எமது வாசகரிடமிருந்து
எமது வாசகரிடமிருந்து
பகை சமீபத்தில் என்னைப் பார்ப்பதற்கு என் அண்ணன் வந்திருந்தார். அவர் விதண்டாவாதக்காரர் என்பது அன்றுதான் எனக்கு தெரியும். மற்ற இனங்கள் மேலுள்ள வெறுப்பில் அவற்றை இழித்தும் பழித்தும் பேசினார். அவருக்கு உதவ நினைத்தேன். ஆனால், இந்த விஷயத்தைப் பற்றி எப்படி பேசுவது என்று தெரியவில்லை. செப்டம்பர் 8, 2001 இதழில் “பகையின் சுழற்சியை தகர்த்தல்” பற்றிய தொடர் கட்டுரைகளைப் பார்த்தவுடன், என் ஜெபத்திற்கான பதில் இதுதான் என்பது புரிந்துவிட்டது.
எல். பி., ஐக்கிய மாகாணங்கள் (g02 3/22)
நியாயமாக சிந்தித்துப் பார்க்கும் எவராலும் நீங்கள் எழுதியிருந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. “அபூரண மனிதர்கள் கெட்ட குணங்களோடும் குறைபாடுகளோடும் பிறக்கிறார்கள் என பைபிள் கூறுகிறது. (ஆதியாகமம் 6:5; உபாகமம் 32:5) நிச்சயமாகவே, அந்த வார்த்தைகள் எல்லா மனிதர்களுக்கும் பொருந்துகின்றன” என்று எழுதியிருந்தீர்கள். ஆனால் இந்த வசனங்கள், குறிப்பிட்ட காலப்பகுதிகளில், குறிப்பிட்ட இடங்களில் வாழ்ந்த இரண்டு விசேஷ தொகுதியினரைப் பற்றியே பேசுகின்றன. அவை ஒருகாலும் எல்லா மனிதருக்கும் பொருந்தாது.
டி. சி., செக் குடியரசு (g02 3/22)
“விழித்தெழு!” பதில்: உண்மைதான், இந்த வசனங்கள் ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்தில் வாழ்ந்தவர்களுக்கும் இஸ்ரவேலருக்குமே முக்கியமாக பொருந்தின. என்றாலும் “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி” இருக்கிறோம் என்று பைபிள் திரும்பத் திரும்ப தெளிவுபடுத்துகிறது. (ரோமர் 3:23; 5:12; யோபு 14:4; சங்கீதம் 51:5) இஸ்ரவேலரும் ஜலப்பிரளயத்துக்கு முன்பு வாழ்ந்தவர்களும் மனித அபூரணத் தன்மைக்கு உதாரணங்களாகத்தான் இக்கட்டுரையில் காட்டப்பட்டுள்ளனர்.
டைரிகள் “டைரி—நம்பகமான நண்பன்” (செப்டம்பர் 8, 2001) என்ற கட்டுரை கிடைத்தவுடன் நான் அடைந்த சந்தோஷத்தை விவரிக்கவே முடியாது. எனக்கு 20 வயதாகிறது. 11 வயதிலிருந்தே டைரி எழுதும் பழக்கம் எனக்கு உண்டு. என் சிறுவயது சுட்டித்தனங்களையும், என் முதல் காதல் உணர்வுகளையும், என் கவிதைகளையும், எனக்கு ஏற்பட்ட தர்மசங்கடங்களையும், ஏன், என் முழுக்காட்டுதலையும், அன்று எனக்கு ஏற்பட்ட உணர்ச்சிகளையும் பற்றி இப்பொழுது படிக்கும்போது எப்படி உணருகிறேன் என்று நான் சொல்ல வேண்டியதே இல்லை.
எல். சி., இத்தாலி (g02 3/22)
பிள்ளைப் பருவத்தில் நான் துர்ப்பிரயோகம் செய்யப்பட்டேன்; என்னை நானே சரியாக புரிந்துகொள்வதற்கும் உணர்ச்சிப்பூர்வ வேதனையை சமாளிப்பதற்கும் என்னுடைய டைரிதான் எனக்கு உதவியிருக்கிறது. இதன் விளைவாக, நான் ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைந்திருக்கிறேன்.
ஈ. எல்., ஐக்கிய மாகாணங்கள் (g02 3/22)
ஜெபம் “இளைஞர் கேட்கின்றனர் . . . ஜெபம் எனக்கு எப்படி உதவ முடியும்?” (ஆகஸ்ட் 8, 2001) என்ற கட்டுரைக்கு நன்றி. ஜெபம் எப்படி பிரச்சினைகளை சமாளிக்க அநேக இளைஞருக்கு உதவியிருக்கிறது என்பதை வாசித்தது, யெகோவாவிடம் இன்னுமதிகமாக மனம் திறந்து பேச என்னை தூண்டியிருக்கிறது.
டி. பி., இத்தாலி (g02 3/22)
கடவுளோடு நெருங்கிய உறவை வைத்துக்கொள்வதன் அவசியத்தை இந்த கட்டுரை எனக்கு உணர்த்தியது. இந்த 16 வயதில் இது ரொம்ப கஷ்டம். மனதை மயக்கும் காரியங்கள் அநேகம் இருக்கின்றன, நண்பர்களின் அழுத்தம் வேறு. எப்படியாவது எனக்கு ஒரு பைபிள் கிடைக்க வாய்ப்பிருக்கிறதா?
எம். ஏ., ஐக்கிய மாகாணங்கள்
“விழித்தெழு!” பதில்: யெகோவாவின் சாட்சிகள் இந்த வாசகரை சந்தித்து ஒரு பைபிளை கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. (g02 3/22)
யெகோவாவிடம் மன சமாதானத்திற்காக ஜெபம் செய்த பால் என்ற இளைஞனின் அனுபவம் எனக்குப் பிடித்திருந்தது. தினசரி வாழ்க்கையிலும் தீர்மானங்கள் எடுக்க வேண்டிய சமயங்களிலும் சமநிலையைக் காத்துக்கொள்ள உதவுமாறு நான் எப்போதும் யெகோவாவைக் கேட்டிருக்கிறேன். இப்போது மன சமாதானத்திற்காகவும் கேட்பேன். நம் இளைஞர்களிடமிருந்து அதிகத்தைக் கற்றுக்கொள்ளலாம். எனக்கு 62 வயதாகிறது.
எம். பி., ஆஸ்திரேலியா (g02 3/22)
தாளாத துயரம் தெரசாவையும் அவள் குடும்பத்தையும் தாக்கிய கோர சம்பவத்தின் சோகக் கதையைப் படித்தேன். அது என் நெஞ்சை உருக்கியது. யெகோவா தேவன் வாக்குறுதி அளித்திருக்கும் புதிய பூமியில் தெரசாவை அன்புடன் அரவணைப்பதற்கு நானும் வெகு ஆவலாக இருக்கிறேன் என்பதை அவள் குடும்பத்தாருக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன்.
எல். டி., இத்தாலி (g02 3/8)