காற்றோடு காற்றாக கலந்து
காற்றோடு காற்றாக கலந்து
கனடாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
“உடனே கொஞ்சம் பளபளக்கும் துணியையும் கயிறையும் கொண்டு வாருங்கள், உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அற்புதத்தை செய்து காட்டுகிறேன்!”—ஷோஸஃப் மிஷல் மான்ட்கால்ஃபியர், 1782.
ஊஊஊஷ்! வண்ணமிக்க பலூனுக்குள் தீப்பிழம்பு தாவ, அது மெல்ல மெல்ல மேல் நோக்கி எழும்புகிறது. வானவில்லின் வண்ண ஜாலம் கொஞ்சும் அழகிய துணி பலூனில் உலா வருவது நம்மை இதமாக உணர வைப்பதோடு, பிஸியான வாழ்க்கை ஓட்டத்திலிருந்தும் சற்று விடுதலை அளிக்கிறது. அது “அமைதி அளிக்கிறது, அதேசமயம் கிளர்ச்சியும் ஊட்டுகிறது” என வெகு காலமாக வெப்ப காற்று பலூன் ஆர்வலராக இருக்கும் ஒருவர் கூறுகிறார்.
மான்ட்கால்ஃபியர் சகோதரர்களான ஷோஸஃப்-மிஷலும் ஷாக்-ஏட்யெனும் 1780-களின் ஆரம்பத்தில் வெற்றிகரமாய் துவங்கி வைத்தது முதற்கொண்டு பலூன் பயணம் மனிதனை கவர்ந்திருக்கிறது. (கீழே உள்ள பெட்டியைக் காண்க.) இருந்தாலும், 1960-க்கு பிறகுதான் அது மகிழ்ச்சி தரும் விளையாட்டாக பிரபலமானது. ஏனெனில் அப்போதுதான், பலூனுக்குள் இருக்கும் காற்றை சூடாக்கி அதன் வெப்பத்தை கட்டுப்படுத்த புரோபேன் வாயுவை எரிக்கும் பாதுகாப்பான, மலிவான முறையும், தீப்பற்றாத துணியும் புழக்கத்திற்கு வந்தன.
ஒரு குளோசப் பார்வை
ஓர் அழகிய பலூனை குளோசப்பில் பார்த்தால், வண்ணமிக்க நீளமான துணிகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு, மேலே அகலமாகவும் கீழே குறுகலாகவும் இருப்பது புலப்படும். காற்று நிரப்பப்பட்ட பிறகு சில பலூன்கள் 15 மீட்டர் அகலமும் 25 மீட்டருக்கும் அதிக உயரமும் உள்ளவையாய் இருக்கும்.
கற்பனை திறன்மிக்கவர்கள் தங்கள் திறனைக் காட்டும் வண்ணம், விலங்குகள், பாட்டில்கள், கோமாளிகள் என தங்களுக்கு இஷ்டமான வடிவத்திலும் அளவிலும் அவற்றை மனம்போன போக்கில் உருவாக்குகிறார்கள். இந்த அமைதியான வானூர்திகளின் வடிவம் எப்படியிருந்தாலும் அவை பறப்பதற்கான நியதிகள் ஒன்றே.
பலூனின் திறப்பிற்கு நேர் கீழே உறுதியான, பிரம்பு கூடை ஒன்று கேபிள்களால் பலூனோடு இணைக்கப்பட்டிருக்கும். அதை ஓட்டுபவரும் அதில் பயணிப்பவர்களும் அந்தக் கூடையில்தான் இருப்பர். சில கூடைகள் அலுமினியத்தால் ஆனவை. அந்தக் கூடைக்கு மேலே என்ன இருக்கிறதென கொஞ்சம் உற்று பாருங்கள். எரியூட்டும் சாதனமும் ரெகுலேட்டரும் பலூனின் திறப்பிற்கு சற்று கீழே
உள்ள உலோக மேடையில் இருப்பதை பார்ப்பீர்கள். எரிபொருள் நிரப்பப்பட்ட தொட்டிகள் கூடைக்கு உள்ளே இருக்கும்.மேலே பறக்க தயாரா?
