ஆதரவும் அனுதாபமும் பல இடங்களிலிருந்து
ஆதரவும் அனுதாபமும் பல இடங்களிலிருந்து
ஐக்கிய மாகாணங்களின் பல பாகங்களிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் தொண்டர்கள் வந்தனர். அவர்களில் ஒருவர்தான் 29 வயது டாம் (மேலுள்ள படம்). அவர் கனடாவிலுள்ள ஒட்டாவாவில் தீயணைப்பு படையில் பணியாற்றுகிறார். விழித்தெழு! எழுத்தாளரிடம் அவர் சொன்னது: “இந்த சம்பவங்களயெல்லாம் டிவி-ல பாத்தப்போ, நியூ யார்க்கிலுள்ள என் சக தீயணைப்பு வீரர்களுக்கு தோள் கொடுக்கணும்னு நெனச்சேன். உதவறதுக்காக வெள்ளிக்கிழமை கிளம்பி, சம்பவம் நடந்த இடத்திற்கு சனிக்கிழமை போய் சேர்ந்தேன். இடிபாட்டுக் குப்பைக்கூளங்கள வாளி வாளியாக அள்ளி அப்புறப்படுத்திட்டிருந்த தொண்டர் குழுவில் என்னையும் சேத்துக்கிட்டாங்க.
“ஒவ்வொரு தடவையும் மண்வெட்டியால இடிபாடுகளை மெதுவாக அப்புறப்படுத்தும்போதும் செத்துப்போன தீயணைப்பு படையினர அடையாளம் கண்டுபிடிக்க ஏதாவது துப்பு தெரியுதான்னு பாத்தோம். பூட்டிய கதவை திறக்கவும், குழாயின் கப்ளிங்குகளை கழற்றவும் பயன்படுற ஹாலிகன் கருவியை நான் கண்டுபிடிச்சேன். இது லேசுபட்ட வேலையில்ல, ரொம்பவும் சிரமப்பட்டோம். கிட்டத்தட்ட 50 தொண்டர்கள் சேர்ந்து ஒரு டிரக்கை நெரப்ப ரெண்டு மணிநேரம் எடுத்துச்சு.
“திங்கட்கிழமை, செப்டம்பர் 17-ம் தேதி தீயணைப்பு படையினர் சிலரோட உடலை எடுத்தோம்; முந்தின வாரம் செவ்வாய்கிழமை சம்பவம் நடந்தபோது கட்டடத்துக்குள்ளே வேகமா புகுந்ததால் அதுக்குள்ளே மாட்டிக் கொண்டவர்கள் அவர்கள். மீட்பு பணியாளர் எல்லாரும் வேலைய அப்படி அப்படியே போட்டுட்டு, தொப்பிகளையும் ஹெல்மட்டுகளையும் கழற்றி, இறந்துபோன தீயணைப்பு படையினர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்திய அந்தக் காட்சிய என்னாலே மறக்கவே முடியாது.
“அந்த இடத்தின் கோலத்தை பாக்க பாக்க மனுஷனோட வாழ்க்கை எவ்வளவு நிலையற்றதுங்கறது புரிஞ்சுது. என்னோட வாழ்க்கை, வேலை, குடும்பம் பத்தியெல்லாம் இது என்னை யோசிக்க வெச்சுது. ஆபத்து ஒருபுறமிருந்தாலும் என்னுடைய வேலையால் நல்ல பலனும் இருக்குது; ஜனங்களுக்கு உதவி செய்யவும் உயிர்கள காப்பாத்தவும்கூட முடியுது.”
தக்க நேரத்தில் கைகொடுத்த சாட்சிகள்
விபத்து நடத்த முதல் இரண்டு நாட்களில் சுமார் 70 பேர் அடைக்கலம் தேடி யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமையகத்துக்கு வந்தார்கள். ஓட்டல் ரூம்களையும் லக்கேஜ்ஜையும் இழந்த சிலருக்கு தங்குவதற்கு இடமும் மாற்றுவதற்கு உடையும் கொடுத்தார்கள். அவர்களுக்கு சாப்பாடும் கொடுத்தார்கள். அதிலும் முக்கியமாக, மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுபவமுள்ள கிறிஸ்தவ மூப்பர்கள் ஆறுதலளித்தார்கள்.
