Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சீற்றத்தின் காலத்தை தூண்டிவிடுவது எது?

சீற்றத்தின் காலத்தை தூண்டிவிடுவது எது?

சீற்றத்தின் காலத்தை தூண்டிவிடுவது எது?

செக் குடியரசு, ப்ராகிலுள்ள பாரில் அமர்ந்திருக்கும் ஒருவர் திடீரென சுட்டுக் கொல்லப்படுகிறார். காரணம்? அவருடைய கேசட் பிளேயரில் சத்தமாக ஒலித்த இசை கொலைகாரனின் கோபத்தை கிண்டிவிட்டது. தென் ஆப்பிரிக்காவிலுள்ள, கேப் டவுனில் மோட்டார் வண்டியில் சென்றுகொண்டிருந்த ஒருவர் நடுரோட்டில் ஹாக்கி ஸ்டிக்கால் அடித்துக் கொல்லப்படுகிறார். அவருடைய வண்டியின் ஹெட்லைட் வெளிச்சம் அவன்மீது பட்டதால் கொலைகாரன் எரிச்சல் அடைந்ததாக தெரிகிறது. ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பிரிட்டனை சேர்ந்த ஒரு நர்ஸ், கோபமடைந்த அவளுடைய முன்னாள் காதலனால் தாக்கப்படுகிறாள். அவன் அவளுடைய வீட்டு கதவை உதைத்து தள்ளி, அவள்மீது பெட்ரோலை ஊற்றி, கொளுத்திவிட்டு, துடிதுடித்து சாகும்படிவிட்டு செல்கிறான்.

சாலையில், வீட்டில், விமானத்தில் என சீற்றம் பற்றி வெளியாகும் அறிக்கைகள் எல்லாம் மிகைப்படுத்தி கூறப்படுகின்றனவா? அல்லது இவை ஒரு கட்டடத்தில் காணப்படும் விரிசல்களைப் போல மிக மோசமான, அடிப்படை பிரச்சினை இருப்பதை வெளிக்காட்டும் வெறும் எச்சரிக்கை சமிக்கைகளா? இரண்டாவதாக குறிப்பிடப்பட்டதே நிஜம் என உண்மைகள் காட்டுகின்றன.

“1990 முதல், சாலையில் நிகழும் வன்முறைமிக்க தாக்குதல்கள் பற்றிய அறிக்கைகள் வருடத்திற்கு சுமார் 7 சதவிகிதம் அதிகரித்துள்ளன” என அமெரிக்க மோட்டார் வாகன கூட்டமைப்பின் (AAA) போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்று கூறுகிறது.

வீட்டிலும் சீற்றம் பரவலாக காணப்படுகிறது. உதாரணமாக, 1998-⁠ம் வருடத்தில் வீட்டில் நடந்த வன்முறை பற்றி பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 50 சதவிகிதம் அதிகரித்ததை ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸிலுள்ள போலீஸார் கண்டனர். அந்நாட்டிலுள்ள திருமணமான அல்லது திருமணமாகாமல் சேர்ந்து வாழும் நான்கு பெண்களில் ஒருவர் தன் துணைவரால் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்.

விமானத்தை பொருத்த வரையிலும் இதுவே உண்மை. விமான பயணிகள் திடீரென கோபமடைந்து, சக பயணிகள், விமான ஊழியர்கள், விமானிகள் ஆகியோரையும் தாக்கும் ஆபத்து அதிகரித்திருக்கிறது. ஆகவே, வன்முறை தாக்குதலில் இறங்குபவர்களை இருக்கையோடு சேர்த்து கட்டி வைக்க உதவும் விசேஷ பெல்டுகளை உலகின் முக்கிய விமான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அளிக்கின்றன.

ஏராளமானோர் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் போவதற்கு காரணம் என்ன? இந்தச் சீற்ற செயல்களை தூண்டிவிடுவது எது? இந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியுமா?

சீற்றம் அதிகரிக்க காரணம் என்ன?

