திகில் காட்சிகளும் நம்பிக்கை ஒளிக்கீற்றுகளும்
திகில் காட்சிகளும் நம்பிக்கை ஒளிக்கீற்றுகளும்
“எல்லா பக்கமும் கட்டடங்கள் கிடுகிடுவென ஆடிச்சு, அங்கங்கே குப் குப்புன்னு தீ பற்றி எரிஞ்சுது. நான் பதறியடிச்சிக்கிட்டு ஓடினேன், ஒருபக்கம் ஜனங்க ஓ-ன்னு அலறிகிட்டு இருந்தாங்க, இன்னொரு பக்கம் கடவுளே கடவுளேன்னு வேண்டிக்கிட்டிருந்தாங்க, இன்னொரு பக்கம் காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு கத்திக்கிட்டிருந்தாங்க. உலக அழிவுதான் வந்திடுச்சுன்னு நெனச்சேன்.”—ஜி. ஆர்., பூமியதிர்ச்சியில் உயிர்தப்பியவர்.
ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் அசையும் நமது கிரகத்தின் மேலோட்டில் ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான பூமியதிர்ச்சிகள் ஏற்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவற்றை நம்மால் உணர முடியாது என்பது உண்மைதான். a இருந்தாலும், சராசரியாக ஓர் ஆண்டில் சுமார் 140 பயங்கர பூமியதிர்ச்சிகள் ஏற்படுகின்றன; இவை “கடுமையான பூமியதிர்ச்சி,” “பெரிய பூமியதிர்ச்சி” அல்லது “மிகப் பெரிய பூமியதிர்ச்சி” என பட்டியலிடப்படுகின்றன. இந்தப் பூமியதிர்ச்சிகள் சரித்திரம் முழுவதிலும் கோடிக்கணக்கான உயிர்களை காவுகொண்டு கணக்கு வழக்கற்ற சொத்துக்களை சேதப்படுத்தியிருக்கின்றன.
உயிர்தப்பியவர்களை உணர்ச்சி ரீதியிலும் உலுக்கி எடுக்கின்றன இந்தப் பூமியதிர்ச்சிகள். உதாரணமாக, 2001-ம் வருடத்தின் ஆரம்பத்தில் எல் சால்வடாரை இரு பூமியதிர்ச்சிகள் “தாலாட்டிய” போது, அந்நாட்டு சுகாதார அமைச்சகத்தின் மனநல ஆலோசனைக் குழு ஒருங்கமைப்பாளர் இவ்வாறு குறிப்பிட்டார்: “துக்கம், நம்பிக்கை இழத்தல், கோபம் போன்ற மனோவியல் பிரச்சினைகளுக்கு மக்கள் ஆளாகிறார்கள்.” ஆகவே, மன உளைச்சலாலும் கவலையாலும் அவதியுறும் நோயாளிகளின் எண்ணிக்கை 73 சதவீதத்திற்கு அதிகரித்ததாக எல் சால்வடாரில் உள்ள சுகாதார ஊழியர்கள் அறிக்கை செய்திருப்பதில் ஆச்சரியமில்லை. சொல்லப்போனால், நிவாரண முகாம்களில் தங்கியிருந்தவர்களுக்கு தண்ணீருக்கு அடுத்தபடியாக தேவைப்பட்டது மனநல சிகிச்சையே என ஆய்வு குறிப்பிட்டது.
ஆனால் சாவு, நாசம், மனச்சோர்வு ஆகியவற்றோடு இந்தப் பூமியதிர்ச்சிகளின் கதை முடிந்துவிடுவதில்லை. பல சந்தர்ப்பங்களில், அசந்துபோகும் அளவுக்கு கரிசனையையும் சுயதியாகத்தையும் வெளிக்காட்டுவதற்கு இந்தப் பேரழிவுகள் மக்களை தூண்டியிருக்கின்றன. சிலர் பழுதடைந்த கட்டடங்களை பழுதுபார்க்கவும், சின்னாபின்னமான வாழ்க்கையை சீர்படுத்தவும் அயராது உழைத்திருக்கின்றனர். ஆம், படுபயங்கர திகில் காட்சிகளின் மத்தியிலும் நம்பிக்கை ஒளிக்கீற்றுகள் ஒளிவீசியிருக்கின்றன. இதைத்தான் இனிவரும் கட்டுரைகளில் பார்க்கப் போகிறோம். (g02 3/22)
[அடிக்குறிப்பு]
a மிகச் சிறிய பூமியதிர்ச்சிகளும் இதில் அடங்கும்; அவற்றில் ஆயிரக்கணக்கானவை தினம்தினம் ஏற்படுகின்றன.
[பக்கம் 2, 3-ன் படம்]
பக்கங்கள் 2 மற்றும் 3: கிரீஸிலுள்ள ஆதன்ஸில் இடிந்து விழுந்த கட்டடத்திற்குள் தன் அம்மா மாட்டிக்கொண்டதை அறிந்து ஓர் இளம் பெண் கதறும் காட்சி. அதே சமயத்தில் ஓர் அப்பா தன் ஐந்து வயது மகள் மீட்கப்பட்டதைக் கண்டு குதூகலம் அடையும் காட்சி
[படத்திற்கான நன்றி]
AP Photos/Dimitri Messinis