Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வேலையை வாயார பாராட்டிய மாஸ்கோ

வேலையை வாயார பாராட்டிய மாஸ்கோ

வேலையை வாயார பாராட்டிய மாஸ்கோ

மாஸ்கோவிலுள்ள கலவின்ஸ்கீ மாவட்டத்தின் நகராட்சி நீதிமன்றத்தில், யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைகளை தடை செய்ய கோரும் உரிமையியல் வழக்கு ஒன்று 1998-⁠ல் தொடரப்பட்டது. அப்படியிருக்கையில், கலவின்ஸ்கீ மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரிகளே சமீபத்தில் யெகோவாவின் சாட்சிகளை வாயார புகழ்ந்தது கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கலாம்.

அந்த நகரத்திலுள்ள சாட்சிகளை தடை செய்வதில் சிலர் மும்முரமாக ஈடுபட்டிருக்கையில் மாஸ்கோ அதிகாரிகள் அவர்களை வாயார பாராட்ட காரணம் என்ன? அங்கிருக்கும் சாட்சிகளின் நடவடிக்கைகளை சுருக்கமாக சிந்தித்தால் இந்த கேள்விக்கு பதில் கிடைக்கும்.

மாஸ்கோவில் சாட்சிகள்

1950-களின் மத்திபத்தில், ஒரு யெகோவாவின் சாட்சிகூட இல்லாத சில உலக தலைநகரங்களில் மாஸ்கோவும் ஒன்று. காரணம்? சோவியத் யூனியனில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான சாட்சிகள் நாடு கடத்தப்பட்டதைப் போலவே மாஸ்கோவிலிருந்த சாட்சிகளும் வெளியேற்றப்பட்டிருந்தனர். எங்கே? பெரும்பாலானோர் சைபீரிய அடிமை உழைப்பு முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தனர்.

காலம் செல்லச் செல்ல, அப்போது ரஷ்யாவில் தடை செய்யப்பட்டிருந்த சாட்சிகளின் பிரசுரங்களை உபயோகித்து மாஸ்கோவிலிருந்த சிலர் பைபிளை படிக்க ஆரம்பித்தனர். 1970-களின் மத்திபத்தில், சாட்சிகளாக மாறியிருந்த சிலர் மாஸ்கோவில் வசித்த முராட் ஷகீராவ் என்பவரின் அப்பார்ட்மெண்டில் பைபிள் படிப்பிற்காக கூடிவந்தனர். 1980-களில், இந்த சிறிய தொகுதி பைபிளை படிக்கும்படி இன்னும் அநேகரின் ஆர்வத்தை தூண்டிவிட்டிருந்தது.

மார்ச் 1991-⁠ல் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைக்கு சோவியத் யூனியனில் சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டபோது, மாஸ்கோவிலிருந்த சாட்சிகளின் ஒரு பெரிய சபை பகிரங்கமாக செயல்பட ஆரம்பித்தது. சாட்சிகள் ஏன் துன்புறுத்தப்பட்டனர் என்பதை தெரிந்துகொள்ள ஆயிரக்கணக்கானோர் ஆவலாக இருந்தனர். அதோடு, பைபிள் உண்மையில் எதை போதிக்கிறது என்பதை அறியவும் விரும்பினர். ஆகவே, ஆகஸ்ட் 1991-⁠ல் உக்ரேனிலுள்ள கீவ்வில் ஒரு மாநாடு நடந்தபோது, அதில் கலந்துகொள்ள மாஸ்கோவிலிருந்து 2,000-⁠த்திற்கும் அதிகமானோர் சுமார் 890 கிலோமீட்டர் பயணித்தனர். அங்கு முழுக்காட்டப்பட்ட 1,843 பேரில் அவர்களில் அநேகரும் இருந்தனர்.

1993-⁠ல் மாஸ்கோவின் லோகோமோட்டிவ் ஸ்டேடியத்தில் நடந்த சர்வதேச மாநாட்டிற்கு 30-⁠க்கும் அதிகமான நாடுகளை சேர்ந்த 23,743 பேர் வந்திருந்தனர். அந்த வருடத்தின் முடிவிற்குள்ளாக மாஸ்கோவின் மாநகர எல்லைக்குள் இருந்த சபைகளின் எண்ணிக்கை 21-ஆக அதிகரித்திருந்தது. சுமார் எட்டு வருடங்கள் கழித்து இன்று அதே பகுதியில் 104 சபைகள் உள்ளன.