சீற்றம் கொள்வது என்றால் கோபத்தில் கொதித்தெழுவது அல்லது அதை வெளிக்காட்டுவதாகும். கொஞ்சம் கொஞ்சமாக ஒன்று சேர்ந்த கோபம் அதிகரித்து திடீரென வெடிக்கும்போதே சீற்றத்தின் செயல்களாகின்றன. “சாலையில் நிகழும் வன்முறை தாக்குதல்கள் ஒரேயொரு நிகழ்ச்சியால் தட்டியெழுப்பப்படுவது கிடையாது. மாறாக, ஒருவரின் மனப்பான்மைகளும் வாகன ஓட்டுனரின் வாழ்க்கையில் சேர்ந்துகொண்டே வரும் அழுத்தங்களுமே இதற்குக் காரணம் என தோன்றுகிறது” என்று AAA போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் டேவிட் கே. வில்லிஸ் கூறுகிறார்.

ஒவ்வொரு நாளும் கடலளவான தகவலை கிரகிக்கும்படி எதிர்பார்க்கப்படுவதும் அழுத்தங்கள் சேர்ந்துகொண்டே வருவதில் விளைவடைகிறது. “இன்றைய வேலையாட்களில் அநேகர் பெருக்கெடுக்கும் தகவல் வெள்ளத்தில் திக்குமுக்காடுகின்றனர் . . . தகவல் அவர்களை மூழ்கடிப்பதால் . . . அழுத்தத்திற்குள்ளாகி, துணிச்சல் மிக்கவர்களாகி, என்ன செய்வதென்று தெரியாமல் செயலிழந்து போகின்றனர்” என டேவிட் லூயிஸ் எழுதிய அளவுக்கதிகமான தகவல் என்ற ஆங்கில புத்தகத்தின் பின்பக்க அட்டை கூறுகிறது. இந்தத் தகவல் வெள்ளத்திற்கு ஒரு செய்தித்தாள் தரும் உதாரணம் இதோ: “17-வது நூற்றாண்டை சேர்ந்த ஒரு சராசரி மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் எவ்வளவு தகவலை பெறுவாரோ அவ்வளவு தகவல் வார நாட்களில் வெளியாகும் ஒரு செய்தித்தாளில் உள்ளது.”

நாம் வாயில் போடுபவைகூட கோபத்தை ஊட்டி வளர்க்கலாம். சிகரெட் புகைத்தல், குடிப்பழக்கம், ஆரோக்கியமற்ற உணவு போன்றவை பகைமை உணர்வுகளை அதிகரிப்பதாக பெரியளவில் செய்யப்பட்ட இரண்டு ஆராய்ச்சிகள் காட்டியுள்ளன. பரவலாக உள்ள இப்படிப்பட்ட பழக்கவழக்கங்களே அழுத்தத்தையும் ஏமாற்றத்தையும் அதிகரிக்கின்றன. திட்டுதல், பொறுமை இழத்தல், சகிப்பற்ற தன்மை என்ற வடிவில் இந்த ஏமாற்றம் வெளிப்படுகிறது.

பண்பற்ற பழக்கங்களும் சினிமாக்களும்

அநாகரிகத்திற்கும் குற்றச்செயலுக்கும் உள்ள தொடர்பை பற்றி ஆஸ்திரேலிய குற்றவியல் நிறுவனத்தின் (AIC) இயக்குநர் டாக்டர் அடம் கிரேக்கார் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “மரியாதை கொடுப்பதற்கும் நாகரிகமாக நடப்பதற்கும் மறுபடியுமாக கவனம் செலுத்துவதே சிறு குற்றங்களை தவிர்ப்பதற்கான மிக முக்கிய வழிகளில் ஒன்றாகும்.” பொறுமையாக இருப்பது, சகிப்புத்தன்மை காண்பிப்பது, திட்டுவதை தவிர்ப்பது ஆகியவற்றையே அந்த நிறுவனம் பரிந்துரை செய்கிறது. இவற்றை செய்ய தவறுகையில் ஒழுங்கற்ற நடத்தை குற்றச்செயலாக மாறலாம் என அது கூறுகிறது. அழுத்தத்தையும் ஏமாற்றத்தையும் தணிக்க அநேகர் நாடும் வடிகாலான பொழுதுபோக்கே சகிப்பற்ற தன்மையையும் சீற்றத்தையும் தூண்டிவிடுகிறது. எப்படி?

