Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜார்ஜியாவில் மத துன்புறுத்துதல்—இன்னும் எவ்வளவு காலம்?

ஜார்ஜியாவில் மத துன்புறுத்துதல்—இன்னும் எவ்வளவு காலம்?

ஜார்ஜியாவில் மத துன்புறுத்துதல்—இன்னும் எவ்வளவு காலம்?

ஒருபுறம் கருங்கடல் கரையோரத்தில் இனிமையான வானிலை, மறுபுறம் காகஸஸ் மலைகளின் கடுங்குளிர் என ஜார்ஜியா இயற்கை எழில் கொஞ்சும் தேசமாகும். ஐரோப்பிய, ஆசிய எல்லையில் அமைந்த இந்த மலைப்பாங்கான நிலத்தில் அடர்ந்த காடுகளும், பாய்ந்தோடும் ஆறுகளும், பச்சைப்பசேல் என்ற பள்ளத்தாக்குகளும் இதன் அழகிற்கு அழகு சேர்க்கின்றன. நவீனகால கட்டடங்களும் பூர்வகால கலையம்சம் மிக்க நினைவுச் சின்னங்களும் நிறைந்த ஜார்ஜியாவின் தலைநகரான டிபிலிஸி ஆரவாரமிக்க நகரமாகும். என்றாலும், நெருக்கமான குடும்ப பந்தங்களும் உளங்கனிந்த உபசரிக்கும் குணமும் கொண்ட ஜார்ஜியாவின் மக்களே அதன் மிகப் பெரிய சொத்து.

சரித்திரம் முழுவதும் ஜார்ஜிய மக்கள் பலரால் ஒடுக்கப்பட்டுள்ளனர். ரோமர், பெர்சியர், பைசாண்டியர், அரபியர், துருக்கியர், மங்கோலியர், ரஷ்யர் என பலர் அவர்களுடைய தேசத்தை தாக்கியிருக்கின்றனர். டிபிலிஸி 29 முறைகள் அழிக்கப்பட்டிருப்பதாக ஒரு கணக்கு கூறுகிறது! a என்றாலும், வாழ்க்கை, கலை, இசை, நடனம் ஆகியவற்றின் மீது ஜார்ஜியர்களுக்கு இருக்கும் காதல் குறைந்துவிடவும் இல்லை, சகிப்புத்தன்மை மிக்க சமுதாயம் என்ற பெயரை அவர்கள் இழந்துவிடவும் இல்லை.

ஆனால், வருத்தகரமாக ஜார்ஜியர்கள் அனைவரைப் பற்றியும் இனியும் இவ்வாறு கூற முடியாது. கடந்த இரண்டு வருடங்களாக ஒரு சிறிய தொகுதியான ஜார்ஜியர்கள் தங்கள் நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோரை வலிய தாக்கி வருவதால் அந்நாட்டின் நற்பெயரை களங்கப்படுத்தியிருக்கிறார்கள். வெறிபிடித்த கும்பல்கள் கண்மண் தெரியாமல், அப்பாவிகளான ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், முதியோர், ஊனமுற்றோர் என அனைவரையும் தாக்கியிருக்கின்றன. ஆணிகள் நிறைந்த தடிகளாலும் இரும்பு கம்பிகளாலும் தாக்கி, பலியானவர்களின் உடல்களை புண்ணாக்கி, முகங்களை கிழித்து, மண்டையை உடைத்திருக்கின்றன. பழிபாவம் அறியாத ஜார்ஜியர்கள் ஏன் இவ்வளவு கொடூரமாக அடிக்கப்படுகிறார்கள்? அவர்கள் யெகோவாவின் சாட்சிகளாக இருப்பதே காரணமாகும்; தாக்குபவர்களில் பெரும்பாலானோர் பிறப்பதற்கு முன்பிருந்தே இந்த கிறிஸ்தவ சமூகம் ஜார்ஜியாவில் இருந்து வந்திருக்கிறது.

தாக்குதல்களாக மாறும் கண்டனங்கள்

ஜார்ஜியா மத சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறபோதிலும் யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்கள் அடிக்கடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஜார்ஜிய ஆர்த்தடாக்ஸ் சர்ச் தலைவரான பேட்ரியார்க்கின் அனுமதியோடுதான் பிரசுரங்களை விடுவிக்க முடியும் என சுங்கத்துறை அதிகாரிகள் ஏப்ரல் 1999-⁠ல் கூறினர். b அடுத்த மாதமும் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் பெயர் அடிபட்டது, இந்த முறை ஜார்ஜியாவின் இசானி-சாம்கோரி மாவட்ட நீதிமன்றத்தில். அங்கு, சட்டமாமன்ற உறுப்பினரும் “ஜார்ஜியாவுக்கே முதலிடம்!” என்ற அரசியல் கட்சியின் தலைவருமான குராம் ஷாராட்ஸ யெகோவாவின் சாட்சிகள் பயன்படுத்துகிற சட்டப்பூர்வ நிறுவனங்களை கலைக்க கோரி ஒரு வழக்கை பதிவு செய்தார். சாட்சிகள் தேச விரோதிகள் என்றும் ஆபத்தானவர்கள் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். ஷாராட்ஸக்கு பின்னால் இருந்தது யார்? கேத்தலிகோஸ்-பேட்ரியார்க் ஆஃப் ஆல் ஜார்ஜியாவின் செயலாளரிடமிருந்து வந்த கடிதம் ஒன்று அந்த வழக்கு மனுவோடு இணைக்கப்பட்டிருந்தது.

மனித உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் பாதுகாப்பதற்கான ஐரோப்பிய ஒப்பந்தத்தை, 1999, மே 20-⁠ம் தேதி ஜார்ஜியா ஏற்றுக்கொண்டது; இதனால் அதன் விதிகளை கடைப்பிடிக்க ஒப்புக்கொண்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின் 10-⁠ம் பிரிவு கூறுவதாவது: “கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. அரசாங்க அதிகாரிகளின் தலையீடும் எல்லைக் கோடுகளின் குறுக்கீடும் இல்லாமலும் சில கருத்துக்களை வைத்திருப்பதும், தகவலையும் எண்ணங்களையும் பெற்று பகிர்ந்துகொள்வதும் இந்த உரிமையில் அடங்கும்.” இந்த உரிமை, மத பிரசுரங்களை தடை செய்யும் முயற்சியிலிருந்து சாட்சிகளை எதிர்த்தவர்களை தடுத்து நிறுத்தியதா? இல்லவே இல்லை!

