Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆசிரியர்கள்—ஏன் தேவை?

ஆசிரியர்கள்—ஏன் தேவை?

ஆசிரியர்கள்​—ஏன் தேவை?

“தானாக முட்டி முட்டி ஆயிரம் நாள் படிப்பதைவிட விஷயம் தெரிந்த ஆசிரியரிடம் ஒரு நாள் படிப்பது எவ்வளவோ சிறந்தது.”​—ஜப்பானிய பழமொழி.

பள்ளியில் உங்கள் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட ஆசிரியர் எவரையாவது நினைத்துப் பார்க்க முடிகிறதா? நீங்கள் இன்னும் மாணவராக இருக்கிறீர்களென்றால் உங்களுக்குப் பிடித்தமான ஆசிரியர் இருக்கிறாரா? இருக்கிறார் என்றால் ஏன்?

ஒரு நல்ல ஆசிரியர், மாணவரில் நம்பிக்கையை படிப்படியாக வளர்த்து கல்வியை சுவாரஸ்யமான சவாலாக ஆக்குவார். இந்தியாவில் தொழிலதிபராய் இருக்கும் ஒரு நடுத்தர வயது மனிதர், கொல்கத்தாவில் பள்ளியில் படித்தபோது தனக்கு ஆங்கிலப் பாடம் நடத்திய ஆசிரியரை பிரியத்தோடு நினைத்துப் பார்க்கிறார். “மிஸ்டர் ஸஸூன் கல்வி புகட்டிய விதம், அம்மொழியில் என் ஆர்வத்தை வளர்க்க உதவியது மட்டுமல்லாமல் என் சுயமரியாதையையும் வளர்த்தது. நான் மிக நன்றாக எழுதியிருந்த கட்டுரைகளுக்கு சிறிது ‘மெருகூட்டி,’ வெவ்வேறு செய்தித்தாள்களும் பத்திரிகைகளும் பிரசுரிப்பதற்கு அளிப்பார். அவற்றில் சில நிராகரிக்கப்பட்டாலும், மற்றவை ஏற்றுக்கொள்ளப்பட்டன. செய்தித்தாள்களிடமிருந்து பரிசுத்தொகை கிடைத்ததைவிட என் கட்டுரையை அச்சு வடிவில் பார்த்த சந்தோஷம் இருக்கிறதே, அது ஓர் எழுத்தாளனாக என் திறமையில் நம்பிக்கையை வளர்க்க உதவியது.”

ஜெர்மனியில் ம்யூனிச் நகரிலுள்ள 50 வயதைத் தாண்டிய மார்கிட் என்ற ஓர் இனிய பெண்மணி சொல்கிறார்: “குறிப்பாக ஒரு டீச்சரை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். புரிந்துகொள்ள கஷ்டமாயிருக்கும் விஷயங்களையெல்லாம் அவர் ரொம்ப சுலபமா விளக்கிக் காட்டி விடுவார். எங்களுக்கு ஏதாவது புரியாவிட்டால் கேட்டுத் தெரிந்துகொள்ளச் சொல்லுவார். அவர் யாருடனும் ஒட்டாமல் ஒதுங்கி இருக்கவில்லை; எல்லாருடனும் பிரியமாக பழகுவார். அதுவே வகுப்புகளை ரொம்ப சுவாரஸ்யமாக்கியது.”

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பீட்டர், தன் கணக்கு ஆசிரியரைப் பற்றி பின்வருமாறு சொன்னார்: “உதாரணங்களைக் கொடுத்து, நாங்கள் கற்றுக்கொள்வதன் நடைமுறை பயனைக் காண உதவினார். திரிகோண கணிதம் படிக்கும்போது, ஒரு கட்டடத்தை தொடாமலே கோணவியல் தத்துவங்களை வைத்து அதன் உயரத்தை கணக்கிடுவது எப்படி என காட்டினார். ‘என்னே அருமை!’ என்று நான் வியந்ததுகூட எனக்கு நினைவிருக்கிறது.”

இங்கிலாந்தின் வடபகுதியைச் சேர்ந்த பாலீன், “எனக்கு கணக்குப் பாடம் ரொம்ப கஷ்டமா இருக்குது” என தன் ஆசிரியரிடம் பின்வருமாறு ஒப்புக்கொண்டார். “கணக்கில் முன்னேற உனக்கு விருப்பமா? நான் ஹெல்ப் பண்றேன்” என்றார் ஆசிரியர். பாலீன் தொடர்ந்து சொல்கிறார்: “அடுத்த சில மாதங்களில் அந்த ஆசிரியர் எனக்கு தனி கவனம் செலுத்தினார், ஸ்கூல் விட்ட பிறகும் பாடம் சொல்லிக்கொடுத்தார். நான் தேர்ச்சி பெற வேண்டும் என அவர் விரும்பியது​—⁠என்மீது அவருக்கு அக்கறை இருந்தது​—⁠எனக்குப் புரிந்தது. இதைப் புரிந்துகொண்டதுமே இன்னும் கஷ்டப்பட்டு படிக்க எனக்குள் உத்வேகம் பிறந்தது, நான் தேறினேன்.”

