Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சுற்றுலா—உலகம் சுற்றும் துறை

சுற்றுலா—உலகம் சுற்றும் துறை

சுற்றுலா—உலகம் சுற்றும் துறை

பஹாமாஸிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

‘கொஞ்ச நாள் லீவு எடுத்து எங்காவது போய்வந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்!’ என நீங்கள் எப்போது கடைசியாக யோசித்தீர்கள்? அன்றாட அழுத்தங்களிலிருந்து தப்பித்தால் போதும் என நீங்கள் நினைத்திருக்கலாம். விடுமுறையின்போது தொலைதூர இடங்களுக்கு எப்போதாவது பயணம் செய்த அனுபவமுண்டா? இதை சிந்தித்துப் பாருங்கள்: சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை உலகமுழுவதிலும் உள்ள மக்களில் பெரும்பாலானோர் தவறாமல் விடுமுறைக்காக வெளியூர் சென்றது கிடையாது. அதோடு, பிறந்ததிலிருந்து சாகும்வரை அநேகர் தங்கள் வீட்டிலிருந்து சில நூறு கிலோமீட்டர் தூரம் வரையே பயணம் செய்திருக்கின்றனர். இன்பமாக பொழுதைக் கழிக்க அல்லது கல்வி பயில தொலைதூர இடங்களுக்கு பயணம் செய்வது சிறு தொகுதியான துணிச்சல்கார அல்லது பணக்கார வர்க்கத்துக்கே உரியதாக இருந்தது. இன்றோ, லட்சக்கணக்கானோர் தாங்கள் வசிக்கும் நாட்டையே அல்லது உலகையே வலம் வருகின்றனர். இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன?

தொழிற்புரட்சிக்கு பிறகு கோடிக்கணக்கானோர் பொருட்களை தயாரிக்கவும் சேவைகளை அளிக்கவும் ஆரம்பித்தனர். இதன் விளைவாக, கூடுதலான வருவாயும் செலவுசெய்ய அதிக பணமும் கையில் புரண்டன. தொழில்நுட்பம் ராக்கெட் வேகத்தில் வளர்ந்ததால் அநேக இயந்திரங்கள் உருவாக்கப்பட்டன; அதிக பணியாட்களுக்கான தேவையும் குறைந்தது. இதனால், அநேகருக்கு அதிகமான ஓய்வு நேரமும் கிடைத்தது. இவையும், மத்திப 1900-களில் வெகு சுலபமான பொது போக்குவரத்து வசதிகள் பிறந்ததும் சுற்றுலா என்ற அணையின் மதகுகளை திறந்துவிட்டன. அதோடு, புதிய கண்டுபிடிப்பான தொலைக்காட்சி, தொலைதூர இடங்கள் பற்றி கண்கவர் காட்சிகளை உலகமுழுவதிலும் உள்ள வீடுகளுக்கு கொண்டு சேர்த்தது பயணம் செய்வதற்கான ஆசையை தூண்டிவிட்டது.

இதன் விளைவாக ஏற்பட்டதே படுவேகமாக வளர்ந்து வரும் உலக சுற்றுலா துறையாகும். உலகம் சுற்றும் நபர்களின் எண்ணிக்கை 1997-⁠ல் 61.3 கோடியாக இருந்தது, 2020-⁠க்குள் அது 160 கோடியாக அதிகரிக்கும் என உலக சுற்றுலா அமைப்பு (WTO) முன்னறிவிக்கிறது. அப்போது இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் இருந்தது. சுற்றுலாவிற்கான டிமாண்டு அதிகரித்திருப்பதால் வியாபாரங்கள், ரிஸார்டுகள், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகளை அளிக்கும் நாடுகள் போன்றவற்றின் எண்ணிக்கையும் அவற்றிற்கு இணையாக வளர்ந்துள்ளன.

