Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

தேன்கூட்டில்—ஆயுள் தண்டனை

“தேவையற்ற விருந்தாளிகளை சமாளிப்பதற்கு ஆப்பிரிக்க தேனீக்கள் நூதனமான ஆனால் அதிக பலன் தரத்தக்க உபாயத்தை கண்டுபிடித்துள்ளன” என்கிறது நியூ ஸயன்டிஸ்ட் பத்திரிகை. “தங்கள் தேன்கூடுகளுக்கு உள்ளே அவற்றை சிறை வைத்து விடுகின்றன. இவ்வாறு தண்டனையளிக்கும் உத்தியால் ஒட்டுயிரிகள் வருவதும் கட்டுப்படுகிறது, தேவைப்பட்டால், தப்பித்து செல்வதற்கான நேரமும் இந்தத் தேனீ கூட்டத்திற்கு கிடைக்கிறது.” “தென் ஆப்பிரிக்காவிலுள்ள தேனீக்கள், ஒரு தேனீயில் பாதியளவே உள்ள சிறிய தேன்கூட்டு வண்டாகிய ஏத்தினா டூமிடாவிடமிருந்து எப்படி தங்களை காத்துக்கொள்கின்றன என்று ஆராய்ந்தனர்” ஆராய்ச்சியாளர்கள். அந்த வண்டு பார்க்க “ஒரு பீரங்கி வண்டி போல் இருக்கிறது” என்று விளக்குகிறார், ஆய்வாளர்களில் ஒருவரான பேடர் நாய்மான். எனவே, தேனீக்களின் பாதுகாப்புக்கு ஒரே வழி, வண்டை சிறைப்படுத்தி வைப்பதே. “சில தேனீக்கள் சிறையைக் கட்டும் பணியில் ஈடுபடுகையில், மற்றவை வண்டுகளை தப்பவிடாமல் காவல் காக்கின்றன” என நாய்மான் விவரிக்கிறார். அதைக் கட்டுவதற்கான மூல பொருளாகிய மரப்பிசினை தேனீக்கள் சேகரிக்கின்றன; கட்டுமான பணி நான்கு நாட்கள்வரை தொடரும். வட அமெரிக்க தேனீக்கள் உட்பட ஐரோப்பாவை பிறப்பிடமாக கொண்ட தேனீக்களுக்கோ இப்படி செயல்படும் உத்தி தெரியாது. ஆகவே ஐந்து வருடங்களுக்கு முன் ஐக்கிய மாகாணங்களுக்குள் தற்செயலாக அறிமுகமான இந்த வண்டு, இவற்றின் கூட்டினுள் நுழையும்போது அந்தத் தேன்கூடு “அழிவையே சந்திக்கிறது.” (g02 2/22)

தூய்மைக்கேட்டை உணரும் விலங்குகள்

காற்று மற்றும் நிலத்தின் தூய்மைக்கேட்டை அளவிடுவதற்கு சிறந்த உயிரிகள் மண்புழுக்கள் என்கிறார் விலங்கியலர் ஸ்டீவ் ஹாப்கன். ஏராளமாகவும் மலிந்தும் கிடைக்கும் இந்த சாதாரண ஜந்துக்கள் சிக்கல்வாய்ந்த செயற்கை கருவிகளைவிட சிறப்பாக செயல்படுகின்றன. நீரின் தரத்தை அளவிட, சாதாரண மஸல் பயன்படுகிறது. மஸல் அளவிடும் கருவி​—⁠உயிருடன் எட்டு மஸல்களை கொண்டுள்ள, ஒரு வாளியின் அளவுள்ள கருவி​—⁠ரைன் மற்றும் டான்யூப் ஆறுகளில் தூய்மைக்கேட்டை அளவிட பயனுள்ளதாக ஏற்கெனவே நிரூபித்துள்ளது. “மாசுப்பொருளின் அடர்த்தி திடீரென்று அதிகரித்தால், மஸல்கள் அதை கண்டுபிடித்துவிடுகின்றன” என்றார் அந்த கருவியை வடிவமைத்த கீஸ் க்ரேமர். மாசுபடுத்தும் ஆயிரக்கணக்கான வேதியியல் பொருள்களை உணர்ந்ததும் மஸல்கள் தங்கள் ஓடுகளை மூடிக்கொள்கின்றன. அப்போது மஸல் அளவிடும் கருவியிலுள்ள அலாரம் ஒலி எழுப்புகிறது. உயிரினங்கள்மீது தூய்மைக்கேட்டின் பாதிப்பை அளவிட முடிவதே இந்த அளவிடும் கருவிகளின் பயன் என்று ஸ்பெய்னின் எல் பாயிஸ் அறிக்கை செய்கிறது. (g02 2/22)