“சாவும் அழிவும் சித்தரிக்கப்படுவதைப் பார்க்க சிறியோரும் பெரியோரும் திரையரங்குகளில் குவிகின்றனர். வன்முறை வீடியோக்களுக்கான மார்க்கெட் பரவலாகவும் கொள்ளை லாபம் தருவதாகவும் உள்ளது. பெரும்பாலும் பெற்றோர் விரும்பாவிட்டாலும் அநேக பிள்ளைகள் ‘யுத்த பொம்மைகளையே’ பெரிதும் விரும்புகின்றன. இளையோரும் முதியோருமான அநேகர் டிவி வன்முறையை ஆர்வத்தோடு ரசிக்கின்றனர். கலாச்சார தராதரங்களைப் புகட்டுவதில் டிவிக்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது” என AIC அறிக்கை ஒன்று கூறுகிறது. இதற்கும், வீட்டிலும் வீதியிலும் சீற்றம் சீறியெழுவதற்கும் என்ன தொடர்பு உள்ளது? “ஒரு சமுதாயம் வன்முறையை கண்டுகொள்ளாமல் இருந்தால் சமுதாயத்திலுள்ள தனி நபர்களின் மதிப்பீடுகளும் அதற்கு இசைவாகவே வளரும்” என அந்த அறிக்கை நியாயவிவாதம் செய்கிறது.

அழுத்தத்தை சந்திக்கையில் சீற்றத்தை வெளிப்படுத்துவது இயல்பானதே என இன்றுள்ள அநேகர் சாக்குப்போக்கு சொல்லலாம். அழுத்தம் நிறைந்த, முரட்டுத்தனமான நமது சமுதாயத்தில் அது தவிர்க்க முடியாத ஒரு செயலே என்றும் கூறலாம். அப்படியென்றால், “கோபத்தைக் கொட்டிவிடுங்கள்” என்ற பிரபலமான கருத்து உண்மையில் ஆரோக்கியமான ஆலோசனையா?

சீற்றத்தை கட்டுப்படுத்த வேண்டுமா?

வெடிக்கும் ஒரு எரிமலை அதைச் சுற்றியுள்ள அனைவரையும் பாழாக்குவதைப் போலவே கட்டுக்கடங்காத கோபத்தில் கொதித்தெழுபவரும் அவரை சுற்றியுள்ளவர்களுக்கு துன்பத்தையே விளைவிக்கிறார். தனக்கும் பேரிழப்பை ஏற்படுத்திக் கொள்கிறார். எந்த விதத்தில்? “கோபப்படுவது இன்னும் அதிக வன்முறைக்கு வித்திடுகிறது” என த ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் (JAMA) கூறுகிறது. சீற்றமடையும் ஆண்கள், “கோபப்படாதவர்களோடு ஒப்பிட 50 வயதிற்குள்ளாகவே மரித்துவிட அதிக வாய்ப்பு இரு”ப்பதாக ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.

அதைப்போலவே, “கோபத்தை அடக்குகிறவர்களைவிட கோபத்தை வெளிக்காட்டும் ஆண்களுக்கு ஸ்ட்ரோக் வரும் அபாயம் இரண்டு மடங்கு அதிகம்” என அமெரிக்க இருதய சங்கமும் கூறுகிறது. இந்த எச்சரிப்புகள் இருபாலாருக்குமே பொருந்தும்.

எந்த ஆலோசனை உண்மையிலேயே பலனுள்ளது? உலக அதிகாரிகளின் ஆலோசனைக்கும் மனித உறவுகள் சம்பந்தமாக மிகப் பரவலாக விநியோகிக்கப்பட்ட புத்தகமாகிய பைபிளின் ஆலோசனைக்கும் உள்ள ஒற்றுமையை கவனியுங்கள்.

