Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பூமியதிர்ச்சிகள், பைபிள் தீர்க்கதரிசனம், நீங்கள்

பூமியதிர்ச்சிகள், பைபிள் தீர்க்கதரிசனம், நீங்கள்

பூமியதிர்ச்சிகள், பைபிள் தீர்க்கதரிசனம், நீங்கள்

இயேசு தம் மரணத்திற்கு முன்பு, இந்த “உலகத்தின் முடிவு” நெருங்கிவிட்டதற்கு அத்தாட்சி அளிக்கும் சம்பவங்களையும் சூழ்நிலைகளையும் முன்னறிவித்தார். அதன் அடையாளமாக கொள்ளை நோய்களும் பஞ்சங்களும் பெரிய அளவில் யுத்தங்களும் நடக்கும் என அவர் சொன்னார். “பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும்” உண்டாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். (மத்தேயு 24:3, 7; லூக்கா 21:10, 11) இயேசு நம்முடைய நாளைப் பற்றியா பேசிக்கொண்டிருந்தார்?

இல்லை என பலர் சொல்கிறார்கள். சமீப பத்தாண்டுகளில் பூமியதிர்ச்சிகளின் எண்ணிக்கை அந்தளவுக்கு ஒன்றும் அதிகரிக்கவில்லை என அவர்கள் ஆணித்தரமாக சொல்கிறார்கள். சொல்லப்போனால், 20-⁠ம் நூற்றாண்டு முழுவதிலும் 7.0 அதிர்வு அளவில் பதிவான பூமியதிர்ச்சிகளும் அதைவிட பெரிய பூமியதிர்ச்சிகளும் “பெரும்பாலும் தொடர்ச்சியாக” நடந்திருப்பதாக ஐ.மா. தேசிய நிலநடுக்க தகவல் மையம் அறிவிக்கிறது. a

என்றாலும், பூமியதிர்ச்சிகளின் எண்ணிக்கையை அல்லது வலிமையைப் பொறுத்து இயேசுவின் தீர்க்கதரிசனம் நிறைவேற வேண்டியதில்லை. இயேசு சொன்னதெல்லாம் எல்லா இடங்களிலும் மகா பூமியதிர்ச்சிகள் உண்டாகும் என்பதே. அதோடு, இச்சம்பவங்கள் “வேதனைகளுக்கு ஆரம்பம்” என்றும் அவர் குறிப்பிட்டார். (மத்தேயு 24:8) இந்த வேதனை, பூமியதிர்ச்சிகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலோ ரிக்டர் அளவீடுகளின் அடிப்படையிலோ அல்ல, ஆனால் அது மக்களை எந்தளவுக்கு பாதிக்கிறது என்பதன் அடிப்படையிலேயே மதிப்பிடப்படுகிறது.

உண்மையில் பூமியதிர்ச்சிகள் நம் நாளில் பெரும் வேதனையை உண்டாக்கியிருக்கின்றன. சொல்லப்போனால், 20-⁠ம் நூற்றாண்டில், இந்தப் பேரழிவுகளால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்திருக்கிறார்கள் அல்லது தங்கள் வீடுகளை இழந்திருக்கிறார்கள். ஆனால் இந்தளவு உயிர்ச்சேதத்தைத் தவிர்த்திருக்கலாம் என வல்லுநர்கள் கூறுகிறார்கள். “வளரும் நாடுகளில், நகரமயமாக்க வேண்டிய அவசியம் அதிகரித்துவருவதால் கட்டிடத்தை கட்ட வேண்டிய விதிமுறைகளுக்கு அல்ல, ஆனால் மலிவாக கிடைக்கும், எளிதில் கட்ட முடிந்த கட்டிடப் பொருட்களுக்கே பெரும்பாலும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது” என பிபிசி நியூஸ் அறிவிக்கிறது. சமீபத்தில் நடந்த துயர்மிகுந்த இரு சம்பவங்களைக் குறித்து, நகர பேரழிவுகளை ஆராயும் வல்லுநர் பென் விஸ்நர் இவ்வாறு குறிப்பிட்டார்: “இந்த ஜனங்களின் உயிர் பறிபோனதற்கு காரணம் பூமியதிர்ச்சிகள் அல்ல. மனிதனின் தவறு, கவனமில்லாமை, ஊழல், பேராசை ஆகியவையே காரணம்.”

ஆம், சில சமயங்களில் பூமியதிர்ச்சியின் போது ஏற்படும் மரணத்திற்கு மனிதனின் சுயநலமும் அறியாமையுமே காரணமாக இருக்கின்றன. இந்த உலகின் ‘கடைசி நாட்களைக்’ குறித்த மற்றொரு பைபிள் தீர்க்கதரிசனத்தில் இந்தக் குணங்கள் வலியுறுத்தப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. அந்த சமயங்களில் ஜனங்கள் ‘தன்னலம் நாடுவோராயும், பண ஆசையுடையோராயும்,’ ‘அன்புணர்வு அற்றோராயும்’ இருப்பார்கள் என பைபிள் குறிப்பிடுகிறது. (2 தீமோத்தேயு 3:1-5, பொ.மொ.) இந்த தீர்க்கதரிசனமும் உலக முடிவைக் குறித்து இயேசு சொன்ன மற்றவையும், வேதனையிலிருக்கும் மனிதவர்க்கத்திற்கு கடவுள் விடுதலை தரப்போகும் நாள் சமீபித்திருப்பதற்கு தெளிவான அத்தாட்சி அளிக்கின்றன; அச்சமயத்தில் மகா பூமியதிர்ச்சிகள் உட்பட நாம் இன்று அனுபவிக்கும் வேதனை, துன்பம் அனைத்திற்கும் முடிவு வரும்.​—சங்கீதம் 37:11.

பைபிள் அடிப்படையிலான இந்த நம்பிக்கையைக் குறித்து அதிகம் கற்றுக்கொள்ள உங்களுக்கு விருப்பமா? அப்படியானால் நீங்கள் வாழும் இடத்திலுள்ள யெகோவாவின் சாட்சிகளை அணுகுங்கள் அல்லது பக்கம் 5-⁠ல் உள்ள பொருத்தமான விலாசத்திற்கு எழுதுங்கள். (g02 3/22)

[அடிக்குறிப்பு]

a தொழில் நுட்பத்தில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களே, பூமியதிர்ச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பற்றிய எந்த அறிக்கைகளுக்கும் காரணம் என சிலர் சொல்கிறார்கள்; அந்தத் தொழில் நுட்பங்களால் அதிக பூமியதிர்ச்சிகளை கண்டறிய முடிகிறது.