Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

வைரஸைக் கொல்லும் டீ

“மார்க்கெட்டில் கிடைக்கும் டீக்களில் பல ரகங்கள் வைரஸ்களை செயலிழக்கச் செய்யும் அல்லது கொல்லும் திறன் கொண்டவை” என ஆரம்ப ஆய்வுக்கூட ஆய்வுகள் காட்டுவதாக ராய்ட்டர்ஸ் ஹெல்த் இன்ஃபர்மேஷன் அறிக்கை செய்கிறது. பச்சை டீ, கறுப்பு டீ, சூடான டீ, குளிர்ந்த டீ ஆகியவற்றில் பல வகைகள், ஹெர்பிஸ் சிம்ப்ளக்ஸ் 1 மற்றும் 2, டி-1 பாக்டீரியோ ஃபேஜ் போன்ற வைரஸ் தொற்றிய விலங்குகளின் திசுக்கள்மீது ஆராயப்பட்டன. நியூ யார்க்கிலுள்ள பேஸ் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த ஆய்வாளரான டாக்டர் மில்டன் ஷிஃபன்பௌவர் கூறுவதன்படி, “குளிர்ந்த அல்லது சூடான தேநீர் [ஹெர்பிஸ்] வைரஸை சில நிமிடங்களில் செயலிழக்கச் செய்கிறது அல்லது கொல்லுகிறது.” டி-1 வைரஸை வைத்து ஆய்வு செய்த போதும் இது போன்ற முடிவுகள் கிடைத்தன. தேயிலை இந்த வைரஸ்களை எவ்வாறு பாதிக்கிறது என்பது தெளிவாக தெரியவில்லை; ஆனால் தேநீரை கணிசமான அளவு நீர்த்த பிறகும் அவ்வாறே கொல்லுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். வைரஸைக் கொல்லுவதில் பச்சை தேநீரைவிட கறுப்பு தேநீரே அதிக திறன் பெற்றிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. (g02 1/8)

சத்தத்துடன் உறிஞ்சி சாப்பிடுவது தவறா?

சத்தமின்றி சாப்பிடுவதா, சத்தத்துடன் உறிஞ்சி சாப்பிடுவதா என்பதே இப்போது கேள்வி. இக்கேள்வி ஜப்பானில் பிரசித்தி பெற்ற நூடுல்ஸ் சூப் ரெஸ்டாரன்டுகளுக்குச் செல்லும் வாடிக்கையாளர்களைப் பொறுத்தமட்டிலாவது கேட்கப்படுகிறது. நடுத்தர வயதிலும் முதிர் வயதிலும் உள்ள அநேக ஜப்பானியர்கள், நீளமான நூடுல்ஸை சுடச்சுட சாறுடன் சேர்த்து சத்தத்துடன் உறிஞ்சி சாப்பிட்டால் அதன் ருசியே தனி என நினைக்கின்றனர். சத்தத்துடன் உறிஞ்சி சாப்பிடுவது சகஜமானது எனவும், ஒருவர் நிஜமாகவே உணவை ரசித்து ருசிப்பதைக் காட்டுவதற்கான வழி எனவும் அவர்கள் கருதுகின்றனர். ஆனால் நூடுல்ஸ் சாப்பிடும் முறையைப் பொறுத்தமட்டில், ஜப்பானின் இளம் தலைமுறையினருக்கு வித்தியாசமான கருத்து இருக்கிறது. த ஜப்பான் டைம்ஸ் செய்தித்தாள் அறிக்கை செய்வதாவது: “ஜப்பானிய இளம் தலைமுறையினர், தாங்கள் அணிந்திருக்கும் பட்டு டைகளிலும் [டிஸைனர்] டிரெஸ்களிலும் சூப் சிந்திவிடாதவாறு வெகு கவனத்துடன் பார்த்துக்கொள்கின்றனர். மேற்கத்திய பழக்கப்படியும் மேற்கத்திய உணவையே அதிகம் உண்ணும் வழக்கப்படியும் வளர்க்கப்பட்ட அவர்களுக்கு, தங்களைச் சுற்றியிருப்பவர்கள் சப்புக்கொட்டி சாப்பிடுவதைக் கண்டால் சுத்தமாக பிடிக்காதது போல் தெரிகிறது.” சப்புக்கொட்டி சாப்பிடும் இப்பிரச்சினை, ஜப்பானிலுள்ள சந்ததிப் பிளவின் பாகமாகிவிட்டது; இது, பொதுவிடங்களில் நூடுல்ஸ் உட்கொள்ளும் சில முதியவர்கள், தப்பித்தவறியும் சப்புக்கொட்டி விடாமல் கவனமாய் இருக்கும்படி செய்கிறது. முதியவர்களுக்கு ஆதரவாக, பிரசித்தி பெற்ற ஜப்பானிய செய்தித்தாள் ஒன்று இவ்வாறு வருத்தம் தெரிவித்தது: “இனிமேல் யாருமே சப்புக்கொட்டி சாப்பிடவில்லை என்றால் அது பயங்கரமான தனிமை உணர்வை ஏற்படுத்தும்.” (g02 1/22)

