குற்றவுணர்வு—எப்போதுமே தவறானதா?
பைபிளின் கருத்து
குற்றவுணர்வு—எப்போதுமே தவறானதா?
குற்றவுணர்வு ஏற்படுவதே தவறானது என இன்றுள்ள அநேகர் நினைக்கின்றனர். “இதுவரை மனிதனை ஆட்டிப்படைத்த நோய்களில் படுமோசமானது குற்றவுணர்வே” என்று கூறிய ஜெர்மானிய தத்துவ ஞானி ஃபிரிட்ரிக் நிச் என்பவரைப் போன்றே அவர்கள் உணருகின்றனர்.
ஆனால் இப்போது சில ஆய்வாளர்கள் வித்தியாசமான கருத்தை சொல்கின்றனர். “குற்றவுணர்வு என்பது உணர்வுள்ள, நம்பகமான நபரிடம் அவசியம் இருக்க வேண்டிய தன்மையாகும். அது மனசாட்சியின் ஓர் அம்சம்” என சர்வதேச அளவில் புகழ்பெற்ற வல்லுனரும் நூலாசிரியருமான சூசன் ஃபார்வர்ட், பிஹெச்.டி. கூறுகிறார். அப்படியென்றால், எல்லா குற்றவுணர்வுமே தவறானதா? ஏதாவதொரு சந்தர்ப்பத்திலாவது குற்றவுணர்வு நமக்கு உதவுமா?
குற்றவுணர்வு என்பது என்ன?
நமக்கு பிரியமானவரை புண்படுத்திவிட்டோம் என்பதை உணருகையில் அல்லது நாம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும் என்று உணருகிற தராதரங்களிலிருந்து குறைவுபடுகையில் குற்றவுணர்வு ஏற்படுகிறது. குற்றவுணர்வு என்பது, “ஒரு தவறு, குற்றம் அல்லது பாவம் செய்ததனால் ஒருவருக்கு ஏற்படும் கடன்பட்ட உணர்வோடு” தொடர்புடையது என ஒரு புத்தகம் கூறுகிறது.
எபிரெய வேதாகமத்தில் குற்றவுணர்வு என்பது, ஓர் இஸ்ரவேலன் கடவுளுடைய நியாயப்பிரமாணத்திற்கு இசைவாக வாழ தவறுவதோடு சம்பந்தப்பட்டிருந்தது. அதைப் பற்றிய பெரும்பாலான குறிப்புகள் பைபிள் புத்தகங்களாகிய லேவியராகமத்திலும் எண்ணாகமத்திலுமே உள்ளன. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்திலும் குற்றவுணர்வு என்பது கடவுளுக்கு எதிராக செய்யும் மோசமான பாவங்களோடு சம்பந்தப்பட்டிருக்கிறது.—மாற்கு 3:29; 1 கொரிந்தியர் 11:27.
எந்தக் குற்றமும் செய்யாவிட்டாலும் நமக்கு குற்றவுணர்வு ஏற்படலாம் என்பது வருத்தகரமானதே. உதாரணமாக, ஒருவர் பரிபூரணத்தை எதிர்பார்த்து எட்ட முடியாத தராதரங்களை தனக்கென வைத்திருந்தால், ஒவ்வொரு முறை தவறும்போதும் தேவையற்ற குற்றவுணர்வு வாட்டி வதைக்கலாம். (பிரசங்கி 7:16) இல்லையெனில், செய்த தவறுக்கான அல்லது குற்றத்திற்கான நியாயமான குற்றவுணர்வு அதிகரித்து அவமான உணர்வு தாழ முடியாமல் போகையில் நம்மை நாமே தேவையின்றி தண்டித்துக்கொள்ளும் அளவிற்கு செல்லலாம். அப்படியென்றால், குற்றவுணர்வினால் என்ன பயன்?
