பிரதான தூதனாகிய மிகாவேல் யார்?
பைபிளின் கருத்து
பிரதான தூதனாகிய மிகாவேல் யார்?
பைபிளின்படி கோடிக்கணக்கான தேவதூதர்கள் ஆவி பிரதேசத்தை உறைவிடமாக கொண்டிருக்கின்றனர். (தானியேல் 7:9, 10; வெளிப்படுத்துதல் 5:11) கடவுளுக்கு உண்மையாக இருக்கும் தேவதூதர்களைப் பற்றி வேதவசனங்களில் தொடக்கத்திலிருந்து முடிவு வரை நூற்றுக்கணக்கான முறை குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனாலும், இந்த ஆவி சிருஷ்டிகளில் இருவரின் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. ஒருவர் காபிரியேல் தூதன்; இவர் சுமார் 600 வருட காலப்பகுதியில் மூன்று வெவ்வேறு நபர்களுக்கு கடவுளுடைய செய்தியை நேரில் போய் தெரியப்படுத்தினார். (தானியேல் 9:20-22; லூக்கா 1:8-19, 26-28) பைபிளில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மற்றொரு தேவதூதன் மிகாவேல்.
மிகாவேல் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு தூதன் என்பது தெளிவாக உள்ளது. உதாரணமாக, மிகாவேல், யெகோவாவுடைய மக்களின் சார்பாக நின்று பொல்லாத பேய் தூதர்களுக்கு விரோதமாக போரிடுவதாக தானியேல் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. (தானியேல் 10:13; 12:1) தேவ ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட யூதாவின் கடிதத்தில், மோசேயின் சரீரத்தைக் குறித்த தர்க்கத்தில் மிகாவேல் சாத்தானை எதிர்க்கிறார். (யூதா 9) சாத்தானோடும் அவனுடைய பேய் தூதர்களோடும் யுத்தம் செய்து மிகாவேல் அவர்களை பரலோகத்திலிருந்து விழத்தள்ளியதாக வெளிப்படுத்துதல் புத்தகம் காண்பிக்கிறது. (வெளிப்படுத்துதல் 12:7-9) வேறு எந்தத் தேவதூதனும் கடவுளுடைய விரோதிகள்மீது அத்தனை அதிக வல்லமையும் அதிகாரமும் பெற்றிருப்பதாக சித்தரிக்கப்படவில்லை. பொருத்தமாகவே, மிகாவேலை ‘பிரதான தூதன்’ என்று பைபிள் குறிப்பிடுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை; ‘பிரதான’ என்ற அடைச்சொல் “முக்கியமான” அல்லது “முதன்மையான” என அர்த்தம் தருகிறது.
மிகாவேல் யார் என்பதில் சர்ச்சை
கிறிஸ்தவமண்டல மதங்களிலும், யூதமதத்திலும் இஸ்லாமிலும் தேவதூதர்களைப் பற்றிய விஷயத்தில் முரண்படும் கருத்துக்கள் உள்ளன. சில விளக்கங்கள் தெளிவற்றவை. உதாரணமாக, தி ஆங்கர் பைபிள் டிக்ஷ்னரி இவ்வாறு குறிப்பிடுகிறது: “மேம்பட்ட ஒரு தேவதூதர் இருக்கலாம், அத்துடன்/அல்லது, ஒரு சிறு தொகுதியான (பொதுவாக நான்கு அல்லது ஏழு) பிரதான தூதர்களும் இருக்கலாம்.” தி இம்பீரியல் பைபிள்-டிக்ஷ்னரி சொல்லுகிறபடி, மிகாவேல் என்பது “ஒரு மீமானிட சிருஷ்டியின் பெயர்; இவரைக் குறித்து இரு எதிரிடையான கருத்துக்கள் உள்ளன; இவர் கடவுளுடைய குமாரன், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்பது ஒன்று, அல்லது பிரதான தூதர்கள் என்று சொல்லப்படும் ஏழு பேரில் இவர் ஒருவர் என்பது மற்றொன்று.”
யூத பாரம்பரியத்தின்படி, காபிரியேல், ஜெரமியேல், மிகாவேல், ரகுவேல், ரஃபேல், ஸேரியேல், யுரியேல் ஆகியோரே இந்த ஏழு பிரதான தூதர்கள். மறுபட்சத்தில்,
ஜிப்ரீல், மீகால், இஸ்ரெய்ல், இஸ்ராஃபில் என நான்கு பிரதான தூதர்கள் இருப்பதாக இஸ்லாம் நம்புகிறது. மிக்கேல், காபிரியேல், ரஃபேல், யுரியேல் என நான்கு பிரதான தூதர்கள் இருப்பதாக கத்தோலிக்க மதமும் நம்புகிறது. பைபிள் என்ன சொல்லுகிறது? பல பிரதான தூதர்கள் உள்ளனரா?பைபிளின் பதில்
பிரதான தூதன் என மிகாவேலைத் தவிர, வேறு யாரும் பைபிளில் குறிப்பிடப்படவில்லை; ‘பிரதான தூதன்’ என்ற பதத்தை வேத வசனங்கள் பன்மையில் பயன்படுத்தவுமில்லை. பைபிள் மிகாவேலை பிரதான தூதன் என்று விளக்குவதன்மூலம் அவருக்கு மட்டுமே அந்த பதவிப்பெயர் இருப்பதை உணர்த்துகிறது. எனவே, மற்ற எல்லா தூதர்கள் மீதான முழு அதிகாரத்தையும் யெகோவா தேவன் தம் பரலோக சிருஷ்டிகளில் ஒருவருக்கே, ஒரே ஒருவருக்கே அளித்திருக்கிறார் என்ற முடிவுக்கு வருவது நியாயமானது.
