ஆசிரியர் பணி தியாகங்களும் அபாயங்களும்
ஆசிரியர்—பணி தியாகங்களும் அபாயங்களும்
“ஆசிரியர்களிடம் ஏராளமாக எதிர்பார்க்கப்படுகிறது; இருந்தாலும் நம் பள்ளிகளில் தங்களையே அர்ப்பணித்திருக்கும் இந்த ஆசிரியர்களின் முயற்சிகளுக்கு பொது மக்களிடமிருந்து . . . மிகக் குறைவாகவே பாராட்டு கிடைக்கிறது.”—கென் எல்டஸ், சிட்னி பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா.
“அத்தியாவசியமான துறை” என அழைக்கப்பட்டுள்ள இப்பணி, அநேக பிரச்சினைகளை—போதாத சம்பளம் முதல் மோசமான வகுப்பறை வரை; எக்கச்சக்கமான பேப்பர் வேலை முதல் வதவதவென பிள்ளைகள் அடைந்திருக்கும் வகுப்புகள் வரை; அவமரியாதை, வன்முறை முதல் பெற்றோரின் அசட்டை மனப்பான்மை வரை அநேக பிரச்சினைகளை—முன்வைக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். இப்பிரச்சினைகளை சில ஆசிரியர்கள் எவ்வாறு சமாளிக்கிறார்கள்?
அவமரியாதை
பெரும் பிரச்சினைகளாக எவற்றைக் கருதுகிறார்கள் என நியூ யார்க் நகரில் நான்கு ஆசிரியர்களைக் கேட்டோம். அவர்கள் அனைவரும் ஒருமனதாக சொன்ன பதில்: “அவமரியாதை.”
ஆப்பிரிக்காவிலும் நிலைமை மாறிவிட்டதாக கென்யாவை சேர்ந்த வில்லியம் இவ்வாறு கருத்து தெரிவித்தார்: “பிள்ளைகள் மத்தியில் ஒழுங்கு குலைந்துகொண்டே வருகிறது. நான் சிறு பிள்ளையாய் இருந்தபோது [இப்போது வயது 40-க்கு மேல்], ஆப்பிரிக்க சமுதாயத்தில் ஆசிரியர்கள் பெரும் மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய நபர்களாக கருதப்பட்டார்கள். சிறியோர் பெரியோர் அனைவரும் எதற்கெடுத்தாலும் ஆசிரியரை இலட்சிய மாதிரியாக பார்த்தனர். அந்த மரியாதை குறைந்து கொண்டே வருகிறது. மேற்கத்திய கலாச்சாரம் மெதுமெதுவாக இளைஞர்மீது செல்வாக்கு செலுத்துகிறது, ஆப்பிரிக்காவின் நாட்டுப்புறங்களிலும் நிலைமை அவ்வாறே உள்ளது. திரைப்படங்கள், வீடியோக்கள், இலக்கியங்கள் அனைத்தும் அதிகாரத்திற்கு அவமரியாதை காட்டுவதை வீரதீர செயலாக சித்தரித்துக் காட்டுகின்றன.”
இத்தாலியில் ஆசிரியராக இருக்கும் ஜூல்யானோ இவ்வாறு புலம்புகிறார்: “சமுதாயம் முழுவதிலும் வியாபித்திருக்கும் கலகத்தனம், அடங்காத்தனம், கீழ்ப்படியாமை ஆகிய மனோபாவங்களால் பிள்ளைகள் பாதிக்கப்படுகின்றனர்.”
போதைப் பொருட்களும் வன்முறையும்
வருத்தகரமாக, பள்ளிகளில் போதைப் பொருட்கள் ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளன—அவை அத்தனை பெரிய பிரச்சினையாக வளர்ந்திருப்பதால் ஐ.மா. ஆசிரியரும் எழுத்தாளருமான லூயன் ஜான்சன் இவ்வாறு எழுதுகிறார்: “கிட்டத்தட்ட எல்லா பள்ளி பாடத்திட்டத்திலும் கே.ஜி. கிளாஸ் முதற்கொண்டே போதைப் பொருள் துஷ்பிரயோகத்தை தடுப்பது ஒரு பாகமாக இருக்கிறது, [நேரெழுத்துக்கள் எங்களுடையவை.] பெரும்பாலான பெரியவர்களுக்குத் தெரிவதைவிட . . . போதைப் பொருட்களைப் பற்றி பிள்ளைகளுக்கு நிறைய தெரிந்துள்ளது.” அவர் மேலும் சொல்கிறார்: “ஆதரவற்றவர்களாய், அன்பு கிடைக்காதவர்களாய், தனிமையில் வாடுபவர்களாய், சலிப்படைந்தவர்களாய், அல்லது பாதுகாப்பற்றவர்களாய் உணரும் மாணவர்களே பெரும்பாலும் போதைப் பொருட்களை முயன்று பார்க்கிறார்கள்.”—இரண்டு பகுதி பாடபுத்தகம், ஒரு பகுதி அன்பு (ஆங்கிலம்).
