பூமியதிர்ச்சி—ஓர் அலசல்
பூமியதிர்ச்சி—ஓர் அலசல்
“அசையாமல் உறுதியோடிருக்கும் பூமியில் நாம் வாழ்ந்து பழக்கப்பட்டிருப்பதால் அது ஆட்டம்காண ஆரம்பிக்கையில் நம் மனதும் ஆட்டம்கண்டு விடுகிறது.”—“த வயலன்ட் எர்த்.”
“பூமியதிர்ச்சி—இயற்கை சீற்றங்களிலேயே மிகவும் நாசகரமானது, வலிமைமிக்கது” என த உவர்ல்டு புக் என்ஸைக்ளோப்பீடியா குறிப்பிடுகிறது. இது ஒன்றும் மிகைப்படுத்தப்பட்ட அறிக்கை அல்ல; ஏனென்றால் கடுமையான பூமியதிர்ச்சியிலிருந்து வெளிப்படும் ஆற்றல், முதன்முதல் போடப்பட்ட அணுகுண்டிலிருந்து வெளிப்பட்ட ஆற்றலைவிட 10,000 மடங்கு அதிகம்! அதோடு, பூமியதிர்ச்சிகள் எந்தச் சீதோஷண நிலையிலும், எந்தப் பருவ காலத்திலும், எந்த நிமிஷத்திலும் சம்பவிக்கலாம் என்பது இன்னுமதிக பீதியை ஏற்படுத்துகிறது. பயங்கரமான பூமியதிர்ச்சிகள் எங்கு ஏற்படலாம் என்பதைப் பற்றி விஞ்ஞானிகளுக்கு ஓரளவு தெரிந்திருந்தாலும், எப்பொழுது ஏற்படும் என்பதை அவர்களால் திட்டவட்டமாக குறிப்பிட முடியாது.
பூமிக்கு அடியில் உள்ள எண்ணற்ற பாறைகள் நகர்வதால் பூமியதிர்ச்சிகள் நிகழ்கின்றன. இத்தகைய அசைவுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதனால் ஏற்படும் அதிர்வு அலைகள் அந்தளவு வலிமையாக இல்லாததால் பூமியின் மேற்தளத்தில் அதை பெரும்பாலும் உணர முடிவதில்லை; ஆனால் நிலநடுக்க வரைவி (Seismograph) இவற்றை கண்டுபிடித்து பதிவு செய்யலாம். a மற்ற சமயங்களிலோ, போதுமான அளவுக்கு பாறை பிளவுற்று போதுமான அளவுக்கு நகர்வதால் பூமியின் மேற்பரப்பில் ஆக்ரோஷமான அதிர்வு ஏற்படுகிறது.
ஆனால் பூமியின் மேலோடு ஏன் தொடர்ந்து அசைகிறது? “இதற்குரிய விளக்கத்தை தட்டு கட்டமைப்பியல் (plate tectonics) என்ற கொள்கையில் காணலாம், இந்தக் கொள்கை பூமியைப் பற்றிய அறிவியல் கருத்தை முற்றிலும் மாற்றியிருக்கிறது” என கூறுகிறது தேசிய நிலநடுக்க தகவல் மையம் (National Earthquake Information Center [NEIC]). “ஏழு மிகப் பெரிய அடிநிலத் தட்டுகள் இருப்பதையும் அவை எண்ணற்ற சிறு சிறு தட்டுகளாக பிரிக்கப்பட்டிருப்பதையும் நாங்கள் இப்போது அறிந்திருக்கிறோம். அவை யாவும் ஒரு வருடத்திற்கு 10 முதல் 130 மில்லிமீட்டர் [3/8 அங்குலத்திலிருந்து 5 அங்குலங்கள் வரை] என்ற விகிதத்தில் எப்போதும் ஒன்றுக்கொன்று சேர்ந்தே நகர்கின்றன” என NEIC மேலுமாக கூறுகிறது. பெரும்பாலான நிலநடுக்கங்கள், தட்டுகளின் எல்லைகளாக அமைந்திருக்கும் ஒடுக்கமான நிலப்பகுதிகளிலேயே ஏற்படுகின்றன என NEIC சொல்கிறது. இங்குதான் 90 சதவீதம் கொடூரமான பூகம்பங்கள் ஏற்படுவதற்கு சாத்தியம் இருக்கிறது.
