பின்விளைவுகளை சமாளித்தல்
பின்விளைவுகளை சமாளித்தல்
“நாங்க காலைல இருந்து நடந்துகிட்டிருக்கோம். எல்லாம் இந்த உயிருக்காகத்தான். குடிக்கிறதுக்கு தண்ணி இல்ல, சாப்பாட்டுக்கு வழி இல்ல. குடியிருக்க வீடும் இல்ல. எல்லாம் மண்ணோடு மண்ணாச்சு.”—ஹர்ஜிவன், இந்தியாவில் 7.9 அதிர்வு அளவு பூமியதிர்ச்சியில் உயிர்பிழைத்தவர்.
பூமியின் கோரதாண்டவம் இரத்தத்தையே உறைய வைக்கும் காட்சி. “என்னோட படுக்கைக்கு பக்கத்துல இருந்த எட்டு அடி மர அலமாரியிலிருந்து புஸ்தகமெல்லாம் பொத் பொத்தென்று விழுந்துது. புதுசா வாங்கிய ஹெல்மெட், மர அலமாரியின் மேலிருந்து நேரே படுக்கையில் என் தலைக்குப் பக்கத்துலேயே வந்து விழுந்துது” என்று சொல்கிறார் 1999-ல் தைவானில் நடந்த பூமியதிர்ச்சியில் உயிர்தப்பியவர். “தலைக் கவசமே தலையைப் பதம் பார்த்திருக்கும்” என்று அவர் கூறுகிறார்.
உயிர்பிழைத்த பின்
பூமியதிர்ச்சியில் சிக்கி அதிலிருந்து மீளுவதை நினைத்தாலே கதிகலங்குகிறது; ஆனால் ஒருவர் அதிலிருந்து தப்புவதோடு எல்லாம் முடிந்துவிடுவதில்லை. சம்பவத்தைத் தொடர்ந்து, காயப்பட்டவர்களை கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க நிவாரண பணியாளர்கள் மீட்கும் பணியில் துணிந்திறங்குகிறார்கள். பெரும்பாலும், பூமியதிர்ச்சிக்குப் பின் மீண்டும் அதிர்வுகள் ஏற்படும் ஆபத்து இருந்தாலும் அவர்கள் தயங்காமல் காரியத்தில் இறங்குகிறார்கள். எல் சால்வடாரில் சமீபத்தில் நடந்த பூமியதிர்ச்சிக்குப் பின்பு, சுற்றுவட்டாரத்தையே சமாதியாக்கிவிட்ட மண் குவியலை அப்புறப்படுத்த நினைத்த ஒருவர், “நாம் ரொம்ப கவனமா இருக்கணும், திடீர்ன்னு பூமி திரும்பவும் அதிர்ந்தால் மீதமுள்ள குன்றும் இல்லாமல் போயிடும்” என்று சொன்னார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சிலர் காட்டும் சுயதியாக மனப்பான்மை அபாரமானது. உதாரணமாக, இந்தியாவில் 2001-ம் வருடத்தின் ஆரம்பத்தில் பெரிய அளவில் பூமியதிர்ச்சி ஏற்பட்டபோது, ஐக்கிய மாகாணங்களில் வாழும் மனு என்ற முதியவர் தன்னுடைய தாய்நாட்டிற்குத் திரும்பினார். “என் குடும்பத்துக்கு மட்டுல்ல, கஷ்டப்படுற எல்லாருக்கும் உதவுறதுக்கு நான் கண்டிப்பா போய்த்தான் ஆகணும்” என்றார். இந்த முதியவர் சென்று பார்த்த பகுதிகளின் நிலைமை வேதனை தருவதாய் இருந்தது. என்றாலும், “மக்களின் மனத்துணிவு மலைக்க வைக்கிறது” என்று அவர் கூறினார். “அக்கம் பக்கத்திலிருந்த ஒருத்தர்கூட உதவி செய்யாமல் இல்லை; எல்லாருமே ஒருநாள் சம்பளம், ஒருவார சம்பளம், ஒருமாத சம்பளம் என தங்களால் முடிந்த எதையாவது கொடுத்தார்கள். சிலர் தாங்கள் சேமித்து வைத்த பணத்திலிருந்து ஒரு தொகையை கொடுத்தார்கள் அல்லது மற்றவர்களுக்கு உதவ தங்களால் முடிந்ததை செய்தார்கள்” என ஒரு பத்திரிகையாளர் எழுதினார்.