ஸ்காட்லாந்திலுள்ள அஞ்ஜீக்கு இப்போது வயது 30-⁠க்கும் மேல். தன் வரலாற்று ஆசிரியர் மிஸ்டர் கிரஹாமைப் பற்றி சொல்கிறார். “வரலாறு பாடத்தை ரொம்ப சுவாரஸ்யமாக நடத்துவார்! நிகழ்ச்சிகளை கதைபோல் விவரிப்பார்; ஒவ்வொரு விஷயத்தையும் விறுவிறுப்புடன் சொல்லிக்கொடுப்பார். அவை அனைத்துக்கும் உயிர்கொடுப்பார்.” அஞ்ஜீ, தனக்கு முதல் வகுப்பு பாடம் நடத்திய வயதான ஆசிரியை மிசஸ் ஹியூயட்டையும் பாசத்தோடு நினைத்துப் பார்க்கிறார். “ரொம்ப கனிவுடன் நடத்துவார்கள், கரிசனை காட்டுவார்கள். வகுப்பில் ஒரு நாள் ஒரு கேள்வி கேட்க அவர்களிடம் சென்றேன். என்னை அள்ளி அணைத்துக் கொண்டார்கள். உண்மையிலேயே என்மீது கரிசனை இருப்பதை உணரச் செய்தார்கள்.”

கிரீஸ் நாட்டின் தெற்குப் பகுதியைச் சேர்ந்த டிமத்தீ தன் நன்றியை இவ்வாறு தெரிவித்தார்: “எனக்கு அறிவியல் பாடம் நடத்திய ஆசிரியரை இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. என்னைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் எனக்கிருந்த எண்ணத்தையே அடியோடு மாற்றியவர் அவர். வகுப்பறையில் ஆர்வமும் ஆச்சரியமும் கலந்த ஒரு சூழலை அவர் உருவாக்கினார். அறிவுப் பசியையும் புரிந்துகொள்ளும் நாட்டத்தையும் எங்களுக்குள் படிப்படியாய் புகட்டினார்.”

மற்றொரு உதாரணம் அ.ஐ.மா., கலிபோர்னியாவைச் சேர்ந்த ராமோனாவுடையது. அவர் எழுதுகிறார்: “என் ஹைஸ்கூல் டீச்சருக்கு இங்லீஷுன்னா உயிர். அவங்களுக்கு இருந்த ஆர்வக்கனல் எங்களையும் பற்றிக்கொண்டது! கஷ்டமான பகுதிகளையும் எளிதாக புரிந்துகொள்ளச் செய்வார்.”

கனடாவிலுள்ள ஜேன், உடற்கல்வி ஆசிரியரைப் பற்றி இவ்வாறு புகழ்ந்தார்: “பொழுதுபோக்கு விஷயத்திலும் சரி, புதிதாய் எதையாவது கற்றுக்கொடுப்பதிலும் சரி, அவருக்கு விதவிதமான ஐடியா உதிக்கும். பல வெளியிடங்களுக்கு எங்களை அழைத்துச் செல்வார், நாட்டுப்புற பனிச்சறுக்கு விளையாட்டையும், துளையிட்டு ஐஸ்ஸுக்கு கீழுள்ள தண்ணீரில் மீன் பிடிக்கவும் அவர்தான் சொல்லிக் கொடுத்தார். நாங்களாகவே அடுப்பை ரெடி செய்து தீ மூட்டி பேன்னக் ரொட்டி எனப்படும் ஒருவகையான அமெரிக்க இந்திய ரொட்டியையும் செய்தோம். எப்பொழுது பார்த்தாலும் வீட்டுக்குள்ளேயே அடைந்து கொண்டு புத்தகத்திற்குள் புதைந்து கிடக்கும் ஒரு பெண்ணுக்கு இவையெல்லாம் அருமையான அனுபவமே!”

