ஆசிரியராக ஏன் இருக்க வேண்டும்?
ஆசிரியராக ஏன் இருக்க வேண்டும்?
“பெரும்பாலான ஆசிரியர்கள் அந்த உத்தியோகத்தை தெரிந்தெடுப்பதற்குக் காரணம், மக்களுக்கு உதவுவதற்கே. பிள்ளைகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஈடுபாடுடன் செயல்படுவதே [ஆசிரியப் பணி].”—ஆசிரியர்களும், பள்ளிகளும், சமுதாயமும் (ஆங்கிலம்).
ஆசிரியர்களில் சிலரைப் பார்க்கையில் அவர்களுடைய வேலை எளிதான ஒன்று என நினைக்கத் தோன்றினாலும், ஆசிரியர் பணி என்பது தடைகளைத் தாண்டி ஓட வேண்டிய மாரத்தான் ஓட்டப்பந்தயத்தைப் போன்றது. ஏனெனில் அதிகப்படியான மாணவர்களை அடைத்து வைத்திருக்கும் வகுப்புகளை சமாளித்தல், தலைக்கு மேல் பேப்பர் வேலை, நிர்வாகம் சுமத்தும் பாரமான சுமை, வளைந்து கொடுக்காத மாணவர்கள், போதாத சம்பளம் போன்ற பல தடைகளை மேற்கொள்ள வேண்டும். ஸ்பெய்ன், மாட்ரிட்டில் ஆசிரியராக இருக்கும் பேத்ரோ இவ்வாறு கூறினார்: “ஆசிரியராக வேலை செய்வது ஒன்றும் லேசுப்பட்ட விஷயமல்ல. அதற்கு கணக்கிலடங்கா வகையில் சுயதியாகம் செய்ய வேண்டும். ஆனால் எத்தனை சிரமங்கள் இருந்தாலும், எந்த வியாபார பணியையும்விட ஆசிரியர் பணியே பலன் தரும் பணியாக நான் கருதுகிறேன்.”
பெரும்பாலான நாடுகளில் மாநகர பள்ளிகளில் எதிர்ப்பட வேண்டிய சவால்களுக்கோ கணக்கே இருப்பதில்லை. போதைப் பொருட்கள், குற்றச்செயல், ஒழுக்க சீர்கேடு, சில சமயங்களில் பெற்றோரின் அசட்டை மனப்பான்மை என இவை யாவும் பள்ளியின் சூழலையும் கண்டிப்பையும் மோசமாக பாதிக்கின்றன. கலக மனப்பான்மைகளோ சர்வசாதாரணம். அப்படியானால், தகுதி பெற்ற அநேகர் ஆசிரியர்களாக இருக்க ஏன் தீர்மானிக்கின்றனர்?
லீமரீஸும் டையனாவும் நியூ யார்க் நகரில் ஆசிரியராக வேலை பார்ப்பவர்கள். அவர்கள் ஐந்து முதல் பத்து வயது பிள்ளைகளுக்குக் கற்பிக்கின்றனர். இருவருமே பெரும்பாலும் ஹிஸ்பானிக் பிள்ளைகளுக்கு வகுப்பு நடத்துபவர்கள்; இவர்கள் இரு மொழிகளை (ஆங்கிலம்-ஸ்பானிஷ்) அறிந்த ஆசிரியர்கள். நாங்கள் கேட்ட கேள்வி . . .
ஓர் ஆசிரியரை தூண்டுவது எது?
லீமரீஸ் சொன்னார்: “என்னைத் தூண்டுவது எது? பிள்ளைகள் மேல் எனக்கு இருக்கும் அலாதி பிரியமே. சில பிள்ளைகளைப் பொறுத்தவரையில், அவர்கள் எடுக்கும் முயற்சியில் என்னை விட்டால் அவர்களுக்கு உதவி செய்ய யாருமில்லை என எனக்குத் தெரியும்.”
டையனா சொன்னார்: “எட்டு வயதுடைய என் அண்ணன் மகனுக்கு படிப்பு வரவில்லை; முக்கியமாக அவனுக்கு சரியாக வாசிக்க வரவில்லை. ஆகவே அவனுக்கு நான் டியூஷன் எடுத்தேன். அவனும் மற்றவர்களும் நன்றாக கற்றுக்கொண்டு படித்ததைக் கண்டபோது எனக்கு பரம திருப்தி! ஆகவே ஆசிரியர் பணிக்குச் செல்ல தீர்மானித்து, ஏற்கெனவே பார்த்து வந்த பாங்க் உத்தியோகத்தை விட்டுவிட்டேன்.”
அநேக நாடுகளிலுள்ள ஆசிரியர்களிடம் இதே கேள்வியை விழித்தெழு! கேட்டது; அப்போது கிடைத்த பதில்களில் சில இங்கு தரப்பட்டுள்ளன.
