இரட்டை கோபுரங்கள் தரைமட்டமான நாள்
இரட்டை கோபுரங்கள் தரைமட்டமான நாள்
செப்டம்பர் 11, 2001-ல் நடந்த சம்பவங்கள் நியூ யார்க் நகரத்திலும், வாஷிங்டன், டி.சி.-யிலும், பென்சில்வேனியாவிலும், ஏன், இந்த உலகில் வாழும் கோடிக்கணக்கான மக்களின் மனங்களிலுமே அழியாத வடுவை ஏற்படுத்தும். நியூ யார்க்கிலுள்ள உலக வர்த்தக மையமும் வாஷிங்டனிலுள்ள பென்டகனும் தாக்கப்பட்டதை பார்த்தபோது அல்லது அதைக் குறித்து கேள்விப்பட்டபோது நீங்கள் எங்கு இருந்தீர்கள்?
இவ்வளவு சில நிமிடங்களுக்குள் இத்தனை பொருட்களையும், அதைவிட முக்கியமாக இத்தனை உயிர்களையும் அழித்து பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவம், மக்களை சற்று சிந்திக்க வைத்திருக்கிறது.
வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்ற விஷயத்தை பொருத்ததில் இது நமக்கு புகட்டும் பாடம் என்ன? சுயதியாகம், பரிவு, சகிப்புத்தன்மை, சுயநலமின்மை போன்ற மனிதரிடம் குடிகொண்டிருக்கும் சில நற்பண்புகளை அந்தச் சோக சம்பவங்கள் எப்படி வெளிக்கொணர்ந்தன? இந்தக் கட்டுரையும் இதற்குப் பின்வரும் கட்டுரையும் இரண்டாவது கேள்விக்கான பதிலை தரும்.
பிழைத்தவர்கள் சொல்லும் கதை
நியூ யார்க்கில் இந்தப் பேரழிவு நடந்த உடனேயே சுரங்க இரயில்பாதை மூடப்பட்டது; மக்கள் கூட்டம் கூட்டமாக லோயர் மன்ஹாட்டனை விட்டு நடந்தே வெளியேறினார்கள்; அவர்களில் அநேகர் புரூக்ளின் மற்றும் மன்ஹாட்டன் பாலங்களை கடந்து சென்றார்கள். அப்போது, யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமையகத்தின் அலுவலக மற்றும் தொழிற்சாலை கட்டிடங்கள் பளிச்சென அவர்கள் கண்ணில் பட்டன. விபத்திலிருந்து தப்பிய சிலர் அந்தக் கட்டிடங்களுக்கு விரைந்தனர்.
அங்கு முதலில் போய்சேர்ந்தவர், ஒரு யெகோவாவின் சாட்சியுடைய மகள் ஆலிஷா (வலப்பக்கம்). a ஒரே புழுதியும் சாம்பலுமாக போய்சேர்ந்த அவர் இவ்வாறு விளக்குகிறார்: “நான் வேலைக்காக ட்ரெய்னில் போயிட்டிருக்கும்போதே உவல்ட் ட்ரேட் சென்டரிலிருந்து குபுகுபுன்னு புகை வர்றது தெரிஞ்சுது. சேதம் நடந்த பகுதிக்கு வந்தபோதோ, எங்கு பாத்தாலும் கண்ணாடி சில்லுகள்; அந்த இடம் பூராவும் ஒரே வெக்கையா இருந்தது. ஒருபக்கம் போலீஸ் அந்த ஏரியாவிலிருந்து ஜனங்கள மும்முரமாக வெளியேற்ற, இன்னொரு பக்கம் ஜனங்க நாலா திக்குக்கும் தலைத்தெறிக்க ஓடிக்கிட்டிருந்தாங்க. ஆக பாக்கறத்துக்கு ஒரே போர்க்களமாதான் தெரிஞ்சுது.