யெகோவாவின் சாட்சிகள், சம்பவம் நடந்த இடத்தில் மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு தேவையான எமர்ஜன்ஸி கருவிகளையும் மற்ற பொருட்களையும் அனுப்பி உதவினார்கள். தீயணைப்பு துறையினர் அந்த இடத்திற்குச் செல்வதற்கு போக்குவரத்து வசதியையும் செய்து கொடுத்தார்கள். நூற்றுக்கணக்கான மற்றவர்களுடன், யெகோவாவின் சாட்சியும் துப்புரவு பணியாளருமான 39 வயது ரிகார்டோவும் (மேலே, வலப்பக்கம்) இடிபாடுகளை அப்புறப்படுத்துவதில் ஈடுபட்டிருந்தார். ஒவ்வொரு நாளும் டன் கணக்கில் இடிபாடுகள் அப்புறப்படுத்தப்பட்டன. ரிகார்டோ விழித்தெழு!
எழுத்தாளரிடம் இவ்வாறு சொன்னார்: “அந்தக் காட்சியை எல்லாம் பாக்க பாக்க உண்மையிலேயே ரொம்ப வேதனையா இருந்துது, முக்கியமா சக பணியாளர்கள தேடிக்கிட்டிருந்த தீயணைப்பு படையினருக்கு. தீயணைப்பு வீரர் ஒருத்தரை அவங்க உயிரோடு வெளியில இழுத்தாங்க. மற்றொரு தீயணைப்பு வீரரோ ஒருவருடைய உடல் அவர்மேல வந்து விழுந்ததுல செத்து போயிருந்தாரு. தீயணைப்பு வீரர்கள் பலரும் கண்ணீர் விட்டாங்க. நானும் தாங்க முடியாமல் அழுதுட்டேன். அன்றைக்கு அவங்களவிட மனோதிடம் உள்ளவங்க வேறு யாரும் இல்லவே இல்ல.”‘சமயமும் எதிர்பாரா சம்பவமும்’
அந்தப் பேரழிவில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தார்கள். இவர்களில் குறைந்தபட்சம் 14 யெகோவாவின் சாட்சிகளாவது அந்த அவலம் நடந்த இடத்திலோ அல்லது அருகிலோ இருந்தனர். ட்ரினிடாடை சேர்ந்த 65 வயதான ஜாய்ஸ் கம்மிங்ஸ் உலக வர்த்தக மையத்தின் அருகிலுள்ள பல் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அந்த சமயம் பார்த்து இந்த விபத்தும் நடந்ததுதான் வருத்தத்திற்குரியது. புகை பயங்கரமாக தாக்கியதால் அவர் பக்கத்திலுள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர்களால் அவரை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. ‘சமயமும் எதிர்பாரா சம்பவமும்’ பலிவாங்கிய பலரில் இவரும் ஒருவர். (பிரசங்கி 9:11, NW) ஜாய்ஸ் மிக வைராக்கியமான ஊழியர் என பெயர் பெற்றிருந்தார்.
கால்வன் டாஸன் (பெட்டியைக் காண்க) தெற்கு டவரின் 84-வது மாடியிலுள்ள புரோக்கரேஜ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வடக்கு டவரை விமானம் தாக்கியபோது அவர் அலுவலகத்தில் இருந்ததால் அவரால் அதைத் தெளிவாக பார்க்க முடிந்தது. அவருடைய முதலாளி வெளியே சென்றிருந்ததால் என்ன நடந்தது என்பதை அறிவதற்காக ஃபோன் செய்தார். அவர் இவ்வாறு சொன்னார்: “கால்வின் தான் பாத்ததை பத்தி ஏதோ சொல்ல வந்தார். ‘ஜனங்க எல்லாம் குதிக்கிறாங்க!’ என்று அவர் சொன்னார். அவரையும் மற்றவங்களையும் ஆஃபீஸ விட்டு உடனே வெளியேறும்படி அவர்கிட்ட சொன்னேன்.” கால்வினால் வெளியேற முடியாமல் போய்விட்டது. அந்த முதலாளி தொடர்ந்து சொல்கிறார்: “கால்வன் தங்கமானவர், எங்க எல்லாருக்கும், ஆன்மீக விஷயங்களில் அக்கறையில்லாதவர்களுக்கும்கூட அவரை ரொம்ப பிடிக்கும். அவருக்கிருந்த கடவுள் பக்தியையும் மனிதாபிமானத்தையும் நாங்க மெச்சினோம்.”