சுற்றுலா சந்தையில் நுழையும் பல நாடுகள்

சுற்றுலா என்பது அதில் உட்பட்டுள்ள அனைவருக்குமே லாபம் தரும் தொழில். ஒரு பயணி தன் அன்றாட அலுவல்களிலிருந்து தப்பித்து, அதிக சலுகை பெறுகிறார், மகிழ்ச்சி அடைகிறார் அல்லது கல்வி பெறுகிறார். ஆனால், சேவை அளிப்பவர்களுக்கு அதனால் என்ன லாபம்? சர்வதேச சுற்றுலாவே அன்னிய செலாவணி பெறுவதற்கான மிகச் சிறந்த வழியாகும். இறக்குமதி செய்ய வேண்டிய பொருட்களுக்கும் சேவைகளுக்கும் பணம் கொடுக்க அநேக நாடுகளுக்கு அன்னிய செலாவணி தேவைப்படுகிறது.

உண்மையில், WTO அறிக்கை ஒன்று இவ்வாறு கூறியது: “சர்வதேச சுற்றுலாவே உலகளவில் பெருமளவு அன்னிய செலாவணியை ஈட்டி தருகிறது, அநேக நாடுகள் செலுத்த வேண்டிய கடன் பாக்கிக்கு உதவும் ஒரு முக்கிய அம்சமுமாகிறது. சர்வதேச சுற்றுலா மூலம் கிடைத்த அன்னிய செலாவணி 1996-⁠ல் 42,300 கோடி ஐ.மா. டாலரை எட்டியது; இது, பெட்ரோலிய பொருட்கள், மோட்டார் வாகனங்கள், தொலைதொடர்பு சாதனங்கள், நெசவு பொருட்கள் அல்லது வேறெந்த பொருட்களின் அல்லது சேவைகளின் ஏற்றுமதியிலிருந்து கிடைக்கும் அன்னிய செலாவணியைவிட அதிகமாகும்.” அந்த அறிக்கை தொடர்ந்து கூறியதாவது: “உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில் சுற்றுலாவே”; மேலும் அது “உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 10 சதவிகிதத்தை” குறித்தது. ஆகவே, முன்னாள் சோவியத் யூனியனின் பாகமாக இருந்த சில நாடுகள் உட்பட அநேக நாடுகள் சர்வதேச சுற்றுலா தொழிலில் அங்கம் வகிக்க அல்லது நுழைய போட்டா போட்டி போடுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

சுற்றுலா மூலம் கிடைக்கும் அரசாங்க வருவாய் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், உயர்தரமான கல்வி அளிக்கவும், மற்ற அவசரமான தேசிய தேவைகளை பூர்த்தி செய்யவும் உபயோகிக்கப்படுகிறது. குடிமக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் அநேகமாக எல்லா அரசாங்கங்களுமே அதிக அக்கறை காட்டுகின்றன. சுற்றுலா துறை உருவாக்கும் வேலை வாய்ப்புகள் இந்தத் தேவையை பூர்த்தி செய்கின்றன.

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை சுற்றுலா எவ்வாறு பாதிக்கலாம் என்பதற்கு பஹாமாஸை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். இது, மெக்சிகோ வளைகுடாவின் வாயிலுக்கு முன்பு, ஐ.மா.-விலுள்ள ஃப்ளாரிடா மாகாணத்திற்கும் கியூபா தீவிற்கும் இடையில் அமைந்த, தீவுகள் நிறைந்த ஒரு சிறிய நாடாகும். பஹாமாஸில் பெரியளவில் வாணிக விவசாயமோ தொழிற்சாலைகளுக்கான கச்சா பொருட்களோ கிடையாது. ஆனால் இத்தீவுகளில் கிடைப்பதோ இதமான சீதோஷண நிலை, சுத்தமான வெப்பமண்டல கடற்கரைகள், சிறிய ஜனத்தொகையான இரண்டரை லட்சம் நட்பான மக்கள், அதோடு இவை ஐக்கிய மாகாணங்களுக்கு அருகிலும் இருக்கின்றன. இந்த ஆஸ்திகள் அனைத்தையும் ஒருங்கே இணைத்து செழித்தோங்கும் சுற்றுலா தொழில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், சுற்றுலா பயணிகள் சந்தோஷமான, பாதுகாப்பான விடுமுறையை அனுபவிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது?