குற்றவுணர்வு நன்மையளிக்கலாம்
குற்றவுணர்வு, குறைந்தது மூன்று வழிகளிலாவது நன்மையளிக்கலாம். முதலாவதாக, ஏற்கத்தகுந்த தராதரங்களை நாம் அறிந்திருப்பதை அது சுட்டிக் காட்டுகிறது. நம் மனசாட்சி செயல்படுவதையும் காண்பிக்கிறது. (ரோமர் 2:15) உண்மையில், குற்றவுணர்வு இல்லாதிருப்பது சமுதாயத்திற்கு கேடுவிளைவிக்கும் நடத்தையை தூண்டுவதாக அமெரிக்க உளவியல் சங்கம் வெளியிட்ட ஒரு புத்தகம் குறிப்பிடுகிறது. கெட்டுப்போன அல்லது மரத்துப்போன மனசாட்சி உடையவர்கள் நல்லதற்கும், கெட்டதற்கும் உள்ள வித்தியாசத்தை பகுத்தறிய தெரியாமல் இருக்கலாம், இது பேராபத்திற்கு வழிநடத்தலாம்.—தீத்து 1:15, 16.
இரண்டாவதாக, விருப்பமற்ற செயல்களை தவிர்க்க குற்றமுள்ள மனசாட்சி நமக்கு உதவும். உடல்நலக் கேட்டை தவிர்க்க சரீர வலி நமக்கு உதவுகிறது; அதைப் போலவே, குற்றவுணர்வோடு சம்பந்தப்பட்ட உணர்ச்சிப்பூர்வ வலி, நாம் கவனம் செலுத்த வேண்டிய தார்மீக அல்லது ஆவிக்குரிய பிரச்சினையை அடையாளம் கண்டுகொள்ள நமக்கு உதவுகிறது. அந்தக் குறைபாட்டை அறிந்த பிறகு எதிர்காலத்தில் நமக்கோ, நமக்கு பிரியமானவர்களுக்கோ, மற்றவர்களுக்கோ மீண்டும் தீங்கிழைப்பதை தவிர்க்க முழுமையாக தயாராயிருப்போம்.—மத்தேயு 7:12.
கடைசியாக, குற்றத்தை ஒப்புக்கொள்வது குற்றம் செய்தவர், பாதிக்கப்பட்டவர் ஆகிய இருவருக்குமே உதவலாம். உதாரணமாக, தாவீது ராஜா குற்றம் செய்த பிறகு தாங்க முடியாத உணர்ச்சிப்பூர்வ வலியால் அவதிப்பட்டார். “நான் அடக்கி வைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று” என அவர் எழுதினார். ஆனால், தன் பாவத்தை கடவுளிடம் அறிக்கை செய்த பிறகு தாவீது சந்தோஷத்தோடு இவ்வாறு பாடினார்: “இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர்.” (சங்கீதம் 32:3, 7) குற்றத்தை ஒப்புக்கொள்வது பாதிக்கப்பட்டவரும் பயனடைய உதவலாம்; ஏனெனில் அது, அவ்வளவு துன்பத்தை ஏற்படுத்திவிட்டோமே என வருத்தப்படுமளவிற்கு குற்றம் செய்தவர் தன் மீது அன்பு வைத்திருக்கிறார் என்பதை பாதிக்கப்பட்டவருக்கு உணர்த்துகிறது.—2 சாமுவேல் 11:2-15.
குற்றவுணர்வு பற்றிய சமநிலை
இயேசுவும் பரிசேயர்களும், பாவத்தையும் பாவிகளையும் எவ்வாறு முற்றிலும் வித்தியாசமாக கருதினர் என்பதை புரிந்துகொள்வது குற்றவுணர்வு பற்றிய சமநிலையான கருத்தைப் பெற நமக்கு உதவும். இயேசு பந்தியிருந்த ஒரு பரிசேயனுடைய வீட்டில் நுழைந்த ஒழுக்கங்கெட்ட ஒரு பெண்ணைப் பற்றி லூக்கா 7:36-50-ல் வாசிக்கிறோம். அவள் இயேசுவிடம் சென்று, தன் கண்ணீரால் அவர் பாதங்களை கழுவி, விலையுயர்ந்த தைலத்தை அவருடைய பாதங்களில் பூசினாள்.
