என்னை விட்டுப் போனது என் பிறவாக் குழந்தை
என்னை விட்டுப் போனது என் பிறவாக் குழந்தை
அன்று, ஏப்ரல் 10, 2000, திங்கட்கிழமை; வெயில் அடித்ததால் கதகதவென்று இருந்தது; ஆகவே சில வேலைகளை செய்வதற்காக வெளியே கிளம்பினேன். கர்ப்பமாகி இருந்த எனக்கு நான்காவது மாதம் அப்பொழுதுதான் தொடங்கியிருந்தது; உடம்பிலோ அவ்வளவு தெம்பு இல்லாதபோதிலும், வெளியில் சென்று வர எனக்குப் பிடித்திருந்தது. பிறகு, மளிகைக் கடையில் சாமான் வாங்கிவிட்டு பணம் கொடுக்க வரிசையில் காத்திருந்தபோது, எனக்கு என்னவோ செய்தது.
நான் வீடு திரும்பியதும் எனக்கிருந்த பயம் உறுதியானது. எனக்கு இரத்தப் போக்கு ஏற்பட்டது. மற்ற இரண்டு பிள்ளைகளை வயிற்றில் சுமந்த போதெல்லாம் இவ்வாறு ஏற்படவில்லை. எனவே எனக்கு நடுக்கம் எடுத்தது! என் டாக்டரை அழைத்தேன்; ஆனால், மறுநாள் அவரை பார்க்க ஏற்கெனவே அப்பாய்ண்ட்மென்ட் வாங்கியிருந்ததால் அதுவரை கொஞ்சம் பொறுத்துக்கொள்ள சொன்னார். என் கணவரும் நானும் சேர்ந்து எங்கள் இரு பிள்ளைகளையும் தூங்க வைப்பதற்கு முன்பு எல்லாருமாக சேர்ந்து ஜெபித்தோம்; எங்களுக்கு எந்த விதத்தில் பலம் தேவைப்படுமோ அதைத் தருமாறு யெகோவாவிடம் கேட்டோம். ஒருவழியாக நான் தூங்கிவிட்டேன்.
ஆனால் இரண்டு மணிவாக்கில், தாங்க முடியாதளவு வலி எடுத்ததால் விழித்துக்கொண்டேன். அந்த வலி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிட்டது; ஆனால் தூங்கியவுடன் மறுபடியும் தலைகாட்டியது; இந்த முறை தவறாமல் விட்டுவிட்டு வலித்துக் கொண்டே இருந்தது. இரத்தப் போக்கும் அதிகரித்தது; கர்ப்பப்பை சுருங்குவதை உணர்ந்தேன். இப்படி வலி வருமளவிற்கு நான் என்ன செய்தேன் என்று யோசித்து யோசித்து பார்த்தேன்; ஆனால் அப்படி எதுவும் செய்ததாக என் நினைவிற்கு வரவில்லை.
காலை ஐந்து மணிவாக்கில், ஆஸ்பத்திரிக்குப் போயே ஆக வேண்டும் என்று எனக்குத் தெரிந்துவிட்டது. நானும் என் கணவரும் அங்குப் போனபோது, அதிக தயவும், உதவும் மனமும், சூழ்நிலையை புரிந்து நடந்துகொள்ளும் குணமும் படைத்த அவசர அறை ஊழியர்களின் உதவி எங்களுக்கு கிடைத்ததால் நிம்மதிப் பெருமூச்சு விட்டோம்; பின்பு, இரண்டு மணிநேரம் கழித்து, எது நடக்கக்கூடாது என நாங்கள் பயந்து நடுங்கினோமோ அதுவே நடந்துவிட்டது. ஆம் என் பிள்ளை என் வயிற்றில் தங்கவில்லை.