கடந்த வருடத்தின் ஜூன், ஜூலை மாதங்களில் மாஸ்கோவில் நடந்த யெகோவாவின் சாட்சிகளுடைய நான்கு மாவட்ட மாநாடுகளில் மொத்தம் 18,292 பேர் கலந்துகொண்டனர், 546 பேர் முழுக்காட்டப்பட்டனர். சாட்சிகளோடு சேர்ந்து பைபிளை படிப்பவர்களின் எண்ணிக்கை படுவேகமாக அதிகரிப்பதை ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சர்ச் தலைவர்களால் பார்த்துக்கொண்டு சும்மாயிருக்க முடியவில்லை; ஆகவே, மாஸ்கோ அதிகாரிகளை தூண்டிவிட்டு சாட்சிகளின் வேலையை தடை செய்ய முயன்றனர்.

சாட்சிகளை தடை செய்ய கோரும் வழக்கு 1998-⁠ன் ஆரம்பத்தில் விசாரணைக்காக கலவின்ஸ்கீ நீதிமன்றத்திற்கு வந்தது. கடைசியாக, 2001, பிப்ரவரி 23 அன்று சாட்சிகள் குற்றமற்றவர்கள் என நீதிபதி தீர்ப்பளித்தார். ஆனால், எதிர்தரப்பினர் மாஸ்கோ உயர்நீதி மன்றத்தில் வழக்கை மேல் முறையீடு செய்ததால் அதை மறுபடியும் விசாரிக்கும்படி வழக்கு கீழ் நீதிமன்றத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டது.

இவ்வாறு, சாட்சிகளை தடை செய்வதில் சிலர் மும்முரம் காட்டுகையில் மாஸ்கோவின் கலவின்ஸ்கீ மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அவர்களை வாயார புகழ காரணம் என்ன?

புதிய கூடும் இடமே காரணம்

டிசம்பர், 1998-⁠ல், மைக்கைல்கவ்ஸ்கீ பூங்காவிற்கு அருகிலுள்ள பெரிய, இரண்டு மாடி கட்டடத்தை சாட்சிகள் வாங்கினர். அதற்கு முன்பு அது கலைக்கூடமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. கொஞ்ச நாட்களுக்கு முன்பு சாட்சிகள் இந்த பெரிய கட்டடத்தை புதுப்பிக்க ஆரம்பித்தனர். இப்போது அதில் யெகோவாவின் சாட்சிகளுடைய 22 சபைகள் பயன்படுத்தும் ஐந்து ராஜ்ய மன்றங்கள் அல்லது கூடும் இடங்கள் உள்ளன.

கடந்த ஏப்ரல் 15-⁠ம் தேதியன்று கலவின்ஸ்கீ மாவட்டத்தின் நிர்வாகி ஒருவர், ஏப்ரல் 21-⁠ம் தேதியன்று மைக்கைல்கவ்ஸ்கீ பூங்காவை சுத்தப்படுத்தி தரும்படி சாட்சிகளிடம் கோரினார். வசந்தகாலத்தின்போது உள்ளூர்வாசிகளும் சமுதாய தொகுதிகளும் சேர்ந்து பூங்காக்களையும் நெடுஞ்சாலைகளையும் இப்படி சுத்தம் செய்வது ரஷ்யாவில் சர்வசாதாரணம். அந்த வேலையை செய்ய திட்டமிடுவதற்காக ஏப்ரல் 17-⁠ம் தேதியன்று சாட்சிகள் கூடிவந்தனர். அந்தப் பணிக்கு சுமார் 700 பேர் தேவைப்படுவார்கள் என அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

வேலையை செய்தல்

எத்தனை வரண்டிகளும் (rakes) மற்ற கருவிகளும் தேவைப்படும் என ஏப்ரல் 18-⁠ம் தேதியன்று சாட்சிகள் கலவின்ஸ்கீ மாவட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தனர்; வேலை செய்ய 700 பேர் எங்கே வரப்போகிறார்கள் என்றே அந்த அதிகாரிகள் நினைத்தனர். ஆனால், நிர்வாக அலுவலர்கள் ஏப்ரல் 21-⁠ம் தேதி காலை 9:30 மணிக்கு பூங்காவிற்கு வந்தபோது ஏற்கெனவே நூற்றுக்கணக்கான சாட்சிகள் வந்து குவிந்திருந்தனர்; ஆனால் அவர்கள் உபயோகிக்க 200 தோட்ட வேலை கருவிகள் மட்டுமே கைவசம் இருந்தன. கொஞ்ச நேரத்தில் இன்னும் 200 வரண்டிகள் வரவழைக்கப்பட்டன. கருவிகள் கிடைக்காதவர்கள் தங்கள் கைகளால் குப்பையை அள்ளி பிளாஸ்டிக் பைகளில் நிரப்பினர். அங்கிருந்த பெரிய குளத்தை சுத்தம் செய்வதற்காக, மீன்பிடிக்க செல்லுகையில் தாங்கள் உபயோகிக்கும் உயரமான காலணிகளையும் ஒரு படகையும் சாட்சிகள் கொண்டு வந்திருந்தனர்.