இன்றைய பயணிகளை திருப்தி செய்தல்

சர்வதேச சுற்றுலா ஆரம்பித்த சமயத்தில், வெளி நாட்டிற்கு செல்வதே ஓர் அரிய அனுபவமாக இருந்ததால் அதுவே அநேக பயணிகளை திருப்தி செய்தது; பயணம் செய்வதில் அன்று அநேக இடர்பாடுகள் இருந்தபோதிலும் இது உண்மையாக இருந்தது. இன்றோ தொலைக்காட்சியின் வருகையால் அநேகர் தங்கள் வீடுகளிலேயே “ஹாயாக” உட்கார்ந்துகொண்டு தொலைதூர இடங்களை கண்டுகளிக்க முடிகிறது. ஆகவே, அந்த இடத்திற்கு நேரில் செல்வதை மறக்க முடியாத அனுபவமாகவும் அதே சமயம் வீட்டின் சகல சௌகரியங்களையும் அல்லது அதையும் மிஞ்சும் வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டிய சவால் ரிஸார்ட்காரர்களுக்கு உள்ளது. அதோடு, அநேக பயணிகள் அடிக்கடி பயணம் செய்வதால் சேவையளிக்கும் நாடுகள் அநேகமாக உலகளவில் போட்டி போடுகின்றன.

இதனால் கண்ணை கவரும் கவர்ச்சிகளும் ரிஸார்டுகளும் வளர்ந்துள்ளன. பஹாமாஸிலுள்ள மிகப் பெரிய சொகுசு ஹோட்டல் ஒன்றை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள். ஹோட்டலின் அமைப்பு வளர்ச்சி இயக்குநர் பெவர்லி சான்டர்ஸ் கூறுவதாவது: “நெஞ்சைவிட்டு நீங்காத அனுபவத்தை உங்களுக்கு தரவே இந்த இடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதுமட்டுமல்ல. உள்ளூர்வாசிகளோடு உங்களுக்கிருக்கும் தொடர்பையும் மறக்க முடியாத அனுபவமாக்க விரும்புகிறோம்.” இப்படிப்பட்ட ரிஸார்டுகள் அங்கு தங்குபவர்களின் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்கின்றன?

ரிஸார்டுகளின் திரைமறைவில்

பெவர்லி இவ்வாறு கூறுகிறார்: “2,300 அறைகளுள்ள எங்கள் ஹோட்டல் நிரம்பி வழிகையில், 7,500 முதல் 8,000 விருந்தாளிகளை ஒரே சமயத்தில் திருப்திப்படுத்த வேண்டும். திட்டமிட்டு, செயல்படுத்துவது மிகப் பெரிய சவாலே. இந்த விருந்தாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய தேவைப்படும் அமைப்பு ஒரு சிறிய நகரத்திற்கு தேவையான அனைத்தையும் செய்வதற்கு சமமாகும், ஆனால் இதில் கூடுதலான சவால்கள் உள்ளன. விருந்தாளிகள் வீட்டில் சாப்பிட்டு பழக்கப்பட்ட உணவு இருக்க வேண்டும். அதேசமயத்தில், நினைவைவிட்டு நீங்காத அனுபவத்தையும் அவர்கள் பெற வேண்டும் என்றால், வித்தியாசமான பல்வகை உணவும் பொழுதுபோக்கு வாய்ப்புகளும் அவர்களுக்கு கிடைக்க வேண்டும். அநேக ரிஸார்டுகளில், விருந்தினர்களை கவனித்துக் கொள்ளும் பணியாட்களில் 50 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமானோர் உணவு, பானம் அளிப்பதற்காகவே ஒதுக்கப்பட்டுள்ளனர்.”

இருந்தாலும், “நேப்பாளத்தில் சுற்றுலாவின் சமூக கலாச்சார தாக்கம்” என்ற கட்டுரையில் ஐ. கே. ப்ரதான் கூறுகிறபடி, “உள்ளூர்வாசிகள் விருந்தாளிகளை நடத்தும் விதமும் அவர்களுக்கு ஏற்படும் பாதுகாப்பு உணர்வுமே பயணத்தில் உண்மையான மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் பெற வழிநடத்தும் மற்ற எல்லா காரணிகளிலும் அதிமுக்கியமானவை.”

