Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

மீன் தோல் காலணி

பெருவிலுள்ள ஆண்டிஸ் மலைகளில் அமைந்துள்ள ஒரு புதிய தொழிற்சாலையில் டிரவுட் மீன் தோலிலிருந்து ஷூக்கள் தயாரிக்கப்படுவதாக லிமாவின் செய்தித்தாளான எல் கோமெர்ஸியோ அறிக்கை செய்கிறது. மீன் முட்டை பொரிக்கும் இடங்களிலிருந்து அல்லது மீன் வளர்க்கும் பண்ணைகளிலிருந்து பெறப்படும் மீன் தோல்கள் சுத்தம் செய்யப்பட்டு, இயற்கையான இரசாயனங்களால் பதனிடப்படுகின்றன. பிறகு எண்ணெய் பூசப்பட்டு, மஞ்சள், காச்சனில் அல்லது ஆக்கியாடே ஆகியவற்றால் இயற்கை சாயமிடப்படுகின்றன. இவ்வாறு செய்வதால் தோலிலிருக்கும் அழகான டைமண்ட் வடிவங்கள் சேதமடைவதில்லை; இதை “பர்சுகள், வாலட்டுகள், உவாட்ச் ஸ்டிராப்புகள் அல்லது செல்ஃபோன் கவர்கள்” செய்வதற்கும் பயன்படுத்தலாம். இத்திட்டத்தை செயல்படுத்திய தொழில் பொறியாளரான பார்பாரா லேயோன் இவ்வாறு கூறுகிறார்: “குரோமியம் போன்ற செயற்கையான பதனிடும் பொருட்கள் எதையும் பயன்படுத்தாதிருப்பதே மிக முக்கியம். இது தூய்மைக்கேடு பிரச்சினைகளை தவிர்க்கிறது, இதனால் டிரவுட் மீனின் தோல் முற்றுமுழுக்க சூழலியலை சேதப்படுத்தாத பொருளாகிறது.” (g02 3/8)

இன்றும், வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்!

லண்டனின் தி இன்டிபென்டன்ட் இவ்வாறு அறிக்கை செய்கிறது: “தினமும் கொஞ்சம் நகைச்சுவை என்ற கணக்கில் நான்கு வாரங்களுக்கு சிரித்தால் மனச்சோர்வின் அறிகுறிகள் வெகுவாய் குறைவதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நோய் சிகிச்சைக்கான நகைச்சுவை துணுக்குகளுள்ள டேப்புகளை ஒரு நாளைக்கு 30 நிமிடம் கேட்கும்படி கூறப்பட்ட சில நோயாளிகள் குணமடைந்தனர்; மற்றவர்களுடைய நோய் அறிகுறிகளின் கடுமை ஏறக்குறைய பாதியாக குறைந்தது.” நகைச்சுவையால் பிறக்கும் சிரிப்பு நல்ல பயனளிக்கலாம் என்பதை ஐக்கிய மாகாணங்களில் செய்யப்பட்ட 100-⁠க்கும் அதிகமான ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. மனச்சோர்வடைந்தோர் மட்டுமல்ல, அலர்ஜி, உயர் இரத்த அழுத்தம், நோய்தடுப்பு சக்தி பலவீனமடைந்தோர், புற்றுநோய், மூட்டு அழற்சி போன்றவற்றால் அவதிப்படுவோரும்கூட பயனடைந்திருக்கின்றனர். நகைப்பு நல்லாரோக்கியத்திற்கு உதவுவது பல காலமாக அறியப்பட்டுள்ளது, ஆனால் எவ்வாறு என்பதுதான் இன்னும் பிடிபடவில்லை. என்றாலும், சைக்கோதெரபிஸ்டான டாக்டர் எட் டன்கல்பளாவு சில எச்சரிப்பு குறிப்புகளையும் கூறுகிறார்: இளக்காரமாகவும், நக்கலாகவும் சிரிப்பதை தவிருங்கள், அளவுக்கு அதிகமாகவும் சிரிக்காதீர்கள். அப்படி செய்தால், நோயின் கடுமையை நாம் புரிந்துகொள்ளவில்லை என நோயாளி நினைக்கலாம். (g02 3/8)

‘மதத்திற்கு இரண்டாவது இடம்’