ஆஸ்திரேலியாவில் ஆசிரியராய் இருக்கும் கென் இவ்வாறு கேட்டார்: “பெற்றோரே பழக்கிவிட்டதால் போதைப் பொருட்களுக்கு அடிமையாகிப் போயிருக்கும் ஒன்பது வயது பிள்ளைக்கு ஆசிரியர்கள் எப்படி பாடம் சொல்லிக் கொடுப்பது?” 30 வயதைத் தாண்டிய மிக்காயெல் ஜெர்மனியிலுள்ள பெரிய பள்ளியொன்றில் ஆசிரியராக பணிபுரிகிறார். அவர் எழுதுகிறார்: “போதைப் பொருட்களின் புழக்கத்தைப் பொறுத்தவரையில், நடப்பது இதுவே என்பதை நாம் நன்கு அறிந்திருக்கிறோம்; ஆனால் எளிதில் இதைக் கண்டுபிடிக்க முடிகிறதில்லை.” ஒழுங்கீனம் பற்றி கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு சொல்கிறார்: “பொதுவாக நாசப்படுத்தும் கிறுக்குத்தனத்தின் மூலம் அது வெளிக்காட்டப்படுகிறது.” மேலும் சொல்கிறார்: “மேஜைகளும் சுவர்களும் அசிங்கமாக்கப்படுகின்றன, பொருட்களெல்லாம் நொறுக்கி நாசமாக்கப்படுகின்றன. கடையைக் கொள்ளையடிப்பது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காக என் மாணவர்களில் சிலர் போலீஸில் சிக்கியுள்ளனர். பள்ளியிலும் அடிக்கடி திருட்டு நடப்பதில் ஆச்சரியமில்லை!”
அமீரா, மெக்ஸிகோவில் குவானஹ்வாட்டோ மாகாணத்தில் ஆசிரியராக இருக்கிறார். அவர் இவ்வாறு ஒப்புக்கொள்கிறார்: “வன்முறை, போதைப் பொருளுக்கு அடிமையாதல் போன்ற பிரச்சினைகள் குடும்பத்தில் உருவாகி பிள்ளைகளை நேரடியாக பாதிக்கின்றன. கெட்ட வார்த்தைகளையும் பிற தீய பழக்கங்களையும் கற்றுக்கொள்வதற்கு ஏற்ற ஒரு சூழலுக்குள் அவர்கள் சிக்கியிருக்கிறார்கள். மற்றொரு பெரிய பிரச்சினை வறுமை. இலவச கல்வி புகட்டப்பட்டாலும், நோட்டுப் புத்தகங்கள், பேனாக்கள், இன்ன பிற பொருட்கள் என அனைத்தையும் பெற்றோர் வாங்கித்தர வேண்டியுள்ளது.
ஆனால் இவற்றையெல்லாம்விட உணவுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்கிறது.”பள்ளியில் துப்பாக்கியா?