“பாதுகாப்புக்காக பக்கத்திலுள்ள ஒரு கட்டடத்துக்குள்ளே ஓடினேன். அப்போதுதான் தெற்கு டவர்மேல ரெண்டாவது ப்ளேன்
மோதி வெடிக்கிற சத்தத்த கேட்டேன். அந்தக் காட்சிய விவரிக்க வார்த்தைகளே இல்ல, கன்னங்கரேலென எங்கும் ஒரே புகைமயம். அபாய பகுதியிலிருந்து வெளியேறும்படி எங்ககிட்ட சொன்னாங்க. ஈஸ்ட் ரிவர் வழியாக புரூக்ளினுக்கு போகிற ஃபெரி படகில என்னை ஏத்தினாங்க. நான் அக்கரைக்கு வந்தப்போ, ‘உவாட்ச்டவர்’ என கொட்டை எழுத்துல எழுதியிருந்தது கண்ணுல பட்டது. அது என் அம்மாவோட மதத்தின் தலைமையகம்! உடனடியா அந்த கட்டடத்தை நோக்கி நடக்க ஆரம்பிச்சேன். அதவிட பாதுகாப்பான இடம் வேற இல்லன்னு எனக்கு நல்லாவே தெரியும். அங்கே போய் குளிச்சு சுத்தமாகி பிறகு அம்மா, அப்பாவுக்கு தகவல் கொடுக்க முடிஞ்சுது.”இரட்டை கோபுரங்களுக்கு இடையில் அமைந்த மரியட் ஓட்டலுக்கு டோர்மேனாக இருந்தார் வென்டல் (வலப்பக்கம்). அவர் இவ்வாறு கூறினார்: “முதல் வெடிப்பு நடந்த சமயத்தில நான் வரவேற்பு அறையிலே ட்யூட்டி பாத்துட்டு இருந்தேன். வெடித்து சிதறிய துண்டுகள் எல்லா பக்கமும் விழுறத பாத்தேன். தெருவுல பாத்தப்போ, ஒரு ஆள் தீப்பிடிச்சு எரிஞ்சிட்டிருந்தாரு. நான் சடார்னு என் கோட்டையும் சட்டையையும் கழற்றி அந்த நெருப்பை அணைக்க ஓடினேன். வேறொருத்தரும் உதவிக்கு வந்தார். சாக்ஸையும் ஷூவையும் தவிர அவரோட எல்லா துணியும் எரிஞ்சுடுச்சு. அதுக்குப்பின் தீயணைப்பு படையினர் வந்து, மருத்துவ உதவி அளிக்க அவர தூக்கிட்டு போனாங்க.
“கொஞ்ச நேரத்துக்கு அப்புறம், சி.பி.எஸ்.-ஐ சேர்ந்த ப்ரையன்ட் கம்பல் என்பவர், நான் நேரில் பார்ப்பதை பேட்டியெடுக்க எனக்கு ஃபோன் செய்தார். டிவி-ல நான் பேசியத விர்ஜின் தீவுகளிலுள்ள என் குடும்பத்தார் கேட்டாங்க, அதனால நான் உயிரோட இருப்பது அவங்களுக்கு தெரிஞ்சுது.”
195 சென்டிமீட்டர் உயரமுள்ள வாட்டசாட்டமான டோனல்ட், தான் வேலை பார்க்கும்
உலக நிதி மையத்தின் 31-ம் மாடியிலிருந்து இரட்டை கோபுரங்களையும் மரியட் ஓட்டலையும் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “நான் அதப் பாத்து அரண்டுபோய் நின்னேன். வடக்கு டவர் ஜன்னல்ல இருந்து ஜனங்க கீழே குதிக்கிறதையும் விழுகிறதையும் பாத்தேன். அலறியடிச்சு எவ்வளவு வேகமா ஓடமுடியுமோ அவ்வளவு வேகமா வெளிய ஓடினேன்.”மற்றொரு அனுபவம் அறுபது வயதைத் தாண்டிய அம்மாவையும் நாற்பது வயதைத் தாண்டிய அவருடைய மகள்கள் இருவரையும் பற்றியது. ரூத்தும் அவருடைய தங்கை ஜோனியும் அம்மா ஜேனஸுடன் இரட்டை கோபுரங்களுக்கு அருகிலுள்ள ஓட்டலில் தங்கியிருந்தார்கள். நர்ஸாக பணியாற்றும் ரூத் நடந்ததை சொல்கிறார்: “நான் குளிச்சிட்டிருந்தேன். திடீர்னு அம்மாவும் தங்கையும் உடனடியா வெளியே வரச்சொல்லி கூப்பாடு போட்டாங்க. நாங்க தங்கியிருந்தது 16-வது மாடியில். வெடிச்சு சிதறிய கட்டட துண்டுகள் ஓட்டலை சுத்தியும் விழுறத ஜன்னல் வழியா அவங்களால பாக்க முடிஞ்சுது. அதவிட, யாரோ ஒருத்தரோட உடல் எங்கிருந்தோ அம்புமாதிரி பக்கத்து பில்டிங் மேலா பறந்து வந்ததை அம்மா பாத்தாங்க.
