மாயமந்திரத்தில் மேலோட்டமாக ஈடுபடுதல்—அதிலென்ன தவறு?
இளைஞர் கேட்கின்றனர் . . .
மாயமந்திரத்தில் மேலோட்டமாக ஈடுபடுதல்—அதிலென்ன தவறு?
பருவவயது இளைஞர்கள் மாயமந்திரங்களில் உண்மையிலேயே ஈடுபட விரும்புகிறார்களா? 115 நடுநிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவர்களிடம் சுற்றாய்வு நடத்துவதன்மூலம் இதைக் கண்டறிய முயன்றது ஓர் ஆய்வாளர் குழு. அந்த சுற்றாய்வின்மூலம் தெரிய வந்த புள்ளிவிவரங்கள் இவையே: ஆய்வு நடத்தப்பட்டவர்களில் பாதிக்கும் அதிகமானோர் (54 சதவீதத்தினர்) மாயமந்திரத்திலும் மீமானிட விஷயங்களிலும் விருப்பம் உடையவர்கள் என்றும் காற்பங்கினர் (26 சதவீதத்தினர்) அவற்றில் “அதிக விருப்பம்” உடையவர்கள் என்றும் தெரிவித்தனர்.
“சாத்தானிய வழிபாட்டு செயல்கள் அதிகரித்திருப்பதாக சொல்லும் . . . செய்தித்தாள் மற்றும் பத்திரிகை கட்டுரைகள் சமீப ஆண்டுகளில் ஏராளமாக வெளிவந்துள்ளன” என்பதாக ஆங்கரேஜிலுள்ள அலாஸ்கா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எழுதுகிறார்கள். இளைஞர்கள் மத்தியில் சாத்தானிய வணக்கம் பரவலாக இருப்பதாக பேசப்படுவதை நிரூபிக்க ஊர்ஜிதமான அத்தாட்சிகள் அவ்வளவாக இல்லை என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். அவ்வாறு இருக்கிறபோதிலும், சாத்தானிய வணக்கம் மற்றும் மாயமந்திரங்களுடன் தொடர்புள்ள காரியங்களில் தற்செயலாகவாவது அநேக இளைஞர்கள் ஈடுபட விரும்புகிறார்கள் என்பதில் கேள்விக்கு இடமே இல்லை.
ஆகவே ‘மாயமந்திரங்களில் மேலோட்டமாக ஈடுபடுவதில் என்ன தவறு?’ என்று சில இளைஞர் கேட்கலாம். பதிலுக்காக, முதலாவது இந்த மாயமந்திரத்தில் என்ன வழிகளில் இளைஞர் ஈடுபட தொடங்குகிறார்கள் என்பதைக் குறித்து சிந்திப்போம்.
மாயமந்திரத்தின் கவர்ச்சி
“20 வருடங்களுக்குமுன் கற்பனைசெய்து பார்த்திருக்க முடியாத குழப்பம் நிறைந்த, பெரும்பாலும் கலக்கம் ஏற்படுத்தக்கூடிய ஏகப்பட்ட படங்களும் தகவல்களும் இன்றைய பிள்ளைகளுக்கும் டீனேஜிலுள்ள இளைஞருக்கும் எளிதாக கிடைக்கின்றன” என்பதாக ஐ.மா. செய்தி மற்றும் உலக அறிக்கை-யில் (ஆங்கிலம்) வெளிவந்த கட்டுரை குறிப்பிடுகிறது. எதையும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தின் காரணமாக அநேக இளைஞர் மாயமந்திர விஷயங்களை சித்தரிக்கும் புத்தகங்களையும் பத்திரிகைகளையும் வாசிக்கின்றனர், வீடியோக்களை பார்க்கின்றனர், அல்லது இன்டர்நெட்டில் வெப்சைட்களை அலசுகின்றனர்.