ஐக்கிய மாகாணங்களில், பள்ளிகளில் சமீபத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், துப்பாக்கி சம்பந்தப்பட்ட வன்முறை அங்கு ஓர் அற்ப பிரச்சினை அல்ல என்பதை தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளன. ஓர் அறிக்கை சொல்வதாவது: “அந்நாட்டின் 87,125 அரசு பள்ளிகளில் தினமும் 1,35,000 துப்பாக்கிகள் எடுத்துவரப்படுவதாக கணக்கிடப்படுகிறது. பள்ளிகளுக்கு எடுத்துவரப்படும் துப்பாக்கிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக உலோகத்தைப் பிரித்தறியும் கருவிகளையும், கண்காணிப்பு கேமராக்களையும், துப்பாக்கிகளை மோப்பம் பிடிக்க பிரத்தியேகமாக பயிற்றுவிக்கப்பட்ட நாய்களையும், டெஸ்க்குகளை சோதிக்கும் கருவிகளையும், அடையாள அட்டைகளையும், பள்ளிகளில் புத்தகப் பைகளை எடுத்து வருவதற்கு எதிரான தடைகளையும் அதிகாரிகள் பயன்படுத்துகிறார்கள்.” (அமெரிக்காவில் ஆசிரியர் பணி) அப்படிப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒருவரை இவ்வாறு கேட்க வைக்கலாம்: நாம் பேசிக்கொண்டிருப்பது பள்ளிகளைப் பற்றியா அல்லது சிறைகளைப் பற்றியா? பள்ளிக்கு துப்பாக்கிகளை எடுத்து வந்ததால் 6,000-க்கும் அதிகமான மாணவர்கள் பள்ளியை விட்டு நீக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை சொல்கிறது!
நியூ யார்க் நகரில் ஆசிரியராய் உள்ள ஐரஸ் விழித்தெழு!-விடம் கூறினதாவது: “மாணவர்கள் பள்ளிகளுக்கு ஆயுதங்களைத் திருட்டுத்தனமாக எடுத்து வருகிறார்கள். உலோகத்தைப் பிரித்தறியும் கருவிகளால் அந்த ஆயுதங்களை தடுக்க முடிவதில்லை. பள்ளியில் நாசவேலை மற்றொரு பெரிய பிரச்சினையாக உள்ளது.”
இந்த அராஜக சூழ்நிலையிலும், மனசாட்சிக்குப் பயந்த ஆசிரியர்கள் கல்வியையும் மதிப்பீடுகளையும் புகட்டுவதற்கு கடினமாய் உழைக்கின்றனர். அநேக ஆசிரியர்கள் உடல், மன ரீதியில் அதிக சோர்வுறுகின்றனர். ஜெர்மனியில் த்யுரிஞ்சீயா நகரில் ஆசிரியர் சங்க தலைவராக உள்ள ரால்ஃப் புஷ் கூறினதாவது: “ஜெர்மனியிலுள்ள பத்து லட்சம் ஆசிரியர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் வேலை பளு தாங்காமல் சுகவீனமடைகின்றனர். அவர்கள் வேலை பார்க்க முடியாமல் தளர்ந்துவிடுகின்றனர்.”
பிள்ளைகளுக்குப் பிள்ளைகள்
மற்றொரு பெரிய பிரச்சினை, பருவ வயது பாலுறவு. அமெரிக்காவில் ஆசிரியர் பணி புத்தகத்தின் எழுத்தாளர் ஜார்ஜ் எஸ். மாரிஸன் அந்நாட்டைப் பற்றி சொல்கிறார்: “சுமார் பத்து லட்சம் டீனேஜர்கள் (15 முதல் 19 வயது பெண்களில் 11 சதவீதத்தினர்) ஒவ்வொரு வருடமும் கர்ப்பமடைகின்றனர்.” வளர்ச்சியடைந்த நாடுகள் எல்லாவற்றையும்விட அமெரிக்க ஐக்கிய மாகாணங்களிலேயே டீனேஜில் கர்ப்பம் தரிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இந்த சூழ்நிலையை ஐரஸ் ஆமோதிக்கிறார்; அவர் சொல்வதாவது: “பருவ வயதினரின் பேச்செல்லாம் செக்ஸ் பற்றியும் பார்ட்டிகள் பற்றியும்தான். அந்த எண்ணமே அவர்களை ஆக்கிரமித்திருக்கிறது. அதுவும் இப்பொழுதெல்லாம் பள்ளிகளிலுள்ள கம்ப்யூட்டர்களிலேயே இன்டர்நெட் வேறு இருக்கிறதே! அதனால், சாட் குரூப்களும் ஆபாசமும் மலிந்திருக்கின்றன.” ஸ்பெய்ன், மாட்ரிட்டிலுள்ள ஆன்ஞ்சால் இவ்வாறு அறிக்கை செய்தார்: “மாணவர்களிடையே கட்டுப்பாடற்ற செக்ஸ் விளையாட்டு சகஜமாகிவிட்டது. இளம் வயதிலேயே மாணவிகள் கர்ப்பமுற்ற பதிவுகள் எங்களிடம் இருந்திருக்கின்றன.”