இடிபாடுகளை அகற்றி காயப்பட்டவர்களுக்கு சிகிச்சை கொடுப்பது கஷ்டமான வேலைதான். ஆனால் சில கணநேர பயங்கரத்தால் தலைகீழாகிவிட்ட வாழ்க்கையை மீண்டும் சகஜ நிலைக்கு கொண்டுவருவதுதான் அதைவிட கஷ்டமானது. எல் சால்வடாரில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியில் தன் வீடுவாசலை இழந்து நின்ற டெலோரஸ் என்ற பெண்மணி சொல்வதை கவனியுங்கள். “இது போரைவிட படுமோசமானது, அந்தப் போரில் எங்க கூரையாவது மிஞ்சியது” என அவர் கூறுகிறார்.
முதல் கட்டுரையில் குறிப்பிட்டபடி, பாதிக்கப்பட்டவர்களுக்கு சில சமயங்களில் பொருளாதார
ரீதியில் கைகொடுப்பது மட்டுமல்லாமல், உணர்ச்சி ரீதியில் உதவி செய்வதும் அதிக அவசியம். உதாரணத்திற்கு, 1999-ன் ஆரம்பத்தில் மேற்கு கொலம்பியாவின் அர்மேன்யா நகரம் பூமியதிர்ச்சியால் தரைமட்டமானபோது, ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர், இன்னும் பலர் அதிர்ச்சிக்கும் நம்பிக்கையிழந்த நிலைக்கும் ஆளாயினர். தன் சொந்த அபார்ட்மென்டையே பேரழிவில் பறிகொடுத்த ரோபர்டோ எஸ்டஃபான் என்ற உளவியல் நிபுணர் சொன்னதாவது, “எங்கு போனாலும் ஜனங்க உதவிதான் கேட்கிறாங்க. நான் சான்விச் சாப்பிட ரெஸ்டாரன்டுக்கு போனால் அங்கேயும் பார்க்கிறவங்க எல்லாம் ஒரே புலம்பல்தான். தூக்கமில்லாமல் அவதிப்படுறதையும் தாங்க முடியாத துக்கத்தையும் பற்றி கொட்டித் தீர்க்கிறாங்க.”டாக்டர் எஸ்டஃபான் நன்கு அறிந்திருக்கிறபடி, பூமியதிர்ச்சிக்குப் பின் ஏற்படும் மனஅதிர்ச்சிகள் கொடூரமாய் இருக்கலாம். பூமியதிர்ச்சிக்குப் பின்பு சிலர், இன்றைக்கோ நாளைக்கோ உயிர் போகப் போகிறதே என நினைத்து வேலைக்குப் போவதையே நிறுத்திவிட்டதாக நிவாரண முகாம் கட்டுவதற்கு தொண்டராக சென்ற பெண்மணி ஒருவர் குறிப்பிட்டார்.
துயரத்திலும் நம்பிக்கை
இப்படிப்பட்ட நம்பிக்கையிழந்த சமயங்களில், உயிர்பிழைத்தவர்களுக்கு சரீர ரீதியில் மட்டுமல்ல ஆன்மீக ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் உதவி செய்ய யெகோவாவின் சாட்சிகள் முன்வருகிறார்கள். உதாரணமாக, ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி, கொலம்பியாவில் பூமியதிர்ச்சி ஏற்பட்ட உடனேயே அங்குள்ள
யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகம் உள்ளூரில் ஓர் அவசர குழுவை ஒழுங்கமைத்தது. நாட்டின் எல்லா பாகங்களிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகளில் ஆயிரக்கணக்கான தன்னார்வ தொண்டர்கள் உணவையும் பணத்தையும் நன்கொடையாக வழங்கினார்கள். பாதிக்கப்பட்ட இடத்திற்கு உடனடியாக சுமார் 70 டன் உணவு அனுப்பி வைக்கப்பட்டது.பெரும்பாலும், ஆன்மீக ஆதரவே மிக முக்கியமாக தேவைப்படுகிறது. கொலம்பியாவில் நடந்த பூமியதிர்ச்சிக்குப் பின்பு, உருக்குலைந்துபோன அர்மேனிய நகரத்தின் தெருவில், ஒருநாள் காலை பெண்மணி ஒருவர் நடந்து போய்க் கொண்டிருந்தார். அப்பெண்மணியின் முகத்தில் வேதனையின் சாயல் படிந்திருப்பதை அந்தப் பகுதியிலுள்ள யெகோவாவின் சாட்சி ஒருவர் கவனித்தார். அவர் அந்தப் பெண்மணியை அணுகி மரித்த அன்பானவர்களுக்கு என்ன நம்பிக்கை? a என்ற துண்டுப்பிரதியை அளித்தார்.