பேட்ரியார்க் ஆஃப் ஆல் ஜார்ஜியாவின் அலுவலகம், 1999, ஜூன் 21-⁠ம் தேதியன்று சுங்கத்துறை தலைமை அதிகாரிக்கு எழுதிய கடிதம் ஒன்றில், “வெளிநாட்டு மத பிரசுரங்களின் விநியோகம் தடைசெய்யப்பட வேண்டும்” என வலியுறுத்தியது. மேலும், சாட்சிகள் ஆபத்தானவர்கள் எனவே அவர்களை தடைசெய்ய வேண்டும் என ஜார்ஜிய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி ஜியோர்ஜி ஆண்டிரியாட்ஸ அறிவித்தார். இந்த கண்டனங்களை யாரும் கவனியாமல் இருக்கவில்லை. முன்னர் யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்களை எரித்த மத வெறியர்களுக்கு, இப்போது சாட்சிகளையே தாக்கினாலும் தாங்கள் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்ற தைரியம் வந்துவிட்டது. ஆகவே, 1999, அக்டோபர் 17-⁠ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று அவர்கள் மீண்டும் தாக்கினர்.

கோஷ்டி தாக்குதல் தண்டிக்கப்படவில்லை

அந்த ஞாயிற்றுக்கிழமை, ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் என யெகோவாவின் சாட்சிகளில் சுமார் 120 பேர் டிபிலிஸியில் ஒரு மத கூட்டத்திற்காக கூடியிருந்தனர். திடீரென்று, ஆர்த்தடாக்ஸ் மத குரு பதவியிலிருந்து நீக்கப்பட்ட வாஸிலி மகாலாவிஷ்விலியும் அவரைச் சேர்ந்த 200 பேரும் கூட்டம் நடக்கும் இடத்திற்குள் நுழைந்தனர். c அவர்கள் சாட்சிகளை சூழ்ந்துகொண்டு, மர தடிகளாலும் இரும்பு சிலுவைகளாலும் மீண்டும் மீண்டும் தாக்கினர். தாக்கியவர்களில் நான்கு பேர் ஒரு சாட்சியின் கழுத்தையும் கைகளையும் பிடித்துக்கொண்டனர். சட்டென அவருடைய தலையை சாய்த்து பிடித்து சவரம் செய்ய ஆரம்பித்தபோது அவருக்கு நேர்ந்த அவமானத்தைக் கண்டு அந்த கோஷ்டி கரகோஷித்தது. ஒருவழியாக, வெறிபிடித்த அந்த கும்பல் சென்ற பிறகு 16 சாட்சிகளை ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டியிருந்தது. ஒருவருக்கு மூன்று விலா எலும்புகள் உடைந்திருந்தன. மற்றொரு சாட்சியான பாடி என்ற 40 வயது பெண்மணி பின்னர் நினைவுபடுத்தி கூறியதாவது: “என்னைப் பார்த்து கத்தினர், ஒருவன் தன் முழு பலத்தையும் உபயோகித்து என்னை அடித்தான். அவன் என் முகத்திலும் கண்களிலும் அடித்தான். கைகளால் முகத்தை மறைக்க முயன்றேன். விரல்களினூடே இரத்தம் வழிந்தோடியது.” இந்த முரடன், பாடியை அடித்து முடித்தபோது அவர் தன் இடது கண் பார்வையை இழந்தார். அந்த தாக்குதலின் காரணமாக இன்றும் பாடியின் கண்கள் பாதிக்கப்பட்ட நிலையிலுள்ளன.

இந்த மூர்க்கமான தாக்குதல் தொலைக்காட்சியில் காட்டப்பட்டதால் ஜனாதிபதி எட்வர்ட் ஷெவர்ட்நாட்ஸ தன் கருத்தை தெரிவிக்க தூண்டப்பட்டார். “நடந்ததை வன்மையாக கண்டிக்கிறேன், சட்ட அமலாக்க பிரிவினர் கிரிமினல் வழக்கை தொடருவார்கள் என நம்புகிறேன்” என்று அடுத்த நாள் கூறினார். அப்போது எடுத்த வீடியோ, கும்பல் தலைவனையும் தாக்கியவர்களையும் தெளிவாக அடையாளம் காட்டியதால் அவர்களை தண்டிப்பது கடினமான விஷயமே அல்ல. ஆனால், இரண்டு வருடங்கள் கழித்தும்கூட தாக்கியவர்களில் ஒருவரும் தண்டிக்கப்படவில்லை.

தண்டனைக்கு தப்பியதால் தைரியம்

அரசாங்க, மத அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், வன்முறையில் ஈடுபடுவோரை தண்டிக்கமாட்டார்கள் என்ற எண்ணமே தாக்கியவர்களுக்கு ஏற்பட்டதில் ஆச்சரியம் இல்லை. இவ்வாறு தண்டிக்காமல் விடப்பட்டதால் தைரியமடைந்து, வீடுகளிலும், தெருக்களிலும், வணக்க இடங்களிலும் யெகோவாவின் சாட்சிகளை கொள்ளையடிப்பது, அடிப்பது, உதைப்பது போன்ற அவர்களுடைய அட்டூழியங்களை அதிகரித்தனர். அக்டோபர் 1999 முதல் ஆகஸ்ட் 2001 வரை யெகோவாவின் சாட்சிகள் மீது 80-⁠க்கும் அதிக தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு அத்தாட்சிகள் உள்ளன, அதனால் 1,000-⁠த்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருந்தாலும், வாஸிலி மகாலாவிஷ்விலி மீதான வழக்கு “இன்னும் நடந்து வருவதாக,” 2001, பிப்ரவரி 9-⁠ம் தேதியன்று டிபிலிஸியின் நகர வழக்குரைஞர் ஒருவர் பத்திரிகையாளர்களிடம் கூறினார். வருத்தகரமாக, இந்த கட்டுரை எழுதப்பட்ட சமயத்திலும் யெகோவாவின் சாட்சிகளை எதிர்ப்பவர்களின் வன்முறை செயல்கள் தொடர ஜார்ஜிய அதிகாரிகள் அனுமதித்து வருகிறார்கள்.​—⁠“கோஷ்டி அராஜகம் தொடர்கிறது” என்ற பெட்டியை காண்க.