விறுவிறுப்பாக வேலை நடப்பதைப் பார்த்த நிர்வாக பிரதிநிதிகள் வாயடைத்து நின்றனர். தங்கள் சொந்த இடத்தை சுத்தம் செய்வதுபோல சந்தோஷத்தோடும் உற்சாகத்தோடும் அவர்கள் வேலை செய்வதை கவனித்தனர். மைக்கைல்கவ்ஸ்கீ பூங்காவில் மொத்தமாக சுமார் 1,000 சாட்சிகள் வேலை செய்து, 250 டன்னுக்கும் அதிகமான குப்பையை அப்புறப்படுத்தினர். நீண்ட காலத்திற்கு பின்பு அந்த பூங்காவை அவ்வளவு சுத்தமாக பார்ப்பதாக அந்த பகுதியில் வாழ்ந்தவர்கள் கூறினர்.

ஆரம்பத்தில் கூறப்பட்டபடி அதிகாரிகள் மிகவும் கவரப்பட்டனர், அதற்காக அதிக நன்றியும் தெரிவித்தனர். கலவின்ஸ்கீ மாவட்ட அதிகாரி ஒருவர் இவ்வாறு எழுதினார்: “மைக்கைல்கவ்ஸ்கீ பூங்காவை சுத்தம் செய்வதில் பங்குகொண்டதற்காக, மாஸ்கோவின் வடக்கு நிர்வாக பகுதியின் கலவின்ஸ்கீ மாவட்ட நிர்வாகம் யெகோவாவின் சாட்சிகளுடைய மத அமைப்பிற்கு நன்றி தெரிவிக்கிறது.” துணை அதிகாரி ஒருவரும் அதேபோன்ற பாராட்டு தெரிவித்து இவ்வாறு முடித்தார்: “இந்த மதிப்புமிக்க, அவசியமான வேலை, பூங்காவிற்கு வரும் அனைவருக்கும் நன்மையையும் மகிழ்ச்சியையும் தரும்.”

இங்கே விவரிக்கப்பட்டதை போன்ற திட்டங்களில் பங்குகொள்ளவும் தங்கள் வசிப்பிடங்களுக்கு அருகிலுள்ள இடங்களை அழகுபடுத்தவும் யெகோவாவின் சாட்சிகள் விரும்புகிறபோதிலும் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை மக்களிடம் பகிர்ந்துகொள்வதே இன்று அவர்களுடைய முக்கிய வேலை; அந்த அரசாங்கமே பூமி முழுவதிலும் பரதீஸ்போன்ற நிலைமைகளை கொண்டுவரும். (மத்தேயு 24:14) மைக்கைல்கவ்ஸ்கீ பூங்காவை சுத்தம் செய்கையில், அர்மகெதோனுக்கு பிறகு முழு பூமியையும் அழகுபடுத்தும் வேலைக்கு இது நல்ல பயிற்சியளிப்பதாக சிலர் பேசுவதை கேட்க முடிந்தது.​—வெளிப்படுத்துதல் 16:14, 16.

பைபிளை நேசிக்கும் அனைவரும், முழு பூமியும் பூங்காவை போன்ற அழகு கொஞ்சும் சோலையாக மாறும் அந்த நாளை எதிர்நோக்கியிருக்கின்றனர். கடவுள், முதல் மானிட ஜோடியை படைத்தபோதும் அதுவே அவருடைய நோக்கமாக இருந்தது.​—ஆதியாகமம் 1:28; 2:8, 9, 15; வெளிப்படுத்துதல் 21:3, 4. (g01 12/22)

[பக்கம் 23-ன் படம்]

1970-களின் மத்திபத்தில் முராட் ஷகீராவ் என்பவரின் அப்பார்ட்மெண்டில் கூடிவந்தவர்கள் மீண்டும் சந்தித்தனர்

[பக்கம் 24-ன் படங்கள்]

கடந்த வருடம் மாஸ்கோவில் நடைபெற்ற நான்கு மாநாடுகளில் கலந்துகொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18,292

[பக்கம் 25-ன் படங்கள்]

முன்பு கலைக்கூடமாக இருந்த இந்தக் கட்டடம் புதுப்பிக்கப்பட்டு ஐந்து ராஜ்ய மன்றங்களாக உருவானது

[பக்கம் 26-ன் படங்கள்]

250 டன்னுக்கும் அதிகமான குப்பை நீக்கப்பட்டது