ஆரம்பத்திலேயே அதற்கான அறிகுறிகள் தெரிந்ததால், இப்படி நடக்கும் என்று எதிர்பார்த்தே இருந்தேன்; அதனால் அந்தச் செய்தியை ஓரளவுக்கு ஜீரணிக்க முடிந்தது. அத்துடன், என் கணவரும் கடைசிவரை என் கூடவே இருந்தது எனக்கு தெம்பளித்தது. ஆனால் இப்போதோ பிள்ளை இல்லாமல் வெறுங்கையுடன் வீட்டிற்குத் திரும்ப வேண்டியதை நினைத்து கலங்கினோம், எங்கள் இரு பிள்ளைகளிடமும் என்ன சொல்வோம் என்று குழம்பினோம்; மூத்தவள் கேட்லினுக்கு ஆறு வயது, இளையவன் டேவிட்டுக்கு நாலு வயது.
பிள்ளைகளிடம் என்ன சொல்வது?
பிள்ளைகள் தூங்கச் சென்றுவிட்டார்கள்; ஆனால் ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டது என அவர்களுக்கு தெரிந்தது. ஆகவே அவர்களுடைய எதிர்கால தம்பியோ தங்கையோ இறந்துவிட்டதை எப்படி அவர்களிடம் நாங்கள் சொல்வோம்? அவர்களிடம் எதையும் மறைக்காமல் உள்ளதை உள்ளபடி சொல்லிவிடுவதென முடிவு செய்தோம். இந்த விஷயத்தில் என் அம்மா எங்களுக்கு பெரிதும் உதவினார்கள். எப்படியெனில், நாங்கள் வீடு திரும்பும்போது குழந்தையோடு வரப்போவதில்லை என்று பிள்ளைகளிடம் ஏற்கெனவே சொல்லி வைத்திருந்தார்கள். நாங்கள் வீட்டிற்குள் நுழைந்ததும் அவர்கள் ஓடோடி வந்து எங்களைக் கட்டிப் பிடித்து முத்த மழை பொழிந்தார்கள். அவர்கள் கேட்ட முதல் கேள்வி, “பாப்பா நல்லா இருக்குதா?” என்பதே. என்னால் பதில் சொல்ல முடியவில்லை; ஆனால் என் கணவர், எங்களையெல்லாம் சேர்த்து கட்டிக்கொண்டு, “பாப்பா இறந்துவிட்டது” என்று சொன்னார். நாங்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அழுதோம்; அதற்குப் பிறகுதான் எங்கள் பாரம் சற்று குறைந்து வேதனையும் தணிய ஆரம்பித்தது.
என்றாலும் இது எங்கள் பிள்ளைகளை மிகவும் பாதிக்கும் என்று கொஞ்சங்கூட எதிர்பார்க்கவில்லை. உதாரணமாக, எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டு சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு, நாங்கள் செல்லும் யெகோவாவின் சாட்சிகளுடைய
சபையில் ஓர் அறிவிப்பு செய்தார்கள். எங்கள் குடும்பத்தின் நெருங்கிய நண்பரான, வயதான சாட்சி ஒருவர் இறந்துவிட்டார் என்பதே அந்த அறிவிப்பு. இதைக் கேட்டு நான்கு வயதான டேவிட் தேம்பி தேம்பி அழுதான்; அதனால் என் கணவர் அவனை வெளியே தூக்கிக் கொண்டு சென்றுவிட்டார். அவன் அமைதியானதும், அந்த நண்பர் ஏன் இறந்துவிட்டார் என்று கேட்டான். பிறகு, பாப்பா ஏன் இறந்துவிட்டது என்று கேட்டான். அடுத்து, “நீங்களும் இறந்துவிடுவீர்களா?” என்று தன் அப்பாவிடம் கேட்டுவிட்டான். யெகோவா தேவன், சாத்தானை இன்னும் அழிக்காமல் ஏன் விட்டுவைத்திருக்கிறார், “எல்லாவற்றையும் சரி செய்து” விடாமல் ஏன் இருக்கிறார் என தெரிந்து கொள்ளவும் விரும்பினான். அந்தப் பிஞ்சு மனதிற்குள் எப்படியெல்லாம் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன என்று நினைத்து நாங்கள் நிஜமாகவே ஆச்சரியப்பட்டோம்.