Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தேன் காயத்திற்கு இனிய களிம்பு

தேன் காயத்திற்கு இனிய களிம்பு

தேன்—காயத்திற்கு இனிய களிம்பு

வலியையும் வீக்கத்தையும் தடுத்து, செப்டிக் ஆகாதபடி காக்கும் சக்தி வாய்ந்த குணங்கள் தேனுக்கு இருப்பதைக் குறித்து சில மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குதூகலம் அடைந்திருக்கிறார்கள். “ஏராளமாக கிடைக்கும் அதிநவீன ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள்கூட ஒரு சில கிருமிகளை​—⁠ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளையே எதிர்க்கும் நுண்கிருமிகளை​—⁠ஒன்றுமே செய்ய முடிவதில்லை. அதற்கு மாறாக, தேன் அக்கிருமிகளை, குறிப்பாக புண்களில் உள்ள கிருமிகளை வீழ்த்த முடிகிறது” என்று கனடாவில் உள்ள த குளோப் அண்ட் மெயில் செய்தித்தாள் அறிக்கையிடுகிறது.

காயத்தை ஆற்றும் அளவுக்கு அப்படி என்னதான் தேனில் இருக்கிறது? பூக்களில் இருந்து நெக்டர் என்ற தேனமுதை சேகரிக்கும் வேலைக்கார தேனீயிடம் இதற்கான பதில் உள்ளது. இந்தத் தேனீயின் உமிழ்நீரில் குளுக்கோஸ்-ஆக்ஸிடேஸ் என்ற என்ஸைம் இருக்கிறது. இதுவே தேனமுதில் உள்ள குளுக்கோஸை முறிக்கும் முக்கிய என்ஸைம் ஆகும். இதன் விளைவாக, ஹைட்ரஜன் பெராக்ஸைடு உருவாகிறது. காலங்காலமாக இந்த ஹைட்ரஜன் பெராக்ஸைடைத்தான் புண்களைச் சுத்தப்படுத்தவும் கிருமிகளிலிருந்து பாதுகாக்கவும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த ஹைட்ரஜன் பெராக்ஸைடை ஒரு புண்ணின் மீது தடவும்போது, அதன் வீரியம் சாதாரணமாக கொஞ்ச நேரத்திற்கு மட்டும்தான் இருக்கும். ஆனால் தேனைப் பொருத்ததில் விஷயமே வேறு. “ஒரு புண்ணின் மீது தேனைத் தடவியவுடன், உடலில் இருந்து சுரக்கும் திரவங்கள் இந்தத் தேனைக் கொஞ்சம் நீர்த்துப் போகச் செய்கின்றன. இதனால் தேனில் உள்ள இயல்பான புளிப்புத்தன்மை குறைகிறது” என்று குளோப் அறிவிக்கிறது. புளிப்புத்தன்மை குறைவாக இருக்கும் இந்த சூழ்நிலையில்தான் அந்தத் தேனில் உள்ள என்ஸைம் வேலை செய்யத் தொடங்குகிறது. தேனில் உள்ள சர்க்கரை கொஞ்சம் கொஞ்சமாக, தொடர்ச்சியாக முறிக்கப்படுகிறது. இச்சமயத்தில், ஹைட்ரஜன் பெராக்ஸைடு தேவையான அளவுக்கு மெதுவாக வெளியாகிறது. இந்த அளவு, புண்ணில் உள்ள பாக்டீரியாக்களைக் கொல்லுமே தவிர, சுற்றியுள்ள ஆரோக்கியமான தசைகளை ஒருபோதும் பாதிக்காது.

குளோப் செய்தித்தாள் சொல்கிறபடி புண்களை ஆற்றும் குணங்கள் பல தேனில் உள்ளன. “லேசாக தடவப்படும் தேன், ஒருவித ஈரப்பசையைக் கொடுப்பதால் தோலைப் பாதுகாக்கிறது. மேலும், கெட்டியான வறண்ட தோல் உண்டாகாதவாறும் தடுக்கிறது. புதிய இரத்த நுண்குழாய்கள் வளருவதற்கும் உருவாவதற்கும் தேன் உதவுகிறது. அதோடு, புதிய தோலை வளரச் செய்யும் உயிரணுக்களையும் தேன் தூண்டிவிடுகிறது.” மேலும், தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளில் வீக்கத்தை தடுக்கும் நிவாரணி இருப்பதால், அது “வீக்கத்தைக் குறைப்பதற்கும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கும் புண்ணிலிருந்து சீழ் வடிவதை தடுப்பதற்கும் உதவுகிறது.”

“ஆனாலும், எல்லாருக்குமே தேன் ஒரு பரிகாரமல்ல” என்று அந்த அறிக்கை எச்சரிக்கிறது. காரணம், தேனில் 5 சதவீதம் வரை பாட்யூலிஸம் என்ற பாக்டீரியா கிருமிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு வயதுக்குட்பட்ட “குழந்தைகளின் குடலில் இந்த பாக்டீரியாவிலிருந்து பாதுகாக்கும் நுண்ணுயிரிகள் போதிய அளவுக்கு உருவாகாமல் இருக்குமென்பதால்” அவர்களுக்கு தேனை கொடுக்கக் கூடாது என்று ஹெல்த் கனடாவின் பாட்யூலிஸம் ரெஃபரன்ஸ் சர்வீஸ் போன்ற ஏஜென்ஸிகளும் குழந்தைகளுக்கான மருத்துவ சங்கங்களும் ஆலோசனை அளிக்கின்றன. (g02 3/8)