பிபிஸி நியூஸ் ஆன்லைன் சொல்கிறபடி, பில்லிசூனியத்தையும் இரத்தம் உறிஞ்சும் பேய்களின் வேலைகளையும் சித்தரிக்கும் பிரபல டிவி நிகழ்ச்சிகள் “பிள்ளைகளின் மத்தியில் பில்லிசூனிய ஆசையை வளர்க்க உற்சாகப்படுத்துவதாக சொல்லப்படுகிறது.” அதேவிதமாக சில ஹெவிமெட்டல் இசையும் வன்முறையான அல்லது பேய்த்தனமான கருத்துக்களை சிறப்பித்துக் காட்டுகின்றன. “[இசையில்] இன்று என்ன நடக்கிறது என்பதைப் பற்றி கூடியவரை பலமாகவே நான் எச்சரிக்க வேண்டும். . . . இவ்வளவு கீழ்த்தரமான எதையும் நான் பார்த்ததே இல்லை. பைத்தியக்காரத்தனம், பேய்த்தன ஆக்கிரமிப்பு, பேய்கள், இரத்தம் சிந்துதல், சாபங்கள், மற்றும் கற்பழிப்பு, தன்னையே ஊனப்படுத்திக் கொள்ளுதல், கொலை, தற்கொலை உள்ளிட்ட அனைத்து வன்முறையுமே அந்த பாடல்களில் நிறைந்துள்ளன. மரணமும் அழிவும் அழிவுக்குரிய தீர்க்கதரிசனங்களும், நல்லது அனைத்தையும் ஏற்க மறுத்து அருவருப்பும் தீமையானதுமான அனைத்தையும் தழுவுவதுமே அவற்றின் கருப்பொருள்கள்” என்பதாக பத்தி எழுத்தாளர் டாம் ஹார்ப்பர் டோரான்டோ செய்தித்தாள் த ஸன்டே ஸ்டார்-ல் எழுதினார்.
அப்படிப்பட்ட இசையைக் கேட்பது நிஜமாகவே அழிவுக்குரிய நடத்தைக்கு காரணமாகுமா? ஒருவருடைய விஷயத்திலாவது அது உண்மையானதாக தெரிகிறது; ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த 14 வயது இளைஞன் தன் அம்மாவை குத்திக் கொன்றுவிட்டு தன்னையும் கொன்றான். அவனுடைய அறையில் சுவரெங்கும் ஹெவி மெட்டல் பாடகர்களின் போஸ்டர்கள்தான். இந்த சம்பவத்திற்குப்பின் அவனுடைய தந்தை, “பிள்ளைகள் என்ன பாடல்களைக் கேட்கிறார்கள் என்பதைக் குறித்து பெற்றோரை கவனமாக இருக்க சொல்லுங்கள்” என வருந்தி கேட்டுக்கொண்டார். தன் மகன் அவனுடைய அம்மாவை கொன்றதற்கு முந்தின வாரம் முழுவதும் “இரத்தமும் உன் அம்மாவை கொல்வதும் பற்றிய” ராக் பாடலை பாடிக்கொண்டே இருந்தான் என்று அவர் கூறினார்.