பக்திமானாகிய பரிசேயனோ தன் நேரத்தையும் கவனத்தையும் பெற அந்தப் பெண் தகுதியற்றவள் என துச்சமாக நினைத்தான். “இவர் [இயேசு] தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே” என்று தனக்குள்ளே எண்ணினான். (லூக்கா 7:39) உடனே இயேசு அவன் எண்ணத்தைத் திருத்தினார். “நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை, இவளோ என் பாதங்களில் பரிமளதைலம் பூசினாள். ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே” என்றார். கனிவான இந்த வார்த்தைகள் அந்தப் பெண்ணை உற்சாகப்படுத்தி அவள் இருதயத்தை ஆசுவாசப்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.—லூக்கா 7:46, 47.
இங்கே இயேசு ஒழுக்கக்கேட்டை கண்டும்காணாமல் விடவில்லை. மாறாக, கடவுளை சேவிப்பதற்கு அன்பே தூண்டுகோலாக இருப்பது சிறந்ததென பெருமையுள்ள அந்தப் பரிசேயனுக்கு கற்பித்தார். (மத்தேயு 22:36-40) அந்தப் பெண் தனது கடந்தகால பாவத்தின் குற்றவுணர்வால் வருந்துவது நியாயமானதே. அவள் மனந்திரும்பியது தெளிவாக தெரிந்தது; ஏனெனில் அவள் அழுதாள், தனது முந்தைய நடத்தையை நியாயப்படுத்த முயலவில்லை, எல்லாருக்கும் முன்பாக இயேசுவை கனப்படுத்த நடவடிக்கை எடுத்தாள். இதைக் கண்ட இயேசு அவளிடம், “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ” என்றார்.—லூக்கா 7:50.
மறுபட்சத்தில், அந்தப் பரிசேயனோ அவளை இன்னும் ஒரு பாவியாகவே பார்த்தான். ஒருவேளை, அவள் கடவுளுக்கு கணக்கு கொடுக்க வேண்டியவள் என்ற குற்றவுணர்வை அவளுக்குள் ஏற்படுத்த அவன் நினைத்திருக்கலாம். ஆனால், நாம் நினைக்கும் விதமாக மற்றவர்கள் நடந்துகொள்ளாதபோது எப்போதுமே அவர்களுக்கு குற்றவுணர்வை ஏற்படுத்த நினைப்பது அன்பற்ற செயல் மட்டுமல்ல, கடைசியில் அது நாசகரமான விளைவையும் ஏற்படுத்தும். (2 கொரிந்தியர் 9:7) நல்ல முன்மாதிரி வைத்தல், மனதார மற்றவர்களை பாராட்டுதல், சில சமயங்களில் கண்டிக்கவும் ஆலோசனை கொடுக்கவும் வேண்டியிருந்தாலும் அவர்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பதை தெரிவித்தல் என இவ்வாறு இயேசுவைப் பின்பற்றுவதே மிகச் சிறந்த பலன்களை உண்டுபண்ணும்.—மத்தேயு 11:28-30; ரோமர் 12:10; எபேசியர் 4:29.
ஆகவே, தவறு செய்துவிட்டால் குற்றவுணர்வு வாட்டுவது நல்லது, தேவையானதும்கூட. “மூடர் பாவத்தைக் [“குற்றவுணர்வைக்,” NW] குறித்துப் பரியாசம் பண்ணுகிறார்கள்” என நீதிமொழிகள் 14:9 கூறுகிறது. குற்றத்தை அறிக்கை செய்யவும் தேவையான மற்ற நடவடிக்கைகள் எடுக்கவும் குற்றத்தால் குறுகுறுக்கும் மனசாட்சி நம்மை தூண்ட வேண்டும். ஆனால், யெகோவாவை சேவிப்பதற்கு குற்றவுணர்வு அல்ல, அன்பே எப்போதும் அடிப்படையாய் அமைய வேண்டும். (யோபு 1:9-11; 2:4, 5) இதை மனதில் வைத்து நல்லோரை உற்சாகப்படுத்தி, புத்துணர்ச்சி பெற செய்தால் தங்களால் இயன்ற அனைத்தையும் அவர்கள் செய்வர் என பைபிள் உறுதியளிக்கிறது. அதைச் செய்வதில் சந்தோஷத்தையும் காண்பர் என்பது அதைவிட முக்கியம். (g02 3/8)