இந்த விபத்தில் பலியான மற்றொரு யெகோவாவின் சாட்சி ஜேம்ஸ் ஆமாடோ (எதிர்பக்கம், கீழே வலது). இவர் நான்கு பிள்ளைகளுக்குத் தகப்பன்; நியூ யார்க் தீயணைப்பு துறையின் கேப்டன். “கட்டிடம் எரிஞ்சு எல்லாரும் வெளியே ஓடி வந்தாலும் இவர் அதற்குள்ளே போவார்” அந்தளவுக்கு அவருக்கு மன தைரியம் உண்டு என அவரைப் பற்றி அறிந்தவர்கள் சொன்னார்கள். மறைந்த ஜேம்ஸுக்கு
தீயணைப்புத் துறை தலைவராக பதவி உயர்வு கொடுக்கப்பட்டது.ஏழு வருடங்களாக தீயணைப்பு படையில் பணிபுரியும் மற்றொரு யெகோவாவின் சாட்சி, ஜார்ஜ் டிபாஸ்க்வாலி. அவருடைய மனைவியின் பெயர் மெலிஸ்ஸா. அவருக்கு ஜார்ஜா ரோஸ் என்ற இரண்டு வயது மகளும் உண்டு. அவர் ஸ்டேட்டன் ஐலண்டிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சபையில் மூப்பராக சேவை செய்துவந்தார். தெற்கு டவர் நொறுங்கி விழுந்தபோது அவர் அதன் பத்தாவது மாடியில் இருந்தார். மற்றவர்களை காப்பாற்ற முயன்றதில் அவரும் தன் உயிரை பறிகொடுத்தார்.
துணிவுடன் மக்களை காப்பாற்ற முயன்றதால் சமாதியானவர்கள் இந்த இருவர் மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான தீயணைப்புப் படையினரும் போலீஸாரும் எமர்ஜன்ஸி பணியாளர்களும்தான். இந்த மீட்புப் பணியாளர்களின் மனவுரத்தை எவ்வளவு மெச்சினாலும் மிகையாகாது. நியூ யார்க் நகரத்தின் மேயர் ருடால்ஃப் ஜூலியானி பிற்பாடு பதவி உயர்வு பெற்ற ஒரு தீயணைப்பு படை அணியிடம் இவ்வாறு கூறினார்: “இந்த பயங்கரமான சூழ்நிலையிலும் நீங்கள் மனமுவந்து தைரியமாக சென்றது எங்கள் எல்லாருக்குமே ஒரு தூண்டுகோலாக அமைகிறது. . . . தைரியத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது நியூ யார்க் நகரத்தின் தீயணைப்பு துறையைத் தவிர வேறு எதுவுமே இல்லை.”
ஆறுதலளிக்கும் ஊழியம்
இந்தப் பேரழிவு நிகழ்ந்தது முதற்கொண்டு ஐக்கிய மாகாணங்களிலுள்ள சுமார் 9,00,000 யெகோவாவின் சாட்சிகள், துயரப்பட்டுக் கொண்டிருந்தோருக்கு ஆறுதலளிக்கும் பணியில் தேசிய அளவில் முழுமூச்சோடு இறங்கினார்கள். பிறரிடத்திலுள்ள அன்பே துயரப்படுவோரை ஆறுதல்படுத்த அவர்களை தூண்டியது. (மத்தேயு 22:39) ஊழியத்தின்போது, அவதியுறும் மனிதகுலத்திற்கு உண்மையான ஒரே நம்பிக்கை எதுவென்பதை சுட்டிக்காட்டவும் முயன்றிருக்கிறார்கள்.—2 பேதுரு 3:13.