இதில் போலீஸாரின் பங்கு என்ன? யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிரான தாக்குதல்களை போலீஸார் அனுமதித்தது மட்டுமன்றி அவர்களும் அதில் பங்குகொண்டனர் என்றே செய்தி அறிக்கைகளும் வீடியோ காட்சிகளும் காண்பிக்கின்றன! உதாரணமாக, 2000, செப்டம்பர் 8-⁠ம் தேதியன்று ஸுக்டீடி நகரில் யெகோவாவின் சாட்சிகளில் 700 பேர் கலந்துகொண்ட மாநாடு ஒன்று நடைபெற்றது; அப்போது தடிகளோடு வந்த சில போலீஸ் அதிகாரிகள் அமைதியாக நடந்த அந்த மாநாட்டை கலைத்தனர். முகமூடி அணிந்த போலீஸ் அதிகாரிகள் 50-⁠க்கும் அதிகமான சாட்சிகளை அடித்துப்போட்டு, “அழிவின் பாதையை விட்டுச் சென்றனர்” என கண்கண்ட சாட்சிகள் அறிக்கை செய்தனர். தலைக்கு மேல் வெற்று பீரங்கி தோட்டாக்கள் வெடித்ததால் பிள்ளைகளின் முகத்தில் தெரிந்த பீதியை நினைவுகூர்ந்த அந்த மாநாட்டு மன்றத்தின் உரிமையாளர், “அது நெஞ்சை உருக்கியது” என விவரித்தார். போலீஸார் அந்த இடத்தை திடீரென தாக்கி, அதை தீக்கிரையாக்கினர். ஆனால், இன்றுவரை அவர்கள் தண்டிக்கப்படவில்லை.

இந்த கீழ்த்தரமான நிகழ்ச்சி ஒரு விதிவிலக்கல்ல (“போலீஸாரின் பங்கெடுப்பு” என்ற பெட்டியை காண்க) என்பதால், சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாட்டு குழு, ‘ஜார்ஜியாவில் சட்ட அமலாக்க பிரிவினரால் தொடர்ச்சியாக செய்யப்படும் சித்திரவதை, பிற கொடூரமான, மனிதத்தன்மையற்ற அல்லது கீழ்த்தரமான செயல் அல்லது தண்டனை, மேலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சித்திரவதை பற்றிய பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உடனடியான, பாரபட்சமற்ற, முழுமையான விசாரணைகள் செய்ய தொடர்ந்து தவறுவதை’ பற்றி 2001, மே 7-⁠ம் தேதி தன் கவலையை தெரிவித்தது. d உண்மையில், யெகோவாவின் சாட்சிகள் போலீஸாரிடம் சமர்ப்பித்த 400-⁠க்கும் அதிகமான புகார்களில் ஒன்றில்கூட அறியப்பட்ட குற்றவாளிகள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை! ஆகவே, சட்டமாமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படும் ஜார்ஜிய பொதுமக்கள் பாதுகாவலர் அல்லது ஆம்புட்ஸ்மன் இவ்வாறு கூறினார்: “தங்கள் வேலையின் காரணமாக மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டியவர்களே அதை மீறுகிறார்கள். அவர்களை பொருத்தவரை மனித உரிமைகள் என்பது வெறும் ஏட்டுச்சுரைக்காய் தான்.”

உச்ச நீதிமன்ற தீர்ப்பால் குழப்பம்

கும்பல்களும் போலீஸாரும் சட்டவிரோதமாக தாக்கியது போதாது என்பதுபோல ஜார்ஜியாவின் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வெளியிட்ட தீர்ப்பும் யெகோவாவின் சாட்சிகளுடைய உரிமைகளை பற்றி குழப்பத்தை ஏற்படுத்தியது.

பின்னணி தகவல் சிலவற்றை சற்று கவனியுங்கள். அரசியல்வாதி குராம் ஷாராட்ஸ, யெகோவாவின் சாட்சிகள் பயன்படுத்துகிற சட்டப்பூர்வ நிறுவனங்களை கலைக்க கோரும் ஒரு வழக்கை பதிவு செய்தார். 2000, பிப்ரவரி 29 அன்று அவருடைய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. என்றாலும், ஷாராட்ஸ மேல் முறையீடு செய்து வென்றார். ஆகவே, யெகோவாவின் சாட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். வெறும் சட்ட நுணுக்க பிரச்சினைகளின் அடிப்படையில் 2001, பிப்ரவரி 22-⁠ல் உச்ச நீதிமன்றம் சாட்சிகளுக்கு எதிராக தீர்ப்பளித்தது. மத அமைப்புகளை பதிவு செய்வதை விளக்கும் இப்போது இல்லாத ஒரு சட்டத்தின்படி, மதங்கள் பொது சட்டத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என அரசியல் சட்டமைப்பு குறிப்பிடுவதாக உச்ச நீதிமன்றம் நியாயப்படுத்தியது. இந்த சட்டம் இப்போது இல்லாததால் யெகோவாவின் சாட்சிகள் வேறு எந்த விதத்திலும் பதிவு செய்யப்பட முடியாது என நீதிமன்றம் முடிவு செய்தது. ஆனால், மத செயல்பாடுகளை ஆதரிக்கும் சுமார் 15 மற்ற அமைப்புகள் ஜார்ஜியாவில் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பற்றி ஜார்ஜிய நீதித்துறை அமைச்சர் மிகயில் சாகாஷ்வீலி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறு கூறினார்: “சட்ட அடிப்படையில் பார்த்தால் இந்த தீர்ப்பு மிகவும் கேள்விக்குரியது. உச்ச நீதிமன்றத்தின் சரித்திரத்தில் இது மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி என நான் நினைக்கவில்லை.” ஜார்ஜியாவின் சட்டமாமன்ற சட்ட குழுவின் தற்காலிக தலைவரான ஸுராப் ஆடயிஷ்வீலி, “சிறுபான்மை மத தொகுதிகளை ஒடுக்க நமது [ஜார்ஜிய ஆர்த்தடாக்ஸ்] சர்ச்சிலுள்ள தீவிரவாத சக்திகளை தூண்டிவிடும்” என்பதால் அந்த தீர்ப்பைப் பற்றி தான் “மிகவும் கவலைப்படுவதாக” கெஸ்டன் செய்தி சேவையிடம் கூறினார். வருத்தகரமாக, ஆடயிஷ்வீலி கவலைப்பட்ட விதமாகவே நடந்துவிட்டது. தீர்ப்பு கூறிய சில நாட்களுக்குள்ளாக யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிரான வன்முறை மறுபடியும் ஆரம்பமானது. 2001-⁠ம் வருடத்தில் பிப்ரவரி 27, மார்ச் 5, மார்ச் 6, மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 7, ஏப்ரல் 29, ஏப்ரல் 30, மே 7, மே 20, ஜூன் 8, ஜூன் 17, ஜூலை 11, ஆகஸ்ட் 12, செப்டம்பர் 28, செப்டம்பர் 30 ஆகிய தேதிகளில் கும்பல்கள், போலீஸார், ஆர்த்தடாக்ஸ் பாதிரிகள் ஆகியோரால் சாட்சிகள் தாக்கப்பட்டனர். தாக்குதல்கள் இன்னமும் தொடர்கின்றன.