புகையால் ஆபத்து

“புகைக்காமலேயே நுரையீரல் புற்றுநோய் கண்டு இறக்கும் எட்டுப் பேரில் ஒருவர், புகைப்பவருக்கு அருகில் இருந்தவர்” என உறுதியாக கூறுகிறார் ஜப்பானிலுள்ள தேசிய கேன்ஸர் மையத்தின் ஆய்வு நிறுவனத்தில் பணிபுரியும் நாவோஹீட்டோ யாமாகூச்சீ. நுரையீரல் புற்றுநோயால் இறந்த 52,000 பேரை வைத்து நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் அடிப்படையிலேயே அறிவியல் அறிஞர்கள் இவ்வாறு கண்டறிந்துள்ளனர். அத்துடன், “நெடுங்கால ஆய்வு காட்டுவதன்படி, நச்சுத்தன்மையுள்ள கார்பன் மோனாக்ஸைடும் கார்சினோஜன்களும், புகைப்பவர்கள் நேரடியாக உள்ளிழுக்கும் புகையில் உள்ளதைவிட அருகில் இருப்பவர் உள்ளிழுக்கும் புகையில் அதிகம் காணப்படுகின்றன” என ஆஸாஹீ ஷிம்புன் செய்தித்தாள் கூறுகிறது. ஜப்பானில் 1999-⁠ல் 14,000 பேரிடம் நடத்தப்பட்ட அரசு ஆய்வு ஒன்றில், வேலைக்கு அல்லது பள்ளிக்குச் சென்றவர்களில் 35 சதவீதத்தினரும் வீட்டிலிருந்தவர்களில் 28 சதவீதத்தினரும் மற்றவர்கள் வெளிவிடும் புகையை சுவாசித்தவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டது. “புகைப்பவர்கள், புகைக்காத மற்றவர்களுக்கு தீங்கு செய்வதை உணர வேண்டும்; அந்தத் தீங்கு அவ்வளவு மோசமாக இருப்பதால் புகைப்பவர்களையும் புகைக்காதவர்களையும் விலக்கி வைக்க பெருமுயற்சி செய்ய வேண்டியது அவசியமாயிருக்கிறது” என யாமாகூச்சீ கூறுகிறார். (g02 1/8)

