Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வழிவழியாய் வந்த வாசனைத் திரவியம்

வழிவழியாய் வந்த வாசனைத் திரவியம்

வழிவழியாய் வந்த வாசனைத் திரவியம்

மெக்ஸிகோவிலுள்ள விழித்தெழு! எழுத்தாளர்

வாசனைத் திரவியத்திற்கு பழமையான வரலாறு உண்டு. மத சடங்குகளில் நறுமணப் புகையூட்ட மர பிசின்களை எரித்த சமயத்திலிருந்து பூர்வீக நறுமணமூட்டுதல் தொடங்கியதாக கருதப்படுகிறது. வாசனைத் திரவியத்தைப் பற்றிய ஆரம்ப கால பதிவு எகிப்திடம் அழைத்து செல்கிறது. பார்வோன் டூடன்காமனின் கல்லறை திறக்கப்பட்டபோது, 30-⁠க்கும் அதிக நூற்றாண்டுகள் கடந்திருந்தபோதிலும் ஓரளவு மணத்தை இழக்காமல் இருந்த வாசனைத் திரவியங்கள் 3,000-⁠க்கு அதிகமான ஜாடிகளில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது!

பொது சகாப்தத்திற்கு 1,500 வருடங்களுக்கு முன்பு, இஸ்ரவேல ஆசாரியர்கள் உபயோகித்த சுத்தமான அபிஷேக தைலத்தைத் தயாரிப்பதற்கு கடவுள் கொடுத்த செய்முறையில் ‘தலைசிறந்த நறுமணப் பொருள்களும்’ (பொ.மொ.) இடம் பெற்றிருந்தன. (யாத்திராகமம் 30:23-33) எபிரெயர்கள் வாசனைமிக்க களிம்புகளை ஒப்பனைக்காகவும் மருத்துவ நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தியதோடு இறந்தவர்களின் உடல்களை அடக்கத்திற்கு தயார்படுத்துகையில் அவற்றை தொற்று நீக்கிகளாகவும் நாற்றம் நீக்கிகளாகவும் பயன்படுத்தினார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. உதாரணமாக, இயேசுவின் உடலுக்குப் பயன்படுத்த கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் பெண்கள் கல்லறைக்கு எடுத்துச் சென்றார்கள். (லூக்கா 23:56; 24:1) இஸ்ரவேலருடைய வீட்டில் விருந்தாளியின் பாதங்களில் பரிமள தைலம் பூசுவது உபசரிக்கும் செயலாக கருதப்பட்டது.​—லூக்கா 7:37-46.

முதல் நூற்றாண்டில் ரோம், ஒரு வருடத்தில் சுமார் 2,800 டன் சாம்பிராணியையும் 550 டன் வெள்ளைப்போளத்தையும் உபயோகித்ததாக சொல்லப்பட்டது. இப்படிப்பட்ட மணம் கமழும் நறுமணக் கலவை பொருட்கள் குழந்தை இயேசுவுக்கு காணிக்கைகளாக கொண்டுவரப்பட்டன. (மத்தேயு 2:1, 11) பொ.ச. 54-⁠ல், விருந்து நடைபெறும் இடமே கமகமவென மணம் வீச, ரோம பேரரசர் நீரோ 46,00,000 ரூபாய்க்கு சமமான பணத்தை வாரியிறைத்தார். அவருடைய உணவு அறைகளில் மறைவாக வைக்கப்பட்டிருந்த குழாய்கள் தூறல் போல் நறுமண நீரை விருந்தினர்களின் மீது தெளித்தன. பொ.ச. ஏழாம் நூற்றாண்டு முதல் நறுமண துகள்கள் அடங்கிய சிறுபைகள் உட்பட வாசனைப் பொருட்களை சீனர்கள் உபயோகிக்க ஆரம்பித்தார்கள். இடைக்காலத்தில் இஸ்லாமிய கலாச்சாரத்திலும் வாசனைத் திரவியங்கள் அதிலும் முக்கியமாய் பன்னீர் சென்ட்டுகள் புழக்கத்திற்கு வந்தன.

பிரான்ஸில் 17-⁠ம் நூற்றாண்டில் நறுமண தொழிற்சாலை ஸ்திரமாக கால் பதித்ததால் பதினைந்தாம் லூயியின் அரசவை மணம் கமழும் மாமன்றம் என அழைக்கப்பட்டது. உடலில் மட்டுமல்லாமல் உடைகள், கையுறைகள், ஃபேன்கள், ஃபர்னிச்சர்கள் ஆகியவற்றிலும் சென்ட்டுகள் மணம் பரப்பின.

கலோன் (Cologne) எனும் ஒருவகை வாசனைத் திரவியம் 18-⁠ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இது குளியல் நீரில் சேர்க்கப்பட்டது, ஒயினில் கலக்கப்பட்டது, வாய் துர்நாற்றத்தைப் போக்க சர்க்கரை கட்டியுடன் சுவைக்கப்பட்டது, மலக்குடல் கழுவல்களிலும் வீக்கங்களில் வைத்து கட்டுவதற்கும் மருத்துவ ரீதியாக பயன்படுத்தப்பட்டது. 19-⁠ம் நூற்றாண்டில், செயற்கை நறுமணப் பொருட்கள் பிறக்க ஆரம்பித்தன. இவ்வாறு மருத்துவத்திற்குப் பயன்படாத முதல் வாசனைத் திரவியங்கள் வியாபார களத்தில் இறங்கின. இன்று நறுமணமூட்டுதல் பலகோடி டாலர் முதலீடு செய்யப்படும் வியாபாரமாக சக்கைப் போடு போடுகிறது. a (g02 2/8)

[அடிக்குறிப்பு]

a ஆகஸ்ட் 8, 2000 தேதியிட்ட இதழில் வாசனைத் திரவிய ஒவ்வாமை பற்றிய விஷயம் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

[பக்கம் 31-ன் படம்]

எகிப்தில், டூடன்காமன் கல்லறையில் இருந்த பொ.ச.மு. 14-⁠ம் நூற்றாண்டின் வாசனைத் திரவிய ஜாடி

[படத்திற்கான நன்றி]

Werner Forman/Egyptian Museum, Cairo, Egypt/Art Resource, NY

[பக்கம் 31-ன் படம்]

பொ.ச.மு. 5-⁠ம் நூற்றாண்டில் கிரீஸ்

[படத்திற்கான நன்றி]

Musée du Louvre, Paris

[பக்கம் 31-ன் படம்]

பொ.ச. 18-⁠ம் நூற்றாண்டில் பிரான்ஸ்

[படத்திற்கான நன்றி]

Avec lʹaimable autorisation du Musée de la Parfumerie Fragonard, Paris

[பக்கம் 31-ன் படம்]

நவீன வாசனைத் திரவிய பாட்டில்