“நான் அரக்கப்பரக்க டிரஸ் மாட்டிக்கிட்டேன், பிறகு நாங்க படிக்கட்டு வழியே வேகமாக இறங்க ஆரம்பிச்சோம். எங்க பாத்தாலும் ஒரே கூச்சலும் கூப்பாடுமா இருந்துது. நாங்க ரோட்டுக்கு வந்தோம். டமால் டமால்னு வெடிக்கிற சத்தம்; தீப்பொறி பறந்திச்சு. சீக்கிரமாக தெற்கே பேட்டரி பார்க்குக்கு போக எங்ககிட்ட சொன்னாங்க. அங்குதான் ஸ்டேட்டன் ஐலண்டுக்கு போகிற ஃபெரி படகு இருக்குது. ஆனா வழில அம்மா எங்கோ காணாம போயிட்டாங்க; அவங்க ஆஸ்துமா நோயாளி வேற. அத்தனை சாம்பலிலும் புகையிலும் புழுதியிலும் எப்படித்தான் சமாளிப்பாங்களோன்னு மனசு அடிச்சுது. அவங்கள சுற்றும் முற்றும் அரைமணி நேரம் தேடினோம், ஆனா பிரயோஜனமில்ல. இருந்தாலும் அளவுக்கு அதிகமாக நாங்க கவலைப்படல, ஏன்னா அம்மாக்கு நல்ல சாமர்த்தியமும் மனபலமும் உண்டு.
“கடைசியா புரூக்ளின் பாலம் வழியா அடுத்த பக்கம் போக எங்ககிட்ட சொன்னாங்க. பாலத்த கடந்து புரூக்ளின் பக்கம் போனோம், அங்கே கொட்டை எழுத்துல ‘உவாட்ச்டவர்’ என்ற பெயரை பாத்ததும்தான் உயிரே வந்தது! பத்திரமான இடத்துக்கு வந்து சேந்துட்ட நிம்மதி கிடச்சுது.
“அங்கே எங்களுக்கு நல்ல உபசரிப்பும் தங்கறதுக்கு இடமும் கிடைச்சுது. நாங்க உடுத்தின துணியோடு போனதால் வேற துணிமணிகளும் தந்தாங்க. ஆனா அம்மாவ காணோமே! நாங்க ராத்திரி முழுக்க ஒவ்வொரு ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியா விசாரிச்சும் பயனில்ல. அடுத்த நாள் காலைல கிட்டத்தட்ட பதினொன்றரை மணிக்கு எங்களுக்கு ஒரு செய்தி கிடச்சுது. அம்மா கீழே லாபில இருந்தாங்க! அவ்வளவு நேரம் எங்கே போயிருந்தாங்க?”
