மத உரிமைகளை கிரீஸ் ஆதரிக்கிறது
மத உரிமைகளை கிரீஸ் ஆதரிக்கிறது
முதன்முறையாக, கடந்த வருடம் பெரிய மாநாட்டை நடத்துவதற்கு நம்பர் 1 விளையாட்டு வளாகங்களில் ஒன்றை யெகோவாவின் சாட்சிகள் பயன்படுத்திக் கொள்ள கிரேக்க அரசாங்கம் அனுமதியளித்தது. சுமார் 20,000 பேர் அமரும் வசதிபடைத்த இன்டோர் ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் ஹால் அது. ஏர்கண்டிஷன் வசதியுள்ள இந்த வட்டரங்கு, ஆதன்ஸில் 2004-ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகள் நடக்கவிருக்கும் காம்ப்ளெக்ஸின் ஒரு பகுதியாகும்.
1963-லும் 1988-லும் ஆதன்ஸில் தங்கள் மாநாடுகளை நடத்துவதற்காக பெரிய விளையாட்டு வளாகங்களை யெகோவாவின் சாட்சிகள் ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், அந்த இரண்டு சந்தர்ப்பத்திலும் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் பயமுறுத்துதல்களுக்கு அதிகாரிகள் அடிபணிந்ததால் அவற்றை உபயோகிக்க சாட்சிகளுக்கு அனுமதி வழங்கவில்லை.
வித்தியாசமான விளைவு
வெகு சில இன்டோர் அரங்கங்களில் ஒன்றாகவும், தங்களுக்கு போதுமானளவு பெரியதாகவும் இருக்கும் ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் ஹாலை உபயோகிப்பதற்கு 2001, பிப்ரவரி மாதம் சாட்சிகள் அனுமதி கோரினர். பழையபடி மறுப்பு தெரிவிக்கப்படுமோ என்ற கேள்வியே மலைபோல் நின்றது. பயந்தது போலவே ஆரம்பத்தில் அதிகாரிகள் மறுத்தனர்.
எனினும், நியாயமானவர்கள், தப்பெண்ணம் இல்லாதவர்கள் என நன்கு அறியப்பட்டிருக்கும் உயர் அதிகாரிகளை சாட்சிகள் உடனடியாக அணுகினர். வணங்கவும் சமாதானமாக ஒன்றுகூடவும் அனுமதிக்கும் அரசியலமைப்பு சட்டத்தின் உரிமைகளை ஆதரிக்க அவர்கள் மனமுள்ளவர்களாக இருப்பார்களா? மதத்திலிருந்து வரும் அழுத்தத்தை அவர்கள் எதிர்த்து நிற்பார்களா? ஆம், அவர்கள் ஏமாற்றம் அளிக்கவில்லை; முன்னர் மறுப்பு தெரிவித்ததை ரத்து செய்யும் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது ஸ்போர்ட்ஸ் ஹாலில் 2001, ஜூலை 27-29 தேதிகளில் சாட்சிகள் மாநாட்டை நடத்தும்படி திட்டமிட வாய்ப்பளித்தது.
அதே சமயத்தில், தெஸ்ஸலோனிகியில் அரசாங்க கட்டுப்பாட்டிலுள்ள பலே த ஸ்பார்ட் என்ற மற்றொரு இன்டோர் விளையாட்டு அரங்கையும் பயன்படுத்திக் கொள்ள அதிகாரிகள் சாட்சிகளுக்கு அனுமதி வழங்கினார்கள்.
கடும் எதிர்ப்பு காணும் தோல்வி
ஆதன்ஸில் மாநாடு ஆரம்பமாகும் நாள் நெருங்குகையில் நெஞ்சமெல்லாம் படபடக்கும் கேள்விகள் தொடர்ந்தன: ஆர்த்தடாக்ஸ் குருமாரின் வற்புறுத்தலுக்கு இணங்கிப் போகாமல், கொடுத்த வாக்கை அதிகாரிகள் காப்பாற்றுவார்களா? சட்டவிரோதமான கும்பல்களின் இடையூறின்றி சாட்சிகள் தங்கள் மாநாட்டை அனுபவித்து களிக்க முடியுமா?