இளம் குடிகாரர்கள்

“ஐரோப்பாவிலுள்ள இளைஞர்கள் மிக இள வயதிலேயே, மிகவும் அடிக்கடி குடிபோதைக்கு உள்ளாகி வருகிறார்கள்” என்பதாக ஜெர்மானிய செய்தித்தாள் ஸுயட்டாய்ச்ச ட்ஸைடுங் அறிக்கை செய்கிறது. இந்த அதிர்ச்சியூட்டும் போக்கு சமீபத்தில் ஐரோப்பிய இணையத்தின் சுகாதார அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்தப் பிரச்சினை எவ்வளவு மோசமானதாக உள்ளது? உதாரணமாக, சில நாடுகளில் 15 வயது பையன்களில் 40-லிருந்து 50 சதவீதத்தினர் தவறாமல் பீர் அருந்துகின்றனர் என்றும் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் ஆகிய இடங்களில் ஒய்ன் மற்றும் மதுபானங்களை அருந்துவதில் அதே வயது பெண் பிள்ளைகள் பையன்களையும் மிஞ்சிவிடுகிறார்கள் என்றும் 1998 ஆய்வு ஒன்று காண்பித்தது. டென்மார்க், பின்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளில் 15 வயது இளைஞரில் பாதிக்கும் அதிகமானோர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை குடிபோதையில் முற்றிலுமாக மயங்கியவர்கள். ஒவ்வொரு வருடமும் ஐரோப்பிய இணையத்தில் 15-லிருந்து 29 வயதுக்குட்பட்டோரில் பல்லாயிரக்கணக்கானோரின் மரணத்துக்கும் மதுபானம் காரணமாக இருக்கிறது. குடியின் பாதிப்புகளைப் பற்றி இளைஞருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மதுபான கல்வி அளிக்கும்படி அந்த அமைச்சர் பேரவை பரிந்துரை செய்திருக்கிறது. (g02 2/8)

புகைப்பதால் மரணம் பொருளாதாரத்துக்கு லாபமா?