அம்மா ஜேனஸ் இப்போது கதையை தொடர்கிறார்: “ஓட்டல்லயிருந்து தலைதெறிக்க ஓடிவந்தபோது வயசான என் ஃப்ரெண்ட் பத்தி யோசிச்சேன். அவங்களுக்கோ எங்கள மாதிரி ஓடியோடி வர முடியாது. நான் திரும்ப போய் அவங்களயும் கூட்டிட்டு வரணும்னு நெனச்சேன். ஆனா அது ரொம்ப டேஞ்ஜரா இருந்துச்சு. இந்த குழப்பத்தில நானும் என் பிள்ளைகளும் பிரிஞ்சுட்டோம். இருந்தாலும் நான் பிள்ளைங்கள பத்தி கவலப்படல. ஏன்னா, அவங்க நிதான புத்தியுள்ளவங்க, ரூத் ஒரு நர்ஸ் வேற.
“எங்க பாத்தாலும் ஜனங்க உதவிக்காக அலைமோதிட்டிருந்தாங்க—முக்கியமா பிள்ளைகளும் குழந்தைகளும். என்னால முடிஞ்சவர நிறைய பேருக்கு உதவி செஞ்சேன். காயப்பட்டவங்களுக்கு சிகிச்சை கொடுக்கிற இடத்துக்கு போனேன். போலீஸும் தீயணைப்புப் படையினரும் அங்கிருந்தாங்க, அவங்களோட கை, கால், முகத்தில அப்பியிருந்த
கரியையும் புழுதியையும் கழுவுறதுக்கு உதவி செஞ்சேன். விடிய விடிய காலைல மூணு மணிவர அங்கதான் இருந்தேன். அதுக்கப்புறம் கடைசி ஃபெரி படகில ஸ்டேட்டன் ஐலண்டுக்கு வந்தேன். என் பிள்ளைங்க ஒருவேள அங்க பத்திரமா இருப்பாங்கன்னு நெனச்சேன். ஆனா அவங்கள அங்க கண்டுபிடிக்க முடியல.“காலைல மன்ஹாட்டனுக்கு திரும்பிப் போறதுக்கு எப்படியாவது முதல் ஃபெரி படக பிடிக்கணும்னு நெனச்சேன். ஆனா நான் எமர்ஜன்ஸி வொர்க்கரா இல்லாததுனால அதுல ஏற முடியல. அதுக்கப்புறம் கை, முகமெல்லாம் கழுவிக்க நான் உதவின ஒரு போலீஸ அங்கே பாத்தேன். நான் அவரை கூப்பிட்டு, ‘ஜான்! எனக்கு மன்ஹாட்டனுக்குப் போகணும்’ என்று சொன்னேன். ‘நீங்க என்னோட வாங்கன்னு’ சொன்னார்.
“மன்ஹாட்டனுக்கு வந்து சேர்ந்தப்போ நான் திரும்பவும் மரியட் ஓட்டலுக்குச் போனேன். என்னோட வயசான ஃப்ரெண்டுக்கு உதவ இப்போதாவது வழி இருக்கலாமுன்னு நெனச்சேன். ஆனா வழியேயில்ல! ஓட்டல் வெறும் இடிபாடுகளாக கிடந்துது. அந்த ஏரியாவே பாக்கறத்துக்கு சுடுகாடு போல இருந்துச்சு, போலீஸும் தீயணைப்பு படையினரும் மட்டுந்தான் முகத்தில் சவக்களை கட்ட வேலை செய்திட்டிருந்தாங்க.
“நான் புரூக்ளின் பாலத்தில மெதுவா நடக்க ஆரம்பிச்சேன். பாலத்தோட அடுத்த பக்கத்த நெருங்கியதும் ‘உவாட்ச்டவர்’ என்கிற பழக்கமான வாசகம் கண்ணில் பட்டது. ஒருவேள பிள்ளைங்க அங்க இருப்பாங்கனு நெனச்சேன். நான் நெனச்சபடியே என்ன வரவேற்கறதுக்கு அவங்க லாபிக்கு வந்தாங்க. நாங்க ஒருத்தரையொருத்தர் கட்டித் தழுவி கண்ணீர் விட்டோம்!
“இவ்வளவு புகையிலும் புழுதியிலும் சாம்பலிலும் எனக்கிருந்த ஆஸ்துமா துளிகூட தொந்தரவு கொடுக்காததுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். நான் மத்தவங்களுக்கு சுமையா இல்லாம உதவியா இருக்கணும்னு ஜெபம் செஞ்சிட்டே இருந்தேன்.”