அந்தப் பெண்மணி அத்துண்டுப்பிரதியை வீட்டிற்கு எடுத்துச் சென்று கவனமாக வாசித்தார். அடுத்த முறை ஒரு யெகோவாவின் சாட்சி அப்பெண்மணியின் வீட்டிற்கு வந்தபோது அவரால் தன் சோகக் கதையை சொல்லாமல் இருக்க முடியவில்லை. பூமியதிர்ச்சியில் அவருக்குச் சொந்தமான வீடுகள் பல மண்ணோடு மண்ணாயின. அதிலிருந்து அவருக்கு கணிசமான வருவாய் கிடைத்து வந்தது. இப்பொழுதோ அவர் ஏழ்மைக்குள் தள்ளப்பட்டார். அவருடைய சோகம் அத்தோடு முடியவில்லை. பூமியதிர்ச்சியில், அவர் வசித்து வந்த வீடு இடிந்ததில் அவருடைய 25 வயது மகனும் அற்பாயுசில் இறந்துவிட்டார். முன்பெல்லாம் கடவுள் நம்பிக்கை என்பதே தனக்கு துளியும் கிடையாது என்றும் ஆனால் இப்போது நிறைய கேள்விகள் மனதில் உதித்திருக்கின்றன என்றும் வீட்டிற்கு வந்த சாட்சியிடம் அவர் கூறினார். அந்தத் துண்டுப்பிரதி அவருக்கு உண்மையான நம்பிக்கையை அளித்திருந்தது. விரைவில் பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
பூமியதிர்ச்சிகள் மட்டுமல்ல, வேறெந்த இயற்கை பேரழிவுகளும் இனி மனிதரை சீண்டாத ஒரு காலம் வரப்போகிறது என்பதை யெகோவாவின் சாட்சிகள் உறுதியாக நம்புகிறார்கள். ஏன் என்பதை அறிய அடுத்த கட்டுரையை வாசியுங்கள். (g02 3/22)
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 6-ன் பெட்டி]
தயாராயிருங்கள்!
◼ வாட்டர் ஹீட்டர்களுக்கு நன்கு போல்ட் போடப்பட்டுள்ளதா என்றும் கனமான பொருட்கள் தரையில் அல்லது அலமாரியின் கீழ் தட்டுகளில் வைக்கப்பட்டுள்ளனவா என்றும் பாருங்கள்.
◼ மின் சப்ளை, கேஸ் மற்றும் தண்ணீர் சப்ளையை ஆஃப் செய்வது எப்படி என்பதை வீட்டிலுள்ள அனைவருக்கும் சொல்லிக் கொடுங்கள்.
◼ உங்கள் வீட்டில் தீயணைப்பு கருவியையும் முதலுதவிக்கு வேண்டிய பொருட்களையும் வைத்திருங்கள்.
◼ புதிய பேட்டரிகள் பொருத்திய சிறிய ரேடியோவை எப்போதும் ரெடியாக வைத்திருங்கள்
◼ வீட்டிலேயே பயிற்சி நடத்தி, (1) பயப்படாமல் அமைதியாயிருப்பது, (2) ஸ்டவ்களையும் ஹீட்டர்களையும் ஆஃப் செய்வது, (3) வாசல் பக்கம் வந்து நிற்பது அல்லது மேஜைக்கோ டெஸ்கிற்கோ அடியில் செல்வது, (4) ஜன்னல், கண்ணாடி, புகைக்கூண்டு ஆகியவற்றின் அருகிலிருந்து விலகியிருப்பது போன்றவற்றின் அவசியத்தை வலியுறுத்திக் காட்டுங்கள்.
[பக்கம் 7-ன் பெட்டி/படம்]
இஸ்ரேலில் பூமியதிர்ச்சிகள்
“சரித்திர பதிவுப்படி, உலகிலேயே வெகுகாலத்திற்கு முன்பிருந்தும் மிக அடிக்கடியும் பூமியதிர்ச்சிகள் ஏற்பட்ட இடம்” இஸ்ரேல்தான் என எழுதுகிறார் பேராசிரியர் ஆமாஸ் நூர். அதற்குக் காரணம் மகா பிளவு பள்ளத்தாக்கின் ஒரு பகுதி—மத்தியத்தரைக் கடலுக்கும் அரேபியாவின் அடிநிலத் தட்டுகளுக்கும் இடையிலுள்ள அந்தப் பிளவு—வடக்கிலிருந்து தெற்கு வரை இஸ்ரேல் தேசம் நெடுகிலும் செல்கிறது.