கேட்லினும் நிறைய கேள்விகள் கேட்டாள். அவள் பொம்மைகளை வைத்து விளையாடுகையில், எப்போதும் ஒரு பொம்மைக்கு உடல்நிலை சரியில்லாதது போலவும், மற்ற பொம்மைகள் நர்சுகளாக, குடும்பத்தாராக இருப்பது போலவுமே விளையாடினாள். அவள் தயாரித்திருந்த அட்டை பெட்டிதான் பொம்மைகளின் ஆஸ்பத்திரி; அவ்வப்பொழுது ஏதாவது ஒரு பொம்மை இறந்துவிட்டதாகவும் பாவித்துக் கொள்வாள். எங்கள் பிள்ளைகளின் கேள்விகளும் விளையாட்டும், வாழ்க்கை பற்றியும், சோதனைகளை சமாளிக்க பைபிள் நமக்கு உதவும் விதம் பற்றியும் முக்கியமான பாடங்களை அவர்களுக்கு கற்பிக்க எங்களுக்கு அநேக வாய்ப்புகளை அளித்தன. இந்தப் பூமியை, எவ்வித வேதனையும் வருத்தமும், ஏன் மரணமும்கூட இல்லாத ஓர் அழகிய பரதீஸாக மாற்றவிருக்கும் கடவுளுடைய நோக்கத்தையும் அவர்களுக்கு நினைப்பூட்டினோம்.—வெளிப்படுத்துதல் 21:3, 4.
இழப்பை நான் எப்படி சமாளித்தேன்
ஆஸ்பத்திரியிலிருந்து வீடு திரும்பிய புதிதில், என் உணர்ச்சிகள் யாவும் மரத்துப்போய், குழம்பிய நிலையில் இருந்தேன். செய்வதற்கு வேலைகள் தலைக்குமேல் இருந்தன; ஆனால் எதை முதலில் செய்வது என்று நினைத்தபோது தலைசுற்றியது. அநேக நண்பர்களை அழைத்தேன்; அவர்களும் என்னைப் போல் பிள்ளையைப் பறிகொடுத்தவர்கள்; அவர்கள் எனக்கு ஆறுதல் சொன்னார்கள். ஒரு சிநேகிதி எங்களுக்கு மலர்க்கொத்தை அனுப்பி, மதியம் பிள்ளைகளை அழைத்துச் சென்று தான் பார்த்துக்கொள்வதாக தெரிவித்தார். எனக்காக அவர் எடுத்துக்கொண்ட கனிவான சிரத்தைக்கும் செய்த நடைமுறை உதவிக்கும் நான் மனதார நன்றி தெரிவித்தேன்!
குடும்ப போட்டோக்களைப் பார்த்து எடுத்து ஆல்பத்தில் வைத்தேன். அந்த குழந்தைக்கு ஆசை ஆசையாக போட்டுப் பார்க்க நினைத்திருந்த துணிமணிகளை எடுத்து எடுத்துப் பார்த்தேன்; என்னைவிட்டுப் போய்விட்ட குழந்தையின் ஞாபகமாக என்னிடமிருந்தவை அவை மட்டும்தான். பல வாரங்களுக்கு அவ்வப்போது திடீரென அழுவதும் அமைதியாவதுமாக என் வாழ்க்கை கழிந்தது. சில சமயங்களில் குடும்பத்தாரும் நண்பர்களும் எவ்வளவோ ஆறுதல் சொன்னபோதும் அழுகையை அடக்க முடியவில்லை. சில சமயங்களில், எனக்குப் பைத்தியம் பிடித்துவிடப் போவதாகவே நினைத்ததுண்டு. கர்ப்பிணிகளாய் இருந்த சிநேகிதிகளைப் பார்த்தபோது நெஞ்சு இன்னும் கனத்தது. முன்பெல்லாம், கருச்சிதைவு என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் தோன்றி மறையும் ‘நீர்க்குமிழி’ போன்றதுதான், அப்படி ஒன்றும் அது பெரிய பிரச்சினையாய் இருக்காது என்று நானாகவே கற்பனை செய்ததுண்டு. ஆனால் அது எவ்வளவு தவறு! a