“ஹை-கிளாஸ் ஆயாக்கள்”
சில ஆசிரியர்களின் மற்றொரு புலம்பல் என்னவெனில், அநேக பெற்றோர், வீட்டில் பிள்ளைகளுக்கு கல்வி புகட்டும் தங்கள் பொறுப்பை சரிவர செய்வதில்லை. பிள்ளைகளுக்கு முதன்முதல் கல்வி கற்பிக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருப்பதாகவே ஆசிரியர்கள் உணருகின்றனர். நல்ல பழக்க வழக்கங்களையும் பண்புகளையும் வீட்டிலேயே கற்றுக்கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். “ஆசிரியர்களை . . . பெரும்பாலும் மற்ற உத்தியோகத்தில் இருப்பவர்களைப் போலவே பாவிக்க வேண்டும்; ஹை-கிளாஸ் ஆயாக்களாக பாவிக்கக்கூடாது” என அமெரிக்க ஆசிரியர் சங்க தலைவரான சன்ட்ரா ஃபெல்ட்மன் கூறியதில் சிறிதும் ஆச்சரியமில்லை.
பிள்ளைகள் பள்ளியில் கண்டிக்கப்படுகையில் அதற்கு ஆதரவு தர பெற்றோர் அடிக்கடி தவறுகின்றனர். முந்தின கட்டுரையில் குறிப்பிடப்பட்ட லீமரீஸ் விழித்தெழு!-விடம் கூறினார்: “தப்பு செய்கிற பிள்ளைகளைப் பற்றி தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தால், அடுத்து என்ன நடக்கும் தெரியுமா, நம்மை ஒரு கை பார்த்துவிடுவர் பெற்றோர்!” அடங்காத மாணவர்களை சமாளிப்பது பற்றி முன்பு குறிப்பிடப்பட்ட புஷ் கூறினதாவது: “பிள்ளைகள் வீட்டில் ஒழுங்கான முறையில் வளர்க்கப்பட்டு வந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. வீட்டில் பெரும்பாலான பிள்ளைகள் சிறந்த முறையில் சரிவர வளர்க்கப்படுகிறார்கள் என இனியும் நினைக்க முடியாது.” அர்ஜன்டினாவிலுள்ள மெண்டோஸாவைச் சேர்ந்த எஸ்டேலா சொன்னார்: “ஆசிரியர்களாகிய எங்களுக்கு மாணவர்களைக் கண்டாலே பயம்.
பரீட்சையில் நாங்கள் மதிப்பெண்களை குறைத்துவிட்டால் போதும், எங்கள்மீது கல்லெறிவார்கள், அல்லது வேறு ஏதாவது விதத்தில் தாக்குவார்கள். எங்களிடம் கார் இருந்தால், அதை அடித்து நொறுக்கி விடுவார்கள்.”அநேக நாடுகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதில் ஆச்சரியம் இருக்கிறதா என்ன? நியூ யார்க்கில் கார்னகி கார்ப்பரேஷனின் தலைவர் வார்ட்டன் கிரகோரியன் எச்சரித்ததாவது: “அடுத்த பத்தாண்டில் எங்கள் [ஐ.மா.] பள்ளிகளில் சுமார் 25 லட்சம் புதிய ஆசிரியர்கள் தேவைப்படுவர்.” “ஐ.மா.-விலுள்ள பெருநகரங்கள், இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள், தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளிலிருந்தும் நல்ல ஆசிரியர்கள் காணப்படும் இன்னும் பிற நாடுகளிலிருந்தும் ஆசிரியர்களை ஆவலுடன் நாடுகின்றன.” அதனால் அந்நாடுகளிலும் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படத்தான் செய்யும் என்பதை மறுக்க முடியாது.
ஏன் ஆசிரியர் பற்றாக்குறை?