“தரையிறங்க இடமே இல்லையே!”
ரேச்சல் என்ற இருபத்து நான்கு வயது பெண் விழித்தெழு! எழுத்தாளரிடம் இவ்வாறு சொன்னார்: “லோயர் மன்ஹாட்டன்ல என் ப்ளாக் வழியா நடந்து போயிட்டு இருந்தேன், அப்போ தலைக்கு மேலே ப்ளேன் பறந்து போற சத்தம் கேட்டுச்சு. சத்தம் அவ்வளவு பயங்கரமா இருந்ததுனால என்னை அறியாமலே மேலே பாத்தேன். என்னால நம்பவே முடியல—அந்த பெரிய ஜெட் ப்ளேன் தரையிறங்கிற மாதிரி பறந்து போயிட்டிருந்தது. இது ஏன் இவ்வளவு தாழ்வா அதுவும் இவ்வளவு வேகமா பறக்குதுன்னு நெனச்சேன். தரையிறங்க இடமே இல்லையே! ஒருவேள பைலட் கண்ட்ரோலை இழந்திருப்பாரோ. ‘ஐயோ ப்ளேன் பில்டிங்ல மோதிடுச்சு!’ என ஒரு பெண் அலர்ற சத்தத்த கேட்டேன். வடக்கு டவர்லயிருந்து வெடி சத்தத்தோடு ஒரு பெரிய தீப்பிழம்பு எழும்பிச்சு. பிறகு, குடைஞ்செடுத்த மாதிரி ஒரு பெரிய ஓட்டை கன்னங்கறேலென தெரிஞ்சுது.
“வாழ்க்கைல இவ்வளவு பயங்கரமான ஒண்ண நான் பார்த்ததே இல்ல. இது நிஜம்தானானு தோணிச்சு. நான் அப்படியே வாய்பிளந்து நின்னேன். கொஞ்ச நேரத்தில ரெண்டாவது ப்ளேன் அடுத்த டவரில மோதிச்சு. பிறகு ரெண்டு டவரும் பொலபொலன்னு சரிஞ்சிடுச்சு. எனக்கு பைத்தியம் பிடிக்காத குறை. அப்பப்பா, தாங்கிக்கவே முடியல!”
“நீந்த வேண்டியிருந்தாலும் பரவாயில்ல, நீந்திடறேன்”
பதினாறு வயது டனிஸ், அமெரிக்க பங்கு சந்தைக்கு அடுத்து, அதாவது உலக வர்த்தக மையத்திலிருந்து மூன்று பிளாக்குகளுக்கு தெற்கே அமைந்துள்ள ஸ்கூலுக்கு அப்போதுதான் சென்றிருந்தாள். “காலைல சுமார் 9 மணிக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பது எனக்கு புரிஞ்சுது. ஆனா என்னவாயிருக்கும்னு பிடிபடல. 11-வது மாடில எங்களுக்கு சரித்திர பாடம் நடந்திட்டிருந்தது. எல்லா ஸ்டூடன்ஸோட முகமும் பயத்தில வெளிறிப்போய் இருந்துச்சு. டீச்சர், எங்களுக்கு இன்னும் பரீட்சை வேறு வைக்கணும்னு இருந்தாங்க. ஆனா, எங்களுக்கோ வீடு போய் சேர்ந்தா போதும்னு இருந்துது.
“பிறகு தெற்கு டவரல ரெண்டாவது ப்ளேன் மோதியபோது எங்க பில்டிங்கே அதிர்ந்தது. அப்பவும் என்ன நடந்ததுன்னு எங்களுக்கு தெரியல. திடீர்னு டீச்சருடைய வாக்கி-டாக்கி-ல் ‘ட்வின் டவர்கள் மேல் இரண்டு விமானங்கள் மோதின!’ என்ற செய்திய கேட்டேன். ‘இன்னும் இங்கிருக்கிறது சரியில்ல. இது பயங்கரவாதிகளோட வேலதான், அடுத்தது ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுதான்’ என்று நெனச்சேன். பிறகு ஒருவழியா அங்கிருந்து கிளம்பினோம்.