அன்பே அருமருந்து
நாட்கள் செல்லச் செல்ல, என் கணவரும் உடன் கிறிஸ்தவர்களும் காட்டிய அன்பே எனக்கு அருமருந்தானது. சாட்சியாய் இருக்கும் ஒரு சகோதரி சாப்பாடு தயாரித்து எங்கள் வீட்டிற்கு எடுத்து வந்தார். சபையிலுள்ள ஒரு மூப்பரும் அவருடைய மனைவியும் மலர்க்கொத்தையும் அருமையான கார்டையும் கொண்டுவந்து கொடுத்துவிட்டு, அன்று மாலைப் பொழுது முழுவதையும் எங்களுடனேயே கழித்தார்கள். அவர்களுக்கு எவ்வளவு வேலை இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியும், ஆகவே அவர்கள் எங்களுக்காக சிரத்தை எடுத்துக்கொண்டது எங்கள் இதயங்களைத் தொட்டது. அநேக நண்பர்களும் கார்டுகளையோ மலர்க்கொத்தையோ அனுப்பினார்கள். “உங்கள் நினைவாகவே இருக்கிறோம்” என்ற எளிய வார்த்தைகளுக்குத்தான் எத்தனை அர்த்தம்! எங்கள் சபையிலுள்ள சகோதரி ஒருவர் இவ்வாறு எழுதினார்: “உயிரை யெகோவா பார்க்கும் கோணத்தில்தான் நாமும் பார்க்கிறோம்—அது மதிப்பு மிக்கது. அடைக்கலான் குருவி ஒன்று கீழே விழுந்தால்கூட அவருக்குத் தெரிகிறதென்றால், நிச்சயமாகவே மனித சிசு மடிவதும் அவருக்குத் தெரியும்.” என் மாமா மகனின் மனைவி எழுதியிருந்தார்: “பிறப்பும் வாழ்வும் ஓர் அற்புதம் என்பதை நினைத்தாலே பிரமிப்பூட்டுகிறது; அது நிகழாமல் போய்விடுகையிலும் பிரமிப்பூட்டுகிறது.”
சில வாரங்களுக்குப் பிறகு ராஜ்ய மன்றத்தில் இருக்கும்போது, என்னால் அழுகையை அடக்க முடியவில்லை; கூட்டம் ஆரம்பிப்பதற்கு சற்று முன்பு வெளியே செல்ல வேண்டியதாகிவிட்டது. அழுகையுடன் வெளியேறியதைக் கண்ட இரண்டு சிநேகிதிகள் என்னோடு காரில் உட்கார்ந்து என் கையைப் பிடித்துக்கொண்டு, என்னவெல்லாமோ சொல்லி என்னை சிரிக்க வைத்துவிட்டார்கள். சீக்கிரமாகவே நாங்கள் மூன்று பேரும் ஹாலுக்குத் திரும்பிவிட்டோம். “சகோதரனிலும் அதிக சொந்தமாய்” சிநேகிப்பவர்கள் இருப்பதை நினைத்தால் எத்தனை இன்பமாய் இருக்கிறது!—நீதிமொழிகள் 18:24.
செய்தி பரவினபோது, அநேக சாட்சிகள் இதே வேதனையை அனுபவித்திருப்பதை என்னிடம் வந்து சொன்னதைக் கேட்டு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. முன்பு எனக்கு அவ்வளவாய் பழக்கமில்லாதவர்களும்கூட விசேஷமாக ஆறுதலையும் ஊக்கத்தையும் அளித்தார்கள். எனக்குத் தக்க சமயத்தில் கிடைத்த அவர்களின் அன்பான ஆதரவு, “சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்” என்ற பைபிள் வார்த்தைகளை நினைப்பூட்டின.—நீதிமொழிகள் 17:17.
