வரிக்குதிரை—ஆப்பிரிக்க காட்டுக் குதிரை
வரிக்குதிரை—ஆப்பிரிக்க காட்டுக் குதிரை
ஆப்பிரிக்காவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
அடக்குவாரின்றி ஆப்பிரிக்க புல்வெளியில் ஆனந்தமாக அலைந்து திரிகின்றன சுமார் ஆயிரம் வரிக்குதிரைகள். அவற்றின் துடிப்புமிக்க அசைவுகளின் சந்தத்திற்கேற்ப அடர்ந்த பிடரிமயிர் அங்குமிங்கும் கூத்தாட, வரிகள் தீட்டப்பட்ட வாளிப்பான புடைப்பகுதிகள் மென்மையாக அலைபோல் ஏறியிறங்குகின்றன. வறண்ட பூமியில் திமுதிமுவென ஓடிவருகையில், அவற்றின் குளம்பொலி சமவெளிகளுக்கு அப்பால் கடகடவென்ற ஓசைநயத்தோடு காதில் வந்து படிக்கிறது. அவற்றின் பின்னால் மேகம்போல் தோன்றும் செந்நிற புழுதி மேல்நோக்கி பறக்கிறது. பல மைல் தூரத்திற்கு அப்பாலும் இந்தக் காட்சி விழித்திரையில் வந்து விழுகிறது. இவற்றிற்கு காவல் ஏது, கட்டுப்பாடு ஏது? அவிழ்த்துவிட்ட கழுதைபோல் தன்னிச்சையாக ஓடியாடித் திரிகின்றன இந்தக் குதிரைகள்!
ஏதோ ‘சிக்னலை’ கண்டதுபோல், அவை மெதுவாக ‘பிரேக்’ போட்டு நிற்கின்றன. உறுதியான தடிப் பற்களால் காய்ந்த புற்களை கடித்து துவம்சம் பண்ணுகின்றன. இந்த விலங்குக் கூட்டம் எப்பொழுதும் விழிப்புடன் இருக்கிறது, அவ்வப்பொழுது தலையைத் தூக்கி பார்க்கிறது, செவிமடுத்துக் கேட்கிறது, காற்றை மோப்பம் பிடிக்கிறது. எங்கிருந்தோ காற்றில் மிதந்து வரும் சிங்கத்தின் கர்ஜனை காதில் விழ, உடனே அவை சிலிர்த்துக்கொள்கின்றன. அந்த சத்தம் அவற்றிற்கு பழக்கப்பட்ட ஒன்றுதான். காதுகள் நேராக நிமிர்ந்திருக்க, புற்கள் வாயில் அசைவற்று கிடக்க, முனகல் சத்தம் வந்த திசையில் நோட்டமிடுகின்றன. சரி, இப்போதைக்கு ஆபத்தில்லை என அறிந்ததும் தலையை கீழே சாய்த்து மறுபடியும் மளமளவென காரியத்தில் இறங்கிவிடுகின்றன.
ஆதவனின் ஆக்ரோஷ பார்வை தங்கள் மீது பட ஆரம்பிக்கையில், மீண்டும் அங்கிருந்து நடையை கட்டுகின்றன. இப்பொழுது தண்ணீரை மோப்பம் பிடிக்கின்றன—அந்த வரிக்குதிரைகள் நதிக்கரையை நோக்கி செல்லும் நேரம் இது! நதிக்கரை மேட்டிற்கு நடந்து வந்ததும் உறுமிக்கொண்டு, வறண்ட புழுதியை கிளறிக்கொண்டு, ஒயிலாக ஓடிக்கொண்டிருக்கும் பழுப்புநிற நீரை வைத்த விழி வாங்காமல் பார்த்தவாறே நிற்கின்றன. தண்ணீரின் சலனமற்ற மேற்பரப்பிற்கு கீழே ஏதாவது ஆபத்து மறைந்திருக்குமோ என்றெண்ணி தயங்குகின்றன. ஆனால் தண்ணீர் தாகம் உயிரை வாட்டுகிறதே, என்ன செய்வது? எனவே, அவற்றில் சில முட்டிமோதி முன்னே செல்ல முனைகின்றன. கடைசியில் அவை நதியின் விளிம்பிற்கு திடுதிப்பென்று பாய்ந்து ஓடுகின்றன. ஒன்றன்பின் ஒன்றாக வயிறுமுட்ட தண்ணீர் குடித்தவுடன் மீண்டும் திறந்தவெளிக்குத் திரும்புகின்றன.