கற்பனை கதாபாத்திர விளையாட்டுகளும் இருக்கின்றன. சூனியக்காரர் அல்லது மாயமந்திரங்களை செய்பவர்களைப் போன்ற வேடத்தை தரித்து விளையாட அவற்றில் சில விளையாட்டுகள் அனுமதிக்கின்றன. இவற்றில் பெரும்பாலான விளையாட்டுகள் பேய்த்தன வன்முறையை சித்தரிக்கின்றன. a
என்றபோதிலும், மீடியாஸ்கோப் என்ற ஆராய்ச்சி அமைப்பு இவ்வாறு அறிக்கை செய்கிறது: “தன்னை தனிமைப்படுத்திக் கொள்வது, மட்டுமீறிய போதைமருந்து அல்லது குடிப்பழக்கம், உளநோய் பிரச்சினைகள், தற்கொலை செய்யும் மனநிலை, . . . வளரிளமை பருவத்தில் துணிச்சலுடன் நடந்துகொள்வது ஆகிய நடத்தைகளுக்கு ஹெவிமெட்டல் இசையே காரணமாக இல்லை; ஆனால் இந்த இசையைக் கேட்க விரும்புவது இதுபோன்ற நடத்தைகளுக்கு ஒரு முக்கிய அறிகுறியாக இருக்கிறது என்று ஆய்வுகள் காண்பிக்கின்றன. இதுபோன்ற பிரச்சினைகளுடன் ஏற்கெனவே போராடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள், ஹெவி மெட்டல் பாடல் வரிகள் தங்கள் சொந்த கவலைகளை வெளிப்படுத்துவதால் அவற்றால் கவரப்படக்கூடும் என்று எண்ணப்படுகிறது.”
சாத்தானிய இசையைக் கேட்பதால் விளையும் ஆபத்துக்களை எல்லா ஆய்வாளர்களும் ஒத்துக்கொள்ளாமல் போகலாம். ஆனால், வன்முறை அல்லது தன்னைத்தானே அழித்துக் கொள்வதையுமே சிறப்பித்துக் காட்டும் வீடியோக்கள், இசை அல்லது விளையாட்டுக்களை தவறாமல் அனுபவிப்பது நச்சுத்தன்மையுள்ளதாக அல்லாமல் வேறே எப்படி இருக்க முடியும்? கிறிஸ்தவர்களுக்கோ, மாயமந்திரங்களில் மேலோட்டமாக ஈடுபடுவதுகூட இன்னும் அதிக ஆபத்தானதாக இருக்கும்.
மாயமந்திரங்களைப் பற்றி கடவுளுடைய கருத்து
அப்போஸ்தலன் பவுல், 1 கொரிந்தியர் 10:20-ல் கிறிஸ்தவர்களை இவ்வாறு எச்சரித்தார்: “நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை.” அந்தப் பேய்கள் யார்? அவர்களுடன் தொடர்புகொள்வது ஏன் அவ்வளவு ஆபத்தானது? சுருங்கச் சொன்னால், பிசாசாகிய சாத்தானை பின்பற்றுவதை தெரிந்துகொண்ட முன்னாள் தேவதூதர்களே இந்த பேய்கள். சாத்தான் என்றால் “எதிர்ப்பவன்” என்றும் பிசாசு என்றால் “பழிதூற்றுபவன்” என்றும் அர்த்தம். பைபிளின்படி, இந்த முன்னாள் தேவதூதன் கடவுளுக்கு விரோதமாக கலகம் செய்வதை தெரிந்துகொண்டு தானாகவே எதிர்ப்பவனாகவும் பழிதூற்றுபவனாகவும் மாறினான். காலப்போக்கில், தன் கலகத்தனமான போக்கில் சேர்ந்துகொள்ளும்படி மற்ற தூதர்களையும் கவர்ந்திழுத்தான். இவ்வாறு ஒன்றுசேர்ந்தவர்கள் பேய்கள் ஆனார்கள்.—ஆதியாகமம் 3:1-15; 6:1-4; யூதா 6.
சாத்தானை “இந்த உலகத்தின் அதிபதி” என்று இயேசு அழைத்தார். (யோவான் 12:31) சாத்தானுக்கும் அவனுடைய பேய்களுக்கும் அழிவு வரப்போவதால் அவர்கள் ‘மிகுந்த கோபத்துடன்’ இருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 12:9-12) எனவே, பேய்களுடன் தொடர்பு கொண்டவர்கள் அவை கொடூரமானவையாக இருப்பதை கண்டிருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. சூரினாமிலுள்ள ஒரு பெண் ஆவியுலக தொடர்புகளில் பழக்கமுள்ள ஒரு குடும்பத்தில் வளர்ந்தவள். அந்த பேய்கள், “இணங்கிப்போகாதவர்களை சித்திரவதை செய்து மகிழ்வதை” அவள் நேரடியாக கண்டிருந்தாள். b கொடூரமான இந்த ஆவி சிருஷ்டிகளுடன் எவ்வகையிலும் தொடர்புகொள்வது மிகவும் ஆபத்தானதாகும்!