மாநாட்டிற்கு இடையூறு விளைவிக்க தூண்டிவிட முயலுவதே காலம் காலமாக ஆர்த்தடாக்ஸ் சர்ச் கையாண்டு வரும் சூழ்ச்சி முறை; அதை அது மறக்கவில்லை. மாநாடு சம்பந்தமாக எந்த அறிவிப்பையும் செய்யக்கூடாது என ஆர்த்தடாக்ஸ் குருமார் கோரியதாக தொலைக்காட்சி நிலையங்கள் தெரிவித்தன. எனினும் முடிவில் சர்ச்சின் முயற்சிகள் தோல்வியடைந்தன.
இரகசிய மதமாக இருப்பதாய் சாட்சிகளை ஆர்த்தடாக்ஸ் சர்ச் குற்றம் சாட்டியிருப்பது வேடிக்கையான விஷயம். ஆனால் அந்த ஸ்போர்ட்ஸ் ஹாலின் உள்ளே என்ன நடந்துகொண்டிருந்தது என்பதை அறியவிடாமல் சர்ச்சுதான் மக்களை உண்மையில் தடுக்க முயன்று கொண்டிருந்தது. மீடியாக்களை சேர்ந்த தைரியமிக்க நிருபர்கள் குருமார்களின் வற்புறுத்துதலுக்கு வளைந்துகொடுக்காதது சந்தோஷத்தை அளித்தது. அவர்கள் மாநாட்டைப் பற்றி விரிவான, பாரபட்சமற்ற அறிக்கையை வெளியிட்டார்கள்.
மேலும், ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் மாநாட்டைப் பற்றிய விவரங்களையும் தங்கள் நம்பிக்கைகளைப் பற்றியும் மக்களிடம் பகிர்ந்துகொண்டார்கள். பிரதிநிதிகள் சென்ற இடமெல்லாம் அவர்கள் அணிந்திருந்த மஞ்சள் பேட்ஜ்களை வைத்து அடையாளம் கண்டுகொள்ளப்பட்டார்கள். யெகோவாவின் சாட்சிகளல்லாத பலர் மாநாட்டுக்கு வரும்படியான அழைப்பை ஏற்றுக்கொண்டு அங்கு வந்திருந்தார்கள்; மாநாட்டின் கடைசி நாளன்று உச்ச எண்ணிக்கையாக அந்த ஸ்போர்ட்ஸ் ஹாலில் 15,760 பேர் கூடியிருந்தார்கள். ஜூலை மாதத்தின் கடைசி இரண்டு வார இறுதி நாட்களில் தெஸ்ஸலோனிகியிலுள்ள பலே த ஸ்பார்ட்டில் நடைபெற்ற இரு மாநாடுகளிலும் மொத்தம் 13,173 பேர் கலந்துகொண்டார்கள்.
பார்த்தோர் பிரமித்தனர்
2,604 பேர் அடங்கிய யெகோவாவின் சாட்சிகளுடைய தொண்டர் படை, சுத்தம் செய்தல், வர்ணம் பூசுதல், மாநாட்டுக்கு தயார்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக ஸ்போர்ட்ஸ் ஹாலை ஆக்கிரமித்ததைக் கண்ட வட்டரங்கு மேனேஜர்கள் இவ்வாறு சொன்னார்கள்: “இந்த இடத்தில் இது வரை சம்பவித்திராத ஒன்றை நேரில் காண இங்கு வந்தோம்.” “முழுமையாக இதைப் புதுப்பிப்பதற்காகவே நீங்கள் ஒவ்வொரு வருடமும் இந்த அரங்கத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று சொன்னார் இன்னொருவர்.