கடவுளுடைய வார்த்தை தரும் ஆறுதல்
எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டதற்கு மறுவாரத்தில் கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்பு வந்தது. ஒரு நாள் இயேசுவின் இறுதி நாட்களைப் பற்றிய பைபிள் பதிவுகளை நாங்கள் வாசிக்கையில், ‘இழப்பின் வேதனை என்னவென்று யெகோவாவுக்கு தெரியும்; அவர் சொந்த குமாரனையும் இழந்தாரே!’ என்ற எண்ணம் எனக்குள் திடீரென்று உதித்தது. யெகோவா நம் பரலோக தகப்பனாய் இருப்பதால், அவர் நம்மை நன்றாக அறிந்திருப்பார், தம்முடைய ஊழியர்கள் ஆண்களோ, பெண்களோ யாராக இருந்தாலும் அவர்களுடைய வேதனையைப் புரிந்து நடந்துகொள்வார் என்பதையெல்லாம் சில சமயங்களில் மறந்துவிடுகிறேன். அவ்வாறு நினைத்த அந்த சந்தர்ப்பத்தில் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். எப்போதையும்விட யெகோவாவிடம் நெருக்கமாக உணர்ந்தேன்.
பைபிள் சார்ந்த பிரசுரங்களிலிருந்தும் அதிக உற்சாகத்தைப் பெற்றேன்; குறிப்பாக காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளின் பழைய இதழ்களில் அன்பான ஒருவரை இழந்தது சம்பந்தமாக வெளிவந்திருந்த கட்டுரைகள் என்னைப் பலப்படுத்தின. உதாரணமாக, விழித்தெழு!, அக்டோபர் 1988 வெளியீட்டில் “குழந்தையின் இழப்பை எதிர்ப்படுதல்” என்பது சம்பந்தமாக வந்த கட்டுரைகளும் நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் b என்ற சிற்றேடும் மிகவும் உதவியாய் இருந்தன.
துக்கத்திற்கு முடிவு
காலம் கடந்து செல்கையில், குற்ற உணர்வின்றி சகஜமாக என்னால் சிரிக்க முடிந்தது; அதே விதமாக குழந்தையின் பேச்சை எடுக்காமலே மற்றவர்களோடு சாதாரணமாக பேசவும் முடிந்தது; ஆகவே என் ரணம் ஆறுவது எனக்கே தெரிந்தது. என்றாலும், எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டதை அறியாதிருந்த நண்பர்களை எப்பொழுதாவது நான் பார்த்தபோதோ, எங்கள் ராஜ்ய மன்றத்திற்கு பிறந்த குழந்தையை யாராவது எடுத்துவந்தபோதோ, திடீரென்று உணர்ச்சிவசப்பட்டு கலங்கிவிட்டதுமுண்டு.
பின்பு ஒரு நாள் கண்விழித்தபோது, அந்த சோக மேகம் கலைந்துவிட்டதாகவே உணர்ந்தேன். என் கண்களைத் திறப்பதற்கு முன்பே வேதனையெல்லாம் குறைந்துவிட்டதுபோல், மாதக்கணக்கில் நழுவிப் போயிருந்த சாந்தமும் அமைதியும் மறுபடியும் கிடைத்துவிட்டதுபோல் உணர்ந்தேன். என்றாலும், இது நடந்து சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு கர்ப்பமானபோது, கருச்சிதைவு ஏற்பட்டுவிடுமோ என்ற எண்ணமே மேலிட்டது. அக்டோபர் 2001-ல் நல்ல ஆரோக்கியத்துடன் ஆண் குழந்தை எனக்குப் பிறந்தது சந்தோஷத்துக்குரிய விஷயம்.