துன்புறுத்துதலின் புதிய அலை எழுந்த காரணத்தால் உச்ச நீதிமன்றம் பொதுமக்களுக்கு முன்பு தனது தீர்ப்பை தெளிவுபடுத்தும் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கை எடுத்தது. அது கூறியதாவது: “யெகோவாவின் சாட்சிகளுடைய சங்கம் பதிவு செய்திருப்பதை உச்ச நீதிமன்றம் செல்லாததாக்கியதை பொதுமக்கள் தவறாக புரிந்துகொண்டது வருத்தகரமானது . . . பிரதிவாதிகள் தனிப்பட்ட சட்டத்தில் சட்டப்பூர்வ சங்கமாக பதிவு செய்திருப்பதை நீதிமன்றம் செல்லாததாக்கியபோது, சிந்தனை, மனசாட்சி மற்றும் மத சுதந்திரத்திற்கான அவர்களுடைய உரிமை நேரடியாகவோ மறைமுகமாகவோ மீறப்படவும் இல்லை, கட்டுப்படுத்தப்படவும் இல்லை. தனிப்பட்டவர்களாகவோ தொகுதியாகவோ, பொதுவிலோ தனிப்பட்ட வகையிலோ தங்கள் நம்பிக்கையை மாற்றிக்கொள்வதற்கான அவர்களுடைய சுதந்திரம் கட்டுப்படுத்தப்படவில்லை. . . . தங்கள் எண்ணங்களையும் தகவலையும் பெற்று விநியோகிக்கும் பிரதிவாதிகளின் உரிமையை நீதிமன்றத்தின் தீர்மானம் கட்டுப்படுத்தவில்லை. சமாதானமாக கூட்டம் நடத்தும் அவர்களுடைய உரிமையை அது தடைசெய்யவில்லை.”

துன்புறுத்துதலை எதிர்த்து குரல் கொடுக்கும் ஆயிரக்கணக்கான ஜார்ஜியர்கள்

உச்ச நீதிமன்றத்தின் இந்த அறிக்கை, கும்பலாக தாக்குபவர்கள் மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தியதாக தெரியவில்லை. என்றாலும், ஏற்கெனவே ஆயிரக்கணக்கான ஜார்ஜிய குடிமக்கள் தொடரும் துன்புறுத்துதலை கண்டனம் செய்திருப்பது மனதிற்கு இதமளிக்கிறது. கும்பல் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பையும் ஜார்ஜிய குடிமக்களை கொடூரமாக தாக்கியவர்களை சட்டப்பூர்வமாக தண்டிக்கவும் கோரும் ஒரு மனுவை, 2001, ஜனவரி 8-⁠ம் தேதி முதல் யெகோவாவின் சாட்சிகள் சுற்றியனுப்பினர். இரண்டே வாரத்திற்குள்ளாக ஜார்ஜியாவின் அனைத்து பகுதிகளிலும் வாழும் 1,33,375 வயதுவந்த குடிமக்கள் அந்த மனுவில் கையெழுத்திட்டனர். ஜார்ஜியாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் எண்ணிக்கை 15,000 மட்டுமே என்பதை கருதுகையில் அதில் கையெழுத்திட்டவர்களில் பெருவாரியானோர் ஜார்ஜிய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சை சேர்ந்தவர்களாகவே இருக்க வேண்டும். ஆனால், 2001, ஜனவரி 22 அன்று அந்த மனு காணாமல் போனது. என்ன நடந்தது?

அன்றைய தினம் அந்த மனுவை முறையாக வெளியிடுவதற்காக ஜார்ஜிய பொதுமக்கள் பாதுகாவலர் நானா டவ்டாரீயானியின் அலுவலகத்தில் நிருபர் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்தின்போது அந்த மனுவின் 14 தொகுதிகளை கைப்பற்றுவதற்காக வாஸிலி மகாலாவிஷ்விலியுடன் பத்து பேர் திடீரென உள்ளே நுழைந்தனர். சமாதானத்திற்கும் குடியரசிற்குமான காகஸஸ் நிறுவனத்தின் பிரதிநிதி அந்த மனுவை பாதுகாக்க முயன்றார், ஆனால் அந்த கோஷ்டியினர் அவரை தாக்கினர். மகாலாவிஷ்விலி கெட்ட வார்த்தைகளை உமிழ்ந்துகொண்டிருக்க அவரோடு வந்தவர்கள் நிகழ்ச்சி அமைப்பாளர்களிடமிருந்த 14 தொகுதிகளில் 12-ஐ பிடுங்கிக்கொண்டு ஓடிவிட்டனர். அந்நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த அயல்நாட்டு தூதுவர் ஒருவர், “இதை நம்பவே முடியவில்லை!” என்று கூறினார். சந்தோஷகரமாக, பிப்ரவரி 6-⁠ம் தேதியன்று அந்த மனு மறுபடியும் சாட்சிகளுடைய கைக்கு வந்து சேர்ந்தது; 2001, பிப்ரவரி 13-⁠ம் தேதி அது ஜார்ஜிய ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