இத்தாலி நாட்டவரான 40 வயதைத் தாண்டிய ஜூல்யானோ இவ்வாறு விவரித்தார்: “இந்த உத்தியோகத்திற்கு வந்ததற்குக் காரணம், நான் ஒரு மாணவனாக (வலது) இருக்கும்போதே அது என் மனசுக்குப் பிடிச்சுப்போனதுதான். புதுமை
படைக்கவும் பிறருக்கு உத்வேகம் அளிக்கவும் ஏற்ற ஓர் உத்தியோகமாக இதை கருதினேன். ஆரம்பத்தில் எனக்கிருந்த ஆர்வமே என் உத்தியோகத்தில் தொடக்கத்தில் நான் பட்ட கஷ்டங்களை சமாளிக்க உதவியது.”ஆஸ்திரேலியா, நியூ சௌத் வேல்ஸ்ஸை சேர்ந்த நிக் என்பவர் சொன்னார்: “வேதியியல் ஆராய்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு குறைவாக இருந்தது; ஆனால் கல்வித் துறையிலோ ஏராளமான வேலை வாய்ப்பு இருந்தது. நான் ஆசிரியர் பணியை ஆரம்பித்த சமயத்திலிருந்தே அதில் இன்பம் காண்கிறேன், என்னிடம் பயிலும் மாணவர்களும் மகிழ்வதாக தெரிகிறது.”
ஆசிரியர் பணியை தெரிவு செய்பவர்களுக்கு, பெரும்பாலும் பெற்றோரின் உதாரணமே மிகப் பெரிய தூண்டுகோலாக அமைந்துள்ளது. கென்யாவை சேர்ந்த வில்லியம் எமது கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்: “டீச்சராக வேண்டும் என்ற தீராத ஆசை என்னுள் வளர்ந்ததற்கு, என் அப்பாதான் பெருமளவு காரணம்; ஏனெனில் 1952-ல் அவர் ஓர் ஆசிரியராக பணியாற்றினார். பிள்ளைகளின் மனதை உருப்படுத்துகிறேன் என்பதை அறிந்திருப்பதே இந்த உத்தியோகத்தில் நிலைத்திருக்க எனக்கு பெருமளவு உதவியிருக்கிறது.”
கென்யாவைச் சேர்ந்த ரோஸ்மேரி என்பவரும் எங்களிடம் இவ்வாறு கூறினார்: “வசதி வாய்ப்பற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே எனக்கு இருந்து வந்தது. ஆகவே நர்ஸாக அல்லது டீச்சராக வேலை பார்க்க முடிவு செய்திருந்தேன். ஆசிரியர் வேலை முதலில் கிடைத்தது. நான் ஒரு தாயும்கூட; இதனால் என் உத்தியோகத்தின்மீது எனக்கிருந்த விருப்பம் வளர்ந்துள்ளது.”
ஜெர்மனி, ட்யூயீரனை சேர்ந்த பெர்டால்ட் என்பவர் ஆசிரியர் பணிக்கு வருவதற்கு வேறு நோக்கம் இருந்தது: “நான் மட்டும் ஆசிரியரானால் சிறந்த ஆசிரியராக இருப்பேன் என்று என் மனைவி சொல்லிக்கொண்டே இருந்தாள்.” அவள் சொன்னபடியே அமைந்துவிட்டது. அவர் மேலும் சொன்னார்: “என் உத்தியோகத்தால் எனக்குக் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கல்வியின் மதிப்பை ஓர் ஆசிரியர் புரிந்துகொள்ள வேண்டும், இளைஞரில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால் அவர் ஒரு சிறந்த, வெற்றிகரமான, உத்வேகமளிக்கும், திருப்தியான ஆசிரியராக இருக்க முடியாது.”
ஜப்பான், நாகாட்சூ நகரிலுள்ள ஆசிரியரான மாஸாஹீரோ இவ்வாறு கூறினார்: “ஆசிரியராகும் ஆசை எனக்குள் வளர காரணமானவர், நடுநிலைப் பள்ளியின் முதல் வருடத்தில் எனக்கு பாடமெடுத்தவர், ஓர் அருமையான ஆசிரியர். அவர் பொறுப்புணர்வோடு எங்களுக்குக் கற்பித்தார். நான் இந்த உத்தியோகத்தைத் தொடருவதற்கு முக்கிய காரணம் எனக்குப் பிள்ளைகளின் மேல் கொள்ளைப் பிரியம் இருப்பதே.”
இப்போது 54 வயதாகும் யோஷீயாவும் ஜப்பானைச் சேர்ந்தவரே; இவர் தொழிற்சாலை ஒன்றில் கை நிறைய சம்பாதித்து வந்தார்; நாளடைவில் அந்த வேலைக்கே அடிமையாகிப் போனதாக உணர்ந்தார்; அதுமட்டுமா, அதற்கென தினமும் நீண்ட தூரம் பயணம் செய்ய நேரிட்டதால் அப்பயணத்திற்கும் அடிமையாகிப் போனதாக உணர்ந்தார். “‘எத்தனை நாளுக்கு தான் நான் இப்படியே இருக்கப் போகிறேன்?’ என்று ஒரு நாள் எனக்குள் நினைத்தேன். பொருட்களைவிட ஆட்களுடன் அதிகம் தொடர்புகொள்ளும் ஒரு வேலையைத் தேட தீர்மானித்தேன். ஆசிரியர் வேலை ஈடிணையற்றது. இளைஞருடன் நாம் வேலை செய்கிறோம். அதில் மனித நேயம் உட்பட்டுள்ளது.”