என்னை விட்டுப் போன அந்தக் குழந்தையை நினைத்தால் இன்னும் விசனமாகவே உள்ளது. இருந்தாலும், இந்த முழு சம்பவமும், உயிரிடமும், என் குடும்பத்திடமும், உடன் கிறிஸ்தவர்களிடமும், நமக்கு ஆறுதலளிக்கும் கடவுளிடமும் என் போற்றுதலை அதிகரித்திருக்கிறது. இந்த அனுபவம், கடவுள் நம் பிள்ளைகளை பறித்துக்கொள்வதில்லை, “சமயமும் எதிர்பாரா சம்பவமும் [நம்] எல்லாருக்கும் நேரிடுகிறது” என்ற நெகிழச் செய்யும் உண்மையை தெள்ளத்தெளிவாக காட்டியிருக்கிறது.—பிரசங்கி 9:11, NW.
கருச்சிதைவால் உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் ஏற்படும் வேதனை உட்பட, அனைத்து வேதனையையும், துக்கத்தையும், அலறுதலையும், கடவுள் நீக்கி விடும் நாளை நான் எவ்வளவாய் எதிர்பார்த்து இருக்கிறேன்! (ஏசாயா 65:17-23) அப்போது, “மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?” என்று கீழ்ப்படிதலுள்ள எல்லா மனிதராலும் கேட்க முடியும்.—1 கொரிந்தியர் 15:55; ஏசாயா 25:8.—அளிக்கப்பட்டது. (g02 3/22)
[அடிக்குறிப்புகள்]
a கருச்சிதைவு ஒவ்வொருவரையும் வெவ்வேறு விதமாக பாதிக்கிறது என்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது. சிலர் குழம்பிப் போகிறார்கள், வேறு சிலர் ஏமாற்றமடைகிறார்கள், இன்னும் சிலர் துக்கத்தில் மூழ்கிவிடுகிறார்கள். கருச்சிதைவு போன்ற பேரிழப்பை சந்திக்கையில் துக்கப்படுவது இயல்பானதே என்றும், அது ரணம் ஆறுவதற்கு ஒரு வழியே என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
b யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 21-ன் பெட்டி]
கருச்சிதைவின் விகிதமும் காரணங்களும்
“உறுதி செய்யப்படும் அனைத்து கர்ப்பங்களிலும் 15 முதல் 20 சதவீதம் சிதைந்து விடுகின்றன என்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன” என த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா கூறுகிறது. “ஆனால் கருத்தரித்ததற்குப் (கருவுறுதல்) பின்பு வரும் முதல் இரண்டு வாரங்களிலேயே கருச்சிதைவு ஏற்படும் அபாயம் மிக அதிகமாக உள்ளது; அந்த சமயத்தில் அநேக பெண்களுக்கு தாங்கள் கர்ப்பமாகி இருப்பதுகூட தெரியாது.” “80 சதவீத [அதற்கும் அதிகமாகவே] கருச்சிதைவுகள், கருவுற்றதிலிருந்து முதல் 12 வாரங்களில் நிகழ்கின்றன,” அவற்றில் பாதியாவது சிசுவின் குரோமோசோம்களில் ஏற்படும் குறைபாட்டினால் நிகழ்வதாக எண்ணப்படுகின்றன என்பதாக மற்றொரு புத்தகம் சொல்கிறது. இக்குறைபாடுகள், தாய் அல்லது தகப்பனின் குரோமோசோம்களில் அதேபோன்ற குறைபாடுகள் இருப்பதால் ஏற்படுபவை அல்ல.
கருச்சிதைவுக்கு தாயின் உடல்நலம் காரணமாக இருக்கலாம். தாயின் ஹார்மோன் மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்பு சம்பந்தப்பட்ட ஏதாவது கோளாறுகள், அழற்சிகள், கருப்பைக் கழுத்து அல்லது கருப்பையின் இயல்பில் மாற்றங்கள் ஆகியவற்றை மருத்துவர்கள் காரணமாக குறிப்பிடுகின்றனர். நீரிழிவு நோய் (சரியாக கட்டுப்படுத்தப்படாத பட்சத்தில்) போன்ற தீராத நோய்களும் உயர் இரத்த அழுத்தமும்கூட அதற்குக் காரணமாகலாம்.