ஆசிரியராக 32 வருட அனுபவமுள்ள ஜப்பானிய பள்ளி ஆசிரியர் யோஷீனோரீ, “கல்வி கற்பிப்பது என்பது நல்லெண்ணத்துடன் கூடிய ஓர் உன்னத செயல், ஜப்பானிய சமுதாயத்தில் அதற்கு பெருமதிப்பு உண்டு” என கூறினார். இது எல்லா கலாச்சாரத்திலும் அப்படி கருதப்படுவதில்லை என்பது வருந்தத்தக்கது. ஆசிரியர்களின் “உத்தியோகத்திற்குத் தக்க மதிப்பு, மரியாதை, சம்பளம் கொடுக்கப்படுவதில்லை. . . . பெரும்பாலான [அமெரிக்க] மாகாணங்களில், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு தேவைப்படும் மற்றெந்த பணியையும்விட ஆசிரியர் பணிக்கு குறைந்த சம்பளமே வழங்கப்படுகிறது” என்றும் முன்பு குறிப்பிடப்பட்ட கிரகோரியன் சொன்னார்.
ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட கென் எல்டஸ் எழுதினார்: “ஆசிரியர் பணிக்குத் தேவையானதைவிட குறைந்த தகுதிகளே தேவைப்படுகின்ற வேலையிலுள்ளவர்களுக்கு, அதிக சம்பளம் வழங்கப்படுவதை ஆசிரியர்கள் அறிய வருகையில் என்ன நடக்கிறது? அல்லது பன்னிரண்டு மாதங்களுக்கு முன்பு அவர்கள் கற்பித்திருக்கும் மாணவர்களே . . . அவர்களைவிட அதிகம் சம்பாதிக்கையிலோ, இல்லையெனில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சம்பாதிக்கப் போவதாக தெரிந்தாலோ என்ன நடக்கிறது? அவ்வாறு தெரிய வருகையில் அது ஓர் ஆசிரியரின் சுயமதிப்புக்கு அச்சுறுத்தலாகவே அமையும்.”
வில்லியம் ஏயர்ஸ் எழுதினார்: “ஆசிரியர்களுக்கு வெகு குறைந்த சம்பளமே வழங்கப்படுகிறது. . . . சராசரியாக வழக்கறிஞர்களுக்கு
தரப்படும் சம்பளத்தில் கால்வாசியும், கணக்கர்களுக்கு தரப்படும் சம்பளத்தில் அரைவாசியும், லாரி ஓட்டுநர்களுக்கும் கப்பல் கட்டும் துறைமுகப் பணியாளர்களுக்கும் கொடுக்கப்படும் சம்பளத்தைவிட மிகக் குறைவானதுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. . . . ஆசிரியர் பணியைத் தவிர வேறெந்தப் பணியிலும் இந்தளவுக்கு அதிக வேலையை வாங்கிக்கொண்டு, அதே சமயத்தில் சொற்ப சம்பளத்தைத் தருவதில்லை.” (கற்பிக்க—ஓர் ஆசிரியரின் பயணம்) அதே விஷயத்தைப் பற்றி முன்னாள் ஐ.மா. அரசு தலைமை வழக்குரைஞர் ஜேனட் ரீனோ நவம்பர் 2000-ல் சொன்னார்: “மனிதரை சந்திரனுக்கு நம்மால் அனுப்ப முடிகிறது. . . . விளையாட்டு வீரர்களுக்கு ஏகப்பட்ட பணத்தை சம்பளமாக கொடுக்கிறோம். நம் ஆசிரியர்களுக்குப் பணம் தர நம்மால் ஏன் முடியாது?”“பொதுவாக ஆசிரியர்களுக்கு குறைந்த சம்பளமே வழங்கப்படுகிறது” என லீமரீஸ் சொன்னார். “நியூ யார்க் நகரில் வேலை பார்க்கும் நான், வருடக்கணக்கில் படித்தும், மிகக் குறைந்த பணத்தையே வருட சம்பளமாக வாங்குகிறேன்; பெருநகருக்கே உரிய அழுத்தத்தின் மத்தியில் காலமெல்லாம் ஓடி ஓடி உழைத்தும் இந்த நிலை.” ரஷ்யாவில் செ. பீட்டர்ஸ்பர்க்கைச் சேர்ந்த டீச்சரான வாலன்டீனா சொன்னார்: “வருமானத்தைப் பொறுத்தவரையில் ஆசிரியர் வேலைக்கு மதிப்பே இல்லை. வழக்கமான குறைந்தபட்ச சம்பளத்தைவிடவும் குறைவான சம்பளத்தையே எப்பொழுதும் அவர்கள் வாங்கியிருக்கிறார்கள்.” அர்ஜன்டினாவில் சூபட்டைச் சேர்ந்த மார்லீனும் இதே மனோபாவத்தை வெளிக்காட்டுகிறார்கள்: “குறைந்த சம்பளம் காரணமாக இரண்டு மூன்று இடங்களில் ஓடி ஓடி வேலை பார்க்க வேண்டியிருக்கிறது. இது எங்கள் கற்பிக்கும் திறனைக் குறைத்துவிடுகிறது.” கென்யாவிலுள்ள நைரோபியைச் சேர்ந்த ஆர்தர் விழித்தெழு!-விடம் கூறினதாவது: “பொருளாதாரம் சரிந்து வருகையில், ஓர் ஆசிரியராக என் வேலை எளிதானதாக இல்லை. குறைந்த சம்பளம் காரணமாக ஆசிரியர் வேலைக்கு வர எப்போதும் ஆட்கள் தயங்கியிருப்பதை எல்லா ஆசிரியர்களும் ஒப்புக்கொள்வார்கள்.”