“எல்லா வித தொல்லைகளும் . . . தண்டிக்கப்படும்”

ஜார்ஜிய ஜனாதிபதி அந்த மனுவிற்கு இசைவாக நடவடிக்கை எடுப்பார் என ஜார்ஜியாவிலும் உலகம் முழுவதிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகள் எதிர்பார்க்கின்றனர். இதற்கு முன்னும்கூட யெகோவாவின் சாட்சிகள் துன்புறுத்தப்பட்டபோது ஜனாதிபதி ஷெவர்ட்நாட்ஸ அதை அடிக்கடி கண்டனம் செய்திருக்கிறார். உதாரணமாக, யெகோவாவின் சாட்சிகள் மீது நடந்த தாக்குதல்களை, “பொறுக்க முடியாத படுகொலை” என 1999, அக்டோபர் 18-⁠ல் ஜனாதிபதி கூறினார். 2000, அக்டோபர் 20-⁠ல் யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு அங்கத்தினர் ஒருவருக்கு, “வன்முறையை ஒழிக்க எங்களாலானதைச் செய்வோம்” என ஜனாதிபதி ஷெவர்ட்நாட்ஸ கடிதம் எழுதினார். “மனித உரிமைகளையும் மனசாட்சி சுதந்திரத்தையும் பாதுகாக்க ஜார்ஜிய அதிகாரிகள் கடினமாக உழைப்பார்கள் என உங்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்றும் அவர் எழுதினார். மேலும், ஐரோப்பாவில் பாதுகாப்பிற்கும் ஒத்துழைப்பிற்குமான கமிஷனுக்கு 2000, நவம்பர் 2-⁠ல் எழுதிய ஒரு கடிதத்தில் ஜனாதிபதி ஷெவர்ட்நாட்ஸ பின்வருமாறு குறிப்பிட்டார்: “இந்த விஷயமும் [ஜார்ஜியாவிலுள்ள சிறுபான்மை மதங்களின் நிலை] அரசாங்கத்திற்கும் எங்கள் மக்களுக்கும் ஆழ்ந்த அக்கறைக்குரிய ஒன்றாக இருந்து வந்திருக்கிறது.” கமிஷனுக்கு இவ்வாறு உறுதியும் அளித்தார்: “எல்லா வித தொல்லைகளும் உடல்ரீதியான வன்முறை செயல்களும் தண்டிக்கப்படும், அதை செய்பவர்களும் சட்டத்திற்கு முன் குற்றவாளிகளாக இருப்பார்கள்.”

ஜனாதிபதி ஷெவர்ட்நாட்ஸயின் உறுதியான வார்த்தைகள் வெகு சீக்கிரத்தில் உண்மையாகும் என நிலைமைகளை அக்கறையுடன் கவனித்து வருகிற ஐரோப்பாவிலும் உலகின் மற்ற பகுதிகளிலும் உள்ளவர்கள் நம்புகின்றனர். இதற்கிடையில், ஜார்ஜியாவிலுள்ள தைரியமான சாட்சிகள் கடுமையான துன்புறுத்துதலின் மத்தியிலும் தொடர்ந்து யெகோவாவை சேவித்து வருகையில், உலகமுழுவதிலும் உள்ள யெகோவாவின் சாட்சிகள் ஜார்ஜியாவிலுள்ள தங்கள் உடன் விசுவாசிகளுக்காக தொடர்ந்து ஜெபிக்கின்றனர்.​—சங்கீதம் 109:3, 4; நீதிமொழிகள் 15:29.(g02 1/22)

[அடிக்குறிப்புகள்]

a ஜார்ஜியா பற்றி அதிகத்தை அறிந்துகொள்ள, 1998, ஜனவரி 22 தேதியிட்ட விழித்தெழு!-வில் “ஜார்ஜியா​—⁠பாதுகாக்கப்படும் பழம்பெரும் சொத்து” என்ற கட்டுரையைக் காண்க.

b என்றாலும், 2001-⁠ல் யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்களை பறிமுதல் செய்வதை சுங்கத்துறை நிறுத்திவிட்டது.

c ஜார்ஜிய ஆர்த்தடாக்ஸ் சர்ச் (GOC) உலக சர்ச் கவுன்சிலில் (WCC) உறுப்பினராக சேர்ந்ததை வன்மையாக கண்டித்த பின் வாஸிலி மகாலாவிஷ்விலி மத்திப 1990-களில் ஜார்ஜிய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சிலிருந்து நீக்கப்பட்டார். (தற்போது GOC, WCC-⁠ல் உறுப்பினராக இல்லாமல் விலகிக்கொண்டுள்ளது.) இதற்கிடையில் மகாலாவிஷ்விலி, மத தலைவரான கிப்ரீயான் தலைமையில் கிரேக்க பழைய காலண்டர்வாதிகளோடு சேர்ந்துள்ளார்.

d சித்திரவதை, பிற கொடூரமான, மனிதத்தன்மையற்ற அல்லது கீழ்த்தரமான செயல் அல்லது தண்டனைக்கு எதிரான ஐக்கிய நாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 123 நாடுகளில் ஜார்ஜியாவும் ஒன்று. இதன் காரணமாக, “சித்திரவதையை சட்டவிரோதமாக்க” ஜார்ஜியா முன்வந்து ஒப்புக்கொண்டுள்ளது.

[பக்கம் 28-ன் சிறு குறிப்பு]

“எல்லா வித தொல்லைகளும் உடல்ரீதியான வன்முறை செயல்களும் தண்டிக்கப்படும், அதை செய்பவர்களும் சட்டத்திற்கு முன் குற்றவாளிகளாக இருப்பார்கள்.”–ஜார்ஜியாவின் ஜனாதிபதி, எட்வர்ட் ஷெவர்ட்நாட்ஸ, நவம்பர் 2, 2001.