மாலை மயங்குவதற்குள் அந்த மந்தை கூட்டம் நெடுந்துயர்ந்த புற்களின் நடுவே நளினமாக நடந்து செல்கிறது. சூரியன் அஸ்தமிக்கையில் வீசும் தகதகவென்ற சிவப்பொளியில் நிழலாக தெரிய, ஆ, அந்த அழகிய ஆப்பிரிக்க புல்வெளியில் அவை எவ்வளவு அற்புதமாக காட்சியளிக்கின்றன!
வரிகளிட்டவை, ஒட்டிவாழ்பவை
வரிக்குதிரைகளின் அன்றாட வாழ்க்கை என்றும் ஒன்றுதான். உணவுக்காகவும் நீருக்காகவும் சதா தேடி அலைவதால் அவை நாடோடிகளாய் திரிகின்றன. திறந்த வெளியில் மேய்ந்து கொண்டிருக்கையில், இவை சுத்தமாகவும் புஷ்டியாகவும் காட்சியளிக்கின்றன; கோடுபோட்ட தோலாடை உருண்டு திரண்ட உடல்களில் இறுக்கமாக அணியப்பட்டது போல இருக்கின்றன. இவற்றின்மீது தீட்டப்பட்டுள்ள இந்த வரிகள் தனித்தன்மை வாய்ந்தவை; எந்த இரு வரிக்குதிரைகளின் வரிகளும் ஒரே மாதிரியாக இருக்காது என சிலர் சொல்கின்றனர். கண்ணைப் பறிக்கும் அந்தக் கறுப்பு வெள்ளை வரிகள் அந்தச் சமவெளியில் சஞ்சரிக்கும் ஏனைய விலங்கினங்கள் மத்தியில் விநோதமாக காட்சியளிக்கின்றன. இருந்தாலும், அவற்றின் தோற்றம் நம்மை சுண்டியிழுக்கிறது, அது ஆப்பிரிக்காவின் இயற்கை வாழிடத்திற்கே உரிய ஒன்று.
வரிக்குதிரைகள் ஒன்றோடொன்று ஒட்டிவாழும் குணம் படைத்தவை. வாழ்நாள் முழுக்க நீடிக்கும் உறுதியான பந்தத்தை ஒவ்வொன்றும் உருவாக்கிக் கொள்கின்றன. பெருங்கூட்டத்தில் பல்லாயிரம் விலங்குகள் இருந்தாலும், ஆண் குதிரையும் பெண் குதிரைகளும் அடங்கிய பல்வேறு சின்னஞ்சிறு குடும்பங்களாக அவை பிரிக்கப்படுகின்றன. இச்சிறிய குடும்பங்கள் அவற்றின் அங்கத்தினர்களை அந்தஸ்திற்கேற்ப தனித்தனியாக கவனத்துடன் பிரித்துவைப்பதன் மூலம் ஒழுங்கை காத்துக்கொள்கின்றன. அதிகாரம் செலுத்தும் பெண் குதிரையே குடும்பத்தின் இடப்பெயர்ச்சியைத் தீர்மானிக்கிறாள். அவளே வழிநடத்திச் செல்கிறாள், மற்ற பெண் குதிரைகளும் அவற்றின் குட்டிகளும் தங்கள் தங்கள் அந்தஸ்தின்படி ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்துச் செல்கின்றன. என்றாலும், மொத்தத்தில் ஆண் குதிரைக்கே ஆட்சி உரிமை. அவன் தன்னுடைய குடும்பம் செல்ல வேண்டிய பாதையை மாற்ற விரும்பினால், வழிநடத்திச் செல்லும் பெண் குதிரையை மெல்ல அணுகி புதிய பாதையில் செல்ல அவளை செல்லமாக இடித்துத் தள்ளுகிறான்.