ஷாங்காயில் பிறந்து ஹாங்காங் பள்ளி ஒன்றில் பயின்ற ஹெலன் கூச்ச சுபாவமுள்ள ஒரு பெண். அவர் இவ்வாறு சொல்கிறார்: “நான் ஐந்தாம் வகுப்பு படித்தபோது மிஸ்டர் ச்சன் என்று ஓர் ஆசிரியர் இருந்தார்; அவர் எனக்கு உடற்கல்வியும் ஓவியக் கல்வியும் கற்றுத்தந்தார். நான் ஒல்லியாக இருந்தேன், அதனால் கைப்பந்தாட்டம் கூடைப் பந்தாட்டம் எல்லாம் எனக்கு ஒத்துவரவில்லை. அவரோ என்னை சங்கடப்பட விடவில்லை. எனக்கு ஏற்ற விளையாட்டாக இருந்த பூப்பந்தாட்டத்தையும் பிற விளையாட்டுகளையும் விளையாட வைத்தார். அவர் பரிவானவர், கனிவானவர்.

“அதைப்போலவே ஓவியக் கல்வியிலும் உதவினார். எனக்கு பொருட்களையோ ஆட்களையோ சரியாக வரைய வராது. ஆனால் பேட்டர்ன்களையும் டிசைன்களையும் வரைவதில் இயல்பாக திறமை பெற்றிருந்ததால் அவற்றை வரைந்து வண்ணம் தீட்டச் செய்தார். மற்ற மாணவர்களைவிட நான் வயதில் சிறியவளாய் இருந்ததால், அந்த வகுப்பிலேயே இன்னொரு வருடம் இருப்பது எவ்வளவு நல்லதென்று எனக்குப் புரிய வைத்தார். என் பள்ளிப் படிப்பில் இது ஒரு திருப்புக்கட்டமாக அமைந்தது. என்னுள் நம்பிக்கை பிறந்தது; நான் தேறினேன். அதற்காக அவருக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்.”

எப்படிப்பட்ட ஆசிரியர்கள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினதாக தெரிகிறது? கற்பிக்க​—⁠ஓர் ஆசிரியரின் பயணம் என்ற தன் ஆங்கில புத்தகத்தில் வில்லியம் ஏயர்ஸ் இவ்வாறு பதில் கூறுகிறார்: “திறம்பட்ட விதத்தில் கற்பிப்பதற்கு எல்லாவற்றையும்விட மிக முக்கியமாக, மாணவர்களின் வாழ்க்கைக்கென தன்னை அர்ப்பணித்திருக்கும், யோசனையும் கரிசனையும் மிக்க ஆசிரியரே வேண்டும். . . . திறம்பட கற்பிப்பதற்கு, குறிப்பிட்ட உத்திகளையோ முறைகளையோ அல்லது திட்டங்களையோ செயல்களையோ கற்றுக்கொடுப்பது பெரிய விஷயமல்ல. . . . கற்பிப்பதற்கு முதலில் தேவை அன்பே.” எனவே யார் வெற்றிகரமான ஆசிரியர்? அவர் சொல்கிறார்: “உங்கள் இதயத்தைத் தொட்ட ஆசிரியர்; உங்களைப் புரிந்துகொண்ட அல்லது உங்களை ஒரு நபராக மதித்து உங்கள்மீது அக்கறை எடுத்துக்கொண்ட ஆசிரியர்; இசை, கணிதம், லத்தீன், பட்டம் விடும் விளையாட்டு போன்ற எந்தத் துறையிலாவது தனக்கிருந்த தீராத நாட்டத்தால் உங்களை உந்துவித்த ஆசிரியர்.”

அநேக ஆசிரியர்கள் நன்றி மடல்களை தங்கள் மாணவர்களிடமிருந்தும், மாணவர்களுடைய பெற்றோர்களிடமிருந்தும் பெற்றுள்ளனர்; ஆகவே என்னதான் இடைஞ்சல்கள் குறுக்கிட்டாலும் அவற்றைக் கண்டுகொள்ளாமல் கற்பிக்கும் பணியைத் தொடர உற்சாகம் பெற்றுள்ளனர் என்பதில் சந்தேகமில்லை. இப்படிப்பட்ட நன்றி மடல்களில் பெரும்பாலானவை மாணவரிடம் ஆசிரியர் காட்டும் உண்மையான அக்கறையையும் கனிவையுமே புகழ்ந்து பாராட்டின.

எல்லா ஆசிரியர்களும் இப்படிப்பட்ட குணங்களைக் காட்டுவதில்லை என்பது உண்மைதான். ஆனால் விரும்புமளவுக்கு மாணவர்களுக்கு உதவி செய்ய விடாமல் தடுக்கும் அநேக பிரச்சினைகள் ஆசிரியர்களுக்கு இருப்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. இதனால், அப்படிப்பட்ட கஷ்டமான ஒரு பணியை மக்கள் ஏன் தேர்ந்தெடுக்கின்றனர் என்ற கேள்வி எழும்புகிறது. (g02 3/8)

[பக்கம் 4-ன் படம்]

“கற்பிப்பதற்கு முதலில் தேவை அன்பே”