யெகோவாவின் சாட்சிகள் ஜனங்களிடம் கரிசனையோடு பேசினார்கள். பைபிளிலிருந்து ஆறுதலான வார்த்தைகளை எடுத்துச் சொல்வதும் கிறிஸ்துவின் புத்துணர்ச்சியளிக்கும் மாதிரியை பின்பற்றுவதுமே அவர்களின் நோக்கம். இயேசு இவ்வாறு கூறினார்: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது.”—மத்தேயு 11:28-30.
விபத்து நடந்த பகுதியிலுள்ள மீட்பு பணியாளர்களிடம் பேசி அவர்களை ஆறுதல்படுத்துவதற்கு மன்ஹாட்டனிலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் சபைகளிலுள்ள மூப்பர் குழுக்கள் அனுமதிக்கப்பட்டன. அவர்களுடைய செய்திக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த ஊழியர்கள் குறிப்பிட்டதாவது: “நாங்க வசனங்கள எடுத்துக்காட்டி பேசினபோது அந்த ஆட்களோட கண்ணெல்லாம் கலங்கி போச்சு.” மீட்பு பணியாளர்கள் துறைமுகத்தில் ஒரு படகில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார்கள். “பார்த்த காட்சிகள ஜீரணிக்கவே முடியாம அவர்கள் பிரமைபிடித்தவர்கள்போல் தலை குனிஞ்சு உட்காந்திருந்தாங்க. நாங்க அவங்களோட உட்காந்து பைபிள் வசனங்கள எடுத்துக் காட்டி பேசினோம். அங்கே வந்து அவங்களுக்கு உண்மையிலே தேவைப்பட்ட ஆறுதலான வார்த்தைகள சொன்னதுக்காக ரொம்ப நன்றி தெரிவிச்சாங்க.”
இந்த அவலத்திற்குப் பிறகு ஜனங்களை சந்தித்தபோது நிறைய பேர் எதையாவது வாசிக்க விரும்பினார்கள்; ஆயிரக்கணக்கான சிற்றேடுகள் இலவசமாக அவர்களுக்கு கொடுக்கப்பட்டன. அவற்றில் சில: நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில், போரில்லா உலகம் சாத்தியமா?, கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? அதோடு இரண்டு விழித்தெழு! இதழ்களில் வந்த தொடர் கட்டுரைகளுக்கும் முக்கிய கவனம் கொடுக்கப்பட்டது. “பயங்கரவாதத்தின் புதிய முகம்” (ஜூன் 8, 2001) “துயர சம்பவத்தை தொடரும் மனத்துயரங்களை சமாளித்தல்” (ஆகஸ்ட் 22, 2001 [ஆங்கிலம்]) ஆகியவையே அந்த இதழ்கள். அநேகருக்கு யெகோவாவின் சாட்சிகள் உயிர்த்தெழுதலைப் பற்றிய பைபிளின் நம்பிக்கையை விளக்கிச் சொன்னார்கள். (யோவான் 5:28, 29; அப்போஸ்தலர் 24:15) ஒருவேளை கோடிக்கணக்கானோருக்கு இந்த ஆறுதலின் செய்தி எட்டியிருக்கும்.
