Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

தாத்தா பாட்டி “இளைஞர் கேட்கின்றனர் . . . தாத்தா பாட்டியோடு அதிக நெருக்கமாவது எப்படி?” (ஜூன் 8, 2001) என்ற கட்டுரையை சற்று முன்புதான் வாசித்து முடித்தேன். தாத்தா பாட்டியோடு பழக வேண்டும் என்று என் பெற்றோர் ரொம்ப நாளாகவே சொல்லி வந்திருக்கிறார்கள்; ஆனால் என் பெற்றோருக்கும் அம்மா வழி தாத்தா பாட்டிக்கும் இடையில் ஓயாமல் சண்டை இருந்து வந்திருப்பதால் அவர்களோடு எனக்கென்ன பேச்சு என்று நினைத்து ஒதுங்கியே இருந்தேன். அவர்களோடு நான் பழகுவது யெகோவாவுக்குப் பிரியம் என்பதை புரிந்துகொள்ள இந்தக் கட்டுரை எனக்கு உதவியது. சண்டையில் ஒரு பக்கத்தை ஆதரிப்பதற்கு பதிலாக யெகோவாவின் பக்கம் இருப்பதையே தெரிந்தெடுப்பேன்.

சி.எல்.எம்., ஐக்கிய மாகாணங்கள் (g02 1/22)

தாத்தா பாட்டியைப் பற்றி எவ்வளவு அருமையான கட்டுரைகள்! கடிதம் எழுதுவதைப் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள், அது எனக்கு பிடித்திருந்தது. ‘இளைஞராகிய’ எங்களில் சிலர்​—⁠எனக்கு வயது 36​—⁠கடிதம் அல்லது கார்டு என எதுவானாலும் சரி, கிடைப்பவை அனைத்தையும் பத்திரமாக வைத்திருப்போம். பணம் கட்ட வேண்டிய பில், விளம்பர கடிதம் போன்றவையாய் இல்லாதவரை, அவை மிகப் பெரிய பொக்கிஷம்தான்!

எம். க்யூ., ஐக்கிய மாகாணங்கள் (g02 1/22)

நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா? என் அப்பா வழி தாத்தா ரொம்ப உடம்புக்கு முடியாமல் இருப்பவர்; அந்தப் பாட்டிக்கோ கையில் காசில்லை. அவர்களோடு சேர்ந்து வெளியில் போய்வர முடியாதபோது நான் எப்படி அவர்களோடு நெருங்கிப் பழகுவது?

டி. ஓ., ஐக்கிய மாகாணங்கள்

“விழித்தெழு!” பதில்: உங்கள் தாத்தா பாட்டிமார் அருகில் வசித்தால் நீங்கள் அவ்வப்போது நேரில் போய் பார்த்து வரலாம்; அல்லது போனில் பேசலாம். அவர்களின் சூழ்நிலையை கவனத்தில் வைத்து, சிறு சிறு எடுபிடி வேலைகளில் அவர்களுக்கு உதவலாம். அந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருந்தபடி, கடிதம் எழுதுவது அவர்களுடன் நெருங்கிப் பழக உங்களுக்கு உதவும் மற்றொரு வழியாகவும் இருக்கலாம். எதுவானாலும் சரி, அவர்களிடம் நீங்கள் எப்படிப்பட்ட தொடர்பு வைத்திருந்தாலும் அதற்காக அவர்கள் நன்றியுடன் இருப்பார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை.(g02 1/22)

தொலைபேசிகள் பெரியதோர் கல்வி நிறுவனத்தில் இயற்பியல் துறையில் பணிபுரிவதால், “தொலைபேசிகள் இணைக்கப்பட்டிருப்பது எவ்வாறு?” (ஜூன் 8, 2001) என்ற உங்கள் கட்டுரையை நான் பெரிதும் வரவேற்றேன். அது தெளிவாக எழுதப்பட்டிருந்தது, இயற்பியலைப் புரிந்துகொள்வது கடினம் என்று நினைப்பவர்களுக்கு அது ஆர்வத்தைத் தூண்டும் என நம்புகிறேன்.

எஸ். டி., பிரிட்டன் (g02 1/22)

“தொலைபேசிகள் இணைக்கப்பட்டிருப்பது எவ்வாறு?” என்ற கட்டுரைக்காக நன்றி. எப்போதுமே இந்தக் கேள்வி என் மனதில் இருந்திருக்கிறது. நான் ஒரு மேல்நிலைப் பள்ளி மாணவி; விழித்தெழு! பத்திரிகையை வாசிப்பதென்றால் எனக்கு கொள்ளை ஆசை. பள்ளியில் வீட்டுப்பாடமாக கொடுக்கப்படும் அநேக கட்டுரைகள் எழுத இந்தப் பிரசுரம் சரியான நேரங்களில் எனக்கு அதிகம் கைகொடுத்திருக்கிறது. உங்கள் கடின உழைப்புக்கு நன்றி!

எச். டபிள்யூ., ஐக்கிய மாகாணங்கள் (g02 1/22)

1866-⁠ல் அட்லாண்டிக் கடலுக்கடியில் போடப்பட்ட தந்தி கேபிள் முதல் கேபிள் அல்ல. அயர்லாந்திற்கும் நியூபௌண்ட்லாந்திற்கும் இடையே 1858-⁠ல் போடப்பட்டதே முதல் கேபிளாகும். அது நீண்ட நாள் தாக்குப் பிடிக்காததால் மறக்கப்பட்டுவிட்டது.

எல். டி., பிரிட்டன்

“விழித்தெழு!” பதில்: எமது கட்டுரை, “1866-⁠ல், ‘தந்தி’ கேபிள் ஒன்று அட்லாண்டிக் கடலுக்கடியில் சென்று அயர்லாந்தையும் நியூபௌண்ட்லாந்தையும் வெற்றிகரமாக இணைத்தது” என்று மட்டுமே குறிப்பிட்டது. முதலாவது போடப்பட்ட கேபிள் நீங்கள் சொன்னபடி, 1858-⁠ல் முடிக்கப்பட்டது. என்றாலும், சில வாரங்களுக்குள் அது செயல்படாமல் போனதால் அது கைவிடப்பட்டது. (g02 1/22)

சிற்றுலா எனக்கு 13 வயது. “கானாவுக்கு ஒரு சிற்றுலா” (ஜூன் 8, 2001) என்ற கட்டுரை மிக அருமையாக இருந்தது. விலங்குகளைப் பற்றி வாசிப்பதென்றால் எனக்கு கொள்ளைப் பிரியம். தயவுசெய்து இந்தப் பத்திரிகையை வெளியிடுவதை நிறுத்திவிடாதீர்கள்!

ஜே. டபிள்யூ., ஐக்கிய மாகாணங்கள் (g02 1/8)