இதைக் கண்ட அந்த ஸ்போர்ட்ஸ் ஹாலின் பொது விவகாரங்களின் இயக்குநர் ஆன்த்ரியாஸ் வார்டாகிஸுக்கு ஆச்சரியம் தாளவில்லை. “நீங்கள் இந்த அரங்கத்தை அலங்கரித்திருக்கிறீர்கள். இங்குள்ள காரியங்களைக் கவனிக்க எங்களிடம் ஆட்கள் இல்லாமல் இல்லை. ஆனால் உங்களுடைய பங்களிப்பு ஊக்குவிப்பாய் அமைந்து இந்த மாநாடு வெற்றிகரமாய் நடக்க வழிசெய்தது” என்றார் அவர்.
மாநாட்டின்போது சமாதானமிக்க இந்தக் கூட்டத்தாரை கட்டுப்படுத்த தன்னுடைய பணியாட்கள் யாரையும் அனுப்ப வேண்டிய தேவை இல்லாததை உணர்ந்த போலீஸ் அதிகாரி “இதைப் போன்று மதிப்பு மரியாதையுடன் நடந்துகொள்பவர்களையும் ஒழுங்கை கடைப்பிடிப்பவர்களையும் இதுவரை பார்த்ததே இல்லை!” என சொல்லி வியந்தார்.
மாநாட்டு சிறப்பு குறிப்பு
மாநாட்டின் முடிவான பேச்சில், யெகோவாவின் சாட்சிகளை “அறியப்பட்ட மத”த்தாராக தேசிய கல்வி மற்றும் மதங்களுக்கான கிரேக்க அமைச்சகம் அங்கீகரித்திருப்பது அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, ஆதன்ஸிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய தேசிய தலைமை அலுவலகத்தை சட்டப்படி அங்கீகரித்திருப்பதையும் அமைச்சகம் தெரிவித்தது. அந்த அரசாங்க ஆவணத்தின் ஒரு பகுதி குறிப்பிட்டதாவது:
“கிறிஸ்தவ யெகோவாவின் சாட்சிகள் அரசாங்கத்தால் அறியப்பட்ட மதத்தாராக கருதப்படுகிறார்கள். . . . இதனால் சட்டப்பூர்வ பயன்கள் அனைத்தும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. முன்குறிப்பிடப்பட்ட அரசமைப்புச் சட்ட பிரிவுக் கூறு, வணக்க சுதந்திரத்தையும், வணக்கத்திற்கான வழி வகைகளையும், ஒவ்வொரு சர்ச்சின் அல்லது மத கூட்டத்தின் நிர்வாக முறை மற்றும் அமைப்பு முறை சம்பந்தமாக தாங்களாகவே தெரிவு செய்யும் உரிமையையும் பாதுகாக்கிறது. இந்தப் பாதுகாப்பு, பரிசுத்தமானதும் கடவுளுடைய வணக்கத்திற்காக பிரதிஷ்டை செய்யப்பட்டதுமான மாரூசி [யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலக] கட்டடங்களுக்கும் வளாகங்களுக்கும் தெளிவாகவே பொருந்துகிறது. இத்தகைய வளாகங்கள் பெத்தேல் அதாவது ‘கடவுளுடைய வீடு’ என அழைக்கப்படுகின்றன.”
யெகோவாவின் சாட்சிகளும் மத சுதந்திரத்தை விரும்பும் ஒவ்வொருவரும் இந்த முன்னேற்றங்களுக்காக நன்றியுள்ளவர்களாய் இருக்கிறார்கள். அதன் விளைவாக “இறைப்பற்றும் கண்ணியமும் நிறைந்தவர்களாய், தொல்லையின்றி அமைதியோடு” கிறிஸ்தவ வாழ்க்கையை மக்கள் தொடர வேண்டும் என்பதே அவர்களுடைய பிரார்த்தனையாக உள்ளது.—1 தீமோத்தேயு 2:1, 2, பொ.மொ. (g02 2/22)
[பக்கம் 26-ன் படங்கள்]
ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் ஹாலில் கூடியிருக்கும் சாட்சிகள்
[படத்திற்கான நன்றி]
Harry Bilios