உரோமத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதில் வரிக்குதிரைகளுக்கு அலாதி பிரியம், இதற்கு அவை ஒன்றுக்கொன்று கைகொடுக்கின்றன. ஒன்று மற்றொன்றின் புடைப்பகுதிகளையும் தோள்களையும் பின்புறங்களையும் தேய்த்துக் கொண்டும் லேசாக கடித்துக்கொண்டும் இருப்பதை காண்பது சர்வசாதாரணம். இப்படி பரஸ்பரமாக தேய்த்துக்கொள்வதால் ஒவ்வொன்றுக்கும் இடையே உள்ள பந்தம் பலப்படுவதாக தெரிகிறது, பிறந்து சில நாட்களே ஆன குட்டிகளாய் இருக்கும்போதே இந்த வேலையை ஆரம்பித்து விடுகிறது. “சொறிந்து”விடுவதற்கு அந்தக் குடும்பத்தில் யாருமே இல்லையென்றால், அரிப்பெடுக்கும் வரிக்குதிரைகள் புழுதியில் புரண்டு அல்லது ஒரு மரத்திலோ கறையான் புற்றிலோ வேறெந்த அசையாப் பொருளிலோ உடலை தேய்த்துக்கொண்டு நிவாரணம் பெறுகின்றன.
வாழ்க்கை போராட்டம்
வரிக்குதிரையின் வாழ்க்கை ஆபத்து நிறைந்தது. சிங்கங்கள், காட்டு நாய்கள், கழுதைப் புலிகள், சிறுத்தைப் புலிகள், முதலைகள் ஆகிய அனைத்தும் இந்த 250 கிலோ எடையுடைய குதிரையை குறிவைக்கின்றன. வரிக்குதிரைகளால் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் ஓட முடியும், ஆனால் எதிர்பாராமலும் தந்திரமாகவும் தாக்கும் விலங்குகளுக்கு சிலசமயங்களில் விருந்தாகிவிடுகின்றன. இவற்றை பிடிப்பதற்கு சிங்கங்கள் புதருக்குள் பதுங்கியிருக்கின்றன, முதலைகள் கலங்கிய நீருக்குள் மறைந்திருக்கின்றன, சிறுத்தைகளோ இருளின் போர்வையில் ஒளிந்திருக்கின்றன.
இவ்விலங்குக் கூட்டத்தின் விழிப்புணர்வும் ஒருங்கிணைந்த நடவடிக்கையுமே இவற்றின் பாதுகாப்பிற்கு கைகொடுப்பவை. பெரும்பாலானவை விண்மீன்கள் கண்சிமிட்டும் வேளையில் விழிகள் மூடி உறங்கினாலும், எப்பொழுதும் சில குதிரைகள் காதையும் கண்ணையும் திறந்தே வைத்துக்கொண்டு காவல் காக்கின்றன. கொன்றுதின்னும் கொடியவனுடைய வருகை ஒரு குதிரையின் கண்களில் தட்டுப்பட்டுவிட்டால் போதும், உடனே உறுமுவான்
—முழு கூட்டத்திற்கும் இதுதான் முரசொலி. அந்தக் கூட்டத்தில் ஒரு குதிரை சீக்காளியாகவோ கிழடாகவோ இருப்பதால் பிற குதிரைகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாதிருக்கும்போது, மற்ற வரிக்குதிரைகள் வேண்டுமென்றே மெதுவாக ஓடுகின்றன, அல்லது அது மீண்டும் கூட்டத்துடன் சேர்ந்துகொள்ளும் வரை காத்திருக்கின்றன. கொன்றுதின்னும் விலங்கின் வருகையால் ஆபத்து அச்சுறுத்தும்போது, ஆண் குதிரை அவ்விலங்குக்கும் பெண் குதிரைகளுக்கும் இடையே அச்சமின்றி தைரியமாக நின்றுகொண்டு, குதிரைகள் தப்புவதற்கு சமயமளிக்க அந்த விரோதியை கடிக்கும், உதைக்கும்.