“புகைப்பவர்களுக்கு ஏற்படும் அகால மரணம் மருத்துவ செலவுகளை சரிக்கட்ட உதவுகிறது . . . என்ற முடிவுக்கு வரும் பொருளாதார ஆய்வு கட்டுரை ஒன்றை செக் குடியரசில் ஃபிலிப் மாரிஸ் கம்பெனிகளின் அதிகாரிகள் விநியோகித்திருக்கின்றனர்” என்கிறது த வால் ஸ்ட்ரீட் ஜர்னல். “அந்த சிகரெட் தயாரிப்பு நிறுவனத்தாரால் அளிக்கப்பட்ட இந்த அறிக்கை . . . , தேசிய பொருளாதாரத்தில் புகைத்தலின் ‘நன்மையான விளைவுகளையும்’ உட்படுத்துகிறது; சிகரெட்கள் மீதான உள்நாட்டு பொருள் வரி மற்றும் இதர வரிகளால் கிடைக்கும் வருவாயுடன் ‘அகால மரணத்தால் மிச்சமாகும் உடல்நல பராமரிப்பு செலவுகளையும் சேர்க்கிறது.’” அந்தக் கட்டுரை மேலுமாக சொல்கிறது: “பலாபலன்களை சீர்தூக்கிப் பார்க்கையில், 1999-⁠ல் புகைத்தலின் காரணமாக அரசுக்கு 1,471 லட்சம் டாலர் (5.82 பில்லியன் கொரூனா) நிகர லாபமாக வந்து சேர்ந்ததாக அந்த அறிக்கை இறுதியாக தெரிவிக்கிறது.” இந்த அறிக்கைக்கு எதிர்ப்புக்குரல் தாமதமின்றி எழுந்தது. “சிகரெட் மக்களை கொல்வதை புகையிலை நிறுவனங்கள் எப்போதுமே ஏற்க மறுத்தன. இப்போதோ அதைக் குறித்து பெருமைப்பட்டுக் கொள்கின்றன” என்று பத்தி எழுத்தாளர் ஒருவர் எழுதினார். பொருளியலாளர் கென்னத் வார்னர் சொன்னார்: “வாடிக்கையாளர்களை கொன்று அரசு கருவூலத்துக்கு நிதி திரட்டுவதாக பெருமையடித்துக் கொள்ளும் நிறுவனம் வேறு ஏதாவது இருக்கிறதா? என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.” அதற்கடுத்த வாரமே ஃபிலிப் மாரிஸ் மன்னிப்பு கோரியது. “இது ஒரு பயங்கரமான பிழை மட்டுமல்ல, பெருந்தவறு என்பதை நாங்கள் உணர்கிறோம்” என்றார் மூத்த துணை தலைவர் ஸ்டீவன் சி. பாரிஷ். “இது முற்றிலும் பொருத்தமற்றது என்று சொன்னால் மிகையாகாது” என்றார். (g02 2/8)

பொருளாசையை குறைக்க பிள்ளைகளுக்கு உதவுதல்

இளம் பிள்ளைகள்கூட “வெறிபிடித்து அலையும் நுகர்வோராக” மாறிவருகின்றனர்; ஆக பிள்ளைகளே “ஒரு வியாபாரியின் இலட்சிய கனவு” என அறிக்கை செய்கிறது கனடாவின் செய்தித்தாளான க்ளோப் அண்ட் மெய்ல். மேலும் “இந்தப் போக்கை தடுத்து நிறுத்த முனைகையில் எதுவுமே பலனளிக்கவில்லை.” என்றாலும், ஸ்டான்ஃபோர்ட் மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் குழுவொன்று இதற்கு தீர்வு கண்டுவிட்டதாக நினைக்கிறது. அதுவே, டிவி பார்ப்பதை குறைக்கவும் நிகழ்ச்சிகளை கவனமாக தெரிந்தெடுத்துப் பார்க்கவும் பிள்ளைகளுக்கு உதவும் நோக்குடன் தயாரிக்கப்பட்ட ஆறு மாத பாடத்திட்டம். பள்ளி படிப்பு வருடம் முடியும்போது, இந்தத் திட்டத்தில் பங்கெடுத்த பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடம் புதிய விளையாட்டு சாமான்களை கேட்கும் மனநிலை மிகவும் குறைந்திருக்கும். க்ளோப் சொல்லுகிறபடி, “1970-களில் ஒரு சராசரி பிள்ளை ஒரு வருடத்தில் 20,000 விளம்பரங்களை பார்த்தது; ஆனால் இப்போதோ அந்த எண்ணிக்கை வருடத்துக்கு 40,000-ஆக உயர்ந்துள்ளது.” (g02 2/8)

பைபிள் மொழிபெயர்ப்பில் புதிய சாதனை

“முழுமையாகவோ பகுதியாகவோ, பைபிள் இன்று மொத்தம் 2,261 மொழிகளில் கிடைக்கிறது; 12 மாதங்களுக்கு முன் இருந்ததைவிட 28 மொழிகள் அதிகம்” என்பதாக பிரிட்டனின் பைபிள் சொஸைட்டி அறிக்கை செய்கிறது. “[பைபிள்] முழுமையாக தற்போது 383 மொழிகளில் கிடைக்கிறது; கடந்த வருடத்தைவிட 13 மொழிகள் அதிகம்.” பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்றும் அழைக்கப்படும் எபிரெய வேதாகமம் அல்லது கிரேக்க வேதாகமத்தின் முழு தொகுப்புகளும் தற்போது 987 மொழிகளில் கிடைக்கின்றன. (g02 2/22)