இந்த காரணத்துக்காக, எல்லா மாயமந்திர பழக்கங்களையும் தவிர்க்குமாறு கடவுள் தம்முடைய பூர்வ கால மக்களாகிய இஸ்ரவேலருக்கு கட்டளையிட்டார். “இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்” என்பதாக உபாகமம் 18:10-12 எச்சரிக்கிறது. ‘சூனியக்காரர்’ கடவுளிடமிருந்து அழிவையே எதிர்ப்படுவார்கள் என்று கிறிஸ்தவர்களும் எச்சரிக்கப்பட்டார்கள். (வெளிப்படுத்துதல் 21:8) மாயமந்திரத்தில் மேலோட்டமாக ஈடுபடுவதும்கூட கடவுளால் கண்டிக்கப்படுகிறது. “அசுத்தமானதைத் தொடாதிருங்கள்” என்று பைபிள் கட்டளையிடுகிறது.—2 கொரிந்தியர் 6:17.
மாயமந்திர பழக்கங்களிலிருந்து விடுபடுதல்
மாயமந்திரங்களில் மேலோட்டமாக ஈடுபடும் தவறைச் செய்திருக்கிறீர்களா? அப்படியானால் முதல் நூற்றாண்டில் எபேசு பட்டணத்தில் என்ன நடந்தது என்பதை கவனியுங்கள். அங்கிருந்த அநேகர் ‘மாயவித்தைக்காரராய் இருந்தார்கள்.’ ஆனால் பரிசுத்த ஆவியின் உதவியால் அப்போஸ்தலன் பவுல் செய்த வல்லமையான செயல்களால் அவர்களில் சிலர் தூண்டுவிக்கப்பட்டார்கள். அதன் விளைவுகள்? “மாயவித்தைக்காரராயிருந்தவர்களில் அநேகர் தங்கள் புஸ்தகங்களைக் கொண்டுவந்து, எல்லாருக்கு முன்பாகச் சுட்டெரித்தார்கள்; அவைகளின் கிரயத்தைத் தொகைபார்த்து, ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசாகக் கண்டார்கள். இவ்வளவு பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது.”—அப்போஸ்தலர் 19:11-20.
இது நமக்கு என்ன கற்பிக்கிறது? பேய்களின் பிடியிலிருந்து ஒருவர் விடுபட வேண்டுமானால், அவர் சாத்தானிய வழிபாடு சம்பந்தமான எல்லாவற்றையும் அழித்துவிட வேண்டும்! புத்தகங்கள், பத்திரிகைகள், போஸ்டர்கள், நகைச்சுவை புத்தகங்கள், வீடியோக்கள், தாயத்துகள் (“பாதுகாப்புக்காக” அணியும் பொருட்கள்), இன்டெர்நெட்டிலிருந்து எடுக்கப்பட்ட பேய்த்தனமான தகவல் ஆகிய அனைத்தும் இதில் உட்படுகிறது. (உபாகமம் 7:25, 26) குறிசொல்வதற்கு பயன்படுத்தப்படும் படிகக் கோளம், வீஜா போர்டு போன்ற எந்தவிதமான பொருட்களையும் அகற்ற வேண்டும். மேலும், சாத்தானிய கருத்துக்களை சித்தரிக்கும் பாடல்கள் அல்லது வீடியோக்களையும் களைய வேண்டும்.