இந்த விஷயங்களில் பரம திருப்தியை அளிக்க உலகமுழுவதிலும் உள்ள வெற்றிகரமான டூரிஸ்ட் ரிஸார்டுகள் என்ன செய்கின்றன? “பயிற்சி அளிக்கிறோம், விருப்பமான நடத்தை ஒழுங்கை பின்பற்ற சொல்கிறோம், திருத்துகிறோம், இவ்வாறு உயர்தர சேவையளிக்க எப்போதுமே முயலுகிறோம்” என பஹாமாஸிலுள்ள புகழ்பெற்ற ரிஸார்டின் பயிற்சி மேற்பார்வை அலுவலர் இந்த கேள்விக்கு பதிலளிக்கிறார். பெரும்பாலான பஹாமியர்கள் இயல்பாகவே நல்ல குணம் படைத்தவர்கள். ஆனால், வேலை செய்யும் நேரம் முழுவதும் நட்பாக, இனிமையாக, சிரித்துக் கொண்டேயிருப்பது மிகவும் கடினமானதே. அதனால்தான் அவர்கள் எந்த வேலையை செய்தாலும் ஒரு மருத்துவர், வழக்குரைஞர் அல்லது காப்பீட்டு முகவருக்கே உரிய தொழில் திறமையோடு அதை செய்ய வேண்டிய தேவையை வலியுறுத்துகிறோம். ஒரு சுற்றுலா பயணியின் முழுமையான அனுபவத்தை உள்ளடக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் கண்டிப்பான சர்வதேச தராதரங்களை பின்பற்றுகிறோம். இந்தத் தராதரங்களை அடைய ஒரு குழுவாக எவ்வளவு கடினமாய் உழைக்கிறோமோ அவ்வளவு சுமுகமான, உயர்தரமுள்ள சாதனைகளை தொடர்ந்து படைப்போம்.”

காட்சியின் மறுபக்கம்

நீங்கள் பயணம் செய்திருந்தால், எவ்வளவுதான் நன்றாக திட்டமிட்டாலும் எதிர்பாராத செலவுகள் ஏதாவது எப்போதுமே வந்துவிடுவதை கவனித்திருக்கிறீர்களா? சுற்றுலா ஏற்பாடு செய்பவர்களும் அதே பிரச்சினையை எதிர்ப்படுகின்றனர்.

“நமது வளரும் சமுதாயத்திற்கு சுற்றுலா துறை அநேக நன்மைகளை அளிக்கும்” என முன்னர் மேற்கோள் காட்டிய ப்ரதான் கூறுகிறார். ஆனால், தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால், “சரிசெய்ய இயலாத சமூக பிரச்சினைகளும் எழலாம்” என்று அவர் குறிப்பிடுகிறார். அவர் தொடர்ந்து கூறுவதாவது: “நவீனகால சுற்றுலாவின் பல்வேறு விளைவுகளை பற்றி போதுமான விழிப்புணர்வோடு [நாம்] தயாராயிருக்க வேண்டும்.” அவர் எந்தப் பிரச்சினைகளை பற்றி குறிப்பிடுகிறார்?

“அதிக எண்ணிக்கையான சுற்றுலா பயணிகளை கவனித்துக் கொள்ளும் தேசங்கள் அநேகமாய் எப்போதுமே பெரும் பிரச்சினைகளை சந்திக்கின்றன. இது வேண்டுமென்றே நிகழுவதில்லை என்றாலும் அவற்றின் சம்பிரதாய வாழ்க்கை முறை அதன் பொலிவை இழக்கிறது. சில இடங்களில் உள்ளூர் கலாச்சாரம் முற்றிலுமாக அழிந்தேவிட்டது.” ஒரு பொதுவான பாதிப்பை பற்றி பஹாமாஸ் சுற்றுலா துறையின் உயர் அதிகாரி கார்டல் தாம்ப்ஸன் இவ்வாறு விவரிக்கிறார். சுற்றுலா துறையால் தன் நாட்டிற்கு விளைந்த நன்மைகளை பற்றி தாம்ப்ஸன் பெருமையோடு பேசுகிறார். என்றாலும், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை எப்போதுமே ஜனத்தொகையில் பெரும்பகுதியாக அல்லது அதைவிட அதிகமாக இருக்கும் ஒரு நாட்டில் வசிப்பது எதிர்பாராத மற்ற விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதையும் ஒப்புக்கொள்கிறார்.

