Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

செ. பீட்டர் ஃபிஷ்

செ. பீட்டர் ஃபிஷ்

செ. பீட்டர் ஃபிஷ்

இஸ்ரேலில் கலிலேயாக் கடலோரமாய் அமைந்துள்ள ரெஸ்டராண்டுக்கு நீங்கள் போகிறீர்கள்; மெனுவில் “செ. பீட்டர் ஃபிஷ்” என்ற பெயரைப் பார்த்ததும் அது என்னவாக இருக்கும் என தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்கள். அது சுற்றுலா பயணிகள் மத்தியில் மிக பிரபலமான ஓர் உணவுப் பதார்த்தம் என வெயிட்டர் உங்களிடம் சொல்லலாம். வறுத்து சுடச்சுட புசிக்கையில் அதன் ருசியே அலாதி. ஆனால் அதற்கு செ. பீட்டருடன் அதாவது அப்போஸ்தலன் பேதுருவுடன் என்ன சம்பந்தம்?

பைபிளில் மத்தேயு 17:24-27-⁠ல் விவரிக்கப்பட்டுள்ள சம்பவம் அதற்கான பதிலைத் தருகிறது. அங்கு, கலிலேயாக் கடலருகே உள்ள கப்பர்நகூம் பட்டணத்திற்கு பேதுரு வந்தபோது ஆலய வரிப்பணத்தை இயேசு செலுத்திவிட்டாரா என அவரிடம் கேட்கப்பட்டதைப் பற்றி நாம் வாசிக்கிறோம். கடவுளுடைய குமாரனாக இருப்பதால் அத்தகைய வரிப்பணத்தை செலுத்தும் அவசியம் தமக்கில்லை என்பதை இயேசு பின்னர் விளக்கினார். ஆனால் மற்றவர்கள் இடறல் அடையாதிருப்பதற்காக அவர் பேதுருவிடம் கடலுக்குச் சென்று தூண்டில் போட்டு முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து அதன் வாயில் கண்டுபிடிக்கும் பணத்தை வரிப் பணமாக செலுத்தும்படி சொன்னார்.

பைபிளில் பதிவாகியுள்ள இந்தச் சம்பவத்திலிருந்துதான் “செ. பீட்டர் ஃபிஷ்” என்ற பெயர் பிறந்தது. ஆனால் அப்போது பேதுரு எந்த வகை மீனைப் பிடித்தார்?

மீன் வளமிக்க கடல்

கலிலேயாக் கடலில் காணப்படும் சுமார் 20 வகை மீன்களில், ஏறக்குறைய 10 வகை மீன்கள் மட்டுமே, பேதுரு பிடித்திருக்கலாம் என கருதப்படும் பட்டியலில் உள்ளன. இந்தப் பத்து வகைகளும் வியாபார ரீதியில் மூன்று முக்கிய பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

அதில் முக்கிய பிரிவின் பெயர் முஷ்ட். அரபிக் மொழியில் அதற்கு “சீப்பு” என்று அர்த்தம். இதற்குக் காரணம், அந்த இனத்தில் காணப்படும் ஐந்து வகைகளுக்கு சீப்பு போன்ற முதுகுத் துடுப்பு உள்ளது. ஒரு வகை முஷ்ட், சுமார் 45 சென்டிமீட்டர் நீளமும் சுமார் இரண்டு கிலோ எடையும் உள்ளது.

இரண்டாவது பிரிவின் பெயர் கின்னரேத் (கலிலேயாக் கடல்) சாளை. இது பார்க்க சிறிய ஹெர்ரிங் மீன்போல் இருக்கும். சாளை மீன் எக்கச்சக்கமாக கிடைக்கும் பருவத்தில் ஒவ்வொரு இரவும் டன்கணக்கில் பிடிக்கப்படுகின்றன. கணக்கிட்டால் இது வருடத்திற்கு சுமார் ஓராயிரம் டன் அளவு தேறும். பூர்வ காலம் முதலே இந்தச் சாளை மீன்கள் உப்பில் பதப்படுத்தப்பட்டு வருகின்றன.

மூன்றாவது பிரிவின் பெயர் பினி. இது தொட்டுணரிழை மீன் (barbel) எனவும் அறியப்படுகிறது. இதில் காணப்படும் மூன்று இனங்களின் வாயோரங்களில் தாடி போன்ற தசை இழைகள் காணப்படுகின்றன. எனவே செமிட்டிக் மொழியில் இதன் பெயர் “முடி” என அர்த்தம்தரும் பினி என்பதாகும். இந்த மீன், மெல்லுடலிகள், நத்தைகள், சிறு மீன் ஆகியவற்றை உண்டு உயிர் வாழ்கிறது. நீண்ட தலையுடைய தொட்டுணரிழை மீன் சுமார் 75 சென்டிமீட்டர் நீளமும் ஏழு கிலோகிராமுக்கும் அதிக எடையும் உள்ளது. தொட்டுணரிழை மீன்கள் அதிக சதைப்பற்றுள்ளவை; அவை யூத ஓய்வுநாள் ஆசரிப்புகளிலும் விருந்துகளிலும் பயன்படுத்தப்படும் விசேஷ உணவுப் பதார்த்தமாகும்.