பூமியதிர்ச்சியால் உண்டாகும் சேதத்தை குறைக்க பூர்வகால பொறியாளர்கள் விசேஷித்த தொழில்நுட்ப முறையை பயன்படுத்தினார்கள் என புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் சிலர் நம்புகிறார்கள். இது சாலொமோனின் கட்டிடப் பணியைப் பற்றிய பைபிள் விவரிப்போடு ஒத்துப்போகிறது: ‘பெரு முற்றத்தைச் சுற்றிலும் இருந்த சுவர்கள் மூன்று வரிசை செதுக்கப் பெற்ற கற்களாலும், ஒரு வரிசை கேதுரு கட்டைகளாலும் அமைக்கப் பெற்றிருந்தன. ஆண்டவரின் இல்லத்தின் உள்முற்றமும் கோவிலின் முன்மண்டபமும் அவ்வாறே அமைக்கப் பெற்றிருந்தன.’ (1 இராஜாக்கள் 6:36; 7:12; பொது மொழிபெயர்ப்பு) மரச்சட்டங்களை உத்திரங்களாக கொடுத்து கருங்கல் கட்டிடங்களை கட்டும் முறை இருந்ததற்கு அத்தாட்சி பல இடங்களில் காணப்படுகிறது; சாலொமோனின் காலத்திலோ அதற்கு முன்போ கட்டப்பட்ட மெகிதோவின் நுழைவாயில் அவற்றில் ஒன்று. இந்த உத்திரங்கள் “பூமியதிர்ச்சியிலிருந்து கட்டிடத்தை பாதுகாப்பதற்காகவே பொருத்தப்பட்டிருக்கலாம்” என டேவிட் எம். ரோல் என்ற அறிஞர் நம்புகிறார்.
[படம்]
இஸ்ரேலிலுள்ள பெட் ஷியனில் பூமியதிர்ச்சி இடிபாடுகள்
[பக்கம் 8-ன் பெட்டி/படங்கள்]
இரண்டு நிமிட திகில்—உயிர்பிழைத்தவர் சொன்னது
இந்தியாவிலுள்ள அகமதாபாத்தில் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். என் சித்தப்பா மகளின் கலியாணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தோம். ஜனவரி 26, 2001 அன்று காலை சட்டென கண் விழித்தேன். கடிகாரத்தின் அலார சத்தம் கேட்டு அல்ல, ஆனால் பயங்கரமாக உலுக்கப்பட்டதால். இரும்பு அலமாரிகள் முன்னும் பின்னும் கடகடவென ஆடுகிற சத்தம் கேட்டபோதுதான் ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டதென உணர்ந்தேன். “எல்லாரும் வெளியே ஓடுங்க!” என்று என்னுடைய சித்தப்பா அலறினார். வெளியே ஓடிப் பார்த்தபோது, வீடே இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் அசைவது தெரிந்தது. இரண்டே நிமிஷத்திற்கு நடந்த அந்த பூகம்பம் எங்களுக்கு ஏதோ ஒரு யுகம் போல தோன்றியது.
திடுதிப்பென எல்லாம் ஒரே சமயத்தில் நடந்துவிட்டதால் நாங்கள் என்ன செய்வது ஏது செய்வது என புரியாமல் திணறிப்போனோம். வீட்டில் உள்ள எல்லாரும் பத்திரமாக இருக்கிறார்களா என்பதை நாங்கள் உறுதிப்படுத்திக் கொண்டோம். தொலைபேசி, மின் இணைப்புகள் எல்லாம் துண்டிக்கப்பட்டதால் பக்கத்து டவுண்களில் உள்ள எங்களுடைய சொந்தக்காரர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை உடனடியாக அறிந்துகொள்ள முடியவில்லை. ஒரு மணிநேர தவிப்புக்குப் பிறகுதான் அவர்களும் பத்திரமாக இருப்பதை அறிய முடிந்தது. ஆனால் எல்லாருக்குமே தப்பிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. உதாரணமாக, அகமதாபாத்தில் நூறுக்கும் அதிகமான வீடுகள் தரைமட்டமாயின, 500-க்கும் மேலானோர் பலியானார்கள்.
பல வாரத்திற்கு அந்தப் பயம் எல்லாரையும் ஆட்டிப் படைத்தது. மறுபடியும் பூமியதிர்ச்சி வரலாம் என எச்சரிப்பு தரப்பட்டிருந்ததால் ஜனங்கள் அடுத்த அதிர்ச்சி வருமோ என்ற பயத்திலேயே ஒவ்வொரு நாளும் படுக்கைக்கு சென்றார்கள். சகஜ நிலைக்கு திரும்ப காலம் எடுத்தது; பலரும் வீடுவாசல் இழந்து நின்றார்கள். இந்த எல்லாவற்றிற்கும் காரணம் அந்த பூகம்பம்—இரண்டே நிமிடங்களுக்கு நீடித்த அது என்றென்றும் எங்கள் நினைவில் தங்கும்.—ஸமீர் ஸரையா சொன்னது.
[பக்கம் 6, 7-ன் படம்]
ஜனவரி 2001-ல் இந்தியாவில் நடந்த பூமியதிர்ச்சியில் உயிர்பிழைத்தவர் தன் தாயாரின் சிதைக்கு அருகில், கையில் தாயாரின் படத்துடன்
[படத்திற்கான நன்றி]
© Randolph Langenbach/UNESCO (www.conservationtech.com)