உதாரணமாக, சுற்றுலா பயணிகள் எப்பொழுதுமே விடுமுறையைக் கழிப்பவர்கள் என அவர்களுடன் வேலை செய்பவர்கள் கடைசியில் தப்புக்கணக்குப் போட ஆரம்பித்துவிடுவதை காண்கின்றனர். ஆகவே, உள்ளூர்வாசியும் கற்பனை செய்த இந்த உல்லாச வாழ்க்கை முறையை பின்பற்ற முயலலாம். எல்லோருமே இந்த விதத்தில் பாதிக்கப்படுவதில்லை. ஆனால், தங்கள் ஓய்வு நேரத்தில் பெரும்பகுதியை ரிஸார்டுகளில் செலவு செய்பவர்கள் தங்கள் பாரம்பரிய வாழ்க்கை முறையை இழந்துவிடுகின்றனர். சில சமயங்களில், சுற்றுலா பயணிகளுக்காக கட்டப்படுபவை உள்ளூர்வாசிகளால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அதன் விளைவாக, உள்ளூர் கலாச்சார மையமாக விளங்கிய இடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நலிந்து, சில இடங்களில் முற்றிலுமாக அழிந்துபோகின்றன.

ஆகவே, அநேக பிரசித்தி பெற்ற சர்வதேச சுற்றுலா ஸ்தலங்கள் குழப்பத்தில் உள்ளன. ஏராளமான பயணிகளால் கிடைக்கும் வருமானத்தை விரும்புகின்றன. ஆனால், ஒழுக்கங்கெட்ட ஆசைகளுக்கு வடிகால் தேடும் சுற்றுலா பயணிகளுக்காகவே ஏற்பாடு செய்யப்படும் தொழில்களால் விளையும் சமூக பிரச்சினைகளின் பாரத்தை தாங்க முடியாமல் திணறுகின்றன.

நிலைத்திருக்கத்தக்க சுற்றுலா

நவீனகால சுற்றுலாவின் மிகப் பெரிய நன்மைகளில் சில சுற்றுலா துறையின் அஸ்திவாரமே ஆட்டம் காணும் பின் விளைவுகளை ஏற்படுத்துவதால் “நிலைத்திருக்கத்தக்க சுற்றுலா” என்ற சொற்றொடர் இன்று அதிகமாக அடிபடுகிறது. லாபம் தரும் சில சுற்றுலா பழக்கங்களின் குறுகிய கால நன்மைகளே ‘தங்க முட்டையிடும் வாத்தை கொன்றுவிடும்’ அபாயம் இருப்பதை சிலர் உணர ஆரம்பித்துள்ளனர் என்பதை இது காட்டுகிறது. இத்துறை என்றும் நிலைத்திருக்க வேண்டுமானால் சவால் நிறைந்த சில பிரச்சினைகளை சமாளித்தாக வேண்டும்.

சுற்றுலாவால் சுற்றுச்சூழலிலும் உள்ளூர் கலாச்சாரத்திலும் ஏற்படும் தாக்கம், லாப நோக்குடைய ரிஸார்டுகள், மெகா ரிஸார்டுகளின் குறிக்கோள்களும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் நாடுகளின் தேசிய குறிக்கோள்களும் எவ்வளவு தூரம் ஒத்துப்போகின்றன போன்றவையே எதிரும்புதிருமான, எதிர்காலத்தில் சமாளிக்க வேண்டிய சில சவால்களாகும். சமீப காலமாக, பாதுகாப்பு பற்றிய கவலை தலைதூக்கியிருப்பதாலும் போக்குவரத்து துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கடைசியில் இவற்றையும் சமாளித்தாக வேண்டும். இந்தப் பிரச்சினைகள் இன்றைய சுற்றுலா துறையை எதிர்காலத்தில் எவ்வாறு பாதிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்த முறை, எல்லாவற்றையும் மறந்து வீட்டிலிருந்து தொலைதூரத்தில் உள்ள ரிஸார்டிற்கு சென்று உல்லாசமாக ஓய்வெடுக்க தீர்மானிக்கையில், உலகம் சுற்றும் இந்தத் துறையான தேசிய மற்றும் சர்வதேச சுற்றுலாவைப் பற்றி சாதாரணமாக எடைபோடமாட்டீர்கள் அல்லவா? (g02 2/8)

[பக்கம் 17-ன் முழுபக்க படம்]