நீண்ட ரன்வே இருந்தால்தான் ஒரு விமானத்தால் மேலெழும்ப முடியும். ஆனால், திறந்தவெளியில் ஒரு சிறிய துண்டு நிலம் இருந்தாலே போதும் இந்த வெப்பக் காற்று பலூன் ஜோராக மேலெழும்பிவிடும். மேலே எழும்புவதற்கு எந்த தடையும் இல்லாத ஓரிடத்தை கண்டுபிடிப்பதே மிகவும் முக்கியமானது. சத்தம் ஏற்படுத்தாத இந்த விமானத்தில் பயணிக்க நீங்கள் ஏங்குகிறீர்களா? அந்தக் கூடைக்குள் ஏறுவதற்கு முன்பே சில காரியங்களை செய்தாக வேண்டும்.
முதலில், அந்தக் கூடையை படுக்க வைத்து அதற்கு முன் காற்றில்லாத பலூனை தரையில், அதுவும் காற்று வீசும் திசை நோக்கி விரித்து வைக்க வேண்டும். மோட்டார் பொறுத்திய பெரிய மின்விசிறியின் உதவியோடு பலூனுக்குள் காற்றை நிரப்ப வேண்டும். பிறகு, சூடாக்கப்பட்ட காற்றை பலூனுக்குள் செலுத்தி, கூடை நேராக எழும்பி நிற்கும்படி செய்ய வேண்டும். பிறகு, எரிபொருள் இணைப்புகள் உட்பட எல்லா சாதனங்களும் சரியாக உள்ளனவா என கடைசியாக சோதித்து பார்க்க வேண்டும்; பலூனிலுள்ள துளையையும் காற்று நீக்கும் திறப்பையும் கட்டுப்படுத்தும் கயிறுகள் கூடைக்குள் தொங்குகின்றனவா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இப்போது பயணிகளை ஏற்றிக்கொண்டு வானில் பறக்க ஓட்டுனர் தயாராகிவிட்டார். பலூனில் பறக்கும் சிலர் ரேடியோ கருவிகளை உடன் எடுத்துச் சென்று தரையில் இருக்கும் குழுவினரோடு தொடர்பு கொள்கின்றனர். பலூனுடன் அதன் பயணிகள் தரையிறங்குகையில் அவர்களை ஏற்றிக்கொள்வதற்காக அந்தக் குழுவினர் ஒரு வாகனத்தில் பின்தொடர்ந்து வருவர்.
காற்றோடு காற்றாக கலந்து
பலூனில் சுமார் 100 மீட்டருக்கும் குறைவான உயரத்தில் பறக்கவே பலர் விரும்புகின்றனர்; அப்போதுதான் நாட்டுப்புறத்திற்கு மேலே அமைதியாக வலம்வந்து கீழே நடப்பவற்றை பார்க்க முடியும். இந்த உயரத்தில் பறக்கையில் தரையில் இருப்பவர்களின் சிரிப்பு சத்தத்தையும் கூச்சலையும்கூட கேட்கலாம். அப்போது தரையிலிருந்து பார்ப்பதற்கும் மிக அழகாக இருக்கும்; பூங்காற்றில் மிதந்து செல்லும் டான்டிலியன் விதையை அது நமக்கு நினைப்பூட்டும். சிலர், 600 மீட்டர் அல்லது அதற்கும் அதிகமான உயரத்தில் பொதுவாக வலம் வருவர். என்றாலும், ஆக்ஸிஜன் எடுத்துச் செல்லாமல் 3,000 மீட்டருக்கு மேல் பறப்பது ஞானமான செயலல்ல.—“அதிக உயரத்தில் பறத்தல்” என்ற பெட்டியைக் காண்க.
ஆசை தீர மிதந்த பிறகு எவ்வாறு கீழே இறங்குவது? புவியீர்ப்புதான் கைகொடுக்கும். துளையை கட்டுப்படுத்தும் கயிற்றை தளர்த்தி கொஞ்சம் வெப்பக் காற்றை வெளியேற்றி விட்டால் கட்டுப்பாட்டுடன் கீழே இறங்கலாம். பக்கவாட்டில் பறப்பதோ முற்றிலும் வேறுபட்ட விஷயம். அப்பொழுது ஓட்டுனர் காற்றின் முழு கட்டுப்பாட்டில் இருப்பார். “செல்லும் திசையையும் வேகத்தையும் காற்று கட்டுப்படுத்துவதால் ஒவ்வொரு முறை பறப்பதும் வித்தியாசமான அனுபவமே” என பலூன் சவாரியில் பல வருட அனுபவம் பெற்ற ஒருவர் விவரிக்கிறார். வித்தியாசப்பட்ட உயரங்களில் உள்ள காற்றோட்டங்கள்கூட வேகத்தையும் திசையையும் மாற்றிவிடலாம். பூமிக்கு மேலே 100 மீட்டர் உயரத்தில் ஒரு திசையிலும் 200 மீட்டர் உயரத்தில் அதற்கு எதிர் திசையிலும் காற்று வீசுவது சர்வசாதாரணம்.