அதிர்வு அளவும் தீவிரமும்
பூமியதிர்ச்சியின் கடுமையை அதன் அதிர்வு அளவை (magnitude) அல்லது தீவிரத்தை (intensity) வைத்து கணக்கிடலாம். பூமியதிர்ச்சிகளின் பரிமாணத்தை கணக்கிடுவதற்கு 1930-ல் சார்ல்ஸ் ரிக்டர் ஓர் அளவுமானியை உருவாக்கினார். புவி அதிர்ச்சி வரைவி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, ரிக்டருடைய கருத்தின் அடிப்படையில் புதிய
அளவுமானிகள் உருவாக்கப்பட்டன. உதாரணமாக, விசை அளவுமானி (moment magnitude scale) பூமியதிர்ச்சி ஏற்பட்ட இடத்திலிருந்து வெளிப்படும் ஆற்றலை அளவிடுகிறது.ஆனால், பூமியதிர்ச்சியால் எந்தளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கிறது என்பதை இந்த அளவுமானிகள் கணக்கிடுவதில்லை. ஜூன் 1994-ல் வடக்கு பொலிவியாவில் நடந்த பூமியதிர்ச்சியை கவனியுங்கள்; அதன் அதிர்வு அளவு 8.2-ஆக பதிவாகியிருந்தாலும் ஐந்து பேர் மட்டுமே உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் 1976-ல் சீனாவிலுள்ள டாங்ஷானில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியின் அதிர்வு அளவு 8.0-ஆக பதிவானபோதிலும் அது லட்சக்கணக்கான உயிர்களை கபளீகரம் செய்துவிட்டது!
அதிர்வு அளவின் பதிவுக்கு நேர்மாறாக, தீவிரத்தின் பதிவு ஜனங்களுக்கும் கட்டிடங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகளை காட்டுகிறது. இது, பூமியதிர்ச்சி எந்தளவுக்கு மனிதரை பாதிக்கிறது என்பதைப் பற்றிய விலாவாரியான மதிப்பீடு. சொல்லப்போனால், பூகம்பங்கள்தானே ஜனங்களுக்கு ஊறு விளைவிப்பதில்லை. மாறாக, பூகம்பத்தின்போது சுவர்கள் இடிந்து விழுதல், எரிவாயு குழாய் அல்லது மின் கம்பம் உடைதல், பொருட்கள் கீழே விழுதல் போன்றவையே மக்களுக்கு பெரும் காயங்களையும் நாசங்களையும் விளைவிக்கின்றன.
பூமியதிர்ச்சியைப் பற்றி முன்கூட்டி எச்சரிப்பதே நிலநடுக்க ஆய்வாளர்களின் நோக்கம். நவீன நிலநடுக்க ஆய்வு மற்றும் கண்காணிப்பு முறை (Advanced Seismic Research and Monitoring System) என அழைக்கப்படும் இலக்கமுறை திட்டம் (digital program) உருவாக்கப்பட்டுள்ளது. CNN (Cable News Network) அறிக்கைப்படி, “பூமியதிர்ச்சியால் மிகவும் கடுமையாக ஆட்டம்காணும் பகுதிகளை உடனுக்குடன் குறிப்பிடுவதற்கு,” இந்த இலக்கமுறை திட்டமும் அது சேகரிக்கும் தகவலை வேகமாக அலசுவதும் ஆற்றல்மிக்க கம்ப்யூட்டர் முறைகளை பயன்படுத்துவதும் நிபுணர்களுக்கு உதவும். அதோடு, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உயர் அதிகாரிகள் ஆட்களை அனுப்புவதையும் எளிதாக்கும்.
பூமியதிர்ச்சி வருவதற்கு முன்பே அதை சந்திக்க தயாராயிருப்பது பொருள் சேதத்தையும் மிக முக்கியமாக, உயிர் சேதத்தையும் குறைக்கிறது. ஆனாலும், பூமியதிர்ச்சிகள் தொடர்கதை ஆவதால் இந்தக் கேள்விக்குப் பதில் தேவைப்படுகிறது: பூமியதிர்ச்சிக்குப் பின் ஏற்படும் மனஅதிர்ச்சிகளை சமாளிக்க மக்களுக்கு என்ன உதவி கிடைத்திருக்கிறது? (g02 3/22)
[அடிக்குறிப்பு]
a நிலநடுக்க வரைவி பூமியதிர்ச்சியின் போது நிலத்தின் அதிர்வை அளவிட்டு பதிவு செய்கிறது. இக்கருவி முதன்முதலாக 1890-ல் உருவாக்கப்பட்டது. இன்று உலகம் முழுவதிலும் 4,000-க்கும் அதிகமான புவி அதிர்ச்சி வரைவி நிலையங்கள் இயங்கி வருகின்றன.
[பக்கம் 5-ன் அட்டவணை]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
எத்தனை பூமியதிர்ச்சிகள்?
வகை அதிர்வு அளவு ஆண்டு சராசரி
மிகப் பெரியவை 8 அதற்கு மேல் 1
பெரியவை 7-7.9 18
கடுமையானவை 6-6.9 120
மிதமானவை 5-5.9 800
இலேசானவை 4-4.9 6,200*
சிறியவை 3-3.9 49,000*
மிகச் சிறியவை <3.0 அதிர்வு அளவு 2-3 நாளொன்றுக்கு சுமார் 1,000
அதிர்வுஅளவு 1-2:
நாளொன்றுக்கு சுமார் 8,000
* கணக்கிடப்பட்டவை.
[படத்திற்கான நன்றி]
ஆதாரம்: தேசிய நிலநடுக்க தகவல் மையம்
USGS/National Earthquake Information Center, USA அனுமதியுடன்
[பக்கம் 5-ன் படத்திற்கான நன்றி]
பக்கங்கள் 4, 5 நிலநடுக்க பதிவு: Figure courtesy of the Berkeley Seismological Laboratory