சிருஷ்டிகரல்லாமல், உண்மையுள்ள வேறு ஒரேவொருவருக்கு மட்டுமே தேவதூதர்கள் கீழ்ப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது, அவரே இயேசு கிறிஸ்து. (மத்தேயு 13:41; 16:27; 24:31) ‘கர்த்தராகிய இயேசுவையும் அவருடைய வல்லமையுள்ள தூதரையும்’ குறித்து அப்போஸ்தலன் பவுல் குறிப்பாக சொன்னார். (2 தெசலோனிக்கேயர் 1:8) உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவைக் குறித்து பேதுரு இவ்வாறு விவரித்தார்: “அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.”—1 பேதுரு 3:22.
இயேசுவே பிரதான தூதனாகிய மிகாவேல் என்று ஆணித்தரமாக அடையாளங்காட்டும் எந்தவொரு கூற்றும் பைபிளில் இல்லை என்றாலும், பிரதான தூதனின் அதிகார பொறுப்புடன் இயேசுவை சம்பந்தப்படுத்தி கூறும் ஒரு வசனம் உள்ளது. அப்போஸ்தலன் பவுல் தெசலோனிக்கேயருக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு தீர்க்கதரிசனம் உரைத்தார்: “கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும் [“கட்டளை பிறப்பிக்கும் தொனியோடும்,” NW], பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.” (1 தெசலோனிக்கேயர் 4:16) இந்த வசனம், இயேசு கடவுளுடைய மேசியானிய அரசராக அதிகாரம் பெற்றிருப்பதை விவரிக்கிறது. ஆனாலும், அவர் “பிரதான தூதனுடைய சத்தத்தோடு” பேசுகிறார். அவருக்கு மரித்தோரை உயிர்த்தெழுப்பும் அதிகாரம் உள்ளதையும் கவனியுங்கள்.
இயேசு, பூமியில் மனிதனாக இருந்தபோது பலரை உயிர்த்தெழுப்பினார். அவ்வாறு செய்கையில், கட்டளையிடும் தொனியை பிறப்பிக்க தன் குரலைப் பயன்படுத்தினார். உதாரணமாக, நாயீன் ஊர் விதவையின் இறந்த மகனை உயிர்த்தெழுப்புகையில், “வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன்” என்றார். (லூக்கா 7:14, 15) பின்னர், இயேசு தம் நண்பனாகிய லாசருவை உயிர்த்தெழுப்புவதற்கு சற்று முன்பு, “லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார்.” (யோவான் 11:43) ஆனால் இந்த சந்தர்ப்பங்களில், இயேசுவின் குரல், ஒரு பரிபூரண மனிதனின் குரலாக ஒலித்தது.
தம்முடைய உயிர்த்தெழுதலுக்குப்பின், இயேசு பரலோகத்தில் ஒரு ஆவி சிருஷ்டியாக, “எல்லாவற்றிற்கும் மேலாக” உயர்த்தப்பட்டார். (பிலிப்பியர் 2:9) இனிமேலும் மனிதனாய் இராமல், ஒரு பிரதான தூதனின் குரலை பெற்றிருக்கிறார். ஆகவே ‘கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களுக்காக’ கடவுளுடைய எக்காளம் முழங்கியபோது, இயேசு ‘கட்டளை பிறப்பிக்கும் தொனியை’ பயன்படுத்தினார், இந்த முறை “பிரதான தூதனுடைய சத்தத்தோடு” தொனித்தார். ஒரு பிரதான தூதனே “பிரதான தூதனுடைய சத்தத்தோடு” குரல் கொடுப்பார் என்ற முடிவுக்கு வருவது நியாயமானது.
ஆம், சேராபீன்கள், கேருபீன்கள் போன்ற உயர் நிலையிலுள்ள மற்ற தேவதூத சிருஷ்டிகளும் இருக்கின்றனர். (ஆதியாகமம் 3:24; ஏசாயா 6:2) ஆனாலும், எல்லா தேவதூதர்களுக்கும் தலைமை வகிக்கும் பிரதான தூதன் மிகாவேல், உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு கிறிஸ்து என்றே வேதவசனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. (g02 2/8)