காற்றின் வேகத்திலேயே பலூன் பறப்பதால், கீழே இருக்கும் பூமி சுற்றிக்கொண்டிருக்க நீங்களோ அசையாமல் காற்றில் தொங்குவது போல உணருவீர்கள். “பலூன் பயணிகள் காற்றோடு காற்றாக கலந்துவிடுவதால் அவர்கள் மேலே சென்றதும் ஒரு நிலப்படத்தை விரித்து வைத்தால்கூட அது பறந்துபோகாது” என ஸ்மித்சோனியன் பத்திரிகை பெருமையாக சொல்கிறது.
பலூன் ஓட்டுனராக தகுதி பெறுதல்
காற்றோட்டம் மிகவும் குறைவாக இருக்கையில் பறப்பதே ஏற்ற சமயமாகும். சூரிய உதயத்திற்கு சற்று பிறகு அல்லது சூரிய அஸ்தமனத்திற்கு சற்று முன் பொதுவாக காற்று குறைவாக இருக்கும். காலை நேரத்தில் வளிமண்டலம் பொதுவாய் குளிராக இருப்பதாலும் பலூன் மேலே பறப்பதற்கு அதிக தூக்கு விசை கிடைப்பதாலும் அப்போது பறக்கவே அதிகம் விரும்பப்படுகிறது. மதிய நேரத்திற்கு பிறகு பறந்தால் சூரிய ஒளி குறைந்து இருட்டிவிடும் அபாயம் உள்ளது.
பலூன் ஓட்டுனராக தகுதி பெற அதிக பயிற்சி தேவை. நாம் விரும்பும் திசையில் நகரும் காற்றோட்டத்தை கண்டுபிடித்து அதோடு சேர்ந்து பறப்பதே முக்கியமாகும். அனுபவம்
வாய்ந்த ஓட்டுனர்கள் ‘படி ஏறுதல்’ என்ற உத்தியில் கைத்தேர்ந்தவர்களாக இருப்பர். அதாவது, பலூனைக் குறிப்பிட்ட உயரத்திற்கு கொண்டு சென்ற பிறகு அதே உயரத்தில் நிலையாக பறப்பர். பிறகு எரியூட்டியிலிருந்து சிறிது தீப்பிழம்பை திடீரென வெளியேற்றி வெப்ப காற்று அதன் உச்சியை முத்தமிட வைக்கையில் அந்த சத்தமற்ற வானூர்தி இன்னும் கொஞ்சம் மேலே செல்லும்.தீப்பிழம்பை சீராக வெளியேற்றுவதும் சிதறாத கவனமும் மிக அவசியம், இல்லையெனில் பலூன் மீதுள்ள கட்டுப்பாட்டை ஓட்டுனர் இழந்துவிடுவார். ஒரு நொடி கவனம் சிதறினால்கூட எதிர்பாராத விதத்தில் தரையிறங்க நேரிடலாம். வெப்பத்தை வெளிவிடும் எரியூட்டிக்கும் பலூனின் உச்சிக்கும் பொதுவாக 15 முதல் 18 மீட்டர் இடைவெளி இருக்கும். ஆகவே, தீப்பிழம்பு வெளியேறிய பிறகு அந்த வெப்பத்திற்கு இசைவாக பலூன் மேலே செல்ல 15 முதல் 30 விநாடிகள் எடுக்கலாம் என்பதை கவனமுள்ள ஓட்டுனர் நினைவில் வைத்திருப்பார்.