ஆப்பிரிக்காவிலுள்ள செரங்கெட்டி சமவெளியில் நடந்த குறிப்பிடத்தக்க ஒரு சம்பவம் இப்படிப்பட்ட குடும்ப பிணைப்பை படம்பிடித்துக் காட்டுகிறது. இச்சம்பவத்தை விலங்கின ஆய்வாளர் ஹியூக்கோ வான் லாவிக் கண்ணார கண்டார். காட்டு நாய்களின் கும்பலொன்று, வரிக்குதிரைக் கூட்டத்தை விரட்டிக்கொண்டு சென்றதைப் பற்றி விவரிக்கையில், ஒரு பெண் வரிக்குதிரையையும் அவளுடைய பச்சிளம் குட்டியையும் ஒருவயது குட்டியையும் இந்த நாய்கள் ஓரங்கட்டிவிட்டன என்று அவர் கூறினார். அந்தக் கூட்டத்திலிருந்த மற்ற வரிக்குதிரைகள் பாய்ந்தோடிச் சென்றுவிட்டதால், அந்தத் தாயும் ஒருவயது குட்டியும் தைரியமாக அந்த நாய்களை எதிர்த்து சண்டையிட்டன. விரைவில் அந்த நாய்கள் அதிக மூர்க்கவெறியோடு தாக்கியதால், அந்தப் பெண் குதிரையும் ஒருவயது குட்டியும் களைப்படைய ஆரம்பித்தன. கதை முடியத்தான் போகிறது என்றே தோன்றியது. பரிதாபகரமான அந்தக் காட்சியை மனத்திரையில் ஓடவிட்ட வான் லாவிக் இவ்வாறு கூறுகிறார்: “திடீரென நிலம் அதிர்வதை நான் உணர்ந்தேன், சுற்றுமுற்றும் திரும்பிப் பார்க்கையில், பத்து வரிக்குதிரைகள் பாய்ந்து வந்துகொண்டிருந்ததைப் பார்த்தபோது எனக்கு ஆச்சரியம் தாளவில்லை. நேராக அணிவகுத்து பாய்ந்துவந்த இந்தக் கூட்டம், கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தத் தாயையும் அவளுடைய இரண்டு குட்டிகளையும் சுற்றிவளைத்துக் கொண்டது. பின்பு அனைத்தும் திரும்பிக்கொண்டு ஒன்றையொன்று ஒட்டியவாறு ஒரே கூட்டமாக, வந்த திசையை நோக்கி பாய்ந்து சென்றன. அந்த நாய்கள் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு அவற்றை விரட்டிச் சென்றன, ஆனால் அந்தக் கூட்டத்திற்குள் நுழைய முடியாததால் முயற்சியைக் கைவிட்டன.”
குடும்ப வாழ்க்கை
பெண் வரிக்குதிரை புதிதாக பிறந்த தன்னுடைய குட்டியை பாதுகாக்கிறது, ஆரம்பத்தில் கூட்டத்திலுள்ள மற்ற அங்கத்தினர்களிடம் அண்ட விடாமல் பார்த்துக்கொள்கிறது. இப்படி யாரோடும் ஒட்டி உறவாடாமல் தனியாக இருக்கும் காலகட்டத்தில், அந்தக் குட்டி தன் தாயோடு பாசப் பிணைப்பை வளர்த்துக்கொள்ள முடிகிறது. தாயின் இணையற்ற கறுப்பு வெள்ளை வரி வடிவத்தை இந்தக் குட்டி நன்கு நினைவில் வைத்துக்கொள்கிறது. அதற்குப் பிறகு, தன் தாயின் அழைப்பையும் வாசனையையும் வரிகளின் வடிவத்தையும் அடையாளம் கண்டுகொள்ளும், வேறெந்த தாயையும் ஏற்றுக்கொள்ளாது.