[பக்கம் 28-ன் சிறு குறிப்பு]

“இந்த பிரச்சினை [சிறுபான்மை மதத்தினருக்கு எதிரான வன்முறை] தீர்க்கப்பட்டு, ஜார்ஜியாவிலுள்ள அனைத்து மத தொகுதிகளும் தங்கள் மத நம்பிக்கைகளை வெளியிடுவதில் தடையற்ற சுதந்திரத்தை அனுபவிப்பார்கள் என நம்புகிறோம்.”–டாவிட் சும்பாட்ஸ, அ.ஐ.மா., வாஷிங்டன், டி.சி., ஜார்ஜிய தூதுவர் அலுவலக மூத்த ஆலோசகர், ஜூலை 3, 2001.

[பக்கம் 24-ன் பெட்டி/படம்]

கோஷ்டி அராஜகம் தொடர்கிறது

யெகோவாவின் சாட்சிகளை தாக்கியவர்களை ஜார்ஜிய அதிகாரிகள் தண்டிக்க தவறியதால் சாட்சிகள் அதிக துன்புறுத்துதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

உதாரணமாக, 2001, ஜனவரி 22 அன்று, டிபிலிஸி பகுதியிலுள்ள ஸ்வானடிஸ் உபானீயில் முன்னாள் ஆர்த்தடாக்ஸ் பாதிரியான வாஸிலி மகாலாவிஷ்விலியும் அவரது கும்பலும் மத கூட்டத்திற்காக கூடியிருந்த 70 சாட்சிகளை தாக்கின. அவர்கள் மர, இரும்பு சிலுவைகளால் சாட்சிகளை அடித்து, குத்தி, உதைத்தனர். கும்பலிலிருந்த ஒருவன் பெரிய மர சிலுவையால் ஒரு சாட்சியின் தலையில் ஆவேசத்துடன் அடித்ததில் அதன் குறுக்குச் சட்டமே உடைந்து போனது. சில சாட்சிகளை இருட்டறைக்குள் இழுத்துச் சென்று அங்கே பலர் அவர்களை அடித்தனர். முதிர் வயதான சாட்சிகளை, தாக்குபவர்களின் இரண்டு வரிசைகளுக்கு நடுவே ஓடவிட்டு கை முஷ்டிகளாலும் சிலுவைகளாலும் தாக்கினர். உதவியற்ற 14 வயது பையன் ஒருவனை இரண்டு பெரிய ஆண்கள் துரத்திச் சென்று, குத்தி, உதைத்து தள்ளினர். 30 வயதான ஒருவன் 12 வயது பையனை துரத்திச் சென்று பெரிய ஜார்ஜிய பைபிள் ஒன்றால் சிறுவன் தலையில் அடித்தான். இதற்கிடையில், ஒரு சாட்சி போலீஸை கூப்பிடுவதற்காக வெளியில் ஓட முயன்றபோது பிடிபட்டார். அவருடைய முகத்தில் அவர்கள் தொடர்ச்சியாக அடித்ததில் அவர் வாய் முழுக்க இரத்தமாகி, வாந்தியெடுக்க ஆரம்பித்தார். கடைசியில் இரக்கமற்ற அந்த கும்பல் கலைந்து சென்றது. தாக்கியவர்கள் இதுவரை தண்டிக்கப்படவில்லை.

மறுபடியுமாக, 2001, ஏப்ரல் 30-⁠ல் மகாலாவிஷ்விலியின் தொண்டர்கள் யெகோவாவின் சாட்சிகளுடைய அதே சபையின் மத கூட்டத்தை கலைத்தனர். அவர்கள் சாட்சிகளை வெளியே இழுத்துச் சென்று ஆணிகள் நிறைந்த தடிகளால் அடித்தனர். ஆணிகள் காரணமாக தாமாஸ் என்ற சாட்சியின் வலது முன்னங்கை, இடது கை, இடது கால் பாதம், இடது கன்னம் ஆகியவை கிழிக்கப்பட்டன. மேலுமாக, தாமாஸின் தலையிலிருந்த ஆழமான வெட்டுக்காயத்தை மூட ஐந்து தையல்கள் போட வேண்டியிருந்தது. அந்த கும்பல், கூட்டம் நடந்த வீட்டையும் கொள்ளையடித்து, மேசை நாற்காலிகளையும், மின் சாதனங்களையும், அனைத்து ஜன்னல்களையும் உடைத்துப் போட்டது. பிறகு யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட பிரசுரங்களை வெளியே குவித்து கொளுத்தியது. இந்த தாக்குதலையும் மற்ற சமீபத்திய தாக்குதல்களையும் செய்தவர்களை தண்டிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மனித உரிமைகள் கவனிப்பு நிறுவனம், ஜார்ஜியாவின் உள்துறை அமைச்சர் காகா டார்காமாட்ஸயிடமும் ஜார்ஜிய புரோகுரேட்டர் ஜெனரல் கியா மபாரிஷ்வீலியிடமும் 2001, ஜூன் 7-⁠ம் தேதி அதிகாரப்பூர்வ தகவல் கோரியுள்ளது. இதுவரை, தாக்கியவர்களில் ஒருவர்கூட தண்டிக்கப்படவில்லை.

[பக்கம் 25-ன் பெட்டி]

போலீஸாரின் பங்கெடுப்பு

யெகோவாவின் சாட்சிகள் 19 பஸ்களில் ஒரு மாநாட்டிற்காக சென்று கொண்டிருந்தனர். ஆனால் அவர்களை செல்லவிடாமல் தடுப்பதற்காக 2000, செப்டம்பர் 16-⁠ம் தேதி மார்னயுலி நகர போலீஸார் சாலைகளை அடைத்திருந்தனர். சாலை அடைக்கப்பட்டிருந்த ஓரிடத்தில் சாட்சிகள் சென்ற பஸ்கள் மீது கற்களை வீசியதில் ஒரு பயணிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அநேக சாட்சிகளை பஸ்ஸிலிருந்து வெளியே இழுத்து அடித்தனர், மற்றவர்களின் பொருட்களை கொள்ளையடித்தனர். அதே சமயம், மாநாட்டு மன்றத்தை அழித்தே தீர வேண்டும் என்ற நோக்கத்தோடு பல பஸ்களில் சென்ற மகாலாவிஷ்விலியின் தொண்டர்களை போலீஸார் எவ்வித தடையுமின்றி போக அனுமதித்தனர். அந்தக் கும்பல் ஒன்றரை டன் மத பிரசுரங்களை எரித்தது. அங்கிருந்த போலீஸாரும் சாட்சிகளை அடிப்பதில் சேர்ந்துகொண்டனர்.