பிரேஸிலிலுள்ள நகர்ப்புற ஏழைகள் மத்தியில் சமீபத்தில் ஒரு சர்வே நடத்தப்பட்டது. அவர்களுள் 67 சதவிகிதத்தினர் தங்களைக் கத்தோலிக்கர் என சொல்லிக் கொண்டாலும் 35 சதவிகிதத்தினர் மட்டுமே இயேசு, மரியாள், சர்ச் போதகம் போன்றவற்றில் நம்பிக்கை இருப்பதாக கூறினர் என அது சுட்டிக்காட்டியது. அதைவிட குறைவான 30 சதவிகிதத்தினரே ஒவ்வொரு வாரமும் சர்ச் ஆராதனைக்கு செல்கின்றனர். பிரேஸிலிய பிஷப்புகளின் தேசிய மாநாடு இந்த சர்வேக்கு ஏற்பாடு செய்திருந்தது. திருமணத்திற்கு முன் பாலுறவு (44 சதவிகிதம்), விவாகரத்து (59 சதவிகிதம்), மறுமணம் (63 சதவிகிதம்), கருத்தடை சாதனங்களை உபயோகிப்பது (73 சதவிகிதம்) போன்றவற்றில் சர்ச்சின் போதகங்களை அநேகர் ஏற்கவில்லை என்பதையும் அது காண்பித்தது. பாதிரிகளின் பற்றாக்குறை, பிரேஸிலின் கல்வித்துறை மீதான அதன் பிடி தளர்ந்து வருவது, சாரமற்ற போதனைகள் போன்றவற்றினாலேயே சர்ச்சின் செல்வாக்கு குறைவதாக இறைமையியல் வல்லுனர் செவரினோ விசேன்டா கருதுகிறார். “கத்தோலிக்கரின் புதிய தலைமுறை சார்பியலை கற்றிருக்கிறது, மதத்திற்கு இரண்டாவது இடத்தையே தருகிறது” என அவர் கூறுகிறார். (g02 3/8)

கோழித்தூக்கத்தின் மகிமை

மதியவேளை மயக்கத்தை மேற்கொள்ள “பத்து நிமிட கோழித்தூக்கம்” மிகச் சிறந்தது என பிரிட்டனின் லஃப்பரா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தூக்க வல்லுனர் பேராசிரியர் ஜிம் ஹார்ன் கூறுவதாக லண்டனின் த டைம்ஸ் அறிக்கை செய்கிறது. “இதுவும் மற்ற சிகிச்சையைப் போலவேதான், கஷ்டப்படும் சமயத்தில் சிகிச்சை அளித்தால் அதிக பலன் தரும்” என ஹார்ன் கூறுகிறார். ஐக்கிய மாகாணங்களிலுள்ள சில கம்பெனிகள் கோழித்தூக்கத்திற்காகவே பிரத்தியேக அறைகளை ஒதுக்கியுள்ளன; அங்கே மெத்தைகள், போர்வைகள், தலையணைகள், பணியாளர்களுக்கு இதமளிக்கும் இசை, 20 நிமிடத்திற்கு ஒரு முறை ஒலிக்கும் கடிகாரங்கள் போன்றவை உள்ளன. ஆனால் சற்று அதிகமாக, ஒருவேளை 25 நிமிடங்கள் தூங்கிவிட்டாலோ இன்னும் மோசமாக உணருவீர்கள் என பேராசிரியர் ஹார்ன் எச்சரிக்கிறார். “பத்து நிமிடத்திற்கு மேல் தூங்கினால் இரவாகிவிட்டது என நம் உடல் நினைக்க ஆரம்பித்துவிடும், ஆழ்ந்த தூக்கம் வந்துவிடும்” என்கிறார் அவர். (g02 3/8)

உடல் பருமனும் புற்றுநோயும்

“மேலை நாடுகளில் புகைபிடிக்காதவர்களை பொறுத்தமட்டில், புற்றுநோயைத் தடுப்பதற்கான ஒரு முக்கிய வழி குண்டாயிருப்பதைத் தவிர்ப்பே” என லண்டனின் த டைம்ஸ் அறிக்கை செய்கிறது. புகைபிடிக்காத இவர்கள் தங்கள் எடையை குறைப்பதோடுகூட, தங்கள் பழக்கவழக்கத்தில் மாற்றங்களை செய்கையில் அவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு பாதியாக குறைவதாய் ஐம்பது வருடங்களாக செய்த ஆராய்ச்சிகள் காண்பித்துள்ளன. “நீங்கள் புகைபிடிக்காதவர் என்றால் இரண்டு காரியங்களுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும்; ஒன்று, குண்டாயிருப்பது, இரண்டு வயிற்றிலும், கருப்பை கழுத்திலும் புற்றுநோய் உண்டாக்கும் வைரஸ்கள் இருப்பது” என பிரிட்டனின் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜூல்யன் பிடோ கூறுகிறார். “உணவைக் கட்டுப்படுத்தினால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைவதாக மிருகங்களில் செய்த பரிசோதனைகள் காட்டுகின்றன” என்கிறார் அவர். ஒருவரது வயது, பால், உயரம், உடற்கட்டு ஆகியவற்றிற்கு ஏற்ப இருக்க வேண்டிய எடையைவிட 20 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருந்தால் அவர் மருத்துவ அளவீடுகளின்படி குண்டாயிருப்பதாக கருதப்படுகிறார். (g02 3/8)

திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ்வது

“திருமணத்திற்கு முன்பே சேர்ந்து வாழ்ந்த பெற்றோர், பிரிந்து செல்வதற்கு இரண்டு மடங்கு அதிக வாய்ப்புள்ளது” என கனடாவின் நேஷனல் போஸ்ட் கூறுகிறது. ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது, பெற்றோர் ஒருவர் மேல் மற்றவருக்குள்ள பொறுப்புணர்ச்சியை உணர்ந்திருப்பதற்கு அடையாளமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்த்தனர் என்று ஹெதர் ஜூபி கூறினார்; இவர் ஸ்டெடிஸ்டிக்ஸ் கனடா நடத்திய ஓர் ஆராய்ச்சிக்கு உதவி ஆசிரியராக இருந்தார். “ஆனால், சேர்ந்து வாழ தயாராயிருக்கும் தம்பதிகள் பிரிந்து செல்லவும் அதேயளவு தயாராக இருக்கின்றனர்” என அவர் கூறினார். திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ்ந்தோரில் 25.4 சதவிகிதத்தினர் பிரிந்து சென்றனர், ஆனால் திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழாதோரில் 13.6 சதவிகிதத்தினரே பிரிந்து சென்றனர் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். “முதலில் சேர்ந்து வாழ்பவர்கள் நிலையற்ற உறவுகளையே வளர்க்கின்றனர்; ஏனெனில், சேர்ந்து வாழ தயாராயிருப்போர் திருமணத்திற்குரிய பொறுப்புணர்ச்சியை அந்தளவுக்கு மதிக்காதவராக இருக்கலாம்” என்கிறார் ஜூபி. (g02 3/8)

இன்டர்நெட்டில் சவ அடக்க ஆராதனை

நிஜம்போல் தோன்றும் கல்லறைகளை சைபர்ஸ்பேஸில் சென்று பார்க்க ஓர் இன்டர்நெட் கம்பெனி வாய்ப்பளிப்பதாக த ஜப்பான் டைம்ஸ் அறிக்கையிடுகிறது. இறந்தவரின் நண்பர்களும் உறவினர்களும் இன்டர்நெட்டிலேயே அவருக்கு தங்கள் மரியாதையை செலுத்தலாம். இறந்தவரின் புகைப்படமும் அவரைப் பற்றிய சில விவரங்களும் உள்ள கல்லறைக் கல் ஒன்று கம்ப்யூட்டர் திரையில் தோன்றும். இன்டர்நெட்டில் அதைப் பார்ப்பவர் தான் விரும்பும் செய்தியை எழுத அதில் கொஞ்சம் இடமும் இருக்கும். புத்த மதத்தினருக்கும் இதில் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது; அந்தக் ‘கல்லறையில்’ பழங்கள், பூக்கள், ஊதுபத்திகள், மதுபானங்கள் ஆகிய படையல்களை செலுத்த ‘மௌஸை’ அழுத்தினாலே போதும். “வெளி நாடுகளில் வாழ்வதால் கல்லறைகளுக்கு அடிக்கடி செல்ல முடியாத பலருக்கு இது மிகவும் வசதியான ஏற்பாடு என சிலர் கூறுகின்றனர்” என்று இன்டர்நெட்டில் நினைவஞ்சலி செலுத்த உதவும் கம்பெனியின் தலைவரான தாடாஷி வாடானாபி கூறுகிறார். (g02 3/22)