மனச்சோர்வை விரட்டும் உடற்பயிற்சி

“நோயாளிகளில் சிலருக்கு, மனச்சோர்வு சிகிச்சைக்கென அளிக்கப்படும் பொதுவான மருந்துகளைக் காட்டிலும் உடற்பயிற்சியால் கைமேல் பலன் கிடைக்கலாம்” என த ஹார்வர்ட் மென்டல் ஹெல்த் லெட்டர் கூறுகிறது; ஐக்கிய மாகாணங்களிலுள்ள டியூக் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வு சம்பந்தமாக குறிப்பு தெரிவிப்பதாய் அது இவ்வாறு கூறுகிறது. மனச்சோர்வால் பெரிதும் பாதிக்கப்பட்ட 50 பேர் கொண்ட மூன்று தொகுதியினருக்கு நான்கு மாத காலம் வெவ்வேறு விதமான சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு தொகுதியினர் மனச்சோர்வை தணிக்கும் மருந்தை உட்கொண்டனர், மற்றொரு தொகுதியினர் உடற்பயிற்சி மட்டும் செய்தனர், மூன்றாவது தொகுதியினர் மருந்தையும் உட்கொண்டனர், உடற்பயிற்சியும் செய்தனர். நான்கு மாதங்களுக்குப் பிறகு, மூன்று தொகுதியையும் சேர்ந்த நோயாளிகளில் 60 முதல் 70 சதவீதத்தினர் “இனியும் மருத்துவ ரீதியில் மனச்சோர்வாக இல்லை” என அந்த ஹெல்த் லெட்டர் கூறினது. என்றாலும், அதற்குப் பிறகு ஆறு மாதங்களின்போது, உடற்பயிற்சி செய்துவந்த நோயாளிகள் “உடல் ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் மேம்பட்ட நிலையில் இருந்தனர்; அவர்களில் மனச்சோர்வால் மறுபடியும் பாதிக்கப்பட்டவர்கள் எட்டு சதவீதத்தினர் மட்டுமே.” ஆனால் மருந்தை உட்கொண்டவர்களில் 38 சதவீதத்தினருக்கும் உடற்பயிற்சி செய்ததுடன் மருந்தை உட்கொண்டவர்களில் 31 சதவீதத்தினருக்கும் மனச்சோர்வு மறுபடியும் ஏற்பட்டது. (g02 1/8)

உயிரைக் குடிக்கும் மது

“ஐரோப்பாவில், மது அருந்துவதால் ஏற்படும் காயம், ஊனம், மரணங்கள் ஆகியவை சமீப ஆண்டுகளில் இளம் வயதினரிடையே கிடுகிடுவென அதிகரித்திருக்கின்றன” என பிரிட்டனின் மருத்துவ பத்திரிகையான த லான்செட் அறிக்கை செய்கிறது. உலகிலேயே பெரும் குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஐரோப்பாவில், மது அருந்துவதால் ஒவ்வொரு ஆண்டும் 55,000 இளைஞர் பலியாகின்றனர். அயர்லாந்து, கிரீன்லாந்து, டென்மார்க், பிரிட்டன், பின்லாந்து ஆகிய நாடுகளில் பேட்டியெடுக்கப்பட்ட மாணவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் முந்திய மாதத்தின்போது குறைந்தபட்சம் மூன்று தடவை குடித்து வெறித்ததாக ஒப்புக்கொண்டனர். 30 ஐரோப்பிய நாடுகளில் 15, 16 வயதிலுள்ள 1,00,000 மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு காட்டுவதன்படி, போலந்து, லிதுவேனியா, ஸ்லோவினியா, ஸ்லோவேக் குடியரசு ஆகிய நாடுகளில் மது கோப்பையை கையிலேந்தும் பழக்கம் இளைஞர்களிடையே அதிகமாய் பெருகிவருகிறது. லண்டனின் இன்டிபென்டென்ட் செய்தித்தாளில் அறிக்கை செய்யப்பட்டபடி, “பொதுவாக அளவுக்கு மிஞ்சி குடிக்கும் 40-⁠க்கும் 60-⁠க்கும் இடைப்பட்ட வயதிலுள்ள ஆண்களிடம் காணப்படும் முற்றிய ஈரல் கரணை நோய் இப்போதோ” 20, 25 வயது பெண்களிடம் காணப்படுகிறது என்பதாக பிரிட்டனின் ராயல் காலேஜ் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அந்த காலேஜ், “பிரிட்டனின் பொது உடல்நல பிரச்சினைகளில் பெரும் செலவு பிடிக்கும் ஒன்றாக மதுப்பழக்கத்தையும் பட்டியலிடுகிறது.” (g02 1/22)