அப்படிப்பட்ட தைரியமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு துணிவும் மன உறுதியும் அவசியம். ஆனால் அதனால் பெரும் நன்மைகள் விளையும். ஆரம்பத்தில் தீங்கற்றதாக தோன்றிய ஒரு கம்ப்யூட்டர் விளையாட்டை ஜின் c என்ற ஒரு கிறிஸ்தவ பெண் வாங்கினாள். அந்த விளையாட்டை ஒவ்வொரு மட்டமாக கடந்து முன்னேறியபோது, அதில் ஆவியுலக தொடர்புகள் இழையோடும் அம்சங்களும் இருந்ததை கண்டுபிடித்தாள். சீக்கிரத்தில் அவளுக்கு பயங்கரமான கனவுகள் வர ஆரம்பித்தன! “நடுராத்திரியில் எழுந்து அந்த விளையாட்டின் சிடி-களை உடைத்தெறிந்தேன்” என்கிறாள் ஜின். விளைவு? “அப்போதிருந்து எந்த பிரச்சினையும் இல்லை.”
விடுபடுவதைக் குறித்து நிஜமாகவே மன உறுதியுடன் செயல்பட்டால், வெற்றி நிச்சயம். பிசாசு தன்னை வணங்கும்படி இயேசுவை கவர்ந்திழுக்க முயன்றபோது, இயேசு காண்பித்த மன உறுதியை நினைவுபடுத்தி பாருங்கள். “அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார். அப்பொழுது பிசாசானவன் அவரை விட்டு விலகிப்போனான்.”—மத்தேயு 4:8-11.
தனியாக போராடாதீர்கள்
கிறிஸ்தவர்களுக்கு ‘வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு போராட்டம் உண்டு’ என்பதாக அப்போஸ்தலன் பவுல் நினைவுபடுத்துகிறார். (எபேசியர் 6:12) ஆனால் சாத்தானையும் அவனுடைய பேய்களையும் எதிர்த்து தனித்து போராட முயலாதீர்கள். கடவுள் பயமுள்ள பெற்றோர் மற்றும் உள்ளூர் சபை மூப்பர்களின் உதவியை பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் அதில் ஈடுபட்டிருந்ததைக் குறித்து மனம்வருந்தி வெளியில் சொல்வதற்கு சங்கடப்படலாம்; ஆனாலும் உங்களுக்கு மிகவும் தேவையான ஆதரவை பெறுவதற்கு இது உதவியாக இருக்கும்.—யாக்கோபு 5:14, 15.
பைபிள் பின்வருமாறு சொல்வதையும் நினைவில் வைத்திருங்கள்: “பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்.” (யாக்கோபு 4:7, 8) ஆம், உங்களுக்கு யெகோவா தேவனுடைய ஆதரவு இருக்கிறது! மாயமந்திர கண்ணியிலிருந்து விடுபட அவர் உங்களுக்கு உதவி செய்வார். (g02 1/22)
[அடிக்குறிப்புகள்]
a ஆகஸ்ட் 22, 1999, விழித்தெழு!-வில் “இளைஞர் கேட்கின்றனர் . . . கற்பனை கதாபாத்திர விளையாட்டு ஆபத்தானதா?” என்ற கட்டுரையை காண்க.
b யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்படும் இதன் கூட்டுப் பத்திரிகையாகிய காவற்கோபுரத்தில் 1988, செப்டம்பர் 1 இதழில், “ஆவியுலகத் தொடர்பு—அதன் நுகத்தை உதறித் தள்ளுதல்” என்ற கட்டுரையைக் காண்க.
c பெயர் மாற்றப்பட்டுள்ளது.
[பக்கம் 14-ன் படம்]
சாத்தானிய வழிபாடு சம்பந்தப்பட்ட எல்லா பொருட்களையும் அழித்துவிடுங்கள்
[பக்கம் 14-ன் படம்]
ஆவியுலக தொடர்பை முன்னேற்றுவிக்கும் வெப்சைட்களைக் குறித்து ஜாக்கிரதை