ஆசிரியர்களின் அதிகப்படியான நேரத்தை உறிஞ்சிக்கொள்ளும் எக்கச்சக்கமான பேப்பர் வேலையைப் பற்றி நியூ யார்க் நகரில் ஆசிரியராக இருக்கும் டையனா புலம்பினார். மற்றொரு ஆசிரியர் எழுதினார்: “இயந்திரத்தனமாய் செய்ததையே திரும்பத் திரும்ப செய்வதிலேயே ஒரு நாளின் பெரும்பகுதி கழிகிறது.” பொதுவான புகார் ஒன்று, “நாள் முழுக்க எக்கச்சக்கமான படிவங்களை, அதுவும் நடைமுறைக்கு ஒத்து வராத படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டியது” பற்றித்தான்.
போதாத ஆசிரியர்கள், குறையாத மாணவர்கள்
ஜெர்மனி, ட்யூயீரனைச் சேர்ந்த பெர்டால்ட் மற்றொரு வழக்கமான புகாரை குறிப்பிட்டார்: “வகுப்புகள் ரொம்ப பெரிதாக இருக்கின்றன. இங்குள்ள வகுப்புகள் சிலவற்றில் 34 மாணவர்கள் வரை இருக்கிறார்கள். இதனால் பிரச்சினைகளிருக்கும் மாணவர்களிடம் எங்களால் கவனம் செலுத்த முடிவதில்லை. அவர்கள் கவனிக்கப்படாமல் விடப்படுகிறார்கள். தனிநபரின் தேவைகள் எல்லாம் ஓரங்கட்டப்படுகின்றன.”
முன்பு குறிப்பிட்ட லீமரீஸ் விவரித்ததாவது: “கடந்த வருடம், அசட்டையான பெற்றோர்களை சமாளிக்க வேண்டியதோடு, வகுப்பில் 35 பிள்ளைகளை சமாளிக்க வேண்டியதுதான் நான் எதிர்ப்பட்ட மிகப் பெரிய பிரச்சினை. ஆறு வயதே நிரம்பிய 35 பிள்ளைகளுடன் மாரடிப்பதை கற்பனை செய்து பாருங்கள்!”
ஐரஸ் சொன்னார்: “நியூ யார்க்கில் ஆசிரியர்கள் பற்றாக்குறை; குறிப்பாக தேவைப்படுவோர் கணக்கு, அறிவியல் ஆசிரியர்கள். ஆனால் இப்படிப்பு படித்தவர்களுக்கு இதைவிட நல்ல வேலை கிடைக்கும். ஆகவே இந்நகரில் வெளி நாடுகளிலிருந்து வந்திருக்கும் ஆசிரியர்கள் அநேகர் வேலை பார்க்கிறார்கள்.”
இதிலிருந்து, ஆசிரியர் பணி கஷ்டமான வேலை என்று நன்றாக தெரிகிறது. அப்படியென்றால் ஆசிரியர்களை உந்துவிப்பது எது? அவர்கள் விடாப்பிடியாக இப்பணியைத் தொடருவது ஏன்? இக்கேள்விகளை எமது கடைசி கட்டுரை எடுத்துரைக்கும். (g02 3/8)
[பக்கம் 9-ன் சிறு குறிப்பு]
ஐ.மா. பள்ளிகளில் ஒவ்வொரு நாளும் 1,35,000 துப்பாக்கிகள் எடுத்துவரப்படுவதாக கணக்கிடப்படுகிறது
[பக்கம் 10-ன் பெட்டி/படம்]
ஆசிரியரது வெற்றியின் இரகசியம் என்ன?
