எமது வாசகரிடமிருந்து
எமது வாசகரிடமிருந்து
நல் ஆரோக்கியம் “அனைவருக்கும் நல் ஆரோக்கியம்—சாத்தியமா?” (ஜூலை 8, 2001) தொடர் கட்டுரைகளிலிருந்து நான் பெற்ற ஆறுதலையும் உற்சாகத்தையும் வார்த்தைகளால் விவரிக்க இயலாது. மனநோயால் நான் அவதிப்படுகிறேன். முன்னர் தற்கொலை செய்துகொள்ளவும் முயன்றிருக்கிறேன். ‘இன்றைய பொழுதை நான் எப்படி கழிக்கப்போகிறேன்?’ என ஒவ்வொரு நாளும் நினைப்பதுண்டு. வெளிப்படுத்துதல் 21:4-ல், ‘நம்முடைய கண்களிலிருந்து கண்ணீரைத் துடைப்பதாக’ யெகோவா கொடுத்துள்ள வாக்குறுதியை இந்தப் பத்திரிகை எனக்கு நினைப்பூட்டியது.
சி. டி., ஜப்பான் (g02 2/8)
உங்கள் அருமையான கட்டுரைகளுக்கு என் நன்றி. இயற்கை மருத்துவராக இருக்கும் நான் வியாதியஸ்தர் இல்லாதிருக்கும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்போது என் தொழிலுக்கு ஒரு முழுக்குப் போட்டுவிட்டு, அதற்கு அடுத்ததாக நான் நேசிக்கும் விவசாயத்தில் இறங்கிவிடுவேன்!
பி. சி., ஐக்கிய மாகாணங்கள் (g02 2/8)
கவிதை “வார்த்தைகள் வரையும் சித்திரம்” (ஜூன் 8, 2001) என ஆங்கிலத்தில் வெளியான உங்கள் கட்டுரையை வாசித்து வெகுவாய் பூரித்துப் போனேன். வேலையிலிருந்து ஓய்வு பெற்றதிலிருந்து கவிதை எழுதுவதே என் வேலை. அது எனக்கு பெரும் சந்தோஷத்தையும் திருப்தியையும் தருகிறது.
ஜே. பி., பிரிட்டன் (g02 2/8)
சிறுவயதிலிருந்தே நான் இலக்கிய படைப்புகளில் ஆர்வமுள்ளவள். இப்படித்தான் கவிதை எழுதும் கலையிடம் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டது. “அழகான கவிதை ஆழமற்ற மனதின் படைப்பு அல்ல” என குறிப்பிட்டிருந்ததற்கு மிக்க நன்றி. கவிதை எழுதுவது பலவீனத்தின் அடையாளம் என பலர் நம்புகின்றனர். இப்படிப்பட்ட இலக்கிய படைப்பு அழகு கொஞ்சும் ஒன்று, அவ்வாறே நமது படைப்பாளரும் எண்ணுகிறார் என்பதை அறிந்ததில் எனக்கு மகிழ்ச்சி.
எம். டி., சிலி (g02 2/8)
அந்துப்பூச்சி எனக்கு வயது 14. “அழகிய அந்துப்பூச்சி” (ஜூலை 8, 2001) என்ற கட்டுரை எனக்கு ரொம்ப பிடித்தது. அந்துப்பூச்சிகள் பார்க்க பயப்படுமளவுக்கு இருப்பதாக நான் எப்போதும் நினைத்ததுண்டு. ஆனால் இந்தக் கட்டுரையை வாசித்திருப்பதால் இனி அவற்றை விரட்டி அடிப்பதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பேன்!
டி. எஸ்., ஐக்கிய மாகாணங்கள் (g02 2/8)
இந்தக் கட்டுரையை வாசிக்கையில் எங்கிருந்தோ பறந்து வந்த அந்துப்பூச்சி என் பாதத்தருகில் அமர்ந்தது. அவ்வளவு அழகான அந்துப்பூச்சியை நான் பார்த்ததே இல்லை! இயற்கை உண்மையில் வியக்கத்தக்கது, அதை உன்னிப்பாய் கவனிக்க கவனிக்க கடவுளிடமுள்ள நம் அன்பு இன்னும் பல மடங்கு அதிகரிக்கவே செய்யும்.
ஜி. பி., இத்தாலி (g02 2/8)
யெகோவா அழகழகாகவும் விதவிதமாகவும் படைத்துள்ள அந்துப்பூச்சிகளுக்குப் போற்றுதல் காட்டாமல் ஏதோ சாதாரண பூச்சிகள் என அசட்டையாக இருந்திருக்கிறேன். இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு செடிகளுக்கு தண்ணீர் ஊற்றப் போகையில் அழகிய அந்துப்பூச்சி ஒன்று அருகே வந்தது. அவருடைய படைப்புக்காகவும் அதிக கவனம் செலுத்துகிறவளாக என்னை ஆக்கிய அந்தக் கட்டுரைக்காகவும் யெகோவாவுக்கு நன்றி தெரிவித்தேன்.
சி. எஸ்., ஐக்கிய மாகாணங்கள் (g02 2/8)
ஜெபம் “இளைஞர் கேட்கின்றனர் . . . கடவுள் என் ஜெபங்களை கேட்பாரா?” (ஜூலை 8, 2001) கட்டுரை உண்மையிலேயே என்னை பலப்படுத்தியது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகையில் இந்தப் பத்திரிகையைப் பெற்றுக்கொண்டேன். என்னால் ராஜ்ய மன்றத்திற்கோ நம்முடைய மாநாட்டிற்கோ போக முடியவில்லை. எனக்குக் கவலையோ கவலை, என் உணர்ச்சிகளை சமாளிக்க முடியும் என எனக்குத் தோன்றவில்லை. யெகோவாவிடம் ஜெபித்தபோது மனசுக்கு நிம்மதியாக இருந்தது. ஆச்சரியப்படும் விதத்தில் எதிர்பாராத அளவுக்கு என் இருதயம் புத்துணர்ச்சி அடைந்தது. யெகோவா என்னை மறக்கவே மாட்டார் என அறிவது ஆறுதலளிக்கிறது.
ஏ. ஓ., ஜப்பான் (g02 2/22)
எனக்கு வயது 18. நான் ஓர் ஒழுங்கான பயனியராக, முழுநேர பிரசங்கியாக இருக்கிறேன். கடந்த சில மாதங்களாக மன உளைச்சல் என்னை வாட்டி வதைத்திருக்கிறது. அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த ஸ்டீவ் என்ற இளைஞன், தன் பிரச்சினைகளினால் கடவுளைத் தொந்தரவு செய்யக்கூடாது என சில சமயங்களில் உணர்ந்ததைப்போல் நானும் நினைத்தேன். ஆனால் லூக்கா 12:6, 7-லுள்ள புத்திமதியை ஆழ்ந்து யோசித்தேன். மனசாந்தியை உணர ஆரம்பித்தேன், என் இருதயத்தைத் திறந்து எல்லாவற்றையும் யெகோவாவிடம் கொட்டிவிட்டேன்.
எம். டி., நிகாரகுவா (g02 2/22)