கோபத்தை கட்டுப்படுத்தி, சீற்றத்தை தவிருங்கள்

டாக்டர் ரெட்ஃபர்ட் பீ. வில்லியம்ஸ் JAMA-வில் இவ்வாறு குறிப்பிட்டார்: “‘கோபத்தைக் கொட்டிவிடுங்கள்’ என்ற மிக எளிய ஆலோசனை அதிக உதவியளிப்பதாக தோன்றவில்லை. அதற்கு பதிலாக, உங்கள் கோபத்திற்கான காரணத்தை அலசி ஆராய்ந்து அதைக் கட்டுப்படுத்த கற்றுக்கொள்வதே அதிக முக்கியமானதாகும்.” உங்களிடமே இவ்வாறு கேட்டுக்கொள்ளும்படி அவர் ஆலோசனை கொடுக்கிறார்: “(1இந்தச் சூழ்நிலை எனக்கு முக்கியமானதா? (2என் எண்ணங்களும் உணர்ச்சிகளும் உண்மைகளுக்கு பொருத்தமாக உள்ளனவா? (3நான் கோபப்படாமல் இருக்க இந்தச் சூழ்நிலையை மாற்ற முடியுமா?”

நீதிமொழிகள் 14:29; 29:11 “நீடிய சாந்தமுள்ளவன் மகா புத்திமான்; முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப் பண்ணுகிறான். மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கி வைக்கிறான்.”

எபேசியர் 4:26 “கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது.”

பிராங்க் டானவன், கோபத்தைக் கட்டுப்படுத்துதல்​—⁠ஆண்களுக்கான சுய உதவி தீர்வுகள் என்ற தன் ஆங்கில புத்தகத்தில் இவ்வாறு சிபாரிசு செய்கிறார்: “கோபம் தலைக்கேறுகையில் கோபத்திலிருந்து விலகிச் செல்வதே, அல்லது குறிப்பாக சொன்னால் அந்த இடத்திலிருந்தும் உங்கள் கோபத்திற்கு காரணமான மற்றவர்களிடமிருந்தும் விலகிச் செல்வதே அதிக முக்கியமான, மதிப்புமிக்க நடவடிக்கையாகும்.”

நீதிமொழிகள் 17:14 “சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறது போலிருக்கும்; ஆதலால் விவாதம் எழும்பு முன் அதை விட்டுவிடு [“அந்த இடத்திலிருந்து சென்றுவிடு,” NW].”

த ஹியூமனிஸ்ட் என்ற இதழில் எழுதுகையில் பர்ட்ரம் ராத்சைல்ட் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “கோபப்படுவதற்கு . . . கோபப்படுகிறவரே முக்கிய பொறுப்பே. கோபப்படுவதற்கான காரணங்கள் நம்மிடம்தான் உள்ளன. . . . கோபத்தால் நிலைமை இன்னும் மோசமடைந்த எண்ணற்ற சமயங்களோடு ஒப்பிட அதனால் நன்மை விளைந்த சந்தர்ப்பங்கள் மிகக் குறைவே. கோபப்படுவதற்கு பதிலாக சாந்தமாக இருப்பதே சாலச் சிறந்தது.”

சங்கீதம் 37:8 “கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு; பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்.”

நீதிமொழிகள் 15:1 “மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழும்பும்.”

நீதிமொழிகள் 29:22 (பொது மொழிபெயர்ப்பு) “எளிதில் சினம் கொள்பவரால் சண்டை உண்டாகும்; அவர் பல தீங்குகளுக்குக் காரணமாவார்.”

மேலே கூறப்பட்ட ஆலோசனைகளை உலகமுழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் பின்பற்றுகின்றனர். உள்ளூரிலுள்ள ராஜ்ய மன்றத்தில் நடக்கும் அவர்களுடைய கூட்டங்களுக்கு வந்து பார்க்கும்படி உங்களை அழைக்கிறோம். நாம் சீற்றத்தின் காலத்தில் வாழ்கிறபோதிலும் பைபிள் அறிவுரைகளின்படி வாழ்வது உண்மையில் பயனளிப்பதை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம். (g02 2/8)

[பக்கம் 21-ன் படங்கள்]

கோபத்தில் பொங்கியெழுபவர் வெடிக்கும் எரிமலையைப் போல துன்பத்தையே விளைவிக்கிறார்

[பக்கம் 22-ன் படம்]

பைபிளின் அறிவுரை உண்மையில் பயனளிக்கிறது