் விரும்பினால், உள்ளூரிலிருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய சபையுடன் தொடர்பு கொள்ளுங்கள்; அல்லது இந்தப் பத்திரிகையை பிரசுரிப்பவர்களுக்கு எழுதுங்கள்.
[பக்கம் 10-ன் படங்கள்]
வாழ்க்கையை சுவாரஸியமாக்க நோயாளிகளுக்கு உதவுவதற்கு அநேக உபகரணங்கள் உள்ளன
[பக்கம் 12-ன் படம்]
கிறிஸ்தவ கூட்டங்களில் அன்பான ஆதரவு கிடைக்கலாம்