வேகமாக காற்று வீச ஆரம்பித்து, தரையிறங்க போதுமான இடவசதியும் இல்லாதிருந்தால் தரையிறங்குவது அதிக பரபரப்பூட்டலாம்! அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், “மிருகக் காட்சி சாலையிலுள்ள சிங்கக்கூண்டில் மெதுவாக இறங்குவதைவிட சரியான இடத்தில் வேகமாகவும், திடீரெனவும் இறங்குவதே மேல்” என பலூன் சவாரி வல்லுனர் ஒருவர் கூறுகிறார். என்றாலும், காற்று சாதகமாக இருக்கையில் மெதுவாக தரையிறங்குவதே பெரிதும் விரும்பப்படுகிறது.
பந்தயங்களில், போட்டிகளில், விழாக்களில் பங்கு பெறுவோரும் மகிழ்ச்சிக்காக மட்டுமே வானில் உலா வருவோரும் இருக்கும் வரை பொழுதுபோக்கிற்காக வெப்பக் காற்று பலூனில் பயணிப்பதும் சக்கைப்போடு போடும் என்பதில் சந்தேகமில்லை. (g02 3/8)
[பக்கம் 16, 17-ன் பெட்டி/படங்கள்]
பலூனில் பறப்பதன் ஆரம்பம்
முதல் வெப்பக் காற்று பலூனை உருவாக்கி பறக்கவிட்ட பெருமை, மான்ட்கால்ஃபியர் சகோதரர்களான ஷோஸஃப்-மிஷல், ஷாக்-ஏட்யென் ஆகியோரையே சேரும்; இவர்கள் பிரான்சிலுள்ள அனானேயைச் சேர்ந்த பணக்கார பேப்பர் உற்பத்தியாளர் ஒருவரின் மகன்களாவர். 1780-களின் ஆரம்ப ஆண்டுகளில் அவர்கள் செய்த முதற்கட்ட பரிசோதனைகளில் பேப்பர் பலூன்களை உபயோகித்தனர்; வைக்கோலையும் கம்பளியையும் எரிப்பதால் உண்டாகும் புகையின் காரணமாகவே அவை மேலெழும்புவதாக அவர்கள் நினைத்தனர். ஆனால், சூடாக்கப்பட்ட காற்றே தூக்கு விசை அளிப்பதை சீக்கிரத்திலேயே கண்டுபிடித்தனர்.
பிறகு, துணி பலூன்களை செய்ய ஆரம்பித்தபோது அவற்றின் அளவு அதிகரிக்க அதிகரிக்க அவை அதிக உயரத்தில் பறக்கவும் அதிக எடையை சுமக்கவும் முடிவதை கவனித்தனர். ஜூன் 1783-ல் அவர்கள் அதுவரை உருவாக்கியிருந்ததிலேயே மிகவும் பெரிய பலூனை அனானேயின் பொது சதுக்கத்திலிருந்து பறக்கவிட்டனர். அது சுமார் பத்து நிமிடம் விண்ணில் பறந்து பின்னர் தரையிறங்கியது.
இந்த சாதனைக்கு பிறகு, மக்களை சுமந்து செல்லும் பலூனை பறக்கவிட வேண்டும் என முடிவு செய்தனர். ஆனாலும் முதலில், ஒரு சேவல், வாத்து, செம்மறியாடு ஆகியவற்றை சுமந்துகொண்டு பறந்த பலூனைப் பார்க்க செப்டம்பர் 1783-ல் வெர்சைல்ஸில் ஆயிரக்கணக்கானோர் கூடிவந்தனர். அந்தப் பலூனில் எட்டு நிமிடம் பறந்த பிறகும் அவை மூன்றிற்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. ஆகவே, நவம்பர் 21, 1783-ல் மனிதர்களை சுமந்துகொண்டு பறக்கும் பலூன் முதன்முறையாக முயன்று பார்க்கப்பட்டது. உயர்குடியைச் சேர்ந்த இருவர் அதில் பயணித்து அந்த பெருமையை தட்டிச் செல்ல அதிக உந்துவித்தலுக்கு பிறகு பதினாறாம் லூயி ஒருவழியாக இணங்கினார். அவர்கள் ஷடோ டெ லா மியூட்டிலிருந்து பறக்க ஆரம்பித்து பாரிஸ் மீது சுமார் 8 கிலோமீட்டர் மிதந்து சென்றனர். சுமார் 25 நிமிடங்களுக்கு பிறகு பலூன் தீப்பிடித்ததால் அவர்கள் தரையிறங்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்கள்.