உள்துறை அமைச்சகம் இந்த தாக்குதலை விசாரித்து, “தகுந்த நடவடிக்கைகள்” எடுக்கும் என காகஸஸ் பிரஸ் அறிக்கை செய்தது. தாக்கியவர்களை குற்றஞ்சாட்ட, விசாரணை செய்பவர்களுக்கு உறுதியான ஆதாரங்கள் பல உள்ளன. பொதுக்கூட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை இருக்கிறது என ஜார்ஜியாவின் அரசியலமைப்பு, பிரிவு 25 கூறுகிறது. இருந்தாலும், தாக்கியவர்களில் ஒருவர்கூட தண்டிக்கப்படவில்லை. இந்த தாக்குதல் நடந்து ஐந்து மாதம் கழித்து, யெகோவாவின் சாட்சிகளுடைய இரண்டு மாநாடுகளை தடுக்க மார்னயுலி, ஸுக்டீடி ஆகிய இடங்களின் அதிகாரிகளை ஷாராட்ஸ தூண்டிவிட்டதாக “ஜார்ஜியாவுக்கே முதலிடம்!” என்ற அரசியல் கட்சியின் தலைவரான குராம் ஷாராட்ஸயின் வக்கீல் ஒப்புக்கொண்டார் என கெஸ்டன் செய்தி சேவை அறிக்கை செய்தது.

[பக்கம் 25-ன் பெட்டி]

ஜார்ஜியாவின் அரசியலமைப்பு பாதுகாப்பை உறுதியளிக்கிறது

1995, ஆகஸ்ட் 24 தேதியிட்ட ஜார்ஜியாவின் அரசியலமைப்பு, மத சுதந்திரத்தையும் வன்முறையான தாக்குதலுக்கு எதிரான பாதுகாப்பையும் உறுதியளிக்கிறது. அதிலிருந்து எடுக்கப்பட்ட பின்வரும் பகுதிகள் இதை காட்டுகின்றன:

பிரிவு 17—(1) ஒருவரின் மதிப்பும் மரியாதையும் மீறப்பட முடியாதவை. (2) சித்திரவதை, மனிதத்தன்மையற்ற, கொடூரமாக அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டனை அளித்தல் அனுமதிக்கப்பட முடியாதவை.

பிரிவு 19—(1) பேச்சு, சிந்தனை, மனசாட்சி, மத, நம்பிக்கை சுதந்திரம் ஆகிய உரிமைகள் ஒவ்வொருவருக்கும் உண்டு. (2) அவரது எண்ணங்கள், நம்பிக்கைகள் அல்லது மதத்திற்காக ஒருவரை துன்புறுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

பிரிவு 24—(1) தகவலை தாராளமாக பெறவும் பரப்பவும், தன் கருத்தை வாய் மூலமாகவோ, எழுத்திலோ, மற்ற எந்த விதத்திலோ வெளிப்படுத்தவும் பரப்பவும் ஒவ்வொருவருக்கும் உரிமையுள்ளது.

பிரிவு 25—(1) இராணுவ, போலீஸ், பாதுகாப்பு துறைகளை சேர்ந்தவர்களை தவிர மற்ற அனைவருக்கும் ஆயுதங்கள் இல்லாமல், கட்டடத்திற்குள்ளோ திறந்த வெளியிலோ முன் அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்த உரிமை உள்ளது.

[பக்கம் 26-ன் பெட்டி]

முழு உலகமும் கவனிக்கிறது

யெகோவாவின் சாட்சிகள் துன்புறுத்தப்படுவதை ஜார்ஜியா தடுத்து நிறுத்த தவறியிருப்பதை குறித்த சர்வதேச சமூகத்தின் கண்ணோட்டம் என்ன?

ஐக்கிய மாகாணங்கள் மற்றும் கிரேட் பிரிட்டனின் அரசாங்கங்கள் இணைந்து இவ்வாறு கூறின: “யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டம் ஒன்று கலைக்கப்பட்டுள்ளது, அநேகர் கொடூரமாக துன்புறுத்தப்பட்டுள்ளனர், கூட்டத்திற்கு வரமுடியாதபடி மற்றவர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். ஜார்ஜியாவில், மத சுதந்திரத்திற்கான தங்கள் உரிமையை கடைப்பிடிப்பவர்கள் மீது இதுவும் சமீப காலமாக மற்ற மோசமான தாக்குதல்களும் நடந்திருப்பதை குறித்து அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள் மற்றும் கிரேட் பிரிட்டனின் தூதுவர் அலுவலகங்கள் மிகவும் கவலை கொள்கின்றன . . . இந்த நிகழ்ச்சிகளை ஜார்ஜிய அரசாங்கம் விசாரிக்கவும், அனைவருடைய மத உரிமைகளும் மதிக்கப்படும்படி பார்த்துக்கொள்வதில் விழிப்பாயிருக்கவும் வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.”

ஐரோப்பிய கூட்டமைப்பிற்கான குழு​—⁠ஜார்ஜிய சட்டமாமன்ற ஒத்துழைப்பு கமிட்டியின் தலைவர் உர்சூலா ஷ்லைக்கர் இவ்வாறு கூறினார்: “பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் யெகோவாவின் சாட்சிகள் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்ட வன்முறையான தாக்குதல்களில் கடைசியாக நடந்ததை பற்றி ஐரோப்பிய சட்டமாமன்ற குழுவின் சார்பாக என் அச்சத்தை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் . . . மனித உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் பாதுகாக்கும் ஐரோப்பிய ஒப்பந்தத்தில் ஜார்ஜியா கையெழுத்திட்டிருப்பதால் இந்தச் செயல், அது ஒப்புக்கொண்டுள்ள அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான மூர்க்கமான தாக்குதல் என்றே கருதுகிறேன்.”