“நாங்க பேட்டரி பார்க் பக்கம் ஓட்டம் பிடிச்சோம். என்ன நடக்குதுன்னு பாக்றதுக்கு திரும்பினேன். தெற்கு டவர் எந்த நிமிஷமும் நொறுங்கி விழற நிலையில இருந்தது. இனி அடுத்தடுத்ததா எல்லா பெரிய கட்டிடங்களும் விழப்போகுதுன்னு நெனச்சேன். புழுதியும் சாம்பலும் என் மூக்கையும் தொண்டையையும் அடச்சதுனால மூச்சு திணறுச்சு. ‘நீந்த வேண்டியிருந்தாலும் பரவாயில்ல, நீந்திடறேன்’ என்று நெனச்சுட்டே ஈஸ்ட் ரிவரை நோக்கி ஓடினேன். என்ன காப்பாத்துங்க யெகோவா தேவனே என வேண்டிகிட்டே ஓடினேன்.
“கடைசில நியூ ஜெர்ஸிக்கு போகிற ஃபெரி படகில என்னை ஏத்தினாங்க. அஞ்சு மணிநேரத்துக்கு அப்புறம்தான் நான் எங்க இருக்கிறேன்னு அம்மா கண்டுபிடிச்சாங்க,
ஆனா பத்திரமாக இருந்ததே அவங்களுக்கு சந்தோஷம்!”“இன்னைக்குதான் என் சாவு நாளா?”
நியூ ஜெர்ஸியிலுள்ள பிரின்ஸ்டனை சேர்ந்த 28 வயது ஜாஷ்வா வடக்கு டவரின் 40-வது மாடியில் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அவர் சொல்கிறார்: “திடீர்னு ஒரு பெரிய குண்டு வெடிச்சது போல சத்தம். ஆனா கட்டிடமே அதிர ஆரம்பிச்சதும் ‘இது பூமியதிர்ச்சியா இருக்கணும்’ என்று நெனச்சேன். வெளியே எட்டிப் பாத்தப்போ என்னால நம்பவே முடியல—புகையும் சிதறல்களும் கட்டடத்தை சுத்தி சுழன்றுட்டிருந்துது. ‘எல்லாரும் எல்லாத்தையும் அப்படியே போட்டுட்டு என்னோட ஓடி வாங்க!’ என்று பிள்ளைங்களிடம் அலறினேன்.
“படிக்கட்டுல இறங்கி ஓடினப்போ புகை வேகமாக உள்ளே வந்திட்டிருந்தது, ஸ்பிரிங்க்லர்-லிருந்து தண்ணியும் வந்திட்டிருந்தது. ஆனா யாரும் பீதி அடையல. நேரே போய் நெருப்புக்குள் மாட்டிக்காம சரியான படிக்கட்டுகளில் இறங்கிப் போகணும்னு ஜெபம் செய்திட்டே வந்தேன்.
“படிக்கட்டுல இறங்கி ஓடும்போது ‘இன்னைக்குதான் என் சாவு நாளா?’ என யோசிச்சேன். வாய் ஓயாம யெகோவாட்ட ஜெபம் செஞ்சிட்டிருந்தேன், அப்போ இனம்புரியாத மனசமாதானத்த என்னால உணர முடிஞ்சுது. வாழ்க்கைல இப்படியொரு மனசமாதானத்தை நான் அனுபவிச்சதே இல்ல. அந்த கணத்தை நான் மறக்கவே மாட்டேன்.
“ஒருவழியா பில்டிங்க விட்டு வெளியே வந்தோம், போலீஸ் எல்லாரையும் வெளியேற்றிட்டு இருந்தாங்க. நான் அண்ணாந்து பாத்தப்போ, இரண்டு டவரும் பிளந்துபோய் இருந்தது. என் கண்ணையே என்னால நம்ப முடியல.