இந்தச் சமயத்தில்தான் பாரிஸிலுள்ள அகாடமி ஆஃப் சயன்சஸ் இந்தக் கண்டுபிடிப்பில் ஆர்வம் காண்பித்தது. அந்நாளைய பிரபல இயற்பியலாளர் பேராசிரியர் ஷாக் ஷார்ல், திறமையான இரண்டு மெக்கானிக்குகளான சார்லஸ், எம். என். ராபர்ட் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து ஹைட்ரஜன் நிரம்பிய முதல் பலூனை வடிவமைத்து 1783, ஆகஸ்ட் 27-ல் பறக்கவிட்டு பார்த்தார். அது 45 நிமிடங்களுக்கு பறந்து சுமார் 24 கிலோமீட்டர் தூரத்தை சுற்றி வந்தது; அதற்கு ஷார்லியர் என பெயரிடப்பட்டது. இந்த விதமான பலூனே ஏறக்குறைய அதே வடிவத்தோடு இன்று வரை வானில் உலா வருகிறது.
[பக்கம் 17-ன் பெட்டி]
அதிக உயரத்தில் பறத்தல்
மிக உயரத்தில் பறக்கும் ஓட்டுனர் என்ற பெருமைக்குரியவர் ஹென்றி காக்ஸ்வெல் என்ற ஆங்கிலேயர். செப்டம்பர் 1862-ல், பிரிட்டிஷ் வானிலை ஆராய்ச்சி கழகத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் கிலைஷர், அதிக உயரத்தில் விஞ்ஞான பரிசோதனைகள் செய்வதற்காக தன்னை மேலே அழைத்துச் செல்ல அவரை வேலைக்கு அமர்த்தினார். ஆக்ஸிஜன் சுவாசிக்கும் கருவிகள் எதுவுமின்றி அவர்கள் 9 கிலோமீட்டருக்கும் அதிக உயரத்திற்கு சென்றனர்!
வானில் 8,000 மீட்டர் உயரத்திற்கு சென்ற பிறகு ஆக்ஸிஜன் குறைவான, குளிர்ந்த காற்றை கஷ்டப்பட்டு சுவாசித்ததால் காக்ஸ்வெல் தரையிறங்க தீர்மானித்தார். ஆனால், பலூன் தொடர்ந்து சுழன்றுகொண்டே இருந்ததால் காற்றை நீக்கும் துவாரத்தைக் கட்டுப்படுத்தும் கயிறு சிக்கிக்கொண்டது. அதை விடுவிப்பதற்காக காக்ஸ்வெல் கேபிள்களைப் பிடித்து மேலே ஏற வேண்டியிருந்தது. கிலைஷர் ஏற்கெனவே மயக்கமுற்ற நிலையில் இருந்தார்; காக்ஸ்வெலின் கைகள் குளிரில் விறைத்துப்போயிருந்ததால் தன் பற்களால் அந்தக் கயிற்றை இழுத்தார். ஒருவழியாக அவர்கள் கீழே இறங்க ஆரம்பித்தனர்.
பிறகு பலூன் கீழிறங்கும் வேகத்தை கட்டுப்படுத்தும் அளவிற்கு இருவருமே ஓரளவு தேறினர். அவர்கள் ஏறக்குறைய 10,000 மீட்டர் உயரத்திற்கு சென்றிருந்தனர், நூறு வருடங்களுக்கு மேலாக யாருமே அந்த உயரத்தை எட்டவில்லை. திறந்த கூடை கொண்ட பலூனில் அவர்கள் செய்த பயணம் வானூர்தி சம்பந்தப்பட்ட மிகப் பெரிய சாதனைகளில் ஒன்றாகும்; ஏனெனில், ஆக்ஸிஜன் சுவாசிக்கும் கருவியோ, பாதுகாப்பு உடைகளோ இல்லாமல், மேல் வளிமண்டலத்தைப் பற்றி ஒன்றுமே அறியாமல் அவர்கள் சென்றிருந்தனர்.
[பக்கம் 17-ன் படம்]
காற்றை நிரப்புகையில் பலூனின் உட்புற தோற்றம்
[பக்கம் 17-ன் படம்]
மேலெழும்பி பறப்பதற்காக சூடாக்கப்பட்ட காற்று பலூனுக்குள் செலுத்தப்படுகிறது
[பக்கம் 18-ன் படம்]
பலூன்கள் பலவிதம்