சிறந்த ஆசிரியர் என்று நீங்கள் எதை வைத்து சொல்வீர்கள்? கற்ற விஷயங்களை ஞாபகத்தில் வைத்து நன்றாக பரீட்சை எழுதி மதிப்பெண்களைத் தட்டிச்செல்ல மாணவருக்கு உதவும் ஒரு நபரையா? அல்லது கேள்விகள் கேட்கவும், சிந்திக்கவும், நியாயப்படுத்திப் பார்க்கவும் கற்றுக்கொள்ள உதவும் ஒரு நபரையா? ஒரு சிறந்த பிரஜையாக தலைதூக்க ஒரு பிள்ளைக்கு உதவுவது யார்?
“மாணவர்களின் நீண்ட சிக்கலான வாழ்க்கை பயணத்தில் ஆசிரியர்களாகிய நாங்கள் அவர்களுடைய பார்ட்னர்கள் என்பதை புரிந்துகொள்ளும்போதும்; அவர்களையும் ஒரு பொருட்டாக நினைத்து மதிப்பு, மரியாதையுடன் நாங்கள் அவர்களை நடத்த ஆரம்பிக்கும்போதும்; சிறந்த ஆசிரியர்களாக ஆகும் பாதையில் நாங்கள் நடக்கிறோம் என்று சொல்லலாம். இது மிகவும் எளிதானதாய் தோன்றலாம்; ஆனால் மிகக் கஷ்டமானது.”—கற்பிக்க—ஓர் ஆசிரியரின் பயணம்.
ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் பொதிந்திருக்கும் திறமையையும் ஒரு சிறந்த ஆசிரியர் புரிந்துகொள்கிறார்; அத்திறமை அரும்பு விட்டு மலருவதற்கு என்ன செய்ய வேண்டுமென்றும் அவருக்குத் தெரியும். வில்லியம் ஏயர்ஸ் குறிப்பிட்டார்: “பலங்கள், அனுபவங்கள், திறமைகள், . . . அனைத்தையும் வளர்க்கும் சிறந்ததோர் வழியை நாம் கண்டுபிடிக்க வேண்டும். அமெரிக்க இந்திய தாய் ஒருவரின் ஐந்து வயது மகன் ‘மக்கு’ என்று பட்டம் சூட்டப்பட்டிருந்தபோது, அவர் என்னிடம் மன்றாடியது என் நினைவுக்கு வருகிறது: ‘விண்ட் வுல்ஃப்புக்கு நாற்பதுக்கும் அதிகமான பறவைகளின் பெயர்களும் அவை இடப்பெயர்ச்சி செய்யும் விதங்களும் நன்றாக தெரியும். விண்ணில் சிறகடிக்காமல் மிதக்கும் கழுகினுடைய வால் பகுதி சிறகுகளில் பதிமூன்று இறகுகள் இருப்பது அவனுக்குத் தெரியும். அவனுக்குத் தேவை, அவனுடைய முழு திறமையைப் புரிந்திருக்கும் ஓர் ஆசிரியரே.’”
ஒவ்வொரு பிள்ளையிடமும் உள்ள திறமையை மிளிர வைக்க வேண்டுமானால், அவன் அல்லது அவளுக்கு ஆர்வமூட்டுவது எது, அவன் அல்லது அவளை உந்துவிப்பது எது, குறிப்பிட்ட வகையில் அவன் அல்லது அவளை சிந்திக்கவும் செயல்படவும் தூண்டுவது எது என்பதையெல்லாம் ஆசிரியர் கண்டுபிடிக்க வேண்டும். தன்னையே அர்ப்பணித்திருக்கும் ஆசிரியர் பிள்ளைகளை நேசிக்க வேண்டும்.
[படத்திற்கான நன்றி]
United Nations/Photo by Saw Lwin
[பக்கம் 11-ன் பெட்டி]
வேடிக்கையாகவே எப்போதும் பாடம் நடத்த வேண்டுமா?