புதிதாக பிறக்கும் குட்டிகள் அவற்றின் தாயுடைய தனிச்சிறப்புக்குரிய கறுப்பு வெள்ளை கோடுகளோடு பிறப்பதில்லை. அவற்றின் வரிகள் சிவப்புகலந்த பிரவுன் நிறத்தில் இருக்கின்றன, காலம் செல்லச் செல்லத்தான் அவை கறுப்பாக மாறும். பெரும் கூட்டத்திற்குள்ளே மற்ற குடும்பத் தொகுதியைச் சேர்ந்த குட்டிகள் ஒன்றுகூடி ஓடியாடி விளையாடுகின்றன. அவை பெரிய வரிக்குதிரைகளின் மத்தியில் ஒன்றையொன்று ஓடிப் பிடித்து, உதைத்து விளையாடுகின்றன, சிலசமயங்களில் பெரிய வரிக்குதிரைகளும் இவற்றோடு சேர்ந்து விளையாடுகின்றன. குச்சிக் கால்களில் துள்ளிக் குதிக்கும் குட்டிகள் மற்ற பறவைகளையும் சிறிய விலங்குகளையும் விரட்டி விளையாடுகின்றன. நீண்ட மெல்லிய கால்களும், பெரிய கருநிற கண்களும், பளபளக்கும் மென்மையான தோலும் கொண்ட ‘பேபி’ வரிக்குதிரைகள் அழகிய சின்னஞ்சிறு விலங்குகள்; அவற்றை பார்ப்பதற்கு பரவசமாக இருக்கும்.
அடக்குவாரற்றவை, அற்புதமானவை
இன்றும் பெரிய பெரிய வரிக்குதிரைக் கூட்டங்கள் ஆப்பிரிக்காவின் பொன்னிற புல்வெளிகளில் அடக்குவாரின்றி தன்னிச்சையாக ஓடித்திரிவதைக் காணலாம். அது கண்கொள்ளாக் காட்சி.
பலமான குடும்ப பிணைப்புடைய, அடக்குவாரின்றி தன்னிச்சையாக ஓடித்திரிகிற, இணையற்ற கறுப்பு வெள்ளை வரிகள் தீட்டப்பட்ட இந்த வரிக்குதிரைகள் மனதை கொள்ளை கொள்ளும் அற்புத விலங்கு என்பதை யார்தான் மறுப்பார்? “வரிக்குதிரையை தன்னிச்சையாக திரியவிட்டவர் யார்?” என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு இந்த விலங்கைப் பற்றி கற்றுக்கொள்வது பதிலளிக்கிறது. (யோபு 39:5, NW) பதில் பட்டவர்த்தனமாக தெரிகிறது. அவற்றை திரியவிட்டவர் எல்லா உயிரினங்களையும் படைத்த யெகோவா தேவனே. (g02 1/22)
[பக்கம் 16-ன் பெட்டி]
வரிக்குதிரைக்கு வரிகள் இருப்பதேன்?
பரிணாமத்தை நம்புகிறவர்கள் வரிக்குதிரைக்கு வரிகள் இருப்பதற்கான காரணத்தை விளக்க முடியாமல் விழிக்கின்றனர். எச்சரிப்பு சிக்னலை போல செயல்படலாம் என சிலர் நினைத்திருக்கின்றனர். ஆனால் உண்மையில் சிங்கங்களும் மற்ற மாமிசப்பட்சிணிகளும் வரிக்குதிரையின் வரிகளைக் கண்டு துளிகூட பயப்படுவதில்லை.