“அதுக்குப் பின்னால பீதிகலந்த ஒரு நிசப்தம்—ஆயிரக்கணக்கானவர்களின் சப்தநாடியும் அடங்கி ஒடுங்கியதைப் போன்ற மயான அமைதி. நியூ யார்க் நகரமே ஸ்தம்பித்து விட்டது போல தோணிச்சு. அதுக்கப்புறம் பயங்கர அலறல். தெற்கு டவர் சுக்குநூறாக நொறுங்கி விழுந்திட்டிருந்தது! புகையும், சாம்பலும், புழுதியும் குபுகுபுவென எங்களை விரட்டிக்கொண்டு வந்தன. சினிமால பாக்கிற ஸ்பெஷல் எஃபெக்ட் சீன் மாதிரி இருந்தது. ஆனா இது நிஜம். புகை மண்டலம் எங்கள சுற்றி வளச்சப்போ எங்களால மூச்சுவிட முடியல.
“நான் மன்ஹாட்டன் பிரிட்ஜ்-க்கு போய், அங்கிருந்து திரும்பிப் பாத்தபோ வடக்கு டவரும் பெரிய டிவி ஆன்டனாவோடு சேர்ந்து கீழே நொறுங்கி விழுறது தெரிஞ்சுது. நான் பாலத்த கடந்தபோ, யெகோவாவின் சாட்சிகளோட தலைமையகமான பெத்தேலுக்கு எப்படியாவது போய்ச் சேரணும்னு ஜெபம் செய்திட்டே நடந்தேன். என் வாழ்க்கைல அந்த இடத்தை பார்த்து அந்தளவு சந்தோஷப்பட்டதே இல்ல. ‘கடவுளுடைய வார்த்தையாகிய பரிசுத்த பைபிளை தினமும் வாசியுங்கள்’ என்ற வாசகம் அங்குள்ள தொழிற்சாலையின் சுவர்ல, ஆயிரக்கணக்கானோர் தினமும் பாக்கிற மாதிரி பெருசா எழுதப்பட்டிருந்துச்சு! அதப் பாத்ததுமே ‘இன்னும் கொஞ்ச தூரம்தான், போய் சேர்ந்திடலாம்’ என நெனச்சேன்.
“வாழ்க்கைல சரியான காரியங்களுக்குத்தான் முதலிடம் கொடுக்கணுங்றதை அந்த அனுபவம் எனக்கு நல்லாவே புரிய வெச்சிடுச்சு.”
“டவரிலிருந்து ஜனங்க குதிக்கிறத பாத்தேன்”
ஜெஸிக்கா என்ற 22 வயது பெண் உலக வர்த்தக மையத்திற்கு அருகிலுள்ள சுரங்கப் பாதை ரயில்வே ஸ்டேஷனில் வந்து இறங்கியபோது இந்தச் சம்பவங்களை பார்த்தார். “சாம்பல், பல வித உலோக துண்டுகள், இன்னும் என்னன்னவோ கட்டட பொருள்களும் தெறிச்சு விழுந்துட்டு இருந்துது. ஃபோன் பேசுவதற்காக பூத்-தில் ஒரு பெரிய க்யூவே காத்திட்டிருந்தது; லேட்டாக லேட்டாக பரபரப்பும் பீதியும் ஏறியது. நான் மன அமைதிக்காக ஜெபம் செய்தேன். அப்போதுதான் அடுத்த வெடிப்பு சத்தம். ஸ்டீலும் கண்ணாடி சில்லுகளும் சரமாரியா வந்து விழுந்துச்சு. ‘இன்னொரு ப்ளேன் மோதிடுச்சு!’ என்று ஜனங்க சத்தம் போடுறத கேட்டேன்.
“அந்தக் கோர காட்சியை பாத்து என்னால தாங்கிக்கவே முடியல. புகையையும் தீயையும் கக்கிக்கிட்டிருந்த மேல் மாடிகள்ல இருந்து ஜனங்க கீழே குதிச்சிட்டிருந்தாங்க. ஒரு காட்சி இப்பவும் என் கண் முன்னால நிக்குது—ஒரு ஆளும் பெண்ணும் கொஞ்ச நேரத்திற்கு ஜன்னல பிடிச்சிட்டிருந்தாங்க. அப்புறம் பிடிக்க முடியாம விழுந்தாங்க, விழுந்தாங்க, கீழவரைக்கும் வந்து விழுந்து சிதறினாங்க. அதுதான் கொடுமையிலும் கொடுமையான காட்சி.