நோய்க்கு விடைகொடுக்கும் அன்பு

“நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் சிநேகப்பான்மையாக, நம்பிக்கையூட்டும் விதத்தில், அன்பாக நடந்துகொண்டால், நோய் பாதி குணமாகிவிடும்” என லண்டனின் த டைம்ஸ் செய்தித்தாள் குறிப்பிடுகிறது. இந்த விஷயத்தின் பேரில் பிரசுரிக்கப்பட்ட 25 அறிக்கைகளை ஆய்வு செய்த பிறகு, இங்கிலாந்திலுள்ள யார்க், எக்ஸ்டர், லீட்ஸ் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பின்வரும் முடிவுக்கு வந்தனர்: “நோயாளிகளிடம் கனிவாக, சிநேகப்பான்மையாக நடந்துகொண்டு, சீக்கிரமாக குணமடைவார்கள் என நம்பிக்கையளிக்கும் மருத்துவர்கள், உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் இயந்திரத்தனமாக நடந்துகொள்ளும் மருத்துவர்களைவிட திறம்பட்டவர்களாய் காணப்பட்டனர்.” “கூடுதலாக நேரம் கொடுத்து பேசி, ஏதாவது சந்தேகமிருந்தால் கேட்கும்படி உற்சாகப்படுத்தி, எல்லாம் சரியாகிவிடும் என நம்பிக்கையளிக்கும் டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றவர்கள் வெகு சீக்கிரம் குணமடைந்தனர்” என ஸ்வீடனில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு காட்டியது. (g02 1/22)

நலமுடன் வாழ உடற்பயிற்சி

அலுவலகத்தில் உட்கார்ந்தே வேலை பார்ப்பதால் குண்டாகிவிடுதல், இதய நோயால் பாதிக்கப்படுதல், பிற உடல்நல பிரச்சினைகள் ஆகியவற்றை தடுக்க அநேகர் எப்போதாவது உடற்பயிற்சி செய்கின்றனர், அவ்வாறு செய்யும்போதும் தீவிர உடற்பயிற்சியில் இறங்கிவிடுகின்றனர். என்றாலும், மிதமான உடற்பயிற்சியை தவறாமல் செய்துவருவது சிறந்தது; அவ்வாறு செய்வது, எப்போதாவது தீவிரமாக செய்யும் உடற்பயிற்சியைவிட சிறந்த விதத்தில் ரசாயன மாற்றங்கள் உடலில் ஏற்பட உதவுவதாக சமீபத்திய ஆய்வு காட்டுகிறது என ஜெர்மனியின் ஸூயெடோய்ச்ச ட்ஸைடுங் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. நிமிடத்திற்கு நிமிடம் உடலில் எவ்வளவு சக்தி செலவிடப்படுகிறது என்பதை 30 வாலண்டியர்களிடம் டச்சு ஆராய்ச்சியாளர் டாக்டர் க்ளாஸ் வெஸ்டர்டெர்ப் ஆய்வு செய்தார். “வேலை செய்யாமலே இருந்துகொண்டு, திடீர் திடீரென ஒரேயடியாக மிதமிஞ்சி வேலை செய்வதைவிட” அனுதினமும் சுறுசுறுப்பாக வேலை செய்து வருவது அதிக பலனைத் தரும் என்பதையே ஆய்வின் முடிவுகள் காட்டின. “உட்காருவதும் எழுவதுமாக மாறி மாறி எதையாவது செய்வது, முடிந்தபோதெல்லாம் தவறாமல் நடப்பது, சைக்கிள் ஓட்டுவது போன்ற மிதமான உடற்பயிற்சி செய்வது நல்லது” என அந்த அறிக்கை சிபாரிசு செய்கிறது. (g02 1/22)