ஆர்க்டிக் எச்சரிக்கை

“நம் பூமியின் ‘மென்மையான’ ஆர்க்டிக் பகுதியில் நிகழும் தொழில் வளர்ச்சி குறையவில்லை என்றால் இந்நூற்றாண்டு பாதி முடிவதற்குள் அதில் 80 சதவிகிதம் வரை பெரும் நாசமடைந்துவிடும்” என கனடாவைச் சேர்ந்த த குளோப் அண்டு மெயில் செய்தித்தாள் கூறுகிறது. ஆர்க்டிக் பகுதி முழுவதிலும் இத்தனை வருடங்களாக நிகழ்ந்து வந்த மனித வளர்ச்சிகளின் விளைவுகளைப் பற்றி ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது. அங்கு 1940 முதல் 1990 வரை ஏற்பட்ட தொழில் வளர்ச்சி அதே வேகத்தில் தொடர்ந்தால், விளைவுகள் படுமோசமாக இருக்கும் என அந்த அறிக்கை கூறுகிறது. ஆர்க்டிக் பகுதியிலுள்ள அநேக மிருகங்கள் இடம்பெயரும் இயல்புடையவை என்பதால் இந்தச் சேதம் மற்ற இடங்களுக்கும் பரவலாம் என்று சொல்லப்படுகிறது. “தொழில் வளர்ச்சியின் விளைவாக இந்த உலகின் ஆர்க்டிக் பகுதியில் 10 முதல் 15 சதவிகிதம் இப்பொழுதே [படுமோசமாக] பாதிக்கப்பட்டுள்ளது” என்றும் அந்த செய்தித்தாள் கூறுகிறது. (g02 3/22)

விவரமறிந்த சம்மதம் ஊர்ஜிதம் செய்யப்படுகிறது

ஒரு நோயாளி விவரமறிந்த சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால் அவருக்கு இரத்தமேற்ற முடியாது என ஜனவரி 1991-⁠ல் இத்தாலிய உடல்நல அமைச்சகம் ஓர் ஆணை பிறப்பித்தது. பத்து வருடங்களுக்கு பிறகு இப்போது அதை மறுபடியும் ஊர்ஜிதம் செய்துள்ளது. “இரத்தத்தையோ, இரத்த கூறுகளையோ மேலும்/அல்லது இரத்தத்திலிருந்து எடுக்கப்பட்டவற்றையோ ஏற்றுவதில் ஆபத்துள்ளது என்பதை அவருக்குத் தெரிவித்த பிறகு, ஒருவர் தனது சம்மதத்தை அல்லது மறுப்பை எழுத்தில் தெரிவிக்க வேண்டும்” என காட்செடா உஃபிசியாலெ டேலா ரேபுப்லிகா இடால்யானா (இத்தாலிய குடியரசின் அரசாங்க அரசிதழ்)-⁠ல் வெளியான, 2001, ஜனவரி 25, தேதியிட்ட அந்த ஆணை கூறுகிறது. (g02 3/22)

கர்ப்பிணிகள் தாக்கப்படுகிறார்கள்

“கர்ப்ப காலத்தில் பொதுவாக ஏற்படும் மற்ற எந்த உடல்நல உபாதைகளையும்விட, உடன் வாழும் ஆண்கள் தாக்குவதே தாய்க்கும் சேய்க்கும் அதிக சேதத்தை ஏற்படுத்துவதாக இப்போது ஒப்புக்கொள்ளப்படுகிறது” என லண்டனின் தி இன்டிபென்டன்ட் கூறுகிறது. “பெண்கள் மீதான தாக்குதல்களில் மூன்றில் ஒரு பங்கு கர்ப்ப காலத்தில்தான் முதன்முறை நிகழ்வதாக பிரிட்டனில் குடும்ப வன்முறை பற்றி ராயல் காலேஜ் ஆஃப் ஆப்ஸ்டடிரீஷியன்ஸ் . . . நடத்திய ஆராய்ச்சி காண்பித்தது. பிறக்கப் போகும் குழந்தை காரணமாக தூண்டப்படும் பொறாமையே சில ஆண்களை வன்முறையில் ஈடுபட தூண்டுவதாக பெருகிவரும் அத்தாட்சி காட்டுகிறது.” “பிரிட்டிஷ் கூட்டரசிற்கான எண்ணிக்கையை பார்த்தபோது நாங்கள் அதிர்ந்துபோனோம்” என ராயல் காலேஜ் ஆஃப் ஆப்ஸ்டடிரீஷியன்ஸைச் சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் டிரைஃப் கூறினார். ஐக்கிய மாகாணங்களில் செய்யப்பட்ட இதேபோன்ற ஓர் ஆராய்ச்சி, அந்நாட்டில் நிகழும் கர்ப்பிணி பெண்களின் மரணத்தில் 5-⁠ல் ஒன்றிற்கு கொலையே காரணம் என்பதை காண்பித்தது; இதுவே அங்கு, “கர்ப்பிணி பெண்களின் மரணத்திற்கு முக்கிய காரணமாகும்.” (g02 3/22)