யெகோவாவின் சாட்சிகள் தாக்கப்பட்டதை குறித்து, ஐரோப்பாவில் பாதுகாப்பிற்கும் ஒத்துழைப்பிற்குமான ஐ.மா. கமிஷன், ஜனாதிபதி ஷெவர்ட்நாட்ஸக்கு இவ்வாறு கடிதம் எழுதியது: “சமீப நிகழ்ச்சிகள் உண்மையிலேயே அதிர்ச்சியூட்டுகின்றன, ஜார்ஜியாவில் நிலைமை கைமீறி போகிறதோ என்ற பயத்தை ஏற்படுத்துகின்றன. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோர் அட்டூழியங்களைத் தொடரும்படி தூண்டப்படுவார்கள். தேச தலைவராகிய நீங்கள் ஜார்ஜிய பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் முன்மாதிரியாக இருந்து இரண்டு உறுதியான, தெளிவான செய்திகளை தெரிவிப்பீர்கள் என நம்புகிறோம்: ஒருவர் மற்ற மதங்களை எவ்வாறு கருதினாலும் சரி அதை பின்பற்றுவோருக்கு எதிராக எப்படிப்பட்ட வன்முறையை உபயோகிப்பதும் அனுமதிக்கப்படாது; அவ்வாறு வன்முறையில் ஈடுபடுவோர், முக்கியமாக இந்த வெட்கக்கேடான செயல்களில் ஈடுபடும் அல்லது மற்றவர்களுக்கு உதவும் போலீஸார் சட்டப்படி முழுமையாக தண்டிக்கப்படுவார்கள்.” இந்த கடிதத்தில், ஐ.மா. சட்டமாமன்றத்தின் ஏழு அங்கத்தினர்கள் கையெழுத்திட்டிருந்தனர்.

ஐரோப்பாவில் பாதுகாப்பிற்கும் ஒத்துழைப்பிற்குமான கமிஷனின் இணைத் தலைவரான ஐ.மா. சட்டமாமன்ற உறுப்பினர் கிறிஸ்டஃபர் ஹெச். ஸ்மித் கூறியதாவது: “மத சுதந்திரத்திற்கும் மனித உரிமைகளுக்கும் ஆதரவளிப்பதாக கூறிய ஜார்ஜியா அதை ஏன் செய்யவில்லை? . . . பிரசுரங்களை எரிப்பது ஹெல்சிங்கி ஒப்பந்தத்திற்கு முற்றிலும் எதிரானது, அது நாசிகளின் காலத்தில் புத்தகங்கள் எரிக்கப்பட்டதை கமிஷனில் உள்ள சிலருக்கு நினைப்பூட்டுகிறது.”

மனித உரிமைகள் கவனிப்பு நிறுவனத்தின் ஐரோப்பிய, மத்திய ஆசிய பிரிவின் தற்காலிக செயற்குழு இயக்குனர் இவ்வாறு எழுதினார்: “சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக இதற்கு முன் வன்முறை தாக்குதலில் ஈடுபட்டவர்களை தண்டிக்க ஜார்ஜிய அரசாங்கம் தொடர்ச்சியாக தவறியிருப்பதால் கூடுதலான வன்முறை ஏற்படுமோ என மனித உரிமைகள் கவனிப்பு நிறுவனம் ஆழ்ந்த கவலை கொள்கிறது. தாக்குதல்களை உடனே நிறுத்தும்படி கோரி, அதற்கு காரணமானவர்களை தண்டிக்கும்படி உம்மை உந்துவிக்கிறோம்.”

உலகமே கவனித்து வருகிறது. ஜார்ஜியா ஒப்புக்கொண்டுள்ள தனது சர்வதேச பொறுப்புகளை நிறைவேற்றுமா? ஜார்ஜியாவின் நற்பெயரே கேள்விக்குறியாக உள்ளது.

[பக்கம் 27-ன் பெட்டி]

ஐரோப்பிய நீதிமன்றத்தில் மேல் முறையீடு

ஜார்ஜியாவின் சட்ட அமலாக்க அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுக்காமலிருப்பதை கண்டிக்கும் ஒரு மனுவை யெகோவாவின் சாட்சிகள் 2001, ஜூன் 29-⁠ம் தேதி மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். சில நாட்களிலேயே 2001, ஜூலை 2-⁠ல் ஐரோப்பிய நீதிமன்றம் பிரதிபலித்தது. இந்த வழக்கிற்கு “முன்னுரிமை கொடுக்க வேண்டும்” என நீதிமன்ற கழகத்தின் தலைவர் நினைப்பதாக நீதிமன்ற பதிவாளர் எழுதினார்.

[பக்கம் 22-ன் தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

ரஷ்யா

ஜார்ஜியா

கருங்கடல்

துருக்கி

[பக்கம் 22-ன் படம்]

2001, மே 13-ஒரு வெறியன் வீட்டை கொளுத்திவிட்டதால் ஷாமோயான் குடும்பத்தினர் தங்கள் வீட்டை இழந்தனர்

[பக்கம் 22-ன் படம்]

2001, ஜூன் 17-யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டத்தில் இருக்கையில் வன்முறை தாக்குதலுக்கு ஆளாகிய ஜியார்ஜி பாகிஷ்வீலி

[பக்கம் 23-ன் படம்]

2001, ஜூலை 11-யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டத்தில் கலந்துகொள்கையில் தடியால் தலையில் தாக்கப்பட்டு, முதுகிலும், விலாவிலும் அடிக்கப்பட்ட டாவிட் ஸேலாரீட்ஸ

[பக்கம் 27-ன் படம்]

2000, ஜூன் 28-டிபிலிஸியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுர கிடங்கை வெறியர்கள் கொளுத்திவிட்டனர்

[பக்கம் 27-ன் படம்]

2000, ஆகஸ்ட் 16-கில்டானி-நாட்ஸாலாடவி நீதிமன்றத்தில் வாஸிலி மகாலாவிஷ்விலியின் ஆதரவாளன் ஒருவன் கனடாவை சேர்ந்த யெகோவாவின் சாட்சியான வாரன் ஷுஃபெல்ட்டை தாக்கினான்

[பக்கம் 28-ன் படத்திற்கான நன்றி]

AP Photo/Shakh Aivazov