வியாபார ரீதியில் இந்த மூன்று முக்கிய பிரிவுகளில் இடம் பெறாத மற்றொரு வகை மீன் கெளுத்தி மீன் ஆகும். இது கலிலேயாக் கடலிலுள்ள மீன்களிலேயே மிகப் பெரியது. இது சுமார் 1.20 மீட்டர் நீளமும் சுமார் 11 கிலோகிராம் எடையும் உள்ளது. ஆனால் இந்தக் கெளுத்தி மீனுக்கு செதிள்கள் இல்லை. எனவே மோசேயின் நியாயப்பிரமாண சட்டத்தின்படி இது அசுத்தமானதாக கருதப்பட்டது. (லேவியராகமம் 11:9-12) ஆகவே யூதர்கள் இதைப் புசிப்பதில்லை. அப்படியானால் இந்த வகை மீனைப் பேதுரு பிடித்திருக்க மாட்டார்.

எந்த மீனை பேதுரு பிடித்தார்?

முஷ்ட் மீனே பொதுவாக “செ. பீட்டர் ஃபிஷ்”ஷாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கலிலேயாக் கடலருகே உள்ள ரெஸ்டராண்டுகளில் அந்தப் பெயரிலேயே அது பரிமாறப்படுகிறது. பார்க்கப்போனால் வெகு சில முட்களே உள்ளதால் அதை சமைப்பதும், உண்பதும் சுலபம். ஆனால் உண்மையில் அந்த மீனையா பேதுரு பிடித்தார்?

கலிலேயாக் கடலின் கரையோரத்தில் 50-⁠க்கும் அதிக ஆண்டுகளாக வசித்து வந்திருக்கும் மென்டல் நூன் எனும் மீனவரிடம் அங்குள்ள மீன்களைப் பற்றி நம்பகமான தகவலை பெறலாம். “முஷ்ட் மிதவை நுண்ணுயிரிகளை உண்கிறது, மற்ற உணவுகளில் அதற்கு துளியும் நாட்டமில்லை. ஆகவே அதை கொக்கியோ தூண்டிலோ போட்டு பிடிக்க முடியாது, ஆனால் வலை வீசியே பிடிக்கப்படுகிறது” என அவர் சொல்கிறார். அப்படியானால் அந்த மீன் எந்த மீனோ என்ற தேர்வில் இந்த மீன் தோல்வியைத் தழுவுகிறது. தேறாத பட்டியலில் இடம் பெறும் மற்றொரு மீன் சாளை மீனாகும். செ. பீட்டர் ஃபிஷ் என்ற தகுதியைத் தட்டிச் செல்ல முடியாதளவுக்கு அது சின்னஞ்சிறியதாக உள்ளது.

அப்படி பார்த்தால், தொட்டுணரிழை மீனை தேர்வு செய்யும் சாத்தியமே அதிகம் உள்ளது. “செ. பீட்டர் ஃபிஷ்” என்ற பெயரை ஏற்க இதைப் பொருத்தமான மீனாக சிலர் கருதுகின்றனர். “[கலிலேயாக் கடல்] மீனவர்கள் ஆண்டாண்டு காலமாக சாளை மீனை தூண்டிலில் வைத்து தொட்டுணரிழை மீன்களைப் பிடிக்கிறார்கள்; இவை ஏரியின் அடியிலுள்ள உயிரிகளை உண்டு வாழ்பவை” என நூன் குறிப்பிட்டார். “சொல்லப்போனால் பேதுரு நிச்சயமாகவே இந்தத் தொட்டுணரிழை மீனைத்தான் பிடித்திருப்பார்” என்ற முடிவுக்கே வருகிறார் அவர்.

அப்படியானால் முஷ்ட் ஏன் “செ. பீட்டர் ஃபிஷ்”ஷாக பரிமாறப்படுகிறது. “இப்படி பெயரை மாற்றி குழப்புவதற்கு ஒரேவொரு விளக்கமே அளிக்கப்படலாம். அந்த மீன் சுற்றுலாவைப் பொருத்தவரை பெருத்த லாபத்தை அள்ளித் தருகிறது! . . . வெளி நாடுகளிலிருந்து இங்கு சுற்றுலா பயணிகள் வருவதால், தொன்றுதொட்டே கரையோர ஓட்டல்களில் பரிமாறப்பட்டு வந்த முஷ்ட்-⁠க்கு, ‘செ. பீட்டர் ஃபிஷ்’ என பெயர் சூட்டியது அந்த வியாபாரத்திற்கு தோதாக அமைந்ததில் சந்தேகமில்லை. மிகப் பிரபலமானதும் எளிதில் சமைக்க முடிந்ததுமான இந்த மீன் ஏராளமான வாடிக்கையாளர்களை தன் வசம் கவர்ந்திழுக்கும் பெயரைப் பெற்றிருக்கிறது!” என நூன் பதிலளிக்கிறார்.

பேதுரு உண்மையில் எந்த மீனைப் பிடித்தார் என உறுதியாக நம்மால் சொல்ல முடியாதிருந்தாலும், “செ. பீட்டர் ஃபிஷ்” என உங்களுக்கு எந்த மீன் பரிமாறப்படுகிறதோ அது உண்மையிலேயே வெகு ருசியான பதார்த்தமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். (g02 2/22)

[பக்கம் 25-ன் படம்]

“முஷ்ட்”

[பக்கம் 25-ன் படம்]

தொட்டுணரிழை மீன்

[பக்கம் 25-ன் படத்திற்கான நன்றி]

Garo Nalbandian