“கடைசில நான் புரூக்ளின் பாலத்துக்கு வந்து சேர்ந்தேன். ஷூ-வோடு ஓட கஷ்டமாக இருந்ததால் அதை கழற்றி கையில பிடிச்சிட்டு ஈஸ்ட் ரிவரைப் பார்த்து ஓடினேன். பிறகு உவாட்ச்டவர் அலுவலக கட்டிடத்திற்குள் போனேன், அவங்க உடனடியாக என்னை அமைதிப்படுத்தினாங்க.
“வீட்டிற்கு போனதும் ராத்திரியே, ‘துயர சம்பவத்தை தொடரும் மனத்துயரங்களை சமாளித்தல்’ என்ற தொடர் கட்டுரையை ஆகஸ்ட் 22, 2001 ஆங்கில விழித்தெழு! பத்திரிகையில் வாசித்தேன். எனக்கென்றே எழுதப்பட்ட கட்டுரைபோல தோணிச்சு!”
அந்தப் பேரழிவு அந்தளவுக்கு படுபயங்கரமாக இருந்ததால் மக்கள் தங்களால் முடிந்த எல்லா வழிகளிலும் மற்றவர்களுக்கு உதவ தூண்டப்பட்டார்கள். அடுத்த கட்டுரை இந்த அம்சத்தை விளக்குகிறது.(g02 1/8)
[அடிக்குறிப்பு]
a பேரழிவில் உயிர்ப்பிழைத்த இன்னும் அதிகமானோரை விழித்தெழு! பேட்டி கண்டது; அப்பேட்டிகள் இந்த சுருக்கமான கட்டுரைகளில் இடம்பெறாவிட்டாலும் இந்த அறிக்கைகளை முழுமையாக்கவும் உறுதிப்படுத்தவும் உதவின.
[பக்கம் 8, 9-ன் படங்கள்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
அழிந்து போனவை
1 வடக்கு டவர் 1 உலக வர்த்தக மையம்
2 தெற்கு டவர் 2 உலக வர்த்தக மையம்
3 மரியட் ஓட்டல் 3 உலக வர்த்தக மையம்
7 7 உலக வர்த்தக மையம்
பயங்கரமாக சேதமடைந்தவை
4 4 உலக வர்த்தக மையம்
5 5 உலக வர்த்தக மையம்
L ஒரு லிபர்டி ப்ளாசா
D டாயிஷ் வங்கி 130 லிபர்டி தெரு
6 ஐ.மா. கஸ்டம்ஸ் ஹவுஸ் 6 உலக வர்த்தக மையம்
N S வடக்கு மற்றும் தெற்கு பாதசாரிகள் செல்லும் பாலங்கள்
ஓரளவு சேதமடைந்தவை
2F 2 உலக நிதி மையம்
3F 3 உலக நிதி மையம்
W வின்டர் கார்டன்
[படத்திற்கான நன்றி]
As of October 4, 2001 3D Map of Lower Manhattan by Urban Data Solutions, Inc.
[படங்கள்]
உச்சியில்: முதலில் தெற்கு டவர் தரைமட்டமானது
மேலே: சிலர் அடைக்கலத்திற்காக உவாட்ச்டவர் கட்டிடத்திற்கு ஓடினர்
வலது: விபத்து நடந்த பகுதியில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு படையினரும் மீட்பு குழுவினரும் அயராது உழைத்தனர்
[படங்களுக்கான நன்றி]
AP Photo/Jerry Torrens
Andrea Booher/FEMA News Photo
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
AP Photo/Marty Lederhandler
[பக்கம் 4-ன் படத்திற்கான நன்றி]
AP Photo/Suzanne Plunkett