நிபுணர்கள் கூறுவதன்படி, உடற்பயிற்சி, கனமான பொருட்களை தூக்குதல், உடலுறவு கொள்ளுதல் ஆகியவற்றால் கட்டாயம் கருச்சிதைவு ஏற்படும் என சொல்வதற்கில்லை. கீழே விழுதல், இலேசாக அடிபடுதல், அல்லது திடீர் பயம் ஆகியவற்றால் கருச்சிதைவு ஏற்படுவதுபோல் தெரியவில்லை. ஒரு புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “ஒருவருடைய உயிரை பாதிக்கும் அளவுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்தால் தவிர சாதாரண காயத்தால் கரு சிதையும் அபாயம் இல்லை என்றே தோன்றுகிறது.” கருப்பையின் உருவமைப்பு, ஞானமும் அன்பும் நிறைந்த ஒரு படைப்பாளர் இருப்பதற்கு எவ்வளவு நன்றாக சான்றளிக்கிறது!—சங்கீதம் 139:13, 14.
[பக்கம் 23-ன் பெட்டி/படம்]
உற்றார் உறவினரின் உதவி
குடும்பத்தார் அல்லது உற்றார் உறவினர் எவருக்காவது கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால் சில சமயங்களில் என்ன சொல்ல, என்ன செய்ய என்று தெரியாமல் நாம் தவிப்பதுண்டு. அப்படிப்பட்ட இழப்பு ஒவ்வொருவரையும் பலவாறு பாதிக்கிறது; ஆகவே இவ்வாறுதான் ஆறுதல் அளிக்க வேண்டும் அல்லது உதவி செய்ய வேண்டும் என்று திட்டவட்டமாக சொல்வதற்கில்லை. என்றாலும், பின்வரும் ஆலோசனைகளை கவனியுங்கள். c
நீங்கள் அளிக்கத்தக்க நடைமுறை உதவி:
◆ மூத்த பிள்ளைகளை பார்த்துக் கொள்ள விருப்பம் தெரிவியுங்கள்.
◆ சாப்பாடு தயாரித்து அவர்களுக்கு கொண்டு செல்லுங்கள்.
◆ தகப்பனுக்கும் ஆதரவு காட்டுங்கள். ஒரு தகப்பன் இவ்வாறு சொன்னார்: “இப்படிப்பட்ட சூழ்நிலையில் தகப்பன்மாருக்கு ஆறுதலாக நாலு வார்த்தை சொல்லும் கார்டுகள் கடைகளில் கிடைப்பதில்லை.”
ஆதரவாக சொல்லத்தக்க விஷயங்கள்:
◆ “உங்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டிருப்பதைக் கேட்டு எனக்கு ரொம்ப சங்கடமாகிவிட்டது.”
இந்த எளிய வார்த்தைகளால் அதிக பயன் கிடைப்பதுண்டு; இன்னும் நாலு வார்த்தை ஆறுதலாக பேச இது வழிவகுக்கலாம்.
◆ “பரவாயில்லை, அழுதால் நல்லதுதான்.”
கருச்சிதைவு ஏற்பட்ட புதிதில் வாரக்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் அடிக்கடி அழுகை வரும். அவர்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதால் அவர்களை குறைவாய் மதிப்பிடவில்லை என்று உறுதி அளியுங்கள்.
◆ “அடுத்த வாரம் உங்களை மறுபடியும் போனில் கூப்பிட்டு விசாரிக்கட்டுமா?”
ஆரம்பத்தில், பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு ஆறுதல் சொல்ல ஆட்கள் ஓடோடி வருவதைக் காணலாம்; ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, இன்னும் மனவேதனையிலிருந்து மீளாதிருக்கையில், மற்றவர்கள் தங்களை மறந்துவிட்டதாக நினைக்கலாம். ஆகவே உங்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்பதை அவர்கள் அறிவது நல்லது. பல வாரங்களுக்கு அல்லது மாதங்களுக்கு துக்கம் தொண்டையை அடைக்கலாம். மீண்டும் பிரச்சினையின்றி கருத்தரித்த பின்னரும் அந்த வேதனை தலைகாட்டலாம்.