குருவி தலையில் பனம்பழம்

“முன்பெல்லாம், ஓடியாடி விளையாடுவதும், சாவகாசமாக கவலையற்று இருப்பதுமே பிள்ளைப் பருவம் என்றிருந்தது; இப்போதோ அந்தக் காலம் மலையேறிவிட்டது” என மெக்ஸிகோ நகரின் எல் யூனிவர்ஸல் செய்தித்தாள் குறிப்பிடுகிறது. 1950-⁠ல் 25 வயதில் இருந்தவருக்கு எந்தளவு அழுத்தம் இருந்ததோ, அதே அளவு பளு இன்றைய பத்து வயது சிறுசுகளுக்கு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து அறிக்கை செய்துள்ளனர். பெரும்பாலான இந்தப் பளு, வகுப்புகள், அவர்களின் எதிர்கால நலன் கருதி பெற்றோர் ஏற்பாடு செய்துள்ள பிற நடவடிக்கைகள் என்ற வடிவில் அவர்கள்மீது சுமத்தப்படுகிறது. ஆனால் அந்த கூடுதல் பளு, “பிள்ளையின் உடல்நலத்தையும், ஓய்வையும், வளர்ச்சியையும் பாதிக்கிறது” என அந்த செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிள்ளைகளுக்கு என்னவெல்லாம் பொறுப்பு உள்ளது என்பதை பெற்றோர் மறுபரிசீலனை செய்து, பிள்ளைகள் வீட்டில் அதிக நேரம் செலவிட ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதாக அந்த அறிக்கை சிபாரிசு செய்கிறது. ஆனால் பள்ளி முடிந்து வந்ததும் வீட்டில் ஒன்றுமே செய்யாமல், மணிக்கணக்கில் டிவிக்கு முன்பாகவோ கம்ப்யூட்டருக்கு முன்பாகவோ நகராமல் ஆணியடித்தாற் போல் உட்கார்ந்திராமல், “அவர்கள் வெளியில் சென்று பிற பிள்ளைகளுடன் ஓடியாடி விளையாடவோ, தங்கள் சைக்கிளில் சுற்றவோ, புதிர்களை விடுவிக்கவோ, படம் வரையவோ அந்த நேரத்தைச் செலவிட வேண்டுமென்பதே அதன் நோக்கம்.” (g02 1/22)

பிரெஞ்சு விரைவு ரயில் வண்டிகள்

1867-⁠ல் தெற்கு பாரிஸிலிருந்து மார்செய்ல்ஸுக்குச் செல்லும் ரயில் பயணம் 16 மணிநேரத்திற்கு மேல் எடுத்தது. 1960-களின்போது, ஏழரை மணிநேரம் எடுத்தது. ஆனால் ஜூன் 2001-⁠ல், இவ்விரண்டு நகரங்களுக்கும் இடையே அதிவிரைவு ரயில் பாதையை பிரெஞ்சு தேசிய ரயில்வே உருவாக்கியது. இப்பொழுதோ, மணிக்கு 300 கிலோமீட்டருக்கு குறையாத வேகத்தில் 740 கிலோமீட்டர் தூரத்தை பயணிகளால் மூன்றே மணிநேரத்தில் கடந்துவிட முடிகிறது. லயான்ஸுக்குத் தெற்கே உள்ள 250 கிலோமீட்டர் தூர ரயில்பாதையில் 500-⁠க்கும் அதிகமான பாலங்களை ரயில்கள் கடக்கின்றன; 17 கிலோமீட்டருக்கும் அதிக நீளமான உயர்ந்த பாலங்களை லாவகமாக கடக்கின்றன; கிட்டத்தட்ட 8 கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கப் பாதையின் வழியே விரைந்து செல்கின்றன. தேவைப்பட்டால், ‘திருப்தியளிக்கும் பாதுகாப்புச் சூழ்நிலைகளில், இரு வழிப் பாதைகளிலும் மணிக்கு 20 ரயில்கள் வரை ஓடலாம்’ என்பதாக பிரெஞ்சு செய்தித்தாள் லா மாண்ட் குறிப்பு தெரிவிக்கிறது. அதாவது மூன்று நிமிடங்களுக்கு ஒரு ரயில் வீதம் ஓடலாம். (g02 1/22)