ஆசிரியராக இருக்கும் வில்லியம் ஏயர்ஸ் ஆசிரியர் பணியைப் பற்றி தவறான பத்து கருத்துக்களடங்கிய ஒரு பட்டியலை உருவாக்கினார். அவற்றில் ஒன்று: “வேடிக்கையாக பாடம் நடத்துபவர்களே சிறந்த ஆசிரியர்கள் ஆவர்.” அவர் தொடர்ந்து சொல்கிறார்: “வேடிக்கை கவனத்தை சிதறடிக்கிறது, சிரிப்பூட்டுகிறது. கோமாளிகள் வேடிக்கையானவர்கள். ஜோக்குகள் வேடிக்கையானவை. ஆனால் படிப்போ, முழுமையாக ஈடுபடுத்துவதாக, மூழ்கச் செய்வதாக, ஆச்சரியமூட்டுவதாக, குழப்பமூட்டுவதாக, ஈர்த்து விடுவதாக, பெரும்பாலும் பேரின்பம் தருவதாக இருக்கலாம். வேடிக்கையாக பாடம் நடத்துவது நல்லதுதான். ஆனால் வேடிக்கையாகத்தான் பாடம் நடத்த வேண்டுமென்ற கட்டாயமில்லை.” அவர் மேலும் சொல்கிறார்: “கற்பிப்பதற்கு, அறிவு, பலம், திறமை, பகுத்துணர்வு, புரிந்துகொள்ளுதல் ஆகியவை அனைத்தும் பெருமளவு தேவை; இவற்றையெல்லாம்விட, யோசனையுள்ளவரும் கரிசனை காட்டுபவருமான ஒரு நபர் முக்கியமாக தேவை.”—கற்பிக்க—ஓர் ஆசிரியரின் பயணம்.
ஜப்பானைச் சேர்ந்த நாகோயா நகரிலுள்ள சூமீயோ, மாணவர்களின் மத்தியில் இந்தப் பிரச்சினை இருப்பதை காண்கிறார்: “அநேக உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, விளையாட்டாக இருப்பதையும் அதிக முயற்சி எடுக்காமல் இருப்பதையும் தவிர வேறு எதிலும் அக்கறை இருப்பதில்லை.”
நியூ யார்க், புரூக்ளினில் மாணவர் ஆலோசகராய் இருக்கும் ரோஸா கூறினதாவது: “கற்பதே சலிப்பூட்டும் ஒன்று என பொதுவாக மாணவர்கள் நினைக்கிறார்கள். ஆசிரியரைக் கண்டாலே சலிப்பு. எதிலும் வேடிக்கை வேண்டுமென்பது அவர்கள் நினைப்பு. படிப்பை பொறுத்தவரை, நாம் எந்தளவுக்கு உழைக்கிறோமோ அந்தளவுக்கு நமக்கு பலன் கிடைக்கும் என்பதை அவர்கள் உணரத் தவறுகின்றனர்.”
எதற்கெடுத்தாலும் வேடிக்கை என்ற மனோபாவம் முயற்சியையும் தியாகங்களையும் செய்யவிடாமல் இளைஞரை தடுக்கிறது. மேலே குறிப்பிடப்பட்ட சூமியோ சொன்னார்: “நீண்ட கால கண்ணோட்டத்தில் அவர்கள் காரியங்களைப் பார்க்க முடியாமல் போவதுதான் முக்கியமான விஷயம். இப்பொழுது கஷ்டப்பட்டு படித்தால் பிற்காலத்தில் நல்ல பலன் கிடைக்கும் என்று நினைக்கும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மிகக் குறைவு.”
[பக்கம் 7-ன் படம்]
டையனா, அ.ஐ.மா.
[பக்கம் 8-ன் படம்]
‘போதைப் பொருள் எங்கும் பயன்படுத்தப்படுகிறது; ஆனால் எளிதில் கண்டுபிடிக்க முடிகிறதில்லை.’—மிக்காயேல், ஜெர்மனி
[பக்கம் 8, 9-ன் படம்]
“வன்முறை, போதைப் பொருளுக்கு அடிமையாதல் போன்ற பிரச்சினைகள் குடும்பத்தில் உருவாகின்றன.”—அமீரா, மெக்ஸிகோ
[பக்கம் 9-ன் படம்]
“ஆசிரியர்களை . . . பெரும்பாலும் மற்ற உத்தியோகத்தில் இருப்பவர்களைப் போலவே பாவிக்க வேண்டும்; ஹை-கிளாஸ் ஆயாக்களாக பாவிக்கக்கூடாது.”—சன்ட்ரா ஃபெல்ட்மன், அமெரிக்க ஆசிரியர் சங்க தலைவர்