◆ “எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.”
ஒன்றும் சொல்லாதிருப்பதைவிட இப்படி சொல்வது நல்லது. உங்கள் நேர்மையும் ஆறுதலளிக்க நீங்கள் விரும்புவதும் உங்கள் கரிசனையை காட்டும்.
சொல்லக் கூடாதவை:
◆ “எப்பொழுது வேண்டுமானாலும் இன்னொரு பிள்ளையைப் பெற்றுக்கொள்ளலாமே.”
இது உண்மைதான், ஆனால் அவர்களுடைய நிலையில் வைத்து எண்ணிப் பார்க்காததுபோல் தோன்றும். எந்தப் பிள்ளையானாலும் பரவாயில்லை என பெற்றோர் நினைப்பதில்லை, அவர்களுக்கு அந்த பிள்ளைதான் வேண்டியிருந்தது. மற்றொரு பிள்ளையைப் பற்றி நினைத்துப் பார்ப்பதற்கு முன் கருவில் கலைந்த குழந்தைக்காக துக்கப்பட விரும்புவர்.
◆ “அதற்கு ஏதாவது குறை இருந்திருக்கும்.”
இது ஒருவேளை உண்மையாக இருந்தாலும் இப்படி சொல்வது அத்தனை ஆறுதலைத் தருவதில்லை. தாயைப் பொறுத்தமட்டில், அவள் ஆரோக்கியமான ஒரு குழந்தையை சுமந்துகொண்டிருந்தாள்.
◆ “அந்த குழந்தையைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்வதற்கு முன்பே இப்படியானது நல்லதாகிவிட்டது. பின்பு இவ்வாறு ஏதாவது ஏற்பட்டிருந்தால் நிலைமை ரொம்ப மோசமாகி இருக்கும்.”
பெரும்பாலான பெண்கள் பிறவாத தங்கள் பிள்ளையுடன் ஆரம்பத்திலேயே பாசப்பிணைப்பை ஏற்படுத்திக்கொள்கின்றனர். எனவே அப்படிப்பட்ட ஒரு குழந்தை தங்காமல் போய்விடுகையில், பொதுவாக துக்கம் தொண்டையை அடைக்கிறது. தாய்க்கு அந்த குழந்தையை “தெரிந்திருந்த” அளவுக்கு வேறு எவருக்கும் அதைப் பற்றி தெரியாது என்ற உண்மையே அதிகமாக துக்கப்பட வைக்கிறது.
◆ “உங்களுக்காவது மற்ற பிள்ளைகள் இருக்கிறார்களே.”
துக்கத்தில் துடிக்கும் பெற்றோருக்கு இது எப்படி இருக்குமென்றால், ஒரு கையையோ காலையோ இழந்த ஒருவரிடம், “உங்களுக்குத்தான் மற்றொரு கை இருக்கிறதே, அல்லது கால் இருக்கிறதே” என்று சொல்வதற்கு ஒப்பாக இருக்கும்.
அதிக கரிசனை காட்டுபவர்களும் நிஜமாகவே ஆறுதல் தர விரும்புபவர்களும்கூட சில சமயங்களில் ஏடாகூடமாக எதையாவது சொல்லிவிடுவது சகஜம்தான் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். (யாக்கோபு 3:2) எனவே, கருச்சிதைவால் பாதிக்கப்பட்ட பகுத்தறிவுள்ள பெண்கள், அப்படியே எவராவது நல்லதை நினைத்து சொல்ல தெரியாமல் எதையாவது உளறி விடுகையில், கிறிஸ்தவ அன்பை காண்பித்து மனதில் அவர்களைப் பற்றி கசப்பான உணர்வுகளை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பர்.—கொலோசெயர் 3:13.
[அடிக்குறிப்பு]
c நியூ ஜீலாந்து, வெலிங்டன் கருச்சிதைவு ஆதரவு குழுவால் தயாரிக்கப்பட்ட கருச்சிதைவை சமாளிக்க உதவும் வழிகாட்டி (ஆங்கிலம்) என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.