ரஷ்யா, செ. பீட்டர்ஸ்பர்க்கில், ஓர் ஆசிரியராக இருப்பதை வாலன்டீனாவும் நல்ல பணியாக கருதுகிறார். அவர் சொன்னார்: “ஆசிரியர் பணியை நானே விரும்பி தெரிந்தெடுத்தேன். தொடக்கப் பள்ளி ஆசிரியராக 37 வருடம் வேலை பார்த்திருக்கிறேன். பிள்ளைகளோடு, முக்கியமாக குட்டிப் பிள்ளைகளோடு காலம் கழிப்பதில் இருக்கும் இன்பமே தனிதான். என் வேலை எனக்குப் பிடித்திருக்கிறது, அதனாலேயே இன்னும் ஓய்வு பெறாமல் தொடர்ந்து வேலை பார்க்கிறேன்.”
ஆசிரியரான வில்லியம் ஏயர்ஸ் எழுதினார்: “ஆசிரியர் பணியினிடம் மக்கள் ஈர்க்கப்படுவதற்கான காரணம், அவர்கள் பிள்ளைகளையும் இளைஞரையும் நேசிப்பதால், அல்லது அவர்களோடிருப்பதை விரும்புவதால் ஆகும்; பிள்ளைகள் படிப்படியாக வளர்ச்சியடைந்து, இவ்வுலகில் அதிக திறம்பட்டவர்களாக, அதிக சாமர்த்தியசாலிகளாக, அதிக ஆற்றல் வாய்ந்தவர்களாக ஆவதைக் காண அவர்கள் விரும்புகின்றனர்; . . . மற்றவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாயிருக்கும் வகையில் . . . அவர்கள் கற்பிக்க விரும்புகின்றனர். நானும் இந்த உலகத்தை சிறந்ததோர் இடமாக மலர வைக்கும் நம்பிக்கையுடனேயே கற்பிக்கிறேன்.”
என்னதான் கஷ்டங்களும் சிரமங்களும் இருந்தாலும், ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் ஆசிரியர் பணியிடம் வசீகரிக்கப்பட்டு அதற்கு தங்களை அர்ப்பணிக்கிறார்கள். அவர்கள் எதிர்ப்படும் மலைபோன்ற பிரச்சினைகளில் சில யாவை? இந்தக் கேள்வியை அடுத்த கட்டுரை எடுத்துரைக்கும். (g02 3/8)
[பக்கம் 6-ன் பெட்டி]
ஆசிரியர்-பெற்றோர் நல்லுறவுக்கான ஆலோசனைகள்
✔ பெற்றோரை தெரிந்துகொள்ளுங்கள். இதற்கு செலவிடும் நேரம் வீணாகாது. மாறாக பரஸ்பர நன்மை பயக்கும். நீங்கள் அவர்களுடன் நன்றாக பழகி, ஒருவரையொருவர் புரிந்துகொள்கையில் அவர்கள் உங்களுடன் மிக நன்றாக ஒத்துழைப்பார்கள்.
✔ பெற்றோரின் நிலையில் இருந்து பேசுங்கள்—உங்களுக்குத்தான் சகலமும் தெரிந்தது போல் நடந்துகொள்ளாதீர்கள். ஆசிரியருக்கே உரிய பரிபாஷையைத் தவிருங்கள்.
✔ பிள்ளைகளைப் பற்றி பேசுகையில், நல்ல அம்சங்களை வலியுறுத்திக் காட்டுங்கள். கண்டனத்தைவிட பாராட்டு அதிக பலனளிக்கும். பிள்ளை வெற்றி பெற பெற்றோர் எப்படி உதவலாம் என்று விளக்கிச் சொல்லுங்கள்.
✔ பெற்றோரை பேசவிடுங்கள், அப்போது காதுகொடுத்துக் கேளுங்கள்.
✔ பிள்ளையின் வீட்டுச் சூழலைப் புரிந்துகொள்ளுங்கள். முடிந்தால் பிள்ளையின் வீட்டுக்குச் செல்லுங்கள்.
✔ அடுத்து சந்திக்கவிருக்கும் தேதியை குறிப்பிடுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்வதே முக்கியம். உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்கிறது என்பதை அது காட்டும்.—அமெரிக்காவில் ஆசிரியர் பணி (ஆங்கிலம்) புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.
[பக்கம் 6-ன் படம்]
‘என் அப்பாவும் ஓர் ஆசிரியர்.’—வில்லியம், கென்யா
[பக்கம் 7-ன் படம்]
‘பிள்ளைகளோடு காலம் கழிப்பதில் இருக்கும் இன்பமே தனிதான்.’—வாலன்டீனா, ரஷ்யா
[பக்கம் 7-ன் படம்]
“ஆசிரியர் வேலை ஈடிணையற்றது. இளைஞருடன் நாம் வேலை செய்கிறோம்.”—யோஷீயா, ஜப்பான்