நம்மை சிந்திக்க வைக்க வேண்டும்
நியூ யார்க் நகரத்தில் நடந்ததைப் போன்ற இப்படிப்பட்ட அவலங்கள் நாம் எப்படி வாழ்கிறோம் என நம் அனைவரையும் சிந்திக்க வைக்க வேண்டும். நாம் நமக்காகவே வாழ்கிறோமா, அல்லது மற்றவர்களின் மகிழ்ச்சிக்கு உதவ முயலுகிறோமா? தீர்க்கதரிசியாகிய மீகா இவ்வாறு கேட்டார்: “நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.” (மீகா 6:8) இறந்தவர்களுக்கான உண்மையான நம்பிக்கையைப் பற்றியும் இந்தப் பூமியில் மீண்டும் பூங்காவனம் போன்ற நிலைமையை ஏற்படுத்துவதற்கு கடவுள் விரைவில் என்ன செய்வார் என்பதையும் கண்டுபிடிக்க கடவுளுடைய வார்த்தையிடம் செல்வதற்கு மனத்தாழ்மை நம்மை தூண்ட வேண்டும். பைபிள் வாக்குறுதிகளைப் பற்றி அதிகமாக அறிந்துகொள்ள விரும்பினால் உங்களுடைய சுற்றுவட்டாரத்திலுள்ள யெகோவாவின் சாட்சிகளிடம் தொடர்புகொள்ளும்படி நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கிறோம்.—ஏசாயா 65:17, 21-25; வெளிப்படுத்துதல் 21:1-4. (g02 1/8)
[பக்கம் 11-ன் பெட்டி/படங்கள்]
டாட்டியானாவின் ஜெபம்
அப்பா வீட்டிற்கு வரமாட்டார் என்பதை அறிந்து சில நாட்கள் கழித்து கால்வன் டாஸனுடைய ஏழு வயது மகள் செய்த ஜெபத்தைப் பற்றி அவருடைய மனைவி லினா விழித்தெழு! எழுத்தாளரிடம் சொன்னார். லினா ஜெபம் செய்த பிறகு டாட்டியானா, “நான் ஜெபம் செய்யட்டுமா மம்மி?” என்று கேட்டாள். அம்மாவும் ஒத்துக்கொண்டார். டாட்டியானா இவ்வாறு ஜெபம் செய்தாள்: “பரலோக பிதாவாகிய எங்கள் யெகோவாவே, இந்த சாப்பாட்டுக்காகவும் இந்த நாளுக்காகவும் நாங்க நன்றி சொல்றோம். நாங்க ஸ்ட்ராங்கா இருக்க உங்களுடைய ஆவி என்னோடும் என் மம்மியோடும் இருக்கணும்னு கேட்கிறோம். டாடியுடனும் உங்களுடைய ஆவி இருக்கணும்னு கேட்கிறோம், அப்போதான் டாடி திரும்பி வரும்போது ஸ்ட்ராங்கா இருப்பாங்க. டாடி திரும்பி வரும்போது ரொம்ப நல்லா, சுகத்தோட, பலத்தோட, சந்தோஷமா இருப்பாங்க, அப்போ நாங்க மறுபடியும் டாடிய பாப்போம். இயேசுவின் நாமத்தில் . . . ஓ, மம்மியையும் மறந்துடாதீங்க, அவங்களும் ஸ்ட்ராங்கா இருக்கணும். ஆமென்.”
டாட்டியானாவுக்கு விஷயம் முழுமையாக புரிந்ததா இல்லையா என லினாவுக்கு ஒரு சந்தேகம். அதனால் இவ்வாறு கேட்டார்: “டியானா, ரொம்ப அருமையா ஜெபம் செஞ்சே. ஆனா, டாடி திரும்பி வரமாட்டார்னு உனக்கு தெரியுந்தானே கண்ணு?” உடனே டாட்டியானாவின் முகத்தில் ஓர் அதிர்ச்சி மின்னலிட்டது. “வர மாட்டாங்களா?” என்று அவள் கேட்டாள். “வரமாட்டாங்கம்மா. அத உன்கிட்ட ஏற்கெனவே சொன்னதா ஞாபகம். டாடி திரும்பி வரமாட்டாருங்றது உனக்கு புரிஞ்சுடுச்சுன்னு நெனச்சேன்” என்றார் அம்மா. அதற்கு டாட்டியானா இவ்வாறு சொன்னாள்: “ஆனா, புதிய உலகத்துல திரும்பி வருவாங்கனு நீங்க எப்பவும் சொல்லிட்டிருந்தீங்களே!” கடைசியில் தன் மகள் சொன்னதை புரிந்துகொண்டு லினா இவ்வாறு சொன்னார்: “ஸாரி, டாட்டியானா. நான்தான் உன்ன தப்பா புரிஞ்சுட்டேன். டாடி நாளைக்கு வந்திடுவாங்கனு யோசிச்சியோன்னு நெனச்சேன்.” லினா இவ்வாறு குறிப்பிட்டார்: “புதிய உலகம் அவளுக்கு அவ்வளவு நிஜமா இருக்கறத தெரிச்சிக்கிட்டதுல எனக்கு சந்தோஷம்.”