அந்த வரிகள் பாலின கவர்ச்சி அளிப்பதாக வேறு சிலர் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், ஆண் வரிக்குதிரைக்கு மட்டுமோ பெண் வரிக்குதிரைக்கு மட்டுமோ அல்ல, எல்லாவற்றிற்குமேதான் வரிகள் இருக்கின்றன. ஆகவே இதை ஒரு காரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
ஆப்பிரிக்காவின் தகிக்கும் சூரிய வெப்பத்தை சிதறடிப்பதற்கு உதவியாக கறுப்பு வெள்ளை கோடுகள் பரிணமித்திருக்கலாம் என மற்றொரு கோட்பாடு சொல்கிறது. இது உண்மை என்றால், மற்ற விலங்குகளுக்கு ஏன் வரிகள் இல்லை?
கண்களை ஏமாற்றுவதற்கு வரிக்குதிரைகளுக்கு இந்த வரிகள் பரிணமித்தன என்பது பரவலாக நம்பப்படும் மற்றொரு கோட்பாடாகும். ஆப்பிரிக்க சமவெளிகளில் அடிக்கும் அதிக உஷ்ணம் வரிக்குதிரையின் தோற்றத்தை சிதைத்து மங்கலாக்குவதால் அதை தூரத்திலிருந்து பார்ப்பது கடினம் என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். ஆனால் இப்படி நீண்டதூரத்திலிருக்கும் கண்களை ஏமாற்றுவதால் எந்த பலனுமில்லை, ஏனென்றால் அதன் முக்கிய விரோதியாகிய சிங்கமே பக்கத்தில் இருக்கும்போதுதான் தாக்குகிறது.
மிரட்சியால் பெருங்கூட்டமாக ஓடுகையில் வரிக்குதிரைகளின் வரிகள் வேட்டையாடும் சிங்கங்களை குழப்புகின்றன என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் நிஜத்தில், சிங்கங்கள் மற்ற விலங்குகளைப் பிடிப்பதைப் போலவே வரிக்குதிரைகளையும் மிக சாமர்த்தியமாக பிடித்துவிடுவதாக வனவிலங்கு ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
இன்னும் குழப்புகிற விஷயம், வரிக்குதிரையின் வரிகளே சிலசமயங்களில் அதற்கு ஆபத்தை தேடித்தரலாம் என்பதே. சமவெளியில், நிலவொளி வீசும் இரவு வேளையில், கறுப்பு வெள்ளை வரிகளுள்ள வரிக்குதிரைகளே மற்ற விலங்குகளைவிட பளிச்சென தெரிகின்றன. சிங்கங்கள் பொதுவாக இரவில் வேட்டையாடுவதால், அந்த வரிகளே அவற்றை காட்டிக்கொடுத்துவிடுகின்றன.
அப்படியானால், வரிக்குதிரைகளுக்கு எங்கிருந்து வரிகள் வந்தன? ஓர் எளிய வாக்கியம் இதற்கு தெளிவாக பதிலளிக்கிறது: ‘யெகோவாவின் கரம் இதைச் செய்தது.’ (யோபு 12:9, NW) ஆம், இப் பூமியிலுள்ள உயிரினங்களை தனிச்சிறப்புமிக்க பல்வேறு பண்புகளுடனும் இயல்புகளுடனும் வடிவமைத்தவர் படைப்பாளரே. ஏன் அந்த பண்புகளுடனும் இயல்புகளுடனும் படைத்தார் என மனிதனால் முழுமையாக புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் அவை கண்டிப்பாக உயிரினங்கள் உயிர்வாழ்வதற்கு அற்புதமாக கைகொடுக்கின்றன. உயிரினங்களில் காணப்படும் இப்படிப்பட்ட வியத்தகு வடிவமைப்பினால் மற்றொரு பயனும் உண்டு. அது மனிதருடைய இருதயத்திற்கு மகிழ்ச்சியையும் இன்பத்தையும் களிப்பையும் தருகிறது. உண்மையில், அன்று வாழ்ந்த தாவீதைப் போலவே இன்றும் அநேகர் படைப்பின் அழகைக் கண்டு இவ்வாறு வியந்துரைக்கின்றனர்: ‘யெகோவாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது.’—சங்கீதம் 104:24.