இரத்தமேற்றுதலின் அபாயங்கள்

“[நியூ சவுத் வேல்ஸ்] உடல்நல ஆலோசனை குறிப்புகளின்படி இரத்தமேற்றுதல் அவசியப்படாத சூழ்நிலையில் மூவரில் ஒருவருக்கு இரத்தமேற்றப்பட்டது” என அறிக்கை செய்கிறது ஆஸ்திரேலியாவின் சிட்னி மார்னிங் ஹெரால்ட். “அந்த ஆலோசனை குறிப்புகளின்படி நோயாளியின் ஹீமோகுளோபின் அளவு ஏழு அல்லது அதற்கும் குறைவாக இருந்தால்தான் இரத்தமேற்றப்பட வேண்டும்.” “தேவையின்றி இரத்தமேற்றுதல் இதய துடிப்பு நின்றுவிட காரணமாகி நோயாளியையே கொன்றுவிடலாம்” என்று இரத்தம் பயன்படுத்தப்படுவது பற்றி ஆய்வு நடத்திய டாக்டர் ராஸ் வில்சன் விளக்கினார். ஆறு வருடங்களுக்குமுன் டாக்டர் வில்சன் நடத்திய ஆய்வின்படி, “ஒவ்வொரு வருடமும் சுமார் 18,000 [ஆஸ்திரேலியர்கள்], தாங்கள் பெற்ற மருத்துவ சிகிச்சையின் நேரடி விளைவால் ஏற்பட்ட வேறு சிக்கலான பிரச்சினைகளால் மரணமடைந்தனர்.” இரத்தமேற்றும்படி மருத்துவர்கள் கேட்டுக்கொள்ளும் ஒவ்வொரு முறையும் இரத்தமேற்றுதல் பற்றிய உடல்நல ஆலோசனை குறிப்புகள் அவர்களுக்கு நினைப்பூட்டப்பட வேண்டும் என்றும் நோயாளிகளும் தங்கள் மருத்துவரிடம் நேரடியாக கேட்கத்தக்கதாக இந்த ஆலோசனை குறிப்புகளைப் பற்றிய தகவல் அவர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்றும் டாக்டர் வில்சன் பரிந்துரைக்கிறார். (g02 2/22)

மரிஹுவானாவும் இதயமும்

“மரிஹுவானாவை பயன்படுத்தும் நடுத்தர வயதானோர் அதை புகைத்து ஒரு மணிநேரத்தில் மாரடைப்பை எதிர்ப்படும் அபாயம் ஐந்துமடங்கு அதிகம்” என ஒரு புதிய ஆய்வின் பேரிலான அறிக்கையில் கனடாவின் க்ளோப் அண்ட் மெய்ல் தெரிவிக்கிறது. “மரிஹுவானாவை புகைத்தல் இதய துடிப்பு வேகத்தை​—⁠பெரும்பாலும் இருமடங்கு⁠—⁠அதிகரிக்கிறது; அதே நேரம் இரத்த அழுத்தம் மாறுபடவும் செய்கிறது . . . இரத்த உறைவை ஏற்படுத்தி, இதய தசைக்கு இரத்தம் செல்வதை தடுத்து, மாரடைப்பையும் தூண்டலாம்.” டோரான்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஹரல்ட் கலான்ட் இவ்வாறு சொன்னார்: “பெரியவர்களைப் பொருத்தவரையில், இதயத்திற்கு வேலை பளு அதிகமாவது, மாரடைப்புக்கான ஒரு அபாயக்கூறாக இருக்கும்.” கோகேன் இன்னுமதிக ஆபத்தானது, ஏனென்றால் அதை பயன்படுத்திய முதல் ஒரு மணிநேரத்தில் மாரடைப்பு ஏற்படும் அபாயம் சுமார் 25 மடங்கு அதிகம் என்பதாக அந